மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. “மாற்றம் ஒன்றே நிலையானது” என்பது பிரபஞ்ச விதி. வயது, கற்ற கல்வி, பெறும் அனுபவங்கள் போன்ற பல காரணிகளைக் கொண்டது வாழ்வின் மாற்றங்கள். நேற்றைய சிந்தனைகள் இன்று மாறுபடலாம். கடந்தமுறை ஒரு கட்சிக்கு வாக்களித்து நிகழ்காலத்தில் அதை மாற்றிக்கொள்வது நம் இயல்பு. ஆனால் மாற்றங்கள் உலக இயல்புக்கு ஏற்ப அமைந்தால்தான் அது நமக்கு நன்மை தரும். மாறுபட்டு அமைந்தால் அது பிறரால் அங்கீகரிக்கப்படாது. மாற்றங்களின் அடிப்படையே அது நமக்கு தற்போதைய நிலையைவிட லாபகரமானதாகவோ அல்லது மாறுபட்ட அனுபவங்களை தருவதாக அமையும் என்ற நம்பிக்கைதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் சுபாவ அடிப்படையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கள் உண்டு. இவற்றை எதற்காகவும் நாம் விட்டுத்தர மாட்டோம். கடும் மன, உடல் காயங்களின் பேரில் ஒரு கட்டாய மாற்றத்தை நமது விருப்பங்களைத்தாண்டி நாம் அபூர்வமாக எடுப்பது உண்டு. பொதுவாக வாழ்வில் உயர்வுகளை, முன்னிட்டு எடுக்கப்படும் மாற்றங்களை நம்பிக்கையின் பேரில் நமது தனி விருப்பங்களையும் மீறி எடுக்கிறோம். இந்நிலையில் மாற்றங்களுக்கு எதிரி என்பது பொதுவாக பழகிவிட்ட சூழலாகவே அமைகிறது. நல்ல அறிவும், அனுபவமும் கொண்ட தொழிலில் அது நமக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்பதற்காக சம்பாதிக்கும் தொழில் துறையையே மாற்றும்போது நமது அறிவும், அனுபவமும் ஏன் பலனளிக்கவில்லை எனும் மன வலிகள் நம்மை அதிகம் வாட்டும். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு. ஒரு தனி மனிதனின் வாழ்வு அவரது தொழில் மாறுவதாலேயே பொதுவாக மாறுகிறது. தொழிலுக்காகவே அனைவரும் பழகிய சூழலை விட்டு வெளியேற விரும்புகிறோம். தொழில் மாற்றமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 3, 6, 9, 10, 11 ஆகிய பாவகங்களை பொறுத்து அமைகிறது. லக்னமும் அதன் திரிகோணங்களாகிய 5, 9 ஆகியவை கால மாற்றங்களுக்கு ஏற்ப ஒருவரது பொதுவான மாற்றங்களை குறிப்பிடுகிறது. 3 ஆம் பாவகம் ஜாதகரே தனக்கான மாற்றத்தை தேடிச் செல்வதை குறிக்கிறது.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மகர லக்னாதிபதி சனி 8 ல் மறைந்து, 8 ஆமதிபதி சூரியனால் லக்னம் பார்க்கப்படுவதாலும், 2 ல் கேது நிற்பதாலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் வெளியிடத்திலேயே அமையும் என்பதை தெரிவிக்கிறது. தன, வாக்கு ஸ்தானத்தில் வழக்கு காரகர் கேது அமைந்துள்ளார். 2 ன் திரிகோணமாகிய 6 ல், 10 ஆமதிபதி சுக்கிரன் அமைந்துள்ளார். இவ்வமைப்பு கேது, சுக்கிரன் ஆகியவற்றின் காரகங்கள் பொருளாதார விஷயத்தில் ஜாதகரை இயக்கும் என்று தெரிவிக்கின்றன. லக்னாதிபதியும் ஜீவன காரகருமான சனி ராகுவுடன் இணைந்து 8 ல் நிற்பதும், 2 ல் கேது நிற்பதிலிருந்து ஜாதகருக்கு ராகு-கேதுக்களின் காரகங்களின் மீது நாட்டமிருக்கும் என்பதை அறியலாம். ஜாதகர் உயர் கல்வி காலத்தில் லக்னாதிபதியுடன் இணைந்த ராகு தசையில் கணினிக் கல்வி பயின்றார். ராகு உயர் கல்வியை பாவகமான 9 க்கு 12 ஆமிடத்தில் 8 ல் மறைந்தாலும் தனது காரகக் கல்வியை தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலுக்கு ஆராய வேண்டிய தசாம்சத்தில் ராகு ரிஷப லக்னத்திற்கு 9 ல், சனி மற்றும் லக்னாதிபதி சுக்கிரனுடன் அமைந்திருப்பதை கவனியுங்கள். இதனால் ஜாதகர் வெளிநாடு சென்று வேலை செய்தார். 9 ஆமிடம் தொலை தேசத்தையும் ராகு வெளியிட தொடர்பையும், சனி ஜீவனத்தையும், லக்னாதிபதி சுக்கிரன் 9ல் இவர்களோடு இணைந்தது ராகு தசையில் ஜாதகர் ஜீவனத்திற்காக வெளிநாடு செல்வதையும் குறிப்பிடுகிறது. ஜாதகர் சரியாக ராகு தசை முடிந்ததும் இந்தியா திரும்பினார். அடுத்த தசாநாதர் குரு ஜாதகரின் தொழில் சூழலை தன் இஷ்டப்படி மாற்றி அமைக்கிறார். குரு தசாம்சத்தில் துலாம் ராசியில் அமைந்திருப்பதை கவனியுங்கள். துலாம் நீதிமன்றத்தை குறிப்பிடும் ராசி என்பது அறிந்ததே . 6 ஆமிடத்தில் துலாத்தில் குரு நின்றாலும் அவர் 4 ல் லக்னாதிபதி சுக்கிரனின் பூரத்தில் இருந்து 10 ஆமிடத்தை பார்வை செய்யும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். குருவும் 10 ஆமிடத்தை பார்க்கிறார். இந்த அமைப்பால் ஜாதகர் கணினித்துறையில் பணிபுரிவதைவிட வக்கீல் தொழில் செய்ய விரும்புகிறார். இதன்படி ஜாதகர் தற்போது குரு தசை, சூரிய புக்தியில் தனது எண்ணப்படி கணினித்துறையை விடுத்து இளங்கலை சட்டம் பயின்று வக்கீலாக தொழில் செய்துகொண்டுள்ளார். தசாநாதர் குருவிற்கு 10 ல் கேது புதனின் ஆயில்யத்தில் நிற்பது ஜாதகர் குரு தசையில் கேது தொடர்புடைய வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. ஜாதகர் இயல்பை தசாநாதர் குரு இங்கு தனது ஜாதகப்படியான அமைவிற்கு ஏற்ப மாற்றி அமைக்கிறார்.
கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
மேஷ லக்னத்தில் சனி, 3, 6 ஆமதிபதி புதனுடன் இணைந்து நீசம். இது ஜாதகர் முன்னேற கடுமையாக உழைப்பதையும், லக்ன புதன் ஜாதகர் ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபடுவதையும் குறிப்பிடும். தன பாவகமான 2 ல் 3 கிரகங்கள் மற்றும் 2 ன் திரிகோணமான 6 ல் சந்திரன். இது பொருளீட்ட ஜாதகர் எடுக்கும் பல முயற்சிகளை தெரிவிக்கிறது. 2 ஆமிடம் தனத்துடன் உணவையும் குறிப்பிடும். ஜாதகர் உணவுத்துறையோடு தொடர்புடையவர்.
தசாம்சத்திலும் குரு 2 ல் இருப்பதை கவனியுங்கள். ராசியில் நீசமான சனி இங்கு உச்சமாக இருக்கிறார். லக்னத்தில் லக்னாதிபதி சுக்கிரனுடன் சனியும் வியாபார கிரகம் புதனும் உள்ளனர். துலாம் ராசியே வியாபார ராசியாகும். தசாம்சத்தில் லக்னம் ராகுவின் சுவாதியில் அமைந்துள்ளது. இதனால் ராகுவின் காரகத்துவஙகள் ஜாதகர் என்ன தொழில் செய்தாலும் அவற்றில் மேலோங்கி இருக்கும். ராகு அரைப்பது, இடிப்பது, தூளாக்குவது போன்றவற்றை குறிக்கும். ஜாதகர் தசாம்சத்தில் உணவு ஸ்தானமான 2 ல் நிற்கும் குரு தசையில் லக்னத்திலிருந்து 10 ஆவது பார்வையாக உணவு காரகர் சந்திரனின் ராசியான கடகத்தை பார்க்கும் சனி புக்தியில் தங்களது தந்தை ஏற்படுத்தி வைத்த அரவை மாவு மில் தொழிலை ஏற்று செயல்பட்டார். குரு தசையின் சுக்கிர புக்தியில் லாபம் கருதி கூடுதலாக லாபம் வேண்டி அரிசி அரவை ஆலைத் தொழிலில் ஈடுபட்டார். கவனிக்க தசாநாதர் குரு உணவு பாவகத்தில் நிற்க குரு சாரத்தில் துலாத்தில் விசாகத்தில் புக்திநாதர் சுக்கிரன் இருந்து புக்தி நடத்துகிறார். அரிசியை குறிக்கும் சந்திரன் லாப ஸ்தானத்தில் புக்திநாதர் சுக்கிரனின் பூரத்தில் நிற்கிறார். இந்த அமைப்பால் ஜாதகர் மேற்சொன்ன தொழிலில் ஈடுபட்டார். 2020 ல் குரு தசை முடிந்து ஜாதகருக்கு சனி தசை துவங்கியது. தசாம்சத்தில் லக்ன சனி 2 ல் நிற்கும் குருவின் விசாகத்திலும் 2 ஆமிட குரு சனியின் அனுசத்திலும் அமைந்து சாரப்பரிவர்த்தனை பெறுகிறார்கள். இந்த அமைப்பால் சனி தசையிலும் ஜாதகர் உணவுபொருள் துறையை விடவில்லை. சனி எண்ணையை குறிப்பவர். இதனால் முன் செய்த மாவு-அரவை, விற்பனை, அரிசி-அரவை, விற்பனை இவற்றோடு தற்போது செக்கு எண்ணை-அரவை, விற்பனையையும் செய்து வருகிறார். லக்னத்தில் தரகு, வியாபார கிரகம் புதன் நிற்பதால் தன்னால் உற்பத்தி செய்துதர இயலாதபோது வெளியிடத்தில் வாங்கி விற்பனை செய்கிறார்.
இவர் செய்யும் அனைத்து தொழில்களுமே உணவு சார்ந்ததாக இருக்க தசாம்சத்தில் தசா-நாதர்கள் பெற்ற 2 ஆமிட தொடர்பும், வியாபாரம் சார்ந்ததாக இருக்க துலாம் ராசியும், அரவை சார்ந்ததாகவும் இருக்க லக்ன புள்ளி நாதர் ராகுவாக இருப்பதுமே காரணம். இவை தவிர பிற தொழில்களிலும் ஈடுபட்டு ஜாதகர் நஷ்டப்பட்டுக்கொண்டார். ஆனால் இங்கு குறிப்பிட்ட தொழில்களில் பாதிப்புகளை எதிர்கொண்டாலும் ஆவற்றிலிருந்து விலகாமல் ஜாதகர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவற்றை மீறி ஜாதகரால் செயல்பட இயலாது செயல்பட்டால் ஜாதகர் வீழ்ச்சி அடைவார். ஒருவரின் தொழில் அமைப்பை 2, 6, 10 போன்ற பாவகங்கள் குறிப்பிட்டாலும் லக்னம், லக்ன நட்சத்திர நாதர், லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களே தொழிலை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தசா-புக்தி நாதர்கள் தொழிலில் ஏற்படும் மாறுதல்களை குறிப்பிடுகிறார்கள். ராசி மேலோட்டமாக குறிப்பிடுவனவற்றை தசாம்சம் துல்லியமாக சுட்டிக்காட்டும்.
தொழில் சூழல் ஒருவரது வாழ்க்கைச் சூழலை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. .செய்தொழிலில் மாற்றம் தேவை என விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தில் எம்மாதிரியான தொழில் சூழல் இயங்குகிறது என்பதை அறிந்துகொண்டு தங்களது தற்போதைய தொழிலிலேயே (அது துபாய் வேலையாக இருந்தாலும்) தொடரலாமா? அல்லது வேறு துறைக்கு மாறலாமா? என்பதை முடிவு செய்வது நலம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.