
பாதுகாப்பும் பரஸ்பர அரவணைப்பும் கருதி, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் அருகருகே வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு வரை நம் கண்முன்னே பழக்கத்தில் இருந்தது. அந்தந்த சமூகத்திற்கே உரித்தான பாரம்பரியத் தொழில்கள், ஆழமான உறவுப் பிணைப்புகள் மற்றும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை அவர்களை ஒரு சமூகமாக ஒருங்கிணைத்து உயர்த்தியது என்றால் அது மிகையல்ல.
ஆனால், கால வெள்ளத்தில் அந்த அழகான சமூகக் கட்டமைப்புகள் தகர்ந்து, இன்று நவீன நாகரிகம் என்ற பெயரில் சுயநலச் சுவர்கள் மனிதர்களைப் பிரித்துவிட்டன. ஊராரையும் சொந்த உறவுகளையும் விட ‘நான், எனது குடும்பம்’ என்ற தனிமனித வாதமும், பொருளாதாரமும், கல்வியும் மட்டுமே இன்றைய திருமணத் தீர்மானங்களை நிர்ணயிக்கின்றன. இதன் காரணமாக, அன்று பரவலாக இருந்த ‘உறவுத் திருமணங்கள்’ (Consanguineous Marriages) இன்று பெரிதும் அருகிவிட்டன. நெருங்கிய உறவுத் திருமணங்கள் உறவுப் பினைப்பிற்கு நன்று என்றாலும் பொருளாதாரத்திற்கு சிறப்பில்லை என்பதையும், புத்திர வகையில் ஊனங்கள் அமைய வாய்ப்பிருப்பதாக அறிவியல் கூறுவதையும் கவனிக்க வேண்டியள்ளது.
முன்பெல்லாம் நெருங்கிய உறவுக்குள் செய்யப்படும் திருமணங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பெரிதாகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததில்லை. காரணம், அன்றைய காலகட்டத்தில் அந்த உறவுகளுக்குள் இருந்த இரத்தப் பந்தமும், மனப்பூர்வமான அரவணைப்பும், பரஸ்பரப் புரிதலும் மிகப்பெரிய பொருத்தமாகவும் கவசமாகவும் செயல்பட்டன.
ஆனால், இன்றைய இயந்திரத்தனமான காலத்தில் இந்த உறவுத் திருமணங்கள் எந்த அளவுக்குச் சரியானவை? ஜோதிட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் அவை என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்? இவற்றுக்கு விடை காணும் வகையில், நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் ஜாதகங்களை அடிப்படையாக வைத்து நாம் செய்யவிருக்கும் ஆழமான ஆய்வுதான் இன்றைய பதிவு!
- கணவனின் ஜாதகப் பார்வை

- லக்னம் மற்றும் அமைப்புகள்: சிம்ம லக்னத்தில் லக்னாதிபதி சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று, உடன் நீசமான 7-ஆம் அதிபதி சனியுடனும் புதனுடனும் இணைந்துள்ளார்.
- கிரகப் பரிமாற்ற பலம்: நீசம் பெற்ற சனி சூரியனுடன் இணைவதால், சூரியனின் உச்ச வலுவை தனதாக்கிக் கொள்கிறார்; அதே சமயம் சூரியன் தனது உச்ச வலுவை இழக்கிறார். அதாவது, மனைவி வந்தவுடன் ஜாதகரின் வலு குறையும், மனைவிக்கு வலு கூடும்!
- அதிகாரப் போக்கு: நீசம் பெற்ற சனி உச்ச சூரியனால்தான் வலுப்பெறுகிறார் என்பதாலும், சனியை விட அதிக பாகை பெற்று நிற்பதாலும், மனைவியை விட ஜாதகரின் அதிகாரமே குடும்பத்தில் ஓங்கியிருக்கும்.
- உறவு முறை: சூரியனுடன் காதல் மற்றும் மாமன் உறவைக் குறிப்பிடும் புதன் இணைந்துள்ளதை கவனிக்க வேண்டும். லக்னாதிபதியும் 7-ஆம் அதிபதியும் புதனுடன் இணைவு பெற்றதால், கணவனும் மனைவியும் மாமன் மகன் – அத்தை மகள் உறவில் திருமணம் செய்துள்ளனர். மேஷத்தில் ஏற்பட்ட இந்த இணைவை துலா செவ்வாய் பார்ப்பது, நெருங்கிய இரத்த வகைத் உறவில் ஜாதகர் திருமணம் செய்வதைக் குறிக்கிறது. மேஷமும் கடகமும், அவற்றின் அதிபதிகளான சந்திரனும் செவ்வாயும் இரத்த உறவுகளைக் குறிப்பவை.
- சுக்கிரன் மற்றும் களத்திர நிலை: சுதந்திரமான செயல்பாட்டைக் குறிப்பிடும் மிதுனத்தில் அமைந்த களத்திர காரகர் சுக்கிரனை, மாமன் வகை உறவைக் குறிப்பிடும் 5-ஆம் இடமான தனுசிலிருந்து சந்திரன் பார்ப்பது, ஜாதகருக்கு மனைவி தாய்மாமன் உறவில் அமையும் என்பதையும், அவர் மிதுனம் குறிப்பிடும் சுதந்திர மனப்பான்மையும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதைக் காட்டுகிறது. சுக்கிரனை சனி பார்ப்பது மனைவி பணிபுரிபவர் என்பதைக் குறிக்கிறது.
- குருவின் பங்கு: குடும்ப காரகர் குரு அவமான ஸ்தானமான 8-ஆம் இடமான மீனத்தில் ஆட்சி பெற்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு வெளிநாட்டு வருமானம் சிறப்பாக இருக்கும். அதே சமயம், குடும்பம் அமைந்தால் கூடவே அவமானமும் வரும் என்பதை இது குறிக்கிறது. தாய்மாமன் உறவைக் குறிப்பிடும் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்த குருவே 5-ஆம் இடத்திற்கும் அதிபதியாவதால், ஜாதகருக்குக் குடும்பம் மாமன் உறவில் அமைந்தது.
மனைவியின் ஜாதகப் பார்வை

- அதிகாரமும் இணைவும்: சிம்ம லக்னத்தைச் சூரியன் பார்ப்பதால் இயல்பாகவே அதிகாரம் மேலோங்கி இருப்பவர். 7-ஆம் அதிபதி சனி, தாய்மாமன் உறவைக் குறிப்பிடும் 5-ஆம் அதிபதியுடன் 10-ஆம் இடத்தில் இணைவுபெற்றிருப்பது ஜாதகிக்குத் தாய்மாமன் உறவில்தான் குடும்பம் அமையும் என்பதைக் குறிக்கிறது.
- பிரிவினை யோகம்: 7-ஆம் அதிபதி சனி அவமான, பிரிவினை ஸ்தானமான 8-ஆம் அதிபதி குருவோடு இணைந்திருப்பதால், மாமன் வகையில் குடும்ப உறவு அமையும் சூழலில் அவமானமும் பிரிவினையும் ஏற்படும் அமைப்பையும் சுட்டுகிறது.
- ராசிப் பொருத்தம் & ராகு-கேது தாக்கம்: தாய்மாமன் உறவைக் குறிப்பிடும் 5-ஆம் இடத்தில் பிரிவினை கிரகம் கேது அமைந்துள்ளதால், மாமன் வகை உறவில் மனக்கசப்பு வருவது தவிர்க்க இயலாது. கணவன் ராசியான தனுசுக்கு மனைவி ராசியான கடகம் எட்டாவது ராசி என்பது புரிதலையும் இணக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும், கணவனின் சந்திரன் மீது மனைவியின் கேதுவும், மனைவியின் சந்திரன் மீது கணவனின் ராகுவும் அமைந்துள்ளது இருவருக்குள்ளும் மனக்கசப்பான நிலையையே தரும்.
- மனப்பாரம்: குடும்ப ஸ்தானாதிபதியும் தாய்மாமன் உறவைக் குறிப்பிடும் கிரகமுமான புதன் 6-ஆம் இடத்தில் நின்று பாவ கர்தாரி யோகம் பெறுவதால், தாய்மாமன் மகனைத் திருமணம் செய்வதால் ஜாதகியின் சுதந்திரம் பறிபோய் மனப்பாரத்துடன் அனுசரித்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும். (இங்கு 5-ஆம் பாவகம் நேரடியாகத் தாய்மாமன் உறவையும், 6-ஆம் ஆமிடம் ஒன்றுவிட்ட அல்லது சீர் செய்யும் உரிமையில்லாத தாய்மாமன் உறவையும் குறிப்பவை).
- கட்டுப்பாடு: மனைவியின் கடக ராசியில் கணவனின் குரு உச்சமாவதால் இருவருக்குமிடையே சஷ்டாஸ்டகத்தை மீறிய அளவான சில புரிதல்கள் இருக்கும். ஆனால், பெரும்பாலான விஷயங்களில் ரசனைகள் வேறு வேறானவை. 7-ஆம் இடத்திலமைந்த லக்னாதிபதி சூரியனை, 10-ஆம் இடத்திலுள்ள 7-ஆம் அதிபதி சனி தனது 10-ஆம் பார்வையால் கட்டுப்படுத்துகிறார். களத்திர காரகர் செவ்வாயும் 7-ஆம் இட சூரியனை தனது 4-ஆம் பார்வையால் கட்டுப்படுத்துகிறார். ஜாதகி கணவனுக்குக் கட்டுப்படாவிட்டால் பிரிவினை தவிர்க்க முடியாதது.
நல்ல தசா-புக்திகளும் கோட்சாரமும் எத்தகைய மோசமான ஜாதகத் தம்பதிகளையும் வாழ வைத்துவிடும். அதே சமயம், மோசமான தசா-புக்தி காலங்கள் மிக ஒற்றுமையான தம்பதிகளின் வாழ்க்கையின் அச்சையே அசைத்துப் பார்த்துவிடும் வல்லமை மிக்கவை என்பதை அனுபவத்தில் பார்க்கிறோம். ஜோதிடர்களாகிய என் போன்றார் ஒரு ஆணும் பெண்ணும் இளமையை அனுபவிக்கக்கூடிய காலத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடாத ஜாதகங்களை இணைப்பதே. இதில் உறவு அன்னியம் என்ற பேச்சுக்கு வேலையில்லை. ஒரு தம்பதியின் அடிப்படை விஷயங்களான ஆயுள், ஆரோக்கியம், புத்திரம், பொருளாதாரம் ஆகியவற்றிக்குத்தான் முதன்மையாக திருமண விஷயங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
- முன்னெச்சரிக்கை: மேற்கண்ட இருவரின் ஜாதகங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆராய்ந்தபோது, “உறவு என்பதால் திருமணப் பந்தத்தில் இவர்களை இணைப்பது சரியல்ல. மேலும், பூராட ஆணுக்கும் பூச பெண்ணுக்கும் ரஜ்ஜு பொருத்தமும் இல்லை” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
- தற்போதைய நிலவரம்: ஆனால், கடந்த 2025 ஜூலையில் இவர்களுக்குத் திருமணம் நடந்து, வெறும் சில மாதங்களுக்கு முன்பு (2026 ஆகஸ்டில்) “இருவருக்குமிடையே ஒத்துப்போகவில்லை, என்ன செய்வது?” என்று பெண்ணின் தாயார் என்னை நாடி ஆலோசனை கேட்டார்.
சிக்கலுக்கான ஜோதிடக் காரணம் என்ன?
- தற்போதைய தசை நிலவரம்: ஆணுக்குப் பிரிவினை கிரகமான ராகு தசை நடக்கிறது. கோட்சார ராகு பெண்ணின் 7-ஆம் இடத்தில் நிற்கும் லக்னாதிபதி சூரியன் மீது சென்று கொண்டிருக்கிறார். பெண்ணுக்கு புதன் தசை நடக்கிறது; பெண்ணின் சந்திரனை நோக்கி கோட்சார கேது சென்று கொண்டிருக்கிறார். இது கடும் பாதிப்பான நிலையாகும்.
- தொழில் மற்றும் சூழல்: கணவன்-மனைவி இருவரும் மென்பொருள் துறையில் (IT) பணிபுரிபவர்கள். ஆணுக்கு ராகு தசையும், பெண்ணுக்கு 6-ஆம் பாவ புதன் தசையும் நடப்பதால் கருத்து வேறுபாடுகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
- ஈகோவின் ஆதிக்கம்: இவர்களின் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் என்னவென்று தாயாரிடம் கேட்டபோது, “தனக்குத் தெரிந்து ஈகோ (Ego) தவிர வேறு காரணங்கள் இல்லை” என்று கூறினார். புதனின் அம்சமான புத்திசாலிகளும், ராகு-கேதுக்களின் அம்சமான உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாதவர்களும் இணைந்து வாழ்வது கடினம்.
இவர்கள் இணைந்து வாழ வேண்டுமெனில், ‘ஈகோ’வை குடும்பத்திற்கு வெளியே காண்பிப்பதும், அனுசரணையை வீட்டிற்குள்ளே காண்பிப்பதும்தான் ஒரே தீர்வு!
பிரிவினை அமைப்புகள் பொருளாதாரத்தைக் கொடுத்தாலும், ஈகோவால் குடும்பத்தைப் பிரிக்க வல்லவை. உறவுகள், அவை இரத்த உறவுகளாக இருந்தாலும் சரி, அந்நிய உறவுகளாக இருந்தாலும் சரி, அவற்றின் அருமையை உணராது செயல்பட்டால் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.
மீண்டும் மற்றுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501










