ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம் அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.
ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும். சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.
ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.
மோசடி காரகன் ராகுவின் தசா.
தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.
7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.
நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின் உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.
சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.
மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார். இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
கைபேசி: 8300124501