
பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது.
இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்த பெரிதும் விரும்புகிறார்கள். “பக்கத்து வீட்டுக் குழந்தை ஹாக்கி பயிற்சிக்குச் செல்கிறது; அதனால் நம் குழந்தையையும் அனுப்பலாமா?” என்ற போட்டி மனப்பான்மையைத் தாண்டி, ‘என் குழந்தையின் உண்மையான திறமை எது?’ என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்க நினைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
சமீபத்தில் ஒரு பெற்றோர் தங்கள் மகனின் ஜாதகத்துடன் என்னை நாடி வந்தனர். அவர்கள் முன்வைத்த கேள்விகள் இதோ:
- “தற்போது எங்கள் மகன் எடுத்துக்கொள்ளும் பயிற்சியை அவன் தொடர்ந்து செய்வானா?”
- “இதில் அவனது சொந்த விருப்பமும் திறமையும் எந்த அளவுக்கு உள்ளது? அல்லது பெற்றோர்களாகிய நாங்கள் ஆசைப்பட்டு அவனிடம் இதைத் திணிக்கிறோமா?”
- “தற்போது இந்த குறிப்பிட்ட பயிற்சியில் அவன் ஈடுபடுவதற்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன?”
- “இந்தத் துறையில் அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்?”
அவர்களின் இந்தக் கேள்விகளுக்கு ஜோதிட ரீதியாக நான் அளித்த விளக்கங்களையும் ஆலோசனைகளையும் இக்கட்டுரையில் தொகுத்துள்ளேன். இது தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் பல பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.
ஜாதக அமைப்பும் கலை ஆர்வமும்:

- பிறந்த காலம்: 2013-ஆம் ஆண்டின் இறுதியில் பிறந்த சிறுவன். தற்போது வில்வித்தை பயிற்சி செய்து வருகிறான்.
- கலைகளின் காரகன் சுக்கிரன்: கலைகளுக்கு அதிபதியான சுக்கிரன், ஆசை மற்றும் விருப்பத்தைக் குறிப்பிடும் 5-ஆம் அதிபதியாகவும், 10-ஆம் அதிபதியாகவும் ஆகி லக்னத்தில் நிற்கிறார். இதனால் இச்சிறுவனுக்கு இயல்பாகவே ஏதேனும் ஒரு கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும். (புதன், சுக்கிரன் இருவருமே கலைகளுக்கு அதிபதிகள்; அதிலும் ‘பல்கலை வித்தகராக’ ஒருவரைத் திகழ வைப்பவர் சுக்கிரன் ஆவார்).
வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டது ஏன்?
- வாயு ராசித் தொடர்பு: வாயு ராசியான மிதுனம்தான் கலைகளில் வில்வித்தையைக் குறிக்கும் ராசியாகும். அதிலும் குறிப்பாக மிதுனத்தில் அமைந்த திருவாதிரை நட்சத்திரம் வில்வித்தைக்கு உரியது.
- குரு தசை மற்றும் வக்கிரம்: ஜாதகன் தற்போது மிதுனத்தில் நிற்கும் குரு தசையில் இருக்கிறான். தசாநாதரான குரு வக்கிரமடைந்து, மனோகாரகனான சந்திரனுடன் இணைந்து மிதுனத்தில் அமைந்திருப்பதால், சிறுவனின் மனம் முழுவதும் வில்வித்தை ஆர்வத்தால் நிரம்பியுள்ளது. இதனால் தான் தீவிரமாக வில்வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக நின்று, தந்தையை நச்சரித்து இதில் சேர்ந்துள்ளான்.
எதிர்காலத்தில் வில்வித்தையை தொடவானா?
வேறு விளையாட்டில் ஈடுபடுத்தத் தந்தை எண்ணினாலும், மகனின் ஆர்வத்திற்காகச் சம்மதித்த அவர், “கிரிக்கெட் வீரர்களைப் போல என் மகன் இதில் புகழ் பெறுவானா?” என்று கேட்டார்.
- அங்கீகாரமின்மையும் சோர்வும்: வக்கிர குரு தசை நடப்பதால், இச்சிறுவனின் வில்வித்தை திறமை பிறரின் கவனத்தை எளிதில் கவராது. வக்கிர கிரகம் அனுபவத்தின் மூலமே ஒருவரை முன்னேற்றும். அதனால் சிறுவன் தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் பயிற்சி செய்வான். ஆனால், திறமையைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்க சரியான நபர்கள் இல்லாத நிலையில் சிறுவன் சோர்வடைய வாய்ப்புள்ளது.
- நிலையற்ற தன்மை: தசா கிரகம் வாயு ராசியில் நிற்பதால், தன் திறமைக்குத் தக்க அங்கீகாரம் கிடைக்காத சூழலில் பிற்காலத்தில் வில்வித்தையைச் சிறுவன் கைவிடவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நிலையற்ற வாயு ராசியிலிருந்து தசை நடத்தும் கிரகம் ஒரே நிலையில் உறுதியாக நிற்காது.
தந்தையின் கேள்விகளுக்கான ஜோதிடப் பதில்கள்:
கேள்வி: வில்வித்தையில் ஜாதகன் நீடிப்பானா?
- பதில்: குரு தசை முடியும் வரை சிறுவன் வில்வித்தையில் ஈடுபடுவான்.
- காரணம்: தசாநாதர் குரு லக்னத்துடன் நேரடியாகத் தொடர்பு பெறவில்லை. அதே சமயம், துலாத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதி சனி, குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்பதால் ஈடுபாடு காட்டுகிறான்.
- அடுத்த தசை மாற்றம்: விரைவில் முடியவுள்ள குரு தசையை அடுத்து வரவிருப்பது சனி தசை. ஜாதகத்தில் சனி, மகர சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆவதால் குருவின் தொடர்பை இழக்கிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு சனி சர ராசியான மகரத்திற்கு வருவதால், வில்வித்தையைக் குறிக்கும் வாயு ராசியின் தொடர்பு விலகுகிறது. எனவே, குரு தசை முடிந்ததும் சிறுவனுக்கு வில்வித்தையின் மீதான ஆர்வம் குறைந்துவிடும்; அதைத் தொடர மாட்டான்.
எதிர்கால வாழ்வும் உயர்கல்வியும்:
ஜாதகத்தில் 5, 10-க்கு உரிய சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாகி உள்ளனர்; அதேபோல் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனையாகி உள்ளதை கவனியுங்கள். இவை ஜாதகன் உயர்கல்வி மற்றும் பணித் தகுதிக்காக இந்தப் பயிற்சியில் நீடிக்க மாட்டான் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த கிரகப் பரிவர்த்தனைகளால் சுக்கிரன், சனி, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நான்கு கிரகங்களும் பலமடைவதால், ஜாதகனின் எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் வளமாகவும் அமையும்!
சிறுவயது ஆசைகள் பிற்காலத்தில் மாறக்கூடியவை என்றாலும், பதின்ம வயதில் விருப்பமுள்ள விளையாட்டுகளிலும் கலைகளிலும் ஈடுபடுவது குழந்தைகளுக்கு ஓர் இனிமையான அனுபவமாகும்.
இச்சிறுவனின் தந்தை ஒவ்வொரு மாதமும் மகனது வில்வித்தை ஆசையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார். “மகனது எண்ணம் பிற்காலத்தில் மாறிவிடும்” என்று நான் கூறியபோது அவர் சொன்ன வார்த்தைகள் நெகிழ்ச்சியளித்தன:
“என் மகன் வில்வித்தையில் தேர்ந்து ஆசிய விளையாட்டிலோ அல்லது ஒலிம்பிக்கிலோ பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என் ஆசைதான். அவன் அந்த அளவிற்குப் போகவில்லை என்றாலும், அவனது ஆசையை நிறைவேற்றுவது எனக்குப் பெருமையே! ஏனெனில் எனக்குக் கிடைக்காத வாய்ப்பு என் மகனுக்குக் கிடைத்துள்ளது.”
தங்கள் மகனின் நியாயமான ஆசைகளை உணர்ந்து நிறைவேற்றும் இந்தத் தந்தை உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்! செவ்வாயுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு தந்தையை குறிப்பிடும் 9 ஆமதிபதியும் கலைகளின் நாயகனுமான புதன் தனது மூலத் திரிகோண வீட்டில் உச்சம் பெறுவதும், தந்தையை குறிப்பிடும் சூரியன் விரைய ஸ்தானமான 12 இல் நின்று மிதுனத்தில் நிற்கும் தசா கிரகம் குருவை பார்ப்பதும் தந்தை மகனுக்கு மகிழ்ச்சியாக செலவு செய்வதை குறிப்பிடுகிறது.
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501










