ஜாதகம் இல்லாதவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரசன்னங்களின் பங்கு முக்கியமானது. பிரசன்னங்களில் உள்ள ஒரே குறைபாடு, அவை குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே பதில் கூறும் என்பதே. பாரம்பரியமான முறையில் ஜாதகங்களை எழுதி வைத்து அதன் மூலம் வாழ்வில் சாதக-பாதகங்களை அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதால் வாழ்வின் பல சிரமங்களை நாம் தவிர்த்து வந்தோம். மக்கள் அந்த எச்சரிக்கை உணர்வுகளை கைவிட்டால்தான் தனது செயல்பாட்டிற்கு தனக்கு வசதி என்று கலி புருஷன் நினைக்கிறாரோ என்னவோ? இன்று சிலர் ஜாதகம் எழுதி வைப்பதை அலட்சியம் செய்கின்றனர். எதையும் பணம் மூலம் சாதித்துவிடலாம் என்ற மனோபாவம் அதிகரித்துவிட்டது அதற்குக் காரணம். உண்மையில் பணம் படைத்தோரும் அனைவரையும் போல கர்மங்களை அனுபவிக்கின்றனர். பணம்கொண்டு வெளி உலகில் தங்களது வாழ்விற்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் மறைக்க முயல்கிறார்கள் என்பதே உண்மை. இப்படிப்பட்ட ஜாதகம் இல்லாதோருக்கு திருமணப்பொருத்தம் காண வேண்டும் எனில் அதற்கு பிரசன்னங்கள் உதவுகின்றன. இன்றைய பதிவில் ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் நான் பொருத்தம் பார்த்த சில பிரசன்ன கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தனது மகனின் திருமண வாய்ப்பை பிரசன்னம் மூலம் அறிய விரும்பிய ஒரு தாயார் என்னை அணுகினார். காதலின் காரக கிரகமான புதனின் மூலத்திரிகோண வீட்டில் உதயம் அமைந்து, உதயாதிபதி புதன் காதல் பாவமான 5 ல் உள் வட்டத்தில் உள்ள வக்கிர சனியோடு நிற்கிறார். உள்வட்ட வக்கிர கிரக குணமே வெளிவட்ட புதனுக்கு இருக்கும் என்பதால் காதல் பற்றி தெளிவான முடிவில் மகன் இருப்பார். ஆரூடம் லாப ஸ்தானத்தில் புதனின் ஆயில்யத்தில் நிற்க, ஆரூடாதிபதி சந்திரன் உதயத்தில் நிற்கிறார். தங்கள் மகன் காதலில் உள்ளார். உங்களுக்கு பெண் தேடும் சிரமத்தை தர மாட்டார் என வந்திருந்த பெண்மணியிடம் கூறினேன். அதிர்ச்சியடைந்த தாயார் பின்னால் மகன் காதலிப்பதை உறுதி செய்தார்.
திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறி நேரலையில் ஒரு நபருக்கு பார்க்கப்பட்ட பிரசன்னம். மிதுன உதயம், ஜாம உதயாதிபதி 7 ல் நிற்க, ஆரூடம் 4 ஆமிடத்தில் விழுந்துள்ளது. 7 ஆமதிபதி 8 ல் நீசமாகி, அதன் அதிபதி சனியோடு இணைந்து, கவிப்பை சேர்ந்துள்ளது. இது முறையான திருமண பிரசன்னமாக காட்டவில்லை. ஏற்கனவே திருமணம் நடந்து பாதிக்கப்பட்டு இரண்டாவது திருமணத்திற்கான நிலையையே இது காட்டுகிறது. உதயத்திற்கு 7, 8 மற்றும் 4 ஆமிட ஆரூடம் ஆகியவை இதை கூறுகிறது. இரண்டாவது திருமணமா என்றேன்? எதிர்முனையில் நபர் எப்படி கண்டுபிடித்தார்கள் என ஆச்சரியப்பட்டார். வந்தவர்கள் தங்கள் நிலையை தெளிவாக விளக்கி ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது. அப்படி கூறாவிட்டாலும், தான் உயிராக நேசிக்கும் கலை ஜோதிடரை வழிநடத்துகிறது. 7 ல் நிற்கும் புதனும், 2 ஆமிடத்தில் நீசமான செவ்வாயும் உதயத்தை நோக்கி நகரும் ஜாம சந்திரனும் இவர் மறு திருமணம் செய்வார் என்பதை காட்டுகிறது.
வரனை விட, வது (பெண்) 2 வயது அதிகம் இதை முடிக்க சரிவருமா எனக்கேட்டு பிரசன்னம் பார்க்கப்பட்டது. உதயத்தில் குரு, 7 ல் சந்திரன் எனவே பிரசன்னம் திருமண விஷயத்தை கூறுகிறது. ஆனால் 2 ல் ஆரூடமும், கவிப்பும் செவ்வாய், ராகுவோடு இணைந்துள்ளது. உதயம் 2 ஆமிட கவிப்பையும், ராகுவையும் நோக்கி நகர்கிறது. எனவே இந்த திருமணம் நடப்பதற்கு தடை ஏற்படும் என்பதையே காட்டுகிறது. உதயாதிபதி செவ்வாய், 5 ஆமதிபதி சூரியனின் சாரத்தில் நிற்கிறார். ஆரூடம், கவிப்பு, ராகு ஆகியவை 7, 8 ல் நிற்கும் சந்திரனின் சாரம் பெற்றுள்ளன. கேள்வியாளரான ஆணுக்கு திருமண எண்ணம் இருந்தாலும் அவருக்கே கடும் தயக்கமும், அவரது குடும்பத்தில் இந்த வதுவை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையை இது காட்டுகிறது. இந்த வது சரிவராது என ஒரே வார்த்தையில் இதை கூறிவிடலாம் என்றாலும், உங்களுக்கும் பாதி மனமாக, உங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிந்தும் ஏன் என்னை நாடி வந்தீர்கள் என்றேன். அதற்கு அவர், பெண் 2 வயது மூத்தவர் என்பதை தான் ஏற்றுக்கொண்டாலும், பெண் வேறு கலாசாரம் கொண்டவர் என்பதை தனது வீட்டார் ஏற்க மறுக்கிறார்கள் என்றார். உதயத்திற்கு 2 ஆமிடத்தில் செவ்வாயை தவிர ஆரூடமும், கவிப்பும், ராகுவும் கலாச்சாரத்தை குறிக்கும் சந்திரனின் சாரத்தில் நிற்பதால், கலாச்சார மாறுபாடு காரணமாக திருமணம் இங்கு தடைபடுகிறது. அதாவது ஆண் வைணவத்தையும், பெண் சைவத்தையும் கடைபிடிப்பவர். திருமணத்தடையின் காரணத்தை பிரசன்னம் தெளிவாக கூறுகிறது.
ஒரு இளைஞன் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டான். இப்போது அவர்களது நிலை என்ன? என்ற கேள்வியுடன் தொடர்புடைய குடும்பத்தினர் வந்திருந்தனர். இது போன்ற கேள்விகளுக்கு ஜோதிடர் எச்சரிக்கையாக பதில் கூற வேண்டியது மிக அவசியம். இதுபோன்ற விஷயங்களை காவல்துறையை அணுகி தீர்வு காணுங்கள் என்பதே சரியான வழிகாட்டல். கடும் கோபத்தில் இருக்கும் குடும்பத்தினர் ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் இறங்கினால் அது ஜோதிடரையும் பாதிக்கும் என்பதால் கவனம் தேவை. வந்திருந்தவர்கள் எனக்கு நெருங்கிய வட்டாரத்தினர் என்பதால் அவர்களது வற்புறுத்தலுக்காக பிரசன்னம் பார்க்கப்பட்டது. திருமணம் நடந்து விடக்கூடாது என்பது அவர்களது பேச்சிலேயே தெரிந்தது என்னை சங்கடப்படுத்தியது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ல் உச்ச ராகுவுடன் ஆரூடம். . எனவே யார் தடுத்தும் காதலர்கள் கேட்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. உதயத்தில் காதலின் காரக கிரகம் புதன் வக்கிரம் பெற்று 8 ஆமதிபதி சூரியனுடனும், உதயாதிபதி சனியுடனும் இணைந்துள்ளார். ஜாம புதன் உதயத்திற்கு வெளி வட்டத்தில் நிற்கிறார். இது அவமானப்பட்டாலும் காதலர்கள் தங்கள் காதலில் வெல்வார்கள் என்பதை குறிக்கிறது. கவிப்பு 2 ஆமிடத்தில் குருவுடன் அமைந்துள்ளது. 7 ஆமதிபதி சந்திரன் உதயத்திற்கு நேர் பாகையை கடந்துள்ளார். இவை இரண்டும் திருமணம் நடந்துவிட்டதை காட்டுகிறது. எனினும் விபரீதங்களை தவிர்க்க, காதலர்களை பிரிக்க வாய்ப்பு குறைவு, எனவே காவல்துறையை அணுகுங்கள் என்று கூறி அனுப்பினேன். பிற்பாடு பிரசன்னம் காட்டியபடி, பிரசன்னம் பார்த்ததற்கு முந்தைய நாளே காதலர்கள் திருமணம் செய்துகொண்டதாக கூறினார்கள்.
எனது பெண்ணிற்கு திருமணம் எப்போது நடக்கும்? என்ற கேள்விக்காக பார்க்கப்பட்ட பிரசன்னம் இது. உதயாதிபதி உதயத்திற்கு விரையத்தில் நின்று இரண்டாமிடத்தை தனது மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். இரண்டாமதிபதி குரு 2 ல் ஆட்சியாக இருந்தாலும் உள்வட்டத்தில் பலவீனமாக உள்ளார். உள்வட்ட உதயாதிபதியும் ஜீவன காரகருமான சனி நீசமான குடும்ப காரகர் குருவுடன் இணைந்து 6 ஆமிடத்தை பார்வை செய்கிறார்.. ஜாம குருவும் 6 ஆமிடத்தை, 2 ஆமிடத்திலிருந்து பார்வை செய்கிறார். இது இந்தப்பெண் வேலைக்குச்சென்று பொருளீட்டுவதையும் அது அவரது குடும்பத்திற்கு அவசியமாகிறது என்பதையும் குறிக்கிறது. ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் உள்வட்ட உதயாதிபதி சனி உதயத்திற்கு வரவேண்டும். உள்வட்ட குருவும் சனியும் வலுப்பெற்று 7 ஆமிடமான சிம்மத்தை பார்க்க வேண்டும். எனவே ஜாதகிக்கு தற்போது திருமண காலமில்லை. 2, 6, 1௦ அதிபதிகள் 2 ல் நட்பு பெற்று உள்வட்ட சனியின் 3 ஆம் பார்வையை பெறுகிறது. சனி வேலை மூலம் வரும் வருமானத்தை தடை செய்யமாட்டார். ஆனால் குடும்பம் அமைவதை தாமதப் படுத்துவார். உதயாதிபதி சனி, 7 ஆமதிபதி சூரியனின் சாரத்தில் இருப்பதால் மணமகன் பற்றிய அதிக எதிர்பார்ப்பு ஜாதகியின் குடும்பத்திற்கு இருப்பதால் திருமணத்தடை ஏற்படுகிறது என்று கூறியதை பெண்ணின் பெற்றோர் மறுக்கவில்லை.
ஜாமக்கோள் பிரசன்னம் கேள்விக்கு பதிலை தருவதோடு, அதன் பின்னிச் சூழலை துல்லியமாக படம் பிடித்துக்காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. இதுவே இதர பிரசன்னங்களில் இருந்து ஜாமக்கோள் பிரசன்னம் உயர்ந்து நிற்பதற்கு காரணம்.
மீண்டும் விரைவில் உங்களை மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.