“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சேர்த்த பணத்தை கவனமாக பாதுகாத்து தமது சந்ததிகள் சிறப்புற வாழக்கொடுப்பதை அனைவரும் விரும்புவர். சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைத்து அவர்களை உழைப்பற்ற வீணர்களாக்காதே என்றொரு தரப்பும் கூறுகிறது. தனது உழைப்பில் கிடைத்த பணம் மதிப்பு வாய்ந்தது. பெற்றோர் கொடுத்த தனம் அனுபவிப்பதற்கு உரியதே என்றாலும் அதில் சுய உழைப்பில் வந்தது போல கவனமாக செலவழிக்காமல் பெரும்பாலோர் வீணடிப்பதை காண முடியும். பாடுபட்டு சேர்த்த பணத்தை உரிய முறையில் பாதுகாத்து அதைக்கொண்டு தனது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்பவர்கள் பாக்கியவான்கள். ஆனால் அவர்கள் குறைவான சதவீதத்தினரே. பணத்தை கவனமாக கையாண்டாலும், முறையாக பயன்படுத்தினாலும் திருட்டு போன்ற வழிகளில் அவை கொள்ளை போகாமல் பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக அவசியம். அன்னியர்கள் திருடுவதை விட உடன் இருப்பவர்களே, உறவுகளே திருடினால் ஒருவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். அந்நியர்களை சந்தேகத்துடன் பார்க்கலாம். உறவுகள் அனைவரையும் அப்படி பார்க்க இயலாது. அதுவும் திருடியவர் நெருங்கிய உறவினராக இருந்துவிட்டால் மிக மன வேதனைதான். ஜாதகம் திருடு போவதை சுட்டிக்காட்டும். பிரசன்னம் திருட்டு தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும். இன்றைய பதிவில் ஒரு திருட்டு பிரசன்னத்தை காண இருக்கிறோம்.
தனது வீட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த திருட்டையும் அதனால் இழந்த இழப்பையும் எண்ணி தற்போதும் கடும் மன உழைச்சலில் இருந்த ஒரு அன்பருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே. வெளியில் இருந்து யாரும் வந்து சென்றதற்கான முகாந்திரமில்லாத ஒரு சூழலில் வீட்டில் கதவை திறந்து நகைகளை திருடிய திருடன் யார் என்பதே அன்பரின் கேள்வியாக இருந்தது. வீட்டின் எந்தப்பொருளும் களையப்படவில்லை. நகைகள் இருந்த பீரோவில் நகைகள் மட்டுமே திருடு போயிருந்தன. வீட்டின் இதர பொருட்கள் திருடு போகவில்லை இந்தச் சூழலில் திருடியவரை அனுமானிக்க இயலவில்லை என்று பிரசன்னம் பார்க்க வந்திருந்தார் கேள்வியாளர்.
திருடியவர் யார்.
திருட்டு பற்றிய பிரசன்னத்தில் திருட்டு கொடுத்தவர் உதயாதிபதி என்றால் திருடியவர் உதயத்திற்கு 7 ஆமதிபதி ஆவார். இங்கு திருடியவர் யார் என நேரடியாக கேள்வி அமைந்துவிட்டதால் திருடிய நபரை உதயதைக்கொண்டு கூறினால் போதுமானது. பிரசன்னத்தில் கேள்வி முக்கியம். கவனிக்க, கேள்வியாரரின் கேள்வி திருடியவர் யார் என்பதே. எனவே திருடிய நபரை உதயம் கொண்டே தீர்மானிக்க வேண்டும். உதயத்தோடு தொடர்புடையவரே திருடன். சிம்ம உதயம். உதயாதிபதி சூரியன், உதயத்திற்கு 4 ல், கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் அமைந்துள்ளார். நான்காமிடம் தாயாரையும், எட்டமிடம் திருட்டையும் தெரிவிக்கும். மேலும் திருடியவர் சிம்ம லக்னம், சிம்ம ராசியாக இருக்கலாம். உதயத்தில் சந்திரன் அமைந்து உதயாதிபதி சூரியன் 4 ல் நிற்கிறார். இவை தாயாரே திருடியவர் என்பதை கூறுகிறது.
திருடியவரின் தற்போதைய நிலை.
உள்வட்ட சூரியன் நீசமாகி கேதுவுடன் இணைவு. இது திருடியர் தற்போது உயிரோடு இல்லை என்பதை தெரிவிக்கிறது. ஜாம சந்திரன் 6 ல் ஆரூடம், கவிப்பு, சனி, மாந்தியுடன் ஆகியோருடன் இணைந்துள்ளார். இதுவும் திருடிய தாயார் தற்போது உயிரோடு இல்லை என்பதை உறுதி செய்கிறது.
திருட்டு நடந்த கடந்த காலம்.
7 வருடங்களுக்கு முன் நடந்த திருட்டு என கேள்வியாளரே தெரிவித்தார். இதை ஜாம உதயாதிபதி கேதுவுடன் இணைத்ததில் இருந்து அறியலாம். கேதுவின் தசா ஆண்டு 7 ஆகும்.
திருடியவரின் அங்க அடையாளம்.
திருடடியவரைப்பற்றி நேரடியாக கேள்வி கேட்கப்பட்டுவிட்டதால் உதயத்தைக்கொண்டே பதிலை கூறலாம். உதயமும் அதில் உள்ள சந்திரனும் சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். எனவே வீட்டின் முதன்மையான நிர்வாகம் செலுத்தும் தாயார். சுக்கிரன் சாரம் பகட்டான ஆடை அணிந்திருப்பார். கேதுவின் நட்சத்திரத்தை உதயமும் சந்திரனும் கடந்து வந்துள்ளதால் அவர் ஒரு விதவை. சிம்ம ராசி, சூரியன்+சந்திரன் இணைந்த பெயருடையவர்.
திருடு போன பொருளின் மதிப்பு.
சிம்ம உதய கதிர் 8. சிம்மத்தில் அமைந்த சந்திரனின் கதிர்கள் 21. ஆக திருட்டு போன நகை 29 அல்லது அதன் மடங்காக இருக்கும்.
மேற்கண்ட விஷயங்களை ஆய்வு செய்துவிட்டு மனைவியுடன் வந்திருந்த கேள்வியாளரிடம் உங்கள் தாயாரின் பெயர் என்ன? என வினவினேன். மகேஸ்வரி என்றார். அவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரமா என்றபோது ஆச்சரியப்பட்டார். நேர்த்தியாக உடை உடுத்தி பளிச் என்று இருப்பவர் என்றேன். உடன் இருந்த கேள்வியாளரின் மனைவி ஆம் என்றார். அவர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றேன். ஆம் உண்மைதான் தாயார் இறந்துவிட்டார் என்றார் கேள்வியாளர். திருட்டு நடந்து சுமார் 7 வருடங்கள் இருக்கும் என்றபோது முகம் மலர்ந்தார். திருட்டு போன நகையின் அளவு 29 பவுன் இருக்கும் என்றேன். அவர் தோராயமாக 30 பவுன் என்றார். வருத்தப்படாதீர்கள் உங்கள் இறந்துவிட்ட தாயார்தான் நகையை எடுத்தவர் என்றேன். அவருக்கு ஜோதிடமும் பிரசன்னமும் ஓரளவு தெரியும் என்பதால் பதிலின் விளக்கத்தை கேட்டு கனத்த மனதுடன் அமர்ந்திருந்தார். உடன் வந்திருந்த மனைவியின் முகத்தில் ஏமாற்றத்தையும், வேதனையையும், கொந்தளிப்பையும் காண முடிந்தது.
பிறகுதான் அன்பர் பேசினார். சொந்த ஊரில் குடும்பத்தொழிலை கவனித்துகொண்டிருந்தவர் மென்பொருள் துறையில் வேலை கிடைத்தவுடன் குடும்ப தொழிலை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு உடனே குடும்பத்துடன் அண்டை மாநிலம் சென்று குடியேறினார். சில மாதங்களுக்கு பிறகு ஒரு விசேஷத்திற்கு சொந்த ஊர் வர வாய்ப்பு வந்தபோது தனது தாயிடம் கொடுத்து வைத்திருந்த மனைவியின் நகையை விசேஷத்திற்கு அணிந்து செல்ல வேண்டும் என்று பேசியபோது தாயார் நகைகளில் பாதியளவு காணவில்லை என்றார். அதிர்ச்சியடைந்த அவர் வேலைகளை முடித்து விடுப்பு கிடைக்கும் போது ஊருக்கு வருகிறேன் உடனே மீதமுள்ள நகைகளை வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கும்படியும் காவல் துறையில் புகார் அளிக்கும்படியும் கூறியுள்ளார். அதன் பிறகு சில நாள் கழித்து கேள்வியாளரை தொடர்புகொண்ட தாயார் வங்கியில் வைக்க நகைகளை எடுத்துச் செல்லும்போது மீத நகைகளும் திருடு போய்விட்டதாக கூறினார். பிறகு கேள்வியாளர் விடுப்பில் ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுவரை மனைவி வீட்டில் இருந்து சீதனமாக வந்த நகைகள் திரும்ப கிடைக்கவில்லை. கேள்விக்கான பதில் தெளிவாக்கப்பட்டுவிட்டது. கேள்வியாளர் மனைவியுடன் வந்திருந்ததால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியாமலும் மனைவியை எதிர்கொள்ள முடியாமலும் தவித்தார். ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் கேள்வியாரின் தாய் மீது சந்தேகம் இருந்துள்ளது. உறவு கருதி வெளிப்படையாக யாரிடமும் கூறாமல் இருந்துள்ளனர். தாயார் இறந்துவிட்டதால் நகைகளை மீட்க முடியாது என கேள்வியாளர் புரிந்துகொண்டார். கேள்வியாளரின் தந்தை உயிரோடு இருந்தவரை நகைகள் பத்திரமாக இருந்தன. தந்தை இறந்த பிறகு அவை தாயாரின் பாதுகாப்பில் வந்த பிறகே திருடு போயின என கேள்வியாளர் தெரிவித்தார்.
இதுபோன்ற பிரசன்னங்களில் பதிலளிக்கும் ஜோதிடர் வந்தவரின் மன நிலை அறிந்து பதில் கூறுவது முக்கியம். உறவுகளை முடிந்தவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜோதிடரின் பதில் இருப்பது அவசியம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501