ஒவ்வொரு மனிதருடைய மனநிலையும் ஒவ்வொரு விதம். ஒருவர் வளர்ந்த விதம், பாரம்பரியம், உணவு, வசிப்பிடம், பழகும் நபர்கள் போன்ற பல்வேறு காரணிகள் அதை தீர்மானிக்கின்றன. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. மனிதனுக்கு காலையில் ஒரு புத்தி. மாலையில் ஒரு புத்தி என்பார்கள். ஆனால் இது அனைவருக்கும் ஏற்படும் மனநிலைதான். ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணச் சுழற்சியில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கும் மனிதர்களின் மன நிலையை மாற்ற வேண்டும் என்றால் அவர்கள் இருப்பிடத்தை மாற்றி அவர்கள் தொடர்புகொள்ளும் நபர்களை மாற்றுவதன் மூலம் அவர்களின் குறிப்பிட்ட வகை எண்ணச் சுழற்சிக்கு முடிவு கட்டலாம். “குடிகாரர்களை கல்லுக்கடை இருக்கும் ஊரில் இருந்து தூர அழைத்துச் செல்” என்று பொருள்படும்படி கேரளாவில் ஒரு வாசகம் உண்டு. இதையும் மீறி ஜாதகப்படி ஒருவருக்கு மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட பல காரணிகள் உள்ளன. ஒருவரின் ஜனன சந்திரன் கோட்சார சனி, ராகு-கேதுக்களால் பாதிப்படையும்போதோ அல்லது கோட்சார சந்திரன் அவரது ஜனன கால சனி, ராகு-கேதுக்களுடன் தொடர்பாகும்போதோ மனம் பலகீனமடையும். ஒருவரின் ஜனன கால சந்திரன் மீது கோட்சார குரு செல்கையிலும் ஒருவருக்கு ராகு கேதுக்களை போல தீவிர பாதிப்புகளையன்றி தாங்கிக்கொள்ளக்கூடிய பாதிப்புகளே பெரும்பாலும் (தசா-புக்திகள் மோசமாக இருந்தாலன்றி) ஏற்படுகின்றன. தசா-புக்திகள் சிறப்பாக இருப்பின் கிரகங்கள் தரும் பாதிப்புகள் கூட பிற்பாடு சாதகமான சூழலை நோக்கி ஜாதகரை செலுத்துகின்றன. மன நிலையை ராசியைவிட சோடசாம்ச சக்கரத்தில் ஆராய்வது ஒருவரது மன நிலையை துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். இதை ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் இப்பதிவில் ஆராய்வோம்.
ஜோதிடத்தில் மனநிலையை குறிப்பிடும் அமைப்புகள்.
ஜோதிடத்தில் ஒருவரின் பாதுகாப்பான நிலையை குறிப்பிடும் பாவகம் நான்காவது பாவகமாகும். சந்திரன் ஒருவரது மன நிலையை குறிப்பிடும் கிரகமாகும். அதனால் ஒருவர் தன்னை பாதுகாப்பாக உணர்ந்தால்தான் அவர் மனதில் மகிழ்ச்சியாக உணர்வார். இதனடிப்படையில் கால புருஷனுக்கு நான்காம் பாவகமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் அமைந்திருந்தால்தான் அவர் மகிழ்வாக தன்னை பொதுவாக உணர்வார். ஒருவரது சிந்தனையை குறிப்பிடும் பாவகம் 5 ஆம் பாவகமாகும். சூரியன் ஜோதிடத்தில் ஆன்ம பலத்தை குறிப்பிடும் கிரகமாகும். இதனடிப்படையில் கால புருஷனுக்கு 5 ஆம் பாவகாதிபதியான சூரியனும் சிம்ம ராசியும் சிறப்பாக அமைந்திருந்தால்தான் ஒருவரது சிந்தனை சிறப்பானதாக இருக்கும். இதனால் தனது எண்ணங்களும் செயல்களும் தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கருதும் எவரொருவரும் பொதுவாக மகிழ்வாக உணர்வார். ஒருவரை தொடர்புகொள்பவர்கள் நேர்மையாக நடந்தால் அவர் நிம்மதியாகவும் மன மகிழ்வானவராகவும் தன்னை உணர்வார். இதனடிப்படையில் கால புருஷனுக்கு 7 ஆமிடமான துலாமும் அதன் அதிபதி சுக்கிரனும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருப்பது ஒருவருக்கு மகிழ்வான மன நிலையை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு மகிழ்ச்சி காரகர் எனும் பெயரும் உண்டு. துலாத்தில் உச்சமாகும் சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்றால் அது ஒரு ஜாதகருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வழங்கும்.
கால புருஷனுக்கு 4, 5, 7 ஆம் பாவகம் மற்றும் அதன் அதிபதிகளைகொண்டு ஒருவரது மனநிலையை அளவிடுவது போன்றே லக்னத்திற்கு 4, 5, 7 ஆகிய பாவங்களையும் அதன் அதிபதிகளையும் கணக்கிடுவது முக்கியம்.
தாழ்வு மனப்பான்மையையும் வக்கிர கிரகங்களும்.
சனி தாழ்வுமனப்பான்மைக்கு உரிய கிரகமாகும். ஜாதகத்தில் சனி பாதிப்பான அமைப்பில் இருப்பவர்கள் பிறரோடு ஒப்பிடுகையில் தங்களை தகுதிக் குறைவானவர்களாக உணர்வார்கள். ஜாதகத்தில் வக்கிர கிரகங்கள் இருந்து அதன் தசா-புக்தி நடப்பவர்களும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி மகிழ்வற்ற மனநிலையை பெறுகிறார்கள். ஜோதிடத்தில் மன நிலையை பாதிக்கும் கிரகங்களாக நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் குறிப்பிடப்படுகிறார்கள். ஜாதகத்தில் ராகு சுபர் தொடர்பின்றி பாதிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் மனபீதிக்கு உள்ளாகிறார்கள். கேது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடன் ஒன்றாமல் சந்நியாச மன நிலையை பெறுகிறார்கள். குறிப்பாக ராகு-கேதுக்கள் சூரிய-சந்திரர்களுடனோ, கடகம்-சிம்மத்துடனோ மற்ற கிரகங்களுடன் இணைந்து தொடர்பாகும் நிலையில் இருந்தால் மனம் பாதிக்கும். ஒருவர் மற்றவரோடு பழகும் தன்மையை குறிப்பிடும் புதன் வக்கிரம், நீசம், பகை கிரக சேர்க்கை போன்ற வகைகளில் பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவர் மற்றவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட முடியாமையால் மன மகிழ்சியை இழப்பர். குறிப்பாக ஜாதகத்தில் சுக்கிரனும், புதனும் வக்கிரம் பெற்றவர்கள் மகிழ்வாக தங்களை உணர்வதில்லை. அபூர்வமாக இவர்களைப் போன்றே புதனும் சுக்கிரனும் வக்கிரம் பெற்றவர்களிடம் மட்டுமே இவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.
மன நிலையை துல்லியமாக காட்டும் பராசர சோடசாம்சம்.
பொதுவாக ஒருவரது மன நிலையை தனி ஒருவர் வெளிப்படுதினாலன்றி மற்றவர்கள் அறிய முடியாது எனும் சூழலில் அவரது D-16 எனும் சோடசாம்ச சக்கரத்தை ஆராய்வதன் மூலம் அவரது மனநிலையை தெளிவாக அறியலாம். பிரசன்ன ஜாதகத்தில் சோடசாம்ச சக்கரத்தை ஆராய்ந்தாலும் ஒருவரின் அப்போதைய மன நிலையை துல்லியமாக அளவிட இயலும். பராசரர் மகரிஷியின் சோடசாம்ச வர்க்கம் எனும் ஒரு ராசியை 16 பிரிவாக பிரித்து கணக்கிடும் வர்க்கச் சக்கரம் இதற்கு உதவுகிறது.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் கடக ராசி கடும் பாவியான ராகுவால் பாதிக்கப்பட்டாலும் தனித்து நிற்கும் ராகு-கேதுக்கள் தங்கள் நின்ற வீட்டதிபதியின் தன்மையையே அடைவார்கள் என்பதால் கடகத்தில் அமைந்த தனித்த ராகு ஜாதகரின் மனநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். கடக ராசியதிபதி சந்திரன் லக்னத்திற்கு 12 ல் மறைந்தாலும் உச்சம் பெற்றுள்ளது சிறப்பே. இவ்வமைப்பால் இவரது மனநிலை பெரிதாக பாதிக்கப்படாது. லக்னாதிபதியும் 4 ஆமதிபதியுமான புதன் 9 ல் லக்னத்திற்கு 5 ஆமதிபதி சுக்கிரன், கால புருஷனுக்கு 5 ஆமதிபதி சூரியன் ஆகிய தனது நண்பர்களுடன் இணைந்து 4 ஆமிட வக்கிர சனியுடன் பரிவர்த்தனை ஆகிறார். பரிவர்த்தனையால் தனது உச்ச வீட்டை தொடர்புகொள்ளும் புதனாலும் இவரது மனநிலை சிறப்பாகவே உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இவர் கல்வியில் உச்சங்களைத் தொட்டு தற்போது வாழ்விலும் கௌரவமான சம்பாத்தியத்தில் உள்ளார். ஆனால் இவை பொதுவான அமைப்புகளே. தசா-புக்திகள் வாழ்விலும் மன நிலையிலும் மாற்றத்தை காட்டும். எனவே தசா-புக்தி அடிப்படையில் ஒருவரது மனநிலையை துல்லியமாக அளவிட சோடசாம்சத்தை ஆராய வேண்டும்.
சோடசாம்சத்தில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 10 ல் திக்பலம் பெற்றது மிகச் சிறப்பான அமைப்பு. எந்தவொரு வர்க்கத்திலும் லக்னாதிபதி சிறப்படைவது அந்த வர்க்கம் சார்ந்த வகையில் ஜாதகருக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது தடுத்துவிடும். 4 ஆமிடமான கடகத்தில் இரு வக்கிர கிரகங்களான குருவும், சனியும் மாந்தியுடன் இணைந்து அமைந்தது சிறப்பில்லைதான். 4 ஆமதிபதி சந்திரனும் நீசமான 5 ஆமதிபதி சூரியனுடன் இணைந்து அமைந்துள்ளது சிறப்பில்லை என்றாலும் சூரிய-சந்திரர்களுக்கு 4 ல் லக்னாதிபதி உச்சம் பெற்று சூரியனுக்கு நீச-பங்கமளித்து சந்திரனுக்கும் வலுவூட்டுகிறார். 5 ல் புதன் அமைந்தது சிறப்பே. ஆனால் கடகத்தில் அமைந்த கிரகங்களின் தசா-புக்திகள் வந்தால் ஜாதகர் மன சஞ்சலமடைவார். ஏனெனில் அங்கு இருக்கும் இரு கிரகங்களும் வக்கிரம் பெற்று அமைந்துள்ளன. குரு வக்கிரம் பெற்றுவிட்டதால் உச்சம் செயல்படாது. குரு, சனி தசா-புக்திகளில் ஜாதகருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.
வக்கிர கிரகங்களால் ஏற்படும் மனத்தாக்கங்கள் எப்போது செயல்படும்?
குரு தசை-சனி புக்தியில் தற்போது கோட்சாரத்தில் சனி வக்கிரமான காலத்தில் இருந்து உயர்ந்த பொறுப்பில் இருக்கும் இந்த ஜாதகர் Hypomaniac எனும் தாழ்வுமனப்பான்மையில் இருக்கிறார். ஜனன காலத்தில் இருந்தது போலவே கோட்சாரத்திலும் சனி வக்கிரத்தில் உள்ளதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. கோட்சாரத்தில் சனி வக்கிர நிவர்த்தியடைந்ததும் ஜாதகரின் இந்த மன நிலை மாறத்துவங்கும். தசா-புக்திகள் தொடர்பாகாவிட்டால் கோட்சாரம் சிறிய அளவு மட்டுமே ஜாதகரின் மன நிலையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இங்கு தசா-புக்தி கிரகங்கள் இருவருமே வக்கிரம் பெற்றுள்ள நிலையில், புக்தி நடத்தும் கிரகமான சனி கோட்சாரத்தில் வக்கிரம் பெற்றுள்ளதால் ஜாதகர் தாழ்வுமனப்பான்மையால் தற்போது தவிக்கிறார். இத்தகையோருக்கு உளவியல் ஆலோசனை நல்ல பலன் தரும். இவர்கள் தங்களை நேர்மறை எண்ணங்களால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் தங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதும், சுற்றுலா செல்வது மற்றும் இயற்கையான சூழல்களில் தங்கள் நேரங்களை செலவிடுவதாலும் தங்கள் உடலின் மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி தங்களை மகிழ்ச்சிகரமானவர்களாக மாற்றிக்கொள்ளலாம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.