
வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நமது வளர்ச்சி வேகம் கூடியுள்ளது கண்கூடு. இன்றைய வளரும் நாடுகளில் இந்தியாவே வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இதனாலேயே அனைத்து வளர்ந்த நாடுகளும் வணிகத்திற்காக இந்தியாவை நோக்கி வருகின்றன. உலக நாடுகளுக்கிடையேயான தற்போதைய மோதல்களினால் பாரதத்தின் வளர்ச்சி விகிதத்தில் தற்காலிகமாக சிறிது தளர்ச்சி இருக்கலாம். ஆனால் இந்தியா அடுத்த 2 தசாப்தங்களில் வளர்ந்த நாடாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. இந்த வளர்ச்சியின் கனிகளை தாங்கள் பெருமளவு சுவைக்க முனையும் வளர்ந்த மேலை நாடுகள் இந்தியாவை வணிக நோக்கில் கட்டுப்படுத்த முனைகின்றன. இதில் நமக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை.
இந்நிலையில் அன்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து கடந்த மே மாதத்தில் தொடர்புகொண்டார். முதலீடுகள் பற்றி எனது ஆலோசனைகள் தேவை என்றவர், தான் பணிபுரியும் வெளிநாட்டில் டாரட் ஆரூடம் சில வருடங்கள் முன்பு பார்த்ததாகவும். அதில் கூறியபடி தனக்கு பலன்கள் நடந்ததாகவும் கூறினார். இதனால் அதிலுள்ள நம்பிக்கை காரணமாக தனக்கு டாரட் ஆரூடம் மூலமே பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்க்கப்பட்ட டாரட் ஆரூடத்தின் படமே கீழே நீங்கள் காண்பது.

ஆரூடம் பார்ப்பதன் நோக்கத்தை கூறிவிட்டதால் டாரட் அட்டை அதை பிரதிபலிப்பதாக வந்துள்ளதா? என்று கவனிக்க வேண்டியது அவசியம்.
டாரட்டில் ஆரூடம் பார்க்க வந்தவரின் நிலை அறிதல்:
எடுக்கப்பட்ட டாரட் அட்டையில் ஒரு ஆண் உள்ளார்.. இது ஆலோசனை கேட்டவரின் பாலினத்தை சுட்டிக்காட்டுகிறது. டாரட் ஆரூடத்தில் “Pentacles” எனப்படும் நட்சத்திரங்கள் நாணயங்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும். எனவே பணம் பற்றிய விஷயம் என்பதை அட்டை சுட்டிக்காட்டுகிறது. படத்திலுள்ள ஆணுக்குப் பின்னால் தொலைவில் ஒரு ஆலை தெரிகிறது. இது கேள்வியாளர் சொந்த ஊரை விட்டு விலகி தொலை தூரம் சென்று பணிபுரிவதை குறிப்பிடுகிறது. இளைஞன் அமர்ந்திருப்பது சிவப்பு வர்ண அடித்தளத்தின் மீது, கால் சட்டை (Pant) சிவப்பு வண்ணத்தில் உள்ளது. சிவப்பு என்பது ஆபத்து, கடுமை, கட்டுப்பாடு, பாதுகாப்பின் அடையாளமாகும். இது கேள்வியாளர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பதை குறிப்பிடுகிறது. ஆரூடம் கேட்டவர் வெளிநாட்டில் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர். எதிரே உள்ள பிரவுன் வண்ண மரம் போன்ற அமைப்பு இவருக்கு பணியில் உள்ள சவால்களையும் தடைகளையும் குறிப்பிடுகிறது.
படத்திலுள்ள இளைஞன் கருப்பும் பச்சையும் கலந்த மேலாடை அணிதுள்ளான். திட்டமிடுதலும் நேர்மையையும் கலந்த உழைப்பை இது தெரிவிக்கிறது. பச்சை திட்டமிடுதையும், கருப்பு நேர்மையையும் குறிப்பதாகும். இளைஞன் நாணயங்களை உருவாக்கிக்கொண்டிருகிறான். இது தனக்கான சம்பாத்தியத்தை தனது உண்மை உழைப்பால் இவன் அடைந்துகொண்டுள்ளான் என்பதை தெரிவிக்கிறது. பின்னணியிலுள்ள மஞ்சள் நிறம் நல்ல சூழலில் இவ்விழைஞன் பணிபுரிவதை குறிப்பிடுகிறது. பச்சை வண்ணம் பணத்தை முதலீடு செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் இவர் அது பற்றி கேட்கிறார். படத்தில் எட்டு நாணயங்கள் உள்ளன. சரியான விதத்தில் முதலீடு செய்தால் இவரது முதலீட்டிற்கு எட்டு மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிடுகிறது. எட்டு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதையும் இது குறிப்பிடும்.

டாரட்களை கோட்சார கிரக நிலைகளுடன் பொருத்திப் பார்க்க முடியும். டாரட் அட்டையில் ராஜா என்பவர் திட்டமிடலுக்கு உரியவர். ஆனால் செயல்படுவது ராணிதான். Chess விளையாட்டில் ராஜாவைவிட ராணிக்குத்தான் செயல் வேகம் அதிகம். அதே செயல் வேகம் டாரட் அட்டையிலும் பொருந்தும். இங்கும் ராஜாவைவிட ராணிக்கே முக்கியத்துவம். ராணி அமையும் இடம் டாரட் அட்டையில் லக்னம் போல எடுத்துக்கொள்ளப்படும். பணத்தை முதலீடு செய்வது பற்றிய கேள்வி என்பதாலும் படத்திலேயே நாணயங்கள் உள்ளதாலும் கால புருஷனுக்கு தன ஸ்தானமான இரண்டாமிடம் ரிஷபத்தில் ராணி அமைவதாக எடுத்துக்கொள்கிறோம். எனவே ராணி அமையும் இடமே லக்னமாகிறது. லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் அரச வாரிசுகளும், 9 ஆமிடத்தில் அரசரும் அமைவர். டாரட் அட்டைகளின் வகைப்பாட்டில் 1௦ வித அட்டைகளே உள்ளன. இதனால் 12 வீடுகள் கொண்ட ராசிச் சக்கரத்தில் ராணி முதலான முதல் 1௦ வீடுகளே செயல்படும். 11 மற்றும் 12 ஆவது வீடுகள் செயல்படாது என்பதால் அவை “X” குறி மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணி அமைந்த ரிஷபத்தில் (லக்னத்தில்) 8, 11 அதிபதி குரு அமைந்துள்ளார். ரிஷப குரு 11 ஆமிட சுக்கிரனோடு பரிவர்த்தனையாவது 11, 12 ஆமிடங்கள் செயல்படாது என்பதால் கணக்கில்கொள்ளபடாது. கேள்வியாளர் சொந்த நாட்டை விட்டு கண்காணாத தேசத்தில் வாழ்ந்துகொண்டு பொருளீட்டுவதை 8 ஆமதிபதி லக்னத்தில் அமர்வது குறிப்பிடும். வாரிசுகளைக் குறிப்பிடும் ரிஷபத்திக்கு 5 ஆமிடமான கன்னியில் கேதுவும் மாந்தியும் அமைந்தது, இவரது முதலீட்டிற்கு வாரிசுகள் வகைகளில் நன்மை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. அதாவது இவர் இன்னும் தனது பூவீகத்தில் உள்ள கேது குறிக்கும் கடன், வழக்குகளையும், குழந்தைகளின் நலனை உள்ளிட்ட செலவுகளையும் சமாளித்த பிறகே சிறப்பாக முதலீடுகளை செய்ய முடியும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. 9 ல் குரு நீசமாகும் மகரத்தில் அமைந்த ராஜாவை ரிஷப குருவும், கடகத்திலமைந்த சந்திரனும், செவ்வாயும் பார்க்கிறார்கள். இதில் குடும்ப காரகர் குரு ராஜாவை குறிப்பிடும் தனது நீச வீடான மகரத்தை 9 ஆம் பார்வையாகவும், ரிஷபத்திற்கு 7 ஆமதிபதியான செவ்வாய் கடகத்தில் சந்திரனுடன் இணைந்து நீச பங்கப்பட்டு பார்ப்பதையும் கவனிக்க. இத்தகைய குரு, செவ்வாய், சந்திரன் தொடர்புகள் ராஜா அமையும் மகரத்திற்கு கிடைப்பது குடும்ப வளமைக்காகவும், முக்கியமாக சொத்து வகைகளில் நல்ல வளமை வேண்டியும் கேள்வியாளர் தனது தாய்நாட்டை விட்டு விலகி வெகு தொலைவில் சென்று பணிபுரிவதை குறிப்பிடுகிறது. கடக சந்திரனும் செவ்வாயும் கேள்வியாளர் தீயணைப்புத் துறையில் கடல் கடந்த தேசத்தில் பணிபுரிவதையும் குறிப்பிடுகிறது.
இனி கேள்வியாளரின் பதிலுக்கு வருவோம். அதாவது இப்போது இவர் முதலீடு செய்வதற்காண வாய்ப்புகள் எப்படி உள்ளன? என்பதே கேள்வி. முதலீடு பாவகம் என்பது 4 ஆமிடமாகும். 4 ஆமிடமான சிம்மத்தின் அதிபதி சூரியன் உச்சமாகி லக்னத்திக்கு 12 ல் செயல்படாத இடத்தில் மறைவதை காண்க. இதனால் இவர் தற்போது முதலீடு செய்ய அமைப்பு இல்லை. மீறி முதலீடு செய்தாலும் அவை முடங்கும் அபாயம் உள்ளது. முதலீட்டு பாவகமான நான்காமிடம் சிம்மத்தை நோக்கி தடைகளின் காரக கிரகம் கேது வருவதால் முதலீடுகள் பாதிப்பிற்குள்ளாகும். லக்னத்திற்கு உதவுபவை 3, 7, 11 ஆகிய பாவகங்களாகும். இதில் 7 ல் கிரகங்கள் இல்லை. 11 ஆம் பாவகம் செயல்படாது என்பதால் நாளின் கோள் சந்திரனை தவிர்த்து ஏழாமதிபதி செவ்வாயின் நிலையையே இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் நீச பங்கப்பட்டிருந்தாலும் அவர் முதலீட்டு பாவகமான 4 ஆமிடத்திற்கு வரும் கேதுவை கடந்து விருட்சிகத்தில் வந்து ஆட்சி பெறும் காலத்தில் முதலீடுகளை சிறிது சிறிதாக துவங்கலாம். செவ்வாய் ராஜாவை குறிப்பிடும் மகரத்திக்கு வந்து உச்சமாகும் காலத்தில் அதாவது இந்த கேள்வி எழுப்பப்பட்ட மே’25 ல் இருந்து 8 மாதங்கள் கழித்து 2௦26 ஜனவரி காலத்தில்தான் முதலீடுகள் நல்ல லாபகரமானவையாக மாறும். இதையே படத்திலுள்ள 8 நாணயங்களும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே நல்ல பங்குகளை பெரிய அளவில் வாங்குவதை தவிர்த்து சிறிய அளவில் வாங்கி சேர்த்துக்கொண்டே இருப்பின் 8 மாதங்களில் அவை லாபகரமானைவையாக மாறும் என்று கேள்வியாளருக்கு பதிலளிக்கப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501