காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. வாழ்வில் பெரும்பாலோருக்கு காதல் தரும் அவமானமே அவர்களின் உயர்வுக்கும் காரணமாக அமைவது உண்டு. வேறு சிலர் காதல் தந்த கசப்பை மறக்க இயலாமல் மரணிப்பதும் உண்டு. எப்படியாயினும் காதல் தரும் வெற்றியும் மிக உயர்வானது. அதன் தோல்வியும் தாங்கிக்கொள்ள முடியாதது. காதலில் வெற்றி பெறுவோருக்கான அமைப்பு என்ன?, தோல்வி பெறுவோருக்கான அமைப்பு என்ன என ஜோதிடரிடம் கேட்டுவிட்டு யாரும் காதலிப்பதில்லை. அது தேவையும் இல்லாதது. ஏனெனில் காதல் என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பருவத்தில் பூக்கும் ஒரு பூ எனலாம். அன்றைய காதலில் பிரதானமாக ஜாதியும், குடும்ப பாதுகாப்பும், அந்தஸ்தும் எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய காதலில் அழகு, இளமை, நிறம், உயரம், கல்வி, சம்பாத்தியம், தொழில் நுட்ப அறிவு, நவீனத்துவம், அயல் தேச வாழ்வு, சமூக அந்தஸ்து என பட்டியல் நீள்கிறது. வென்ற காதல்களைப் பற்றி பல பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. எனவே இன்றைய பதிவில் மண வாழ்வில் இணை சேராமல் வெறும் ஒத்திகைக் காதல்களாகவே அமைந்துவிட்ட காதல்களின் தோல்விக்கான காரணங்களை ஆராயவிருக்கிறோம்.
கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகர் ஒரு ஆண். காதல் பாவகமான 5 ஆவது பாவகத்தில் அதன் அதிபதி சனியை 7 ஆமதிபதி குருவும், காதல் காரகர் புதனும் லாப பாவகத்தில் இருந்து பார்க்கின்றனர். இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகர்கள் வாழ்வில் கட்டாயம் காதலை சந்திப்பர். ஆனால் இங்கு ஒரு பரிதாபம். 7 ஆமதிபதியே பாதகாதிபதியாகி, அவர் உச்சமும் ஆகி, லக்னாதிபதியுடன் இணைகையில் காதலால் வேதனைகளும் மிக அதிகம். 5 ஆமதிபதி சனி வக்கிரமாகின்ற போது வேதனைகள் அளவு கடந்ததாக அமையும். தசா-புக்தி வந்தால்தான் ஜாதகர் காதலையும் அது தரும் வேதனையையும் எதிர்கொள்வார். ஜாதகருக்கு சனி தசை நடக்கிறது. சனி 5 ல் வக்கிரமாகி, காதலின் விரைய பாவகமான 4 ஐ நோக்கி நகர்கிறார். இதனால் ஜாதகர் காதலில் பின்வாங்கும் சூழல் உருவாகும். என்ன காரணமாக இருக்க முடியும்? சனி, ராகு-கேது அச்சை விட்டு விலகி நிற்பதை கவனியுங்கள். இதனால் இவரது எண்ணங்களை மற்றவர்களால் உணர முடியாது. மற்றவர்களின் கருத்துக்களை ஜாதகர் ஏற்றுக்கொள்ள மாட்டார். சமூக அங்கீகாரத்தை குறிக்கும் பாவகம் 9 ஆவது பாவகமாகும். கன்னி லக்ன 9 ஆமதிபதி சுக்கிரன், 8 ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்து 12 ல் மறைந்துவிட்டார். இதனால் இவரது காதலை உறவும், சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதகர் வேற்று ஜாதி பெண்ணை காதலிப்பதுதான் காரணம். காதலியை குறிக்கும் புதனும் பாதகாதிபதி குருவும் ஒன்றினைந்துள்ளதால் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திருமணம் என்று காதலி கூறுகிறார். காதலி இவ்வாறு கூற காரணம் பரிவர்த்தனைக்குப் பிறகு புதன் லக்ன விரையாதிபதி சூரியனுடனும், தடைகளின் காரக கிரகம் கேதுவுடனும் தொடர்பாவதுதான். ஜாதகர் தன் காதல் வெல்லும் என நம்பிக்கையில் இருக்கிறார்.
இரண்டாவது ஜாதகம் கீழே.
காதலின் காரகர் புதன் காதல் பாவகமான 5 ஆமிடத்தில் நீசம். 5 ஆமதிபதி குரு 5 க்கு விரையமான கும்பத்தில் அமைந்துள்ளார். இவ்வமைப்பு காதலித்து வெற்றி பெற சாதகமான அமைப்பு அல்ல. ஆனால் தசா-புக்தி கிரகங்கள் தங்கள் வேலையை செய்துதான் தீரும். இந்தப்பெண்மணியும் காதலித்தார். காதலிக்கும்போது நடந்தது ராகு தசை. ராகு-கேதுக்கள் தங்களுக்கு பின் வீட்டில் நிற்கும் கிரகங்களை முதலில் தொடும் என்பதால் அதை கிரக சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இதன்படி 5 ஆம் பாவகத்தையும், புதனையும் முதலில் தொடும் தசாநாதர் ராகு ஜாதகியை காதலில் ஈடுபடுத்தினார். காதலின் காரகரான புதன் நீசமாகி, அவர் ராகு-கேதுக்களுடன் இணைவதால் காதலில் வலிகளும் ஏமாற்றங்களும் மிக மிக அதிகம் ஏற்படும். முதல் ஜாதகத்தை போன்றே இங்கும் ஒரு கிரகம் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறது. அவர் 7 ஆமதிபதி என்பதுதான் இங்கு சோகம். இதனால் தனது துணைவரை ஜாதகியால் புரிந்துகொள்ள இயலாது. துணைவரின் உணர்வுகளை ஜாதகி ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த அடிப்படையில் 5 ஐயும், புதனையும் பாதிக்கும் வகையில் தசா நடத்தும் ராகு எதிர்பார்த்தபடி காதலில் அதிகப்படியான விரக்தியையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துகிறார். காதலின் காரகர் புதன் ஏமாற்றப்பட்டால் அதன் தாக்கம் வியாதி வடிவில் வெளிப்படும். காரணம் புதன் கால புருஷனுக்கு 6 ஆவது பாவக அதிபதி என்பதுதான். மேலும் ஜாதகத்தில் பலகீன கிரகமும், குறைந்த மற்றும் அதிக பாகை பெற்ற கிரகங்களும் வியாதியை ஏற்படுத்தும். புதன் இங்கு மிக பலகீனமாகி பிற கிரகங்களைவிட அதிக பாகையும் பெற்றுள்ளார். மேலும் அவர் லக்னத்திற்கு 8, 11 ன் அதிபதி. 8 ஆமிடம் குறைபாட்டை குறிக்கும் பாவகம் என்பதால் இங்கு வியாதி ஏற்பட்டால் அது குணப்படுத்த இயலாத குறைபாடாக மாறும். காதலில் தான் ஏமாற்றப்பட்டதாக ஜாதகி உணர்ந்தவுடன் அது குணப்படுத்த இயலாத தைராய்டு வியாதி வடிவில் இந்த ஜாதகிக்கு வெளிப்பட்டது. தைராய்டு ஏற்பட காரணம் புதன் கால புருஷனுக்கு கழுத்து, தொண்டையை குறிக்கும் 3 ஆவது பாவக அதிபதி என்பதே. குறைபாட்டை குறிக்கும் சனி, கால புருஷனுக்கு குறைபாட்டு பாவகமான விருட்சிக லக்னத்தில் அமைந்து ஜாதகிக்கு குறைபாடு ஏற்படுவதையும் அது குணப்படுத்த இயலாதது என்பதையும் தெரிவிக்கிறார். காதலால் ஏற்பட்ட பாதிப்பால் தனக்கு திருமணமே வேண்டாம் என முடிவு செய்த ஜாதகி வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.
கீழே மூன்றாவது ஜாதகம்.
உள்வட்டத்தில் இருப்பது ஜனன ஜாதகம். வெளிவட்டத்தில் இருப்பது கோட்சார கிரக நிலைகளாகும். இது திருமணத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு பெண்ணின் ஜாதகம். கோட்சார சந்திரன் ஜனன லக்னத்திற்கு 8 ல் கும்ப கேது மேல் செல்கிறார். துலாத்தில் அமைந்த ஜனன சந்திரன் மீது கோட்சார கேது செல்கிறார். சந்திரன்-கேது தொடர்பு கடும் மன உளைச்சலையும், லக்னத்திற்கு 8 ஆவது பாவக தொடர்பு மரணதிற்கொப்பான அவமானத்தையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். கோட்சார சந்திரனை காதல் பாவகமான 5 ஆவது பாவகம் விருட்சிகத்தில் இருந்து ஜனன செவ்வாய் நான்காம் பார்வையாக பார்க்கிறார். நடப்பது சனி தசை, செவ்வாய் புக்தி. எனவே காதல் விவகாரமே இப்பெண்ணின் இந்நிலைக்கு காரணம் என்பது புரிகிறது. உச்ச கிரகம் ஜாதகரை உணர்வு ரீதியாக தூண்டிக்கொண்டே இருக்கும் என்பதற்கேற்ப இந்த ஜாதகத்தில் காதல் காரகர் புதன் உச்சம். எனவே ஜாதகி காதலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இப்பெண் ஒருதலைக் காதலால் அவமானப்பட்டார். காதல் புரியும் பருவத்தில் சனி தசை நடப்பில் இருப்பின் அது காதலில் கசப்பை, தடை, தாமதத்தை தரும். சனி வக்கிரமாகியிருந்தால் கசப்புணர்வு அதிகம் ஏற்படும். இங்கு தசாநாதர் சனி வக்கிரமாகி, காதல் காரகரான உச்ச புதனின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்துகிறார். அவர் 9 ல் இருந்து 8 ஆமிடத்தை நோக்கி வக்கிரமாகியுள்ளார். வக்கிர சனி, வக்கிர குருவோடு பரிவர்த்தனை ஆகியுள்ளார். புக்தி நாதன் செவ்வாய் பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து, சனியின் அனுஷ நட்சத்திரத்தில் நிற்கிறார். இதனால் இவருக்கு இந்த சனி தசை, செவ்வாய் புக்தியில் அவமானமும் பாதகமும் ஏற்பட வேண்டும். இப்பெண் ஒருதலையாக ஒரு இளைஞரை காதலிக்கிறார். அவர் உயர் கல்வியின் பொருட்டு வெளிநாடு சென்று விட்டார். அவருக்கு இப்பெண்மீது பெரிய காதல் எண்ணமில்லை. பையனின் வீட்டாரும் ஜாதகியின் குடும்பம் தங்களது அந்தஸ்துக்கு குறைவானது என்று கருதி ஜாதகியின் ஆசையை நிராகரிக்கின்றனர். இதனால் தனது காதலை வெளியில் சொல்லி பெருத்த அவமானத்திற்கு ஜாதகி உள்ளானார். ஒருதலைக் காதலின் காரக கிரகமும் புதனே ஆவார். நீர் ராசியான மீனத்திலமைந்த தசா நாதர் சனியை புதன் பார்ப்பது கல்விக்காக ஜாதகி விரும்பும் நபர் வெளிநாடு செல்வதை குறிக்கிறது. சனி-குரு பரிவர்த்தனை இதை தெளிவாக்குகிறது. அந்தஸ்தால் பெண்ணின் ஆசையை பையனும் அவரது வீட்டாரும் நிராகரிப்பதை தசாநாதர் சனியை, புதனை அஸ்தங்கப்படுத்தி நேர் பார்வை பார்க்கும் சூரியனும் தெரிவிக்கின்றனர். கௌரவம், அந்தஸ்துக்கு உரிய கிரகம் சூரியனாகும். ஒருதலைக் காதலால் ஜாதகி அவமானப்படுவதை கோட்சார சந்திரன் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.
காதலில் தோல்வியுறுவதை விட காதல் உணர்வற்றிருப்பது பெரும் கேடாகும். தோல்வி நமக்கு எதிர்பாலினர் மீதான அணுகுமுறையில் மாற்றத்தை தரும். தோல்விகளையும் அவமானங்களையும் படிக்கற்களாக்கிக்கொள்பவர்களே வாழ்வில் வெற்றிக் கோட்டையை அடைகிறார்கள்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501