போர் கிரகம் செவ்வாய் கடகத்தில் நீசமாகியுள்ள தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்வருமா என “பெட்டிங்” நடந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த கால போர் நிலைகளை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுத வாசகர் ஒருவர் தூண்டியதன் விழைவே இப்பதிவு.
ஒற்றுமையில்லாத இந்தியர்களை அந்நிய மண்ணிலிருந்து வந்த மொகலாயர்கள் வென்று ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்களால் இந்திய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இயலவில்லை என்பதுதான் நிதர்சனம். குறிப்பாக பாபரின் காபூல்படை வீரர்களை டெல்லி வெயில் இந்தியாவிலிருந்து விரட்ட முனைந்தது என்பதுதான் வரலாறு.
ஒருவரின் பிறந்த நேரம் அவரது இயல்பை காட்டிவிடும் என்றாலும் ஒருவரது இயல்பு (சுபாவம்) நடத்தையில் வெளிப்பட்டுவிடும். இளம் வயதிலேயே கடும் போராட்டங்களை சந்தித்தவர்களையும் கடும் போர்களில் ஈடுபட்டவர்களையும் முழுமையான செவ்வாயின் அம்சமாக ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில் ஜாதகம் இல்லாதவர்களுக்குக்கூட அவர்களின் அம்சங்களுக்குரிய காரக கிரகங்களின் நிலையைக்கொண்டு அவர்கள் கோட்சாரத்தில் எதிர்கொள்ளும் நிலைகளை ஆராயலாம். உதாரணமாக ஜோதிடன் எனில் புதன், பிராமணன் எனில் குரு, செவ்வாய் எனில் போர்வீரன் இப்படி.
இந்தவகையில் போரில் ஈடுபடும் இரு அரசர்களும் செவ்வாயின் அம்சங்களாக கருதப்பட்டாலும் அவ்விருவரில் யாரிடம் செவ்வாயின் காரக குணம் தூக்கலாக தெரிகிறதோ அவர்களே இருவரில் செவ்வாயின் முழுமையான அம்சம் எனலாம். மிகச்சிறந்த போர் வீரர்கள் செவ்வாயின் முழுமையான அம்சமே.
பாபரின் ஜாதகம் நம்மிடம் கிடையாது. ஆனால் பிறந்த தேதி தெரியும். இன்றைய உஜ்பெகிஸ்தானிலுள்ள அன்டிஜனில் 14.02.1483ல் பிறந்தார். லக்னம் தெரியாவிட்டால் ராசி, ராசியாதிபதி மற்றும் சூரியனின் நிலையைக்கொண்டே ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும். எதிரியின் ஜாதகம் இல்லாதபோது ஆறாவது பாவத்தைக்கொண்டு எதிரியின் நிலையை ஜோதிட ரீதியாக அளவிடவேண்டும்.
பாபர் பிறந்தநாள் முழுதும் சந்திரன் மகரத்தில்தான் உள்ளது. எனவே எந்த நேரத்தில் பிறந்திருந்தாலும் ராசி மகரம்தான்.
மகர ராசி ஜாதகத்தில் ராசியாதிபதி சனி ராஜ்ய ஸ்தானமான 10 ஆமிடத்தில் உச்சம். உச்சம் பெற்ற ஒரு கிரகம் தான் நின்ற பாவத்தையும் அதன் அதிபதியையும், தனது சுய பாவங்களையும் அதில் அமர்ந்த கிரகங்களையும், தான் அமர்ந்த நட்சத்திராதிபதி மற்றும் அதன் பாவங்களையும் வலுவடையச் செய்யும்.இவ்விதிப்படி சூரிய சந்திரர்கள் வலுவடைந்ததால் பாபர் ஒரு ராஜ வம்சத்தை சார்ந்தவர் என்பது ஜாதகப்படி தெளிவாகின்றது. ராசியதிபதி சனியும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகத்தில் அமைந்து சுகிரனுக்கு பாவகர்த்தாரி யோகமும் ஏற்பட்டுவிட்டது. எனவே இல்லறத்தில் பெரிய நாட்டமில்லை. பாபருக்கு ஏழு மனைவிகள், முதலாமவள் இவரின் ஈடுபாடின்மை காரணமாக ஓடிவிட்டாள். தனது சுயசைதையான பாபர் நாமாவில் இது விஷயத்தில் தனக்கிருந்த கூச்ச சுபாவத்தை குறிபிட்டுள்ளார். தைரிய ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் ஒரு உச்ச கிரகம் சுக்கிரன் நிற்பது ஜாதகரின் சிறப்பான வீரத்தை குறிப்பிடுகிறது. சதுர்த்த கேந்திரத்தில் போர் கிரகமான செவ்வாய் ராகுவுடன் கூடி நின்று சனி பார்வை பெறுவது போரில் ஈடுபடும் ஜாதகரின் கர்ம வினையை குறிப்பிடுகிறது.
இனி பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் நடந்த முதல் பானிபட் போர் தினமான 21.04.1526 க்கு வருவோம்.
பாபரின் மகர ராசியிலிருந்து எதிரியை குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதி புதன் மீனத்தில் நீச்சம். எதிரி கிரகம் நீசமாகிறது எனில் போரில் எதிரி உயிரிழக்கிறான் என்று அர்த்தம். வீரம் வெற்றியை குறிக்கும் மூன்றாமிட அதிபதி குரு அதிஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அதன் அதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளார். இது வீரமும் அதிஷ்டமும் இணைந்து செயல்படும் என்பதை குறிக்கிறது. ராசியாதிபதி சனி வெற்றி ஸ்தானமான மூன்றாமிடத்தில் நின்று அங்கு நீசமான ஆறாமதிபதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மிகச் சிறப்பு. பாபரின் ஜனன நாளில் தனது வீட்டில் ஆட்சியில் அமைந்திருந்த போர் கிரகமான செவ்வாய் உச்ச கிரகமான சூரியனுடன் கோட்சாரத்தில் சேர்ந்து நான்காவது கேந்திரத்தில் நின்று அதீத வலு பெற்றுள்ளது. எட்டாமதிபதி சூரியன் வலுவடைந்தால் ஜாதகரின் ஆயுளுக்கு தோஷமில்லை மேலும் திடீர் மற்றும் எதிர்பாராத வெற்றியை உச்சமடைந்த எட்டாமதிபதி கொடுப்பார் என்பது ஜோதிட விதி.
இப்போது பாபரின் பிறந்த நாள் கூட தெரியாது என எடுத்துக்கொள்வோம். மிகச்சிறந்த வீரன் என்பதால் செவ்வாயின் முழுமையான அம்சமான பாபரை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பாபரின் கோட்சார ஜாதக லக்னமாக செவ்வாய் இருக்கும் இடத்தையே எடுத்துக்கொண்டு போர் நடக்கும் நாளின் சூழ்நிலைகளையும் வெற்றி தோல்விகளையும் ஆராயவேண்டும்.
இவ்விதிப்படி ஆராய்ந்தாலும் செவ்வாய் கோட்சாரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்று உச்சநிலையிலுள்ள ராஜ கிரகம் சூரியனுடனும் நட்பு கிரகம் சந்திரனுடனும் இணைந்ததால் செவ்வாய் அதீத வலுவாகவே உள்ளார். செவ்வாய் உள்ள மேஷத்தையே லக்னமாககொண்டு எதிரியை குறிப்பிடும் ஆறாவது பாவத்தை ஆராய்ந்தால் 6 ஆம் பாவாதிபதி மீனத்தில் நீசம். இந்தவகையிலும் எதிரி உயிரிழக்கிறான் பாபர் வெற்றி பெறுகிறார் என்பதே தெளிவாகத்தெரிகிறது.
போர் நாள் ஒரு அமாவாசை என்பதை கவனிக்கவும். அமாவாசையில் போரை முதலில் துவங்கியவருக்கே வெற்றி ஏற்படும் என்பது நமது மகாபாரத புராணத்திலேயே ஜோதிடக்குறிப்பாக உள்ளது.
அதிகாலை ஆறு மணிக்கு துவங்கிய போர் மதியம் சூரியன் உச்சிக்கு வந்தவுடன் 6 மணி நேரத்தில் நிறைவடைந்துவிட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வில் மற்றும் வாலேந்திய படைவீரர்களை கொண்ட இப்ராகிம் லோடியின் படையை வெறும் பணிரெண்டாயிரம் வீரர்களை கொண்ட பாபரின் படை சிதறடித்தது. நவீன தொழில்நுட்ப வரவான துப்பாக்கியை லோடி அறிந்து வைதிருக்கவில்லை. பாபரின் சில நூறு வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தினர் என்பது ஒரு முக்கிய காரணம். அதிகாரப்பூர்வமாக லோடியின் படையில் லோடியையும் சேர்த்து பதினைந்தாயிரம் வீரர்களும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி சுமார் ஐம்பதாயிரம் வீரர்களும் மரணமடைந்ததாக வரலாறு.
மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.