Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான் உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாதோர் புறக்கணிக்கப்படுவர் என்பது தவிர்க்க இயலாத விதி. இந்த செயற்கை நுண்ணறிவு, வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் வியாபிக்கும் என்பது எனது எண்ணம். எந்த ஒரு விஷயத்திலும் நன்மைகளைவிட தீமைகளை ஆராய்வது மனித இயல்பு. அதனடிப்படையில் தீய எண்ணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் உலகால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்படும் சூழலில் இதை கட்டுப்படுத்த உலக நாடுகளிடையே ஒரு உடன்பாடு பிற்காலத்தில் ஏற்படக் கூடும் என்று கருதுகிறேன். சரி செயற்கை நுண்ணறிவு நமது வாழ்வில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று வலையில் தேடியபோது கிடைத்த தகவல்களில் பின்வரும் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
செயற்கை நுண்ணறிவின் விளைவாக நமது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள இயலும். நமக்கான உடல் ரீதியான, உணர்வு ரீதியான ஆலோசனைகளை இது நமக்கு வழங்கும். நாம் விரும்பும் விஷயத்தை கற்றுக்கொள்வது முதல் அதை எப்படி செயல்படுத்துவது என்பது வரை அனைத்தையும் நமது செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் கவனித்துக்கொள்ளும். எத்தகையவருக்கும் எத்தகைய கல்வி முறையும் எளிதாகும். அதாவது அடிமுட்டாளைக்கூட கடினமான கணக்குகளை கையாள செயற்கை நுண்ணறிவு அவனது தரத்திற்கேற்ப புரியும் வகையில் கற்றுக்கொடுத்து விடும். எனவே அடுத்த தசாப்தங்களில் நமது அரசியல் கட்சிகள் NEET மூலம் அரசியல் செய்ய இயலாது. (இப்போதே செய்ய இயலவில்லை என்பது வேறு விஷயம்) பாமரன் முதல் அரசியல்வாதிகள் வரை முறைகேடாக பணத்தை கையாள்வது தடுக்கப்பட்டுவிடும். அனைவரின் கணக்கு வழக்குகளும் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை நுனி விரலில் வைத்திருக்கும். தேசம் எந்த துறையில் எப்படி செயல்பட வேண்டும் அதற்கான மனித வளம் எவ்வளவு தேவை அவர்களை உருவாக்குவது எப்படி என்பதுவரை செயற்கை நுண்ணறிவால் திட்டமிடப்படும். ஆண்-பெண் பாலின சதவீதத்தை 50% – 50% எனும் சரியான அளவில் வைத்திருக்க அரசுகளுக்கு AI ஆலோசனை வழங்கும். எனவே வரும் காலங்களில் ஜோடியில்லா துணை என்பது இருக்காது. உடல் ரீதியான குறைபாடுகள் மட்டுமின்றி உழைக்காமல் குற்றங்களில் ஈடுபடும் மனோபாவம் மிக்கவர்களை கருவிலேயே இனங்கண்டு அவர்களது மரபணுவை மாற்றியமைத்துவிடும் அளவு மருத்துவம் AI நுட்பத்தை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். முக்கியமாக காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு மிக உதவியாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நமக்கு எந்த உணவில் எத்தனை சதம் என்ன வகை சத்துக்கள் தேவைப்படும் என்பதையொட்டி பயிர்கள் விளைவிக்கப்படும். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை செயற்கை நுண்ணறிவு நமக்கு பரிந்துரைக்கும். மருத்துவமனைகளுடன் நமது செயற்கை நுண்ணறிவு நேரடியாக தொடர்புகொள்ளும் என்றொரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. உதாரணமாக பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால் எந்த இடத்தில் எவ்வளவு ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் போர் நடத்தாமலேயே கணினியிலேயே நடத்தி திட்டமிடலாம். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை முறைப்படுத்த எத்தகைய உக்திகளை கையாள வேண்டும் என நமது அஜித் தோவல்களும், ஜெய்சங்கர்களும் தலையை பித்துக்கொள்ளாமல் AI பரிந்துரைக்கும் திட்டங்களில் எதை செயல்படுத்தலாம் என காபி அருந்திக்கொண்டே ஆலோசிக்கலாம். வானியலில் ஊர்திகளை ஏவும் முன் ஏற்படும் மனித தவறுகளை கணினி முன் அமர்ந்து கவனிக்கும் விழுப்புரம் அனிதாவைவிட AI துல்லியமாக கண்டுபிடுத்துவிடும். இந்தப் பதிவில் AI நுட்பங்களை பயில ஜோதிட ரீதியான அமைப்புகள் என்ன? என்பது பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.
ஜோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு காரகங்கள்:
கிரகங்கள்:
புத்தி காரகர் என அழைக்கப்படும் புதன், செயற்கை நுண்ணறிவின் முதன்மை காரகர் ஆகிறார். நுட்பமான எனும் சொல்லே புதனுக்கு உரியதுதான். அதுபோல செயற்கை எனும் சொல்லே ராகு-கேதுக்களுக்கு உரியது. எனவே ராகு-கேதுக்கள் புதனுக்கு அடுத்தபடியாக முக்கிய காரக கிரகங்களாகின்றனர். குறிப்பாக ராகு புதனையடுத்த முக்கியமாக காரக கிரகமாக குறிப்பிடப்படுகிறார். ஜாதகத்தில் வக்கிர கிரகங்கள் இருப்பின் அவற்றையும் ராகு-கேதுக்களைப் போன்றே பாவித்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராசிகள்:
மிதுனமும், விருட்சிகமும் செயற்கை நுண்ணறிவின் காரக ராசிகளாகும்.
பாவகங்கள்:
ஜாதகத்தில் புத்தி ஸ்தானம் எனப்படும் 5 மற்றும் மாற்று அறிவு என்பதை குறிப்பிடும் 8 ஆகிய பாவகங்கள் செயற்கை நுண்ணறிவின் காரக பாவகங்களாகும். இதனோடு கால புருஷனுக்கு 1, 3, 4, 5, 8, 9 ஆகிய பாவகங்களான மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு ஆகியவையும் செயற்கை நுண்ணறிவோடு தொடர்புடையவைகளே. லக்ன ரீதியாகவும் இவற்றை கணக்கிட வேண்டும் என்றாலும் மேற்சொன்ன கால புருஷ அடிப்படியான ராசிகளையும் அவற்றின் அதிபதிகளையுமே முதன்மைப்படுத்தி ஆராய வேண்டும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
கும்ப லக்னாதிபதி சனி வக்கிரமாகி 5 ஆமிடமான மிதுனத்தில் நிற்பதால் இவர் செயற்கை நுண்ணறிவு பயில வாய்ப்புண்டு. லக்னாதிபதி வக்கிரமானாலே அவர் ராகு/கேதுக்களுடன் இணைந்து செயல்படுபவராகிறார். அதுவும் புத்தி ஸ்தானமான 5 ஆமிடமே மிதுனமாக அமைந்து அங்கு லக்னாதிபதி நிற்பதால் இந்த எண்ணம் ஜாதகருக்கு அதிகம். வித்யா காரகர் புதன் உச்சம் பெற்ற ராகு/கேதுக்களின் தொடர்பில் விருட்சிகத்தில் நிற்கிறார். புதன் கும்ப லக்னத்திற்கு 5, 8 ஆகிய பாவகங்களுக்கு உரியவராவர். 5 ஆமிடம் புத்தி என்றால், ஆராய்ச்சி பாவகமான 8 ஆமிடம் மாற்று அறிவு என்பதை குறிப்பிடும். மாற்று அறிவு என்பதை செயற்கை நுண்ணறிவு என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜாதகத்தில் புதன், கால புருஷனுக்கு மாற்று அறிவை குறிப்பிடும் 8 ஆவது பாவகமான விருட்சிகத்தில், லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். 5, 8 அதிபதி புதன், விருட்சிகத்தில் திக்பலம் பெற்ற கால புருஷ 5 ஆமதிபதி சூரியனுடன் இணைவது செயற்கை நுண்ணறிவு கல்விக்கு மிகச் சிறப்பு. விருட்சிக ராசி கிரகங்களை கடகத்தில் உச்சம் பெற்ற குரு, தனது சிறப்பு மிக்க 5 ஆவது பார்வையால் பார்ப்பது கூடுதல் சிறப்பாகும். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் வக்கிரமாகியுள்ளார். முன் சொன்னபடி வக்கிர கிரகங்கள் செயற்கை நுண்ணறிவை குறிக்கும் ராகு/கேதுக்களுடன் இணைந்து செயல்படும் என்பதுடன், 5 மற்றும் 9 ல் வக்கிர நிலையில் இரு நட்பு கிரகங்களான சனியும் சுக்கிரனும் நிற்பதால் அவை உயர் கல்வி விஷயத்தில் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜாதகத்தில் பொதுவாக செயற்கை நுண்ணறிவுக் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. ஆனால் வாய்ப்புகளை ஜாதகர் பயன்படுத்துவாரா? என்றால், உயர் கல்வி கற்கும் காலத்தில் தொடர்புடைய கிரகங்களின் தசா-புக்திகள் நடந்தால் பயன்படுத்துவார். இதை உயர் கல்விக்கான வர்க்கச் சக்கரம் சதுர்விம்சாம்சத்தில் தசா-புக்தி தொடர்புகளின் அடிப்படையில் ஆராய்வது துல்லியமான தகவல்களை தெரிவிக்கும்.
சதுர் விம்சாம்சத்தில் கால புருஷனுக்கு செயற்கை நுண்ணறிவை குறிப்பிடும் 8 ஆமிடமான விருட்சிக லக்னத்தில் 4 ஆமதிபதி சனி வக்கிரமாகியுள்ளது செயற்கை நுண்ணறிவுக் கல்விக்கு சிறப்பே. லக்னாதிபதி செவ்வாய் – 7 ல் நின்று லக்னத்தை நேர் பார்வை பார்ப்பதால் லக்னம் வலுவடைகிறது. பொறியியல் கல்விக்கு சனி-செவ்வாய் தொடர்பு முக்கியம் என்பதை அறிக. வித்யா ஸ்தானமான 4 ல் அமைந்த 5 ஆமதிபதி குரு, சிம்மத்தில் மூலத் திரிகோண வலுவுடன் திக்பலம் பெற்ற சூரியனை நேர் பார்வை பார்ப்பது மிகவும் சிறப்பானதொரு அமைப்பாகும். 9 ஆமதிபதி சந்திரன், காரக ராசி மிதுனத்தில் அமைந்தது ஜாதகர் செயற்கை நுண்ணறிவுக் கல்வியை பயில வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. உயர் கல்வி பாவகமான 9 ஆமிடம் கடகத்தில் ராகு-கேதுக்கள் அமைந்தது உயர் கல்வியை ராகு-கேதுக்களே தீர்மானிக்கும் என்பதை தெரிவிக்கிறது. 3 ல் அமைந்த லக்னாதிபதி சுக்கிரனை ராகு-கேதுக்கள் பார்ப்பதால் ஜாதகருக்கு செயற்கை நுண்ணறிவுக் கல்வி பயில வாய்ப்பு வரும். 9 ஆமிடம் லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்பாகாவிட்டால் ஜாதகத்தில் அமைந்த உயர் கல்வி வாய்ப்புகளை ஜாதகர் பயன்படுத்த மாட்டார். இங்கு 9 ஆமிட கிரகங்கள் லக்னாதிபதி சுக்கிரனை தொடர்பு கொள்வதால் ஜாதகர் நிச்சயம் செயற்கை நுண்ணறிவுக் கல்வி பயில்வார். இனி தசா-புக்திகள் உரிய வயதில் வருகின்றனவா? என்பதை கவனிக்க வேண்டும். ஜாதகர் கல்லூரி செல்லும் காலத்தில் 3 ல் நின்று உயர் கல்வி பாவகமான 9 ஆமிடத்தை பார்க்கும் சுக்கிர தசையில் இருந்தார். சுக்கிரன் சதுர்விம்சாம்சத்தில் திக்பலம் பெற்ற சூரியனின் உத்திராடத்தில் நிற்கிறார். புக்தி நாதர் புதன் 9 ஆமிட ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் லக்னத்திற்கு 12 ல் துலாத்தில் நிற்பதால் இவர் சுக்கிர தசை, புதன் புக்தியில் செயற்கை நுண்ணறிவுக் கல்வியில் சேர்ந்தார். புதன் 12 ல் மறைந்தது தோஷமா? என்றால் அதை பெரிய பாதிப்பாக கருத வேண்டியதில்லை. ஏனெனில் உயர் கல்வி பாவகமான 9 க்கு 4 ல் புதன் நிற்பது ஒரு வகையில் நன்மையே. இங்கு 12 ஆமிட புதன், கல்விக்கான செலவுகளையும், விடுதியில் தங்கிப் படிப்பதையும், பயணம் செய்து படிப்பதையும் குறிப்பிடுவார்.
மிதுனமும், விருட்சிகமும் தொடர்பாகாமல் ஒருவர் செயற்கை நுண்ணறிவுக் கல்வி பயில இயலாது. இந்த ஜாதகத்தில் சதுர்விம்சாம்சத்தில் லக்னம் கால புருஷ 8 ஆமிடமான விருட்சிகமாகவும், உயர்கல்வி பாவகாதிபதி சந்திரன் லக்னத்திற்கு 8 ல் மிதுனத்தில் அமைந்து, தசா-புக்திகளும் சாதகமாக வந்ததால் ஜாதகர் செயற்கை நுண்ணறிவுக் கல்வி பயின்றுள்ளார். இன்று அனைத்து பணிகளிலும் பயன்படுத்தப்படுவது போல, செயற்கை நுண்ணறிவுக் கல்வியும் எதிர்காலத்தில் அனைத்து வகை கல்வியிலும் அடிப்படை பாடமாக தவிர்க்க இயலாததாக கற்பிக்கப்படக் கூடும். அப்படியான சூழலில் அதை சூரியனின் காரகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமான ஆதாரம் என்பது சூரியனின் காரகத்தில் வரும்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501