
சொந்த வீடு… இது வெறும் செங்கற்களாலும் சிமெண்டினாலும் கட்டப்படும் ஒரு கட்டிடம் அல்ல; ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் உழைப்பு, வியர்வை, லட்சியம் மற்றும் எதிர்காலக் கனவுகளின் பிம்பம்.
ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலிலும், அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நகரமயமாக்கலிலும், ஒரு சாமானிய குடும்பஸ்தன் தன் வாழ்நாளில் அடைய நினைக்கும் இந்த அடிப்படைத் தேவை, எட்டாத ஒரு பெருங்கனவாகவே மாறிவருகிறது.
சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களை நோக்கி வேலைவாய்ப்புகளுக்காக கிராமத்து இளைஞர்கள் திரள்வது இன்றைய தவிர்க்க முடியாத நிதர்சனம். இதன் விளைவு? சொந்த ஊரில் உள்ள பூர்வீக வீடுகள், வருடத்திற்கு இரண்டு முறை—தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் சென்று எட்டிப் பார்க்கும் “சுற்றுலாத் தலங்களாக” மாறிப்போயின!
வாழ்க்கையின் பெரும்பகுதியை நகரத்தின் வாடகை வீடுகளிலேயே கழித்துவிடும் பலர், தங்கள் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் ஒன்றுதிரட்டி, பல ஆண்டுகாலக் கடனைத் தலையில் சுமந்தாவது ஒரு சொந்த வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று பெருநகரங்களில் முயற்சிக்கின்றனர்.
ஆனால், நிலத்தை வாங்கிய அல்லது வீட்டைக் கட்டத் துணிந்த அனைவருக்கும் அந்தக் கனவு சுபமாக முடிகிறதா? நிச்சயமாக இல்லை! இதில் இரு வேறு துருவங்களை நாம் பார்க்க முடிகிறது:
- ஒரு சாரார்: முறையான அரசு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பின்பற்றும் தகுதியான கட்டுமான நிறுவனங்களை நாடி, எந்தவித வில்லங்கமும் இன்றி, நிம்மதியாகத் தங்கள் கனவு இல்லத்தில் குடியேறுகிறார்கள். பெங்களூரு ரியல் எஸ்டேட் பாணியில் சொல்வதானால், இத்தகைய தரமான, சட்டப்பூர்வமான கட்டுமானங்களை ‘A Khata’ (A-காத்தா) நிறுவனங்கள் என்கிறோம் (A – முதல் தரம், Khata – பட்டா/உரிமை ஆவணம்).
- மறுசாரார்: துரதிர்ஷ்டவசமாக, குறுக்கு வழியில் செயல்படும் ‘B Khata’ கட்டுமான நபர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார்கள். அரசு விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பின்னர் அரசிடம் அபராதம் செலுத்தி அதை வரன்முறைப்படுத்தலாம் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றும் அமைப்புகள் இவை. அரசு இரக்கம் காட்டாத பட்சத்தில், கட்டிடங்கள் இடிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவதும், அதைத் தடுக்க நீதிமன்றப் படிகளை ஏறி, பணத்தையும் நிம்மதியையும் இழந்து, தங்களின் சொந்தக் காசிலேயே “சூனியம்” வைத்துக்கொண்ட கதையாக அலைக்கழிக்கப்படுவதும் இங்கே தொடர்கதையாகிறது.
தான் சம்பாதித்த பணத்தைக் கொடுத்துவிட்டு, “என் கைக்கு வீடு எப்போது வரும்?” என்று தெரியாமல் நீதிமன்ற வழக்குகளோடு கண்ணீருடன் போராடும் அப்பாவி மக்கள் ஒருபுறம்… ஒரே மாதிரியான உழைப்பு, ஒரே மாதிரியான முதலீடு… ஆனால் ஒருவருக்கு வீடு பாக்கியம் சிறப்பாக அமைகிறது. மற்றொருவர் அதே வீடு கிடைக்க போராடுகிறார்கள்.
இதன் பின்னணியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?
ஒருவருக்கு நேர்மையான, வில்லங்கமில்லாத சொத்து அமையுமா? அல்லது விதிமீறல்கள் நிறைந்த, நீதிமன்ற அலைச்சலைத் தரும் சொத்து அமையுமா? என்பதைத் தீர்மானிக்கும் ஜாதக அமைப்புகள் எவை? எந்தக் கிரகங்களின் சேர்க்கை உங்களை ஏமாற்றத்தில் தள்ளும்?
வாருங்கள்… இன்றைய பதிவில் விரிவாக ஆராய்வோம்!
வீடு பாக்கியத்தைத் தீர்மானிக்கும் ஜோதிடக் காரகத்துவங்கள்
ஜாதகத்தில் 4-ஆம் இடம் வீட்டை குறிக்கும் பாவகமாகும். ஒருவர் வீடு கட்ட, கால புருஷனின் 4-வது பாவகமான கடகமும், லக்னத்திற்கு 4-ஆம் பாவகமும் முதன்மையானவை ஆகும்.
இதன்படி கடகம், சந்திரன், 4-ஆம் இடம், 4-ல் நிற்கும் கிரகம் ஆகியவை ஒருவரின் வீடு பாக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.
- பொதுவாக செவ்வாய் நிலம் மற்றும் வீட்டின் காரகராக அழைக்கப்படுகிறார்.
- அலங்காரமான, சகல வசதிகளுடன் வசிக்கும் வீட்டை சுக்கிரன் குறிக்கிறார்.
ஒருவர் வசிக்கும் வீடு சிறப்பாக அமைய 4-ஆம் இடம், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
கீழே ஒரு பெண்மணியின் ஜாதகம்

தனது நாற்பதுகளில் இருக்கும் மேற்கண்ட ஜாதகியின் ஜாதகத்தில், 4-ஆம் இடத்தில் ராகு நிற்கிறார். ஜாதகி சந்திரன் தசை கடந்து தற்போது செவ்வாய் தசையில் இருக்கிறார்.
இவருக்கு வீடு அமைய வேண்டுமானால் அதை ராகுதான் கொடுப்பார். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ளது. ராகுவின் அனுமதியின்றி வேறு கிரகங்கள் இவருக்கு வீட்டைத் தந்துவிட முடியாது. ஏனெனில் வீட்டாதிபதியை விட, 4-ஆம் பாவகத்தைப் பார்க்கும் கிரகத்தை விட, 4-ஆம் பாவகத்தில் நிற்கும் கிரகமே அந்தப் பாவகத்தை அதிக ஆளுமை செய்யும்.
4-ஆம் அதிபதி சந்திரனுக்கும், காரகக் கிரகம் செவ்வாய்க்கும் வீட்டை கொடுக்கும் அதிகாரம் இருந்தாலும், அவர்கள் இருவரும் 4-ஆம் பாவகத்திற்கு 6-ஆம் இடமான தனுசில் மறைந்துவிட்டதால் வீட்டைத் தர இயலாது. மனோ காரகரும் 4-ஆம் அதிபதியுமான சந்திரன், தனது தசையில் வீடு கட்டிக்கொள்ளும் எண்ணங்களை மட்டுமே தர முடிந்தது.
லக்னாதிபதி செவ்வாய் 8-ஆம் அதிபதியுமாகி, தனது கடுமையான 8-ஆம் பார்வையால் 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், செவ்வாய் தசையில் வீட்டை அடைய முயற்சித்தால் அவமானங்களும் ஏமாற்றங்களுமே மிஞ்சும். மேலும் தசாநாதன் செவ்வாய்க்கு முன்னால் கேது நிற்பதால், ஜாதகிக்கு வாஸ்து தோஷமுள்ள வீடுதான் அமையும் என்பதுடன், அமையும் வீடும் கடன், வழக்கு போன்ற பல சோதனைகளுக்குப் பிறகுதான் அமையும் என்பது விதி.
நடந்தது என்ன?
இந்த ஜாதகி சந்திரன் தசையில் வீடு வாங்க, ஒரு உறவினரின் நெருங்கிய நண்பரிடம் 2014-ல் தனது பணியிட நண்பர்கள் 10 பேருடன் இணைந்து வீடு கட்டப் பணம் கொடுத்துள்ளார். அந்த பில்டர் ஒரு B-காத்தா பில்டர்! அவரது ஏமாற்றுத்தனங்களால் அவர் சிறை சென்றுவிட்டார். கவனிக்க அரசை குறிப்பிடும் சூரியனும், பத்திரத்தை குறிப்பிடும் புதனும் 8 ல் மறைந்ததால் அரசு அனுமதி முறையானதாக பெறாமல் வீடு கட்டிக்கொண்டுள்ளனர்.
தற்போது அவரிடம் இருந்து Power of Attorney பெற்று மற்றொரு கட்டுமான நிறுவனம் 2022 முதல் வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளது. முறையான ஒப்புதல்கள் இன்றி நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டதால், அரசுக்குத் தண்டமும், அரசியல்வாதிகளுக்கு லஞ்சமும் பெருமளவு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது புதிய கட்டுமான நிறுவனம் மறுமதிப்பீடு செய்து, கூடுதலாக ₹5 லட்சம் பெற்றுத் தொகுப்பு வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளது.
வீடு விஷயங்களை துல்லியமாக ஆராய சதுர்த்தாம்ச (D-4) சக்கரத்தைப் பயன்படுத்தலாம். சதுர்த்தாம்சத்திலும் ராசிச் சக்கரத்தைப் போலவே 4-ஆம் இடத்தை ராகுதான் ஆளுகிறார். இதனால் ஜாதகிக்கு ராகு தசையில்தான் வீடு கைக்கு வரும் என்பது தெளிவாகிறது.
இரண்டாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

விருச்சிக லக்னாதிபதியும் களத்திர காரகருமான செவ்வாய், 5-ஆம் இடமான மீனத்தில் வக்கிரமாகியுள்ளார். 2-ஆம் இடத்தில் 4-ஆம் அதிபதி சனி நின்று, 4-ஆம் வீட்டை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.
ஆனால் “4-ஆம் அதிபதியை விட 4-ல் நிற்பவனே வலுவானவன்” என்ற அடிப்படையில், 4-ஆம் இடத்து ராகுவே ஜாதகிக்கு வீடு அமைத்துத் தருவார். ஜாதகி தற்போது ராகு தசையில் இருக்கிறார். இதனால் ஜாதகி உறுதியாக வீடு கட்டுவார். கோச்சார ராகுவும் 4-ஆம் இடத்திலேயே இருப்பதால், அவர் 4-ஆம் இடத்தை விட்டு விலகுவதற்குள் வீடு அமைத்துத் தர வேண்டும்.
சூரியன் அரசைக் குறிக்கும்; கேது சட்டப்படியான நெறிமுறைகளைக் குறிக்கும். தசாநாதரான 4-ஆம் இடத்து ராகுவை, 10-ஆம் இடத்தில் கேதுவோடு இணைந்த திக்பல சூரியன் பார்ப்பதால், ஜாதகி சட்டப்படியான நெறிமுறைகளுடன்தான் வீடு கட்டுவார். இத்தகைய ஜாதக அமைப்பினருக்கு A-காத்தா Builder தான் அமைவார்.
பிரம்மாண்ட கிரகமான ராகுவைத் தொகுப்பு வீடுகளைக் குறிக்கும் சூரியன் பார்ப்பதால், ராகு தசையில் ஜாதகியும் தொகுப்பு வீடுதான் (Apartment) கட்டுகிறார். தசாம்சத்திலும் ராகு, குருவோடு இணைந்து 4-ஆம் இடத்தில்தான் நிற்கிறார். இவர்களை 10-ல் கேதுவோடு இணைந்த திக்பல சூரியன் பார்க்கிறார்.
இதனால் ஜாதகிக்கு ராகு தசை – குரு புக்தி – சூரிய அந்தரத்தில் தொகுப்பு வீட்டிற்கு 2022 இறுதியில் அஸ்திவாரம் போடப்பட்டு, லாபஸ்தான புதன் புக்தியில் கடந்த மாதம் 31-வது மாடியில் 3 படுக்கையறைகளுடன் (3 BHK) கூடிய வீடு கைக்கு வந்துவிட்டது! உள் அலங்கார வேலைகள் முடிந்து விரைவில் கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார்.
ராகு-கேதுக்கள் கடனோடு தொடர்புடையவை என்பதால், ஜாதகியும் தன் காதல் கணவருடன் இணைந்து கடனில்தான் வீடு கட்டியுள்ளார். வரி கிரகம் கேது சூரியனுடன் தொடர்பாவதால், அரசின் வரி சீரமைப்பால் கூடுதலாகச் சில லட்சங்கள் செலவழித்துள்ளார்.
இவரது ஜாதக அமைப்பு நல்ல தொடர்பாளர்களுடன் இணைந்து செயல்பட வைக்கிறது. இவருக்கு மோசமான ‘B காத்தா’ பில்டர்கள் வருவதைத் தொடர்பு ஸ்தானமான 7-ஆம் இடத்தில், தசாநாதன் ராகுவின் கேந்திரத்தில் நிற்கும் குரு தடுத்துவிடுவார். மேலும் ஜாதகி ராசியிலும் சதுர்த்தாம்சத்திலும் வீட்டை குறிப்பிடும் 4-ஆம் இடத்து ராகு தசையில்தான் வீடு கட்டுகிறார் என்பதால் இவருக்கு வீடு கைக்கு வந்துவிட்டது.
ஆனால், முதல் ஜாதகிக்கு 4-ஆம் இடத்துடன் தொடர்புடைய தசை வராததால், பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு கிடைக்காமல் போராடுகிறார்.
நிறைவாக
வீடு கட்டுவதற்கு முன் அல்லது வாங்குவதற்கு முன், அதற்கான கால நேரச் சூழல் மற்றும் ஜாதக அமைப்புகள் குறித்துத் தகுந்த ஜோதிடரிடம் ஆலோசித்துச் செயல்படுவது, முதல் ஜாதகியைப் போல பணத்தையும் நிம்மதியையும் இழந்து பாதிக்கப்படாமல் இருக்க வழிவகுக்கும்.
மீண்டும் உங்களை விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501











