வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை. இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு. “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றொரு பிரபலமான ராமாயண வாசகம் கடனின் துயரை கூறுகிறது. பேராசையைத்தவிர கடனுக்கு காரக கிரகங்கள் என்று கூறினால் அது ராகு-கேதுக்கள்தான். தன காரகன் குரு, ஜனன காலத்தில் கேதுவோடு தொடர்பாகி கோட்சாரத்திலும் குருவும் கேதுவும் தொடர்பாகும்போது நிச்சயம் கடன் ஏற்படும். இதை தவிர்க்க இயலாது. கால புருஷனுக்கு 6 ஆம் அதிபதியான புதனின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து தன ஸ்தானமும் அதன் அதிபதியும் ஜனன ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் கடன் ஏற்படும். கடனால் படும் நீடித்த துயரத்தை சனியும், அதீத துயரத்தை செவ்வாயும், கடனின் குரூரத்தன்மையை ராகுவும், கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை கேதுவும் சுட்டிக்காட்டும். கடன் கொடுக்கக்கூடாதவர்களுக்கான ஜாதக அமைப்பைப்பற்றி இப்பதிவில் நாம் ஆராய்வோம்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு விரையத்தில் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி புதன், கேது, 4 ஆமதிபதி நீச செவ்வாய் ஆகியோரோடு இணைந்துள்ளார். தன ஸ்தானாதிபதி புதனும் தன காரகன் குருவும் வக்கிரமானது பொருளாதார விஷயத்தில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற ஜாதகியின் தீவிர எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி இப்படி கடனின் காரக கிரகங்களோடு விரையத்தில் மறைந்து குருவும் வக்கிரமானதால் ஜாதகி கடனால் தனது வாழ்வில் நிம்மதி இழப்பார் என எதிர்பார்க்கலாம். லக்னபுள்ளி மகம்-3 ல் விழுந்துள்ளது ஜாதகி கடன், வழக்கு இவைகளோடு தொடர்புடையவாராக வாழ்வில் தனது கர்மாவை கழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாதகி ஒரு வழக்கறிஞர். ஜாதகத்தில் குரு கேதுவின் மூலம்-2 லும், கேது குருவின் புனர்பூசம்-4 லும் நின்று சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். ஜாதகிக்கு தற்போது செவ்வாய் திசையில் சனி புக்தி கடந்த 2019 முற்பகுதியில் துவங்கியது. செவ்வாய் வியையத்தில் நீசமாகி கேதுவால் தீண்டப்பட்டுள்ளது. கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜாதகிக்கும் கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். பாதக ஆதிபத்யம் பெற்ற செவ்வாயின் திசையில் செவ்வாய்க்கு பாதகத்தில் செவ்வாயின் மிருகசீரிஷம்-1 ல் நிற்கும் 6 ஆமதிபதி சனி புக்தி துவங்கியதும் ஜாதகி கேதுவின் ஆசை வலையில் விழுந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது மிக கணிசமான தொகையை கடனாக அசையாச்சொத்து ஒன்றின் பெயரில் ஜாதகி ஒருவருக்கு கொடுத்தார். கோட்சாரத்தில் ஜனன காலத்தில் வக்கிரமான குருவோடும், கோட்சார குரு கோட்சார சனியோடும் கோட்சார கேது தொடர்புகொண்ட 2019 முன்பகுதியில் இது நடந்தது.
கடன் பெற்றவர் தனது நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்தே கடனை பெற்றிருக்கிறார். சிறு விஷயங்களுக்கு ஜோதிடர்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவரின் வாழ்நாள் ஆதாரமான விஷயங்களில் ஈடுபடும்போது தகுந்த தெளிந்த ஜோதிடர்களின் ஆலோசனையை நாட வேண்டியது அவசியம். ஒருவர் ஈடுபடும் செயலின் காரக கிரகம் அவரது ஜாதகத்தில் எந்த நிலையில் அமைந்துள்ளது மற்றும் நடக்கும் திசா-புக்திகள் அந்த காரக கிரகத்திற்கு எப்படி ஒத்துழைக்கும் என்று அறிந்து தனது செயல்களை திட்டமிடுவது அவரது வாழ்வின் பல சிரமங்களை குறைக்க வழிவகுக்கும். இந்த ஜாதகத்தில் நிலப்பத்திரத்தை ஈடாக பெற்று கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை (Unmovable Property) குறிக்கும் காரக கிரகமான செவ்வாயும், பத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான புதனும், லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் அமைந்துள்ளனர். அதிலும் செவ்வாய் அசையா சொத்தை குறிக்கும் 4 ஆவது பாவம் விருட்சிகத்திற்கு 9 ஆம் பாவம் கடகத்தில் நீசம் பெற்று அது லக்னத்திற்கு விரையமாகவும் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 4 ல் கடகத்தில் இப்படி ஒரு சூழல் அமைவது ஜாதகி தனது வாழ்நாளின் செவ்வாய் திசா-புக்தி காலங்களில் பூமி வகைகளிலும், புதன் தொடர்பான திசா–புக்தி காலங்களில் பத்திரம் தொடர்பான கடன் வகைகளில் பாதகத்தையும் சந்திப்பார் என்பது ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. முக்கியமாக ஜாதகிக்கு செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தியில் கடந்த 2019 முற்பகுதியில் ஜாதகி கடன் கொடுத்துள்ளார். சனி புக்தியில் மிகப்பெரிய தனத்தை கடனாக கொடுத்ததற்கு காரணம், சனிக்கு திரிகோணத்திலும் திசா நாதன் செவ்வாய்க்கு 7ல் லக்னத்திற்கு 6 ல் ராகு நின்று திசா-புக்தி நாதர்களுக்கு ராகு இடும் கட்டளைதான். கடன் கொடுத்த பிறகு ஜாதகிக்கு ஓரிரு மாதங்கள் வட்டி வந்தது. தற்போது கொடுத்த பணமாவது வந்துவிடுமா என்ற நிலைதான். ஈடாக பெற்ற நில பத்திர வகையில் சில பாதகங்கள் இருப்பதை தற்போது அறிந்து ஜாதகி திகைத்து நிற்கிறார். திசா-புக்தி அடிப்படையில் அலசும்போது ஜாதகிக்கு வரவிருக்கும் ஏழரை சனியின் இறுதி காலத்தில்தான் அவரது பணம் பல போராட்டங்களுக்குப்பிறகு திரும்பக்கிடைக்கும் என்று தெரிகிறது.
ஜாதகிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை 4 & 12 ஆமிடங்களும் அவற்றில் நின்ற கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடத்தில் 4 ஆமதிபதி நீசமானது ஜாதகிக்கு தாயாதிகள் வழியில் பூமிவகையில் எற்பட்ட இட தோஷம் சாபமாக மாறியுள்ளதையும் அதில் சூரியன் தொடர்பானது இது தலைமுறைகளாக தொடரும் சாபம் என்பதையும், புதன், கேது தொடர்பாகி 12 ல் நின்றது நில பத்திர வகைகள் மூலம் ஏற்பட்ட பாதிப்பே சாபத்திற்கு காரணம் என்றும் அறிய முடிகிறது.
ஒருவர் வட்டித்தொழிலில் பொருளீட்டவேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் வட்டித்தொழிலின் காரக கிரகங்களான ராகுவும் கேதுவும் பொருட்பாவங்களான 2,6,10,11 ஆகிய பாவங்களில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதில் ராகுவின் பங்கே பிரதானமானதாகும். கேது வட்டித்தொழிலில் ஏற்படும் சிரமங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும். ராகு மூர்க்கக்குணத்தனத்தொடு எதிர்கொள்ளும். இவைகளுக்கு குரு சுக்கிரன், தொடர்பு ஏற்படின் வட்டித்தொழில் சிரமமின்றி நடைபெறும். இவைகளுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும். வரக்கூடிய பிரச்சனைகள் மிகுந்த குரூரத்தன்மையோடு அடிதடி, கடத்தல் என்ற வகையில் எதிர்கொள்ளவைக்கும். எனினும் வட்டித்தொழிலில் ஈடுபடுவோரை ஒருவகையில் மற்றவர்களின் கர்மாவை தீர்க்க உதவிடுபவராக கருதலாம். பிறரின் பாவ கர்மாவை இவர்கள் வட்டி என்ற வகையில் பெற்றுக்கொண்டு இவர்கள் கழித்துவிடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி வட்டித்தொழிலில் சம்பாதிப்பவர்களுக்கு குடும்ப வகையில், சந்ததிகள் வகையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
விரைவில் மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.