
இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின் காரணமாகவோ வேறு நிறுவனத்திற்கு மாறுவது இயல்பு.
பணியில் இல்லாத ஒருவருக்குப் புதிய வேலை கிடைக்கும் சூழலே வேறு. ஆனால், ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர், தன் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத போதோ அல்லது நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளைத் தான் பூர்த்தி செய்ய முடியாத சூழலிலோ அப்பணியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதே போன்ற நிலை அவர் மாறக்கூடிய புதிய நிறுவனத்தில் ஏற்பட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுவது இயல்பு.
இத்தகைய அவசரக் காலகட்டங்களில், தப்பிக்க நினைத்துச் சென்று “எலிப்பொறியில் அகப்பட்டுக் கொள்ளும் எலி போல” புதிய நிறுவனத்தில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் ஒவ்வொரு பணியாளரும் மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் ஒரு தவறான முடிவு நம் தொழில் வாழ்க்கையையே பாதித்துவிடும். இதை ஜோதிட ரீதியாக எப்படிக் கண்டறிவது? எந்தக் கிரக நிலைகள் இத்தகைய சூழலைத் தோற்றுவிக்கின்றன? என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விரிவாக ஆராய்வதே இன்றைய நமது ஜோதிடப் பதிவின் முக்கிய நோக்கமாகும்!
ஜாதகக் கிரக அமைப்புகளும் தொழில் அழுத்தமும்

மேற்கண்ட தனுசு லக்ன இளைஞனின் ஜாதகத்தில் லக்னாதிபதி குருவும் ஜீவனகாரகர் சனியும் வக்கிரம் பெற்று மேஷத்தில் அமைந்துள்ளனர். மேஷாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றதால் இவர்கள் வக்கிரம் பெற்றாலும் வலுவாக இருப்பதாகவே எடுத்துக்கொள்ள வைக்கிறது. ஆனால் வக்கிர சனி வேலையில் பிடிவாதமான அறிவைத் தரும். வக்கிர குரு இளைஞனுக்கு பண விஷயங்களில் பிடிவாதமான நிலைப்பாட்டைத் தரும். அதாவது பணியறிவுக்குத் தக்க சம்பாத்தியம் கிடைக்க வேண்டும் எனும் பிடிவாதமான நிலை.
- வெளிநாட்டுத் தொடர்பு: 6–ஆம் அதிபதி சுக்கிரன் 8-ஆம் ஆமிடமான கடகத்தில் அமைந்தது இவர் வெளிநாடு ஒன்றில் பணிபுரிவதற்கு உதவுகிறது. 6-ஆம் அதிபதி 8-ல் மறைவது விபரீத ராஜ யோகமாகும். சுக்கிரனுடன் இணைந்த வளர்ச்சி கிரகம் ராகு 8-ஆம் ஆமிடம் குறிப்பிடும் ஆராய்ச்சி விஷயங்களில் ஜாதகர் ஈடுபட காரணமாகிறார்.
- தர்ம கர்மாதிபதி யோகம்: 10–ஆம் ஆமிடத்தில் சூரியன் புதனுடன் இணைந்துள்ளார். 9-ஆம் அதிபதி சூரியன் 10-ல் திக்பலம் பெற்று, உச்ச புதனுடன் இணைவது தர்ம கர்மாதிபதி யோகங்களிலேயே மிக உயர்வான யோகமாகும்.
- பணிபுரியும் துறை: ஜாதகனுக்கு நீர் ராசியான கடகத்தில் 6, 11-ஆம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்த ராகு தசை நடக்கிறது. இந்தியரான ஜாதகர் வெளிநாட்டில் நேட்டோ (NATO) நாடு ஒன்றில் பணிபுரிகிறார். 8-ஆம் ஆமிடம் என்பது செயற்கை உபகரணங்களைக் குறிக்கும். சுக்கிரனும் ராகுவும் நவீன மின்னணுப் பொருட்களை குறிப்பவை. இவ்விரு கிரகங்களும் தரகர் என்பதை குறிப்பிடும் புதனின் ஆயில்யத்தில் நிற்பதால் விண்வெளியில் செலுத்தும் ராக்கெட்டிற்கு தேவைப்படும் மின்னணுக் கருவிகளை உற்பத்தி செய்து அரசுக்கு அளிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜாதகன் பணிபுரிகிறார். 10-ல் சூரியன் வலுப்பெற்றதால் அரசு நிறுவனத்திற்கு தேவைப்படும் கருவிகளை இவர் சார்ந்த நிறுவனம் உற்பத்தி செய்து தருகிறது.
திறமை மட்டம்தட்டப்படுவதும் மன அழுத்தமும்
புதுமை பாவகமான 8-ஆம் அதிபதியும், மனோ காரகருமான சந்திரன் கேதுவுடன் கால புருஷ 10-ஆம் ஆமிடமான மகரத்தில் இணைந்து, மேஷ சனியின் 10-ஆம் பார்வையைப் பெறுவதால் ஜாதகருக்கு வேலையில் புதுமையான படைப்பாற்றல் சிந்தனைகள் அதிகம் ஏற்படும். ஆனால் இதுவே மன அழுத்தத்திற்கும் காரணமான அமைப்பாகும். .
மேஷத்தில் சனி வக்கிரமாகியுள்ளதை கவனிக்க வேண்டும். சனி வக்கிரம் சிறப்பான தொழிலறிவு. ஆனால் அது ஜாதகருக்கு பயன்படாமல் அடுத்தவருக்கு பயன்படும் அமைப்பு. பணியிடத்தில் இவரது அபாரமான தொழிலறிவைப் பார்த்துப் பிரமிக்கும் மேலதிகாரி இவரது திறமையை இவர் அறிந்துகொள்ள விடாமல் இவரை மட்டம்தட்டி இவரது அறிவை அவர் பயன்படுத்தி பலனடைவார். ஜாதகரை பலனடைய விட மாட்டார்.
திறமையான இளைஞனுக்கு பல பொறுப்புகளை கொடுத்து பெயரளவிற்கு ஜாதகனுக்கு ஊதிய உயர்வு அளிப்பார். ஜாதகனுக்கு கூடுதலாக பல பொறுப்புகளை கொடுத்து சிறப்பான பலனை அறுவடை செய்யும் உயரதிகாரி, அதீத பொறுப்புகளால் ஜாதகன் தோய்வுரும்போது வேலைக்கு லாயக்கில்லை என்று கூறி பணியாளனது உண்மையான தொழிலறிவின் பெருமை அவர்களுக்கு தெரிந்துவிடாதபடி மட்டம் தட்டுவார். இதனால் தனக்கு உண்மையிலேயே திறமை இல்லையோ என்ற மன நிலைக்கு ஜாதகன் ஆளாவார். இவை யாவும் ஜாதகன் தனது திறமையின் மதிப்பை அறிந்துகொள்ளும் வரைதான். ஆனால் கொடுமை என்னவெனில் வக்கிர சனி ஒருவரது தொழிலறிவின் உன்னதத்தை மிகத் தாமதமாகவே உணர்த்தும். அதற்குள் பல வருடங்களை ஜாதகர்கள் வீணடித்திருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.
பொருளாதார ஏமாற்றமும் அவசர முடிவுகளும்
தனகாரகர் குரு வக்கிரமானால் எளிதாக தனவரவின் உச்சத்தைத் தொட முடியாது. குரு வக்கிரமானவர்கள் பொருளாதாரத்தில் அதிகம் ஏமாற்றப்படுவார்கள். இதனால் மிக நொந்து நூலாகி, இறுதியில் கடும் கஞ்சர்கள் எனும் பெயரெடுக்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்நிலைக்கு இவர்கள் பணவிஷயத்தில் காட்டும் மேலோட்டமான மனோபாவமும், உறுதியின்மையுமே காரணமாகும்.
மேற்கண்ட ஜாதகத்தில் சனியும் குருவும் வக்கிரமானதால் உழைப்பும், தனது உழைப்பின் பொருளாதார மதிப்பு எவ்வளவு என்பது தெரியும் வரைதான். இவை இரண்டும் கால தாமதமாகவேனும் இவர்களுக்கு தெரிய வரும்போது மிக விரைவில் இவர்கள் இழந்ததை மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உடனடியாக தங்கள் வேலையை விட்டு புதிய நிறுவனத்திற்கு மாறுகிறார்கள். ஆனால் அதிலும் தெளிவான திட்டமிடல் இல்லாதபோது சோர்வுறுகிறார்கள். இதற்கு காலச் சூழல் அறியாது இவர்கள் செயல்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும்.
கோச்சார நிலையும் ஆபத்தான வேலை மாற்றமும்
மேற்கண்ட இளைஞனும் தனது உழைப்பிற்கேற்ற சம்பாத்தியத்தை தான் அடையவில்லையே, தனது அறிவும், உழைப்பும் தனது உயரதிகாரியைத்தானே சேருகிறது என்பதை அறிந்து தற்போது வேறு நிறுவனத்திற்கு மாறும் சூழலில் உள்ளார். ‘பவர் & எனர்ஜி’ (Power & Energy) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தனது திறமைக்கேற்ற ஊதியம் வழங்க முன்வருவதாகவும் தற்போதைய நிறுவனத்தில் பல பொறுப்புகளுடன் பணிபுரிந்துகொண்டு செய்யும் மன உழைச்சலான வேலையை தொடர விரும்பவில்லை என்றும் கூறி என்னைத் தொடர்புகொண்டார்.
- கோச்சார கிரகப் பெயர்ச்சிகள்: கோச்சார சந்திரன் Power & Energy துறையைக் குறிக்கும் சூரியனின் சிம்மத்தில் செல்கிறது. இதனால் இவருக்கு அத்துறை தொடர்பான நிறுவன வேலை வாய்ப்பு வந்துள்ளது. கோச்சார சந்திரன் அடுத்து கன்னியில் நிற்கும் சூரியனைத் தொடவுள்ளதால் ஜாதகன் புதிய வாய்ப்பை ஏற்கும் நிலையில்தான் உள்ளார்.
- எலிப்பொறி சிக்கல்: தசாநாதர் ராகு விரைவில் மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில் அங்கு சந்திரன், கேதுவுடன் மாந்தியும் இணைந்து நிற்கிறார்கள். இதனால் புதிய பணியால் ஜாதகனுக்கு மிக அதிக மன உழைச்சலும் மாந்தி குறிக்கும் மரணத்திற்கு சமமான பாதிப்பும் வரவுள்ளது புரிகிறது.
- பொருளாதார இழப்பு மற்றும் அவமானம்: தனகாரகரான லக்னாதிபதி குரு கோச்சாரத்தில் 8-ல் உச்சம் பெற்று ஜனன ராகுவுடன் இணைந்துள்ளார். இதனால் ஜாதகருக்கு புதிய பணியிடத்தில் உறுதியளித்தபடி ஊதியம் கொடுக்கப்படாமல் குறைவாக கொடுத்து ஏமாற்றமடைய வாய்ப்பு மிக மிக அதிகம். கோட்சார சனியும் அடுத்த ஆண்டு 5–ஆம் ஆமிடத்திற்குப் பெயர்ந்து 10-ஆம் பார்வையால் 2-ஆம் ஆமிடத்தைப் பார்க்கும்போது ஒருவருக்கு அவமானம் ஏற்பட வேண்டும் என்பது விதி. இதனால் ஜாதகன் மன உழைச்சலின் உச்சத்திற்குச் செல்வார்.
நிதானமே பிரதானம்!
இங்கு ஜாதகன் தனது திறமையை உணர்ந்துவிட்டார். அதனால் நல்ல ஊதியம் தரும் நிறுவனத்திற்குச் செல்ல முயல்கிறார். ஆனால் காலச் சூழல் சாதகமாக இல்லை. உலகப் பொருளாதார தேக்க நிலையே காலச் சூழலாக உள்ளது. இதனால் தற்போதைய நிலையில் வேலை மாறுவது மரணத்திற்கு ஒப்பான நிலையைத் தரும். கோச்சார ராகு மகரம் கடந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
புதிய இடத்திற்கு வேலை மாறிக் செல்வது, புதிய வாழ்வு தரும் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் மாறுகின்றனர். ஆனால் அது என்ன செய்யக் காத்துள்ளது என்று தீவிரமாக ஆலோசனை செய்து அல்லது என் போன்றோரிடம் ஆலோசனை பெற்று மாறுவது ஜாதகன் போன்ற எலிகள் பொறியில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க உதவும்.
உங்கள் ஜாதகத்தில் வேலை மாற்றம் செய்யத் சரியான காலத்தை அறிய விரும்புகிறீர்களா?
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501











