வக்கிர கிரகங்கள் பொதுவாக தன் இயல்பில் இருந்து மாறுபட்டவை. இவை தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தினாலும் பலன்களை மறுக்காமல் ஜாதகருக்கு வழங்கும். பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் தங்களது காரகம் சார்ந்த பொருட்காரகப் பலன்களை, உயிர் காரகப்பலன்களைவிட சிறப்பானதாகவும் பிற கிரகிரகங்ளைவிட மேம்பட்டதாகவும் வழங்கக் கூடியவை. ஆனால் இவை வழங்கும் உயிர் காரகப் பலன்களில் குற்றம், குறை இருக்கும். கோட்சாரத்தில் வருட கிரகங்களின் தாக்கம் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்றாலும் ஜாதகத்தில் வருட கிரகங்கள் வக்கிரமானால் அவை தொடர்புடைய தசா புக்திகளில் அவற்றின் வெளிப்பாடு இயல்பைவிட மாறுபட்டதாக அமையும். மேலும் தசா-புக்திகள் வராவிட்டாலும் இவை நிற்கும், பார்க்கும் மற்றும் தொடர்புகொள்ளும் கிரகங்களின் மூலம் ஜாதகருக்கு இயல்புக்கு மாறுபட்ட விஷயங்களை தொடர்புபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கிர கிரகங்கள் நேர்கதி கிரகங்களின் இயல்புக்கு எதிரானவை. அவை நேர்கதி கிரகங்களை மதியாது செயல்படும் என்றாலும், தாங்கள் தொடர்புகொள்ளும் அல்லது தங்களை தொடர்புகொள்ளும் நேர்கதி கிரகங்கள் ஆட்சி, உச்சமானால் அவற்றின் வலுவை தனதாக்கிக்கொண்டு செயல்படும் தன்மை வாய்ந்தவை. இதனால் வக்கிர கிரகங்கள் இதர வக்கிர கிரகங்களுடன் தொடர்புகொள்வதும், ஆட்சி, உச்சமான நேர்கதி கிரகங்களுடன் தொடர்புகொள்வதும் விரும்பத்தக்கதே. வக்கிர கிரகங்கள் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களுடன் இணைந்து செயல்படுபவையாகும். உண்மையில் வக்கிர கிரகங்கள் ராகு-கேதுக்களின் சேவகனாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நேர்கதி கிரகங்களுடன் இவை இணைந்து செயல்படாது. நேர்கதி கிரகங்கள் வக்கிர கிரகத்தின் தொடர்பை பெறுவது நேர்கதி கிரகத்திற்கு பாதிப்பைத் தரும். பொதுவாக ஜாதகத்தில் வருட கிரகங்களான சனி மற்றும் குருவின் வக்கிரம் இதர கிரக வக்கிரங்களைவிட முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இவை மனித வாழ்வின் முக்கிய காரகங்களான தனம், குடும்பம், புத்திரம், ஆயுள், ஜீவனம் ஆகியவற்றை கட்டுப்படுதுவதேயாகும். இப்பதிவில் நாம் வக்கிர கிரகங்களை ஜாதகத்தில் எப்படி கையாள்வது என்று ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மேற்கண்ட ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு மீனத்தில் வக்கிரம். ஆயுள்-ஜீவன காரகர் சனி மேஷத்தில் வக்கிரம். லக்னாதிபதி குரு கேந்திரத்தில் ஆட்சி வீட்டில் அமைவது ஹம்ச யோகமாகும். ஆனால் அவர் வக்கிரமாவது யோக பங்கமாகும். சுக ஸ்தானத்தில் அதன் அதிபதி வக்கிரமானாலும். இவர் பெரிதாக அலைச்சலின்றி சுகமாக தனது வாழ்நாளையும் வேலையையும் கழித்துள்ளார். காரணம் வக்கிர குரு தன்னைப்போலவே வக்கிரமான சனியின் உத்திரட்டாதி-3 ல் அமைந்ததால் வக்கிர கிரகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்பதற்கேற்ப சுகமாக பெரிய அலைச்சலின்றி தனது வாழ்நாளில் பணிபுரிந்துள்ளார். பணி நிமிர்த்தமான இவரது அலைச்சல் என்பது இவர் பணிபுரியும் இடத்திற்கு தினமும் 15 கிலோ மீட்டர் பேருந்தில் சென்று வந்ததுதான். வக்கிரமான தனகாரகர் குரு வக்கிர சனியின் சாரம் பெற்றதால் இவருக்கு ஜீவன வகையில் பாதிப்பின்றி நன்மைதான் ஏற்பட வேண்டும். ஆயுள் காரகர் சனி மேஷத்தில் நீசம். மேலும் கேதுவுடன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்திலேயே இணைவு பெற்றது ஆயுளுக்கு தோஷமா? என்றால் நீச வக்கிரம் உச்சப் பலனைதரும் என்பதால் சனி ஆயுளுக்கும் ஜீவனத்திற்கும் தோஷத்தை தரமாட்டார். வக்கிரமாகி கேதுவுடன் இணைந்ததால் கேதுவும் சனியை பாதிக்காது சனிக்கு நன்மை செய்யும் அமைப்பிலேயே உள்ளார். மேலும் லக்னத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி சந்திரன் நிற்க , 4 ல் வக்கிரமான குரு தனது 5 ஆவது பார்வையால் 8 ஆமிடமான ஆயுள் ஸ்தானம் கடகத்தை பார்ப்பதால் இவருக்கு நல்ல ஆயுள் அமைய வேண்டும்.
வக்கிர சனி மகரத்தில் உச்சம் பெற்ற செவ்வாயுடன் பரிவர்த்தனையாகி உள்ளதை கவனிக்க. இதனால் மேஷத்திற்கு வரும் செவ்வாய் ஆட்சி பெற்று கேதுவுடன் இணைவதால் ஆட்சி-உச்ச கிரகங்களுடன் ராகு-கேதுக்கள் இணைவு நன்மையே என்ற விதியின்படி பரிவர்த்தனை செவ்வாயை கேது பாதிக்காது நன்மை செய்வார். பரிவர்த்தனையாகி 2 ஆமிடம் மகரத்திற்கு வந்து ஆட்சி பெறுகிறார் சனி. ஆனால் சனி வக்கிரம் பெறுவதால் 2 ஆமிட பலன்கள் பாதிக்குமா? என்றால் 2 ஆமிட சனியின் சாரத்தில் குடும்ப காரகர் குரு அமைந்துள்ளதால் இவருக்கு குடும்பமும் சம்பாத்தியமும் பாதிக்கவில்லை. ஆனால் குடும்பம் இவருக்கு 36 வயதில்தான் அமைந்தது. வக்கிர கிரகங்கள் பலன்களை தடை செய்யாது ஆனால் தாமதித்து வழங்கும் என்பது திருமண விஷயத்தில் நடந்துள்ளது. பரிவர்த்தனையால் மகரத்திற்கு வரும் சனி ஜீவன, வருமான விஷயத்தில் தடையையும் தாமதத்தையும் வழங்குவாரா? என ஆராய்ந்தால், 2 ஆமிட சனி, செவ்வாய் நின்ற அதே சூரியனின் உத்திராடம்-3 நின்று செயல்படுவார் எனும் நிலையில், சூரியன் 10 ல் தர்ம கர்மாதிபதி யோகத்துடன் திக்பலம் பெற்றுள்ளார் . வலுபெற்ற கிரகத்துடன் வக்கிர கிரகங்கள் தொடர்பு சிறப்படையும் என்பதற்கேற்ப இவருக்கு ஜீவனம் பாதிக்கப்படவில்லை. மாறாக சூரியன் குறிப்பிடும் அரசுத்துறையில் ஜாதகர் பணிபுரிந்துள்ளார். மேஷத்தில் கேது சாரம் பெற்று கேதுவுடன் ஜீவன காரகர் சனி இணைவு பெற்றதால் ஜாதகர் புகழ் பெற்ற பெரிய ஆன்மீக ஸ்தலம் ஒன்றில் சூரியன் குறிக்கும் சிவன் கோவிலில், புதன் குறிப்பிடும் கணக்கராக பணிபுரிந்துள்ளார். தற்போது 84 வயதில் ஜாதகர் துணைவியுடன் தனது ஓய்வுக் காலத்தை கழித்து வருகிறார். நல்ல வேலை, நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை ஆகியவை ஜாதகருக்கு அமைந்தன.
ஜாதகருக்கு குறைகள் ஏதும் இல்லையா? என்றால் குற்றம், குறை இல்லாத மனிதனே உலகில் இருக்க முடியாது என்பதற்ப ஜாதகருக்கும் வருத்தங்கள் உண்டு.. தன, குடும்ப, புத்திர காரகர் வக்கிரமானாலும் ஜாதகருக்கு தனமும், குடும்பமும் அமைந்துவிட்டன. ஆயுள், ஜீவன காரகர் சனி வக்கிரமானாலும் அவை இரண்டும் ஜாதகருக்கு சிறப்பாகவே அமைந்தன. ஆனால் 5 க்கு வியையத்தில் அமைந்தாலும் 5 ல் நிற்கும் சனி சாரம் பெற்ற குரு, 5 ஆமிடத்துடன் தொடர்பாக, சனி 5 ஆமிடத்துடன் நேரடியாக தொடர்பாகிறார். 5 ல் அமைந்த சனி வக்கிரமாகி கேதுவுடன் இணைவதும், பரிவர்த்தனையால் 5 ல் ஆட்சி பெற்று கேதுவுடன் செவ்வாய் தொடர்பாவதும் நன்மையே. இதனால் ஜாதகருக்கு 5 ஆமிட பலன்கள் தாமதமானாலும் கிடைத்தாக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் ஜாதகருக்கு 5 ஆமிடதுடன் தொடர்பாகும் இக்கிரகங்களின் தசை வர வேண்டும். ஜாதகருக்கு செவ்வாய் தசையில் திருமணம் நடந்தது. 2 ல் அமைந்த உச்ச செவ்வாய் 10 ல் திக்பலம் பெற்ற சூரியனின் சாரத்தில் நிற்பதை கவனிக்க. 10 ஆமிடம் என்பது 5 க்கு 6 ஆவது பாவகமாகும். இதனால் ஜாதகருக்கு செவ்வாய் தசையில் புத்திரம் அமையவில்லை. அதை அடுத்து வந்த சுய சாரம் சுவாதியில் நிற்கும் ராகு தசையிலும் ஜாதகருக்கு குழந்தை அமையவில்லை. ராகு 11 ஆமிடத்தில் இருந்து 5 ஆமிடத்தை பார்த்தாலும் ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீச பங்கம் பெற்றாலும் அவர் அஸ்தங்கம் பெற்றுவிட்டதாலும், குருவிற்கு 8 ல் குரு தொடர்பற்ற ராகு தசையில் ஜாதகருக்கு புத்திரம் அமையவில்லை.. ராகு தசை முடிவில் ஜாதகர் 60 வயதில் பணி ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்து வந்த குரு 5 க்கு விரையத்தில் நிற்க ஜாதகர் குழந்தை பெறும் வயதை கடந்துவிட்டார். தற்போது சனி தசையில் ஜாதகர் உள்ளார். வக்கிர சனியும் குருவும் ஜாதகருக்கு புத்திரம் அமையாததற்கு காரணமல்ல. ஆனால் அவற்றின் தசைகள் குழந்தை அமையும் காலத்தில் வராததாலேயே ஜாதகருக்கு புத்திரம் அமையவில்லை என்பதை நினைவில் கொள்க.
வக்கிர கிரகங்களை எடை போட மிகுந்த அனுபவம் தேவை என்பதை இந்த ஜாதகம் நமக்குப் புலப்படுத்துகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501