நமது முன்னேற்றத்திற்காக அனுதினமும் நாம் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படி உழைக்கும் அனைவரும் சுய விருப்பப்படியான விதத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோரின் பதில் இல்லை என்பதாகத்ததான் அமையும். உதாரணமாக தொழிலில் தனது சுய விருப்பங்களை அடமானம் வைத்து அடுத்தவரிடம் பணிபுரிவதை குறிப்பிடலாம். அங்கு நமது தனிப்பட்ட திறமைகளும், விருப்பங்களும் மழுங்கடிக்கப்படுகின்றன. அதுமாதிரினான இடங்களில் நாம் போலி மனிதர்களாக வாழ்கிறோம். வாழ்வில் அனைத்து அங்கங்களையும் பொருளாதாரத்தைக்கொண்டு திருப்திபடுத்திவிட முடியாது எனும்போது அங்கே நமது போலி முகத்திற்கும் உண்மை முகத்திற்கும் இடையே ஒரு போராட்டம் துவங்குகிறது. உண்மை முகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத சூழ்நிலையில் மன அழுத்தம் உருவாகிறது. மன அழுத்தங்களுக்கு மருந்து வில்லைகள் மூலம் தீர்வுகாண முயலும்போது அங்கு உடல் நலமும் கெடுகிறது. மனதை மருந்தால் கட்டுப்படுத்த முடியாது என்று உரைக்கும் இந்தக் கட்டம்தான் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமானது. அப்படியான காலத்தில் இருந்து தன் சுய விருப்படியான வாழ்வை நோக்கித் திரும்புபவர்கள் குறைந்த சதவீதத்தினரே. பெரும்பாலோர் ஏற்கனவே நடந்துவிட்ட பாதையை பல்வேறு வாழ்வியல் அழுத்தங்களுக்காக மாற்றிக்கொள்ள மனமின்றி , கட்டவிழ்த்துவிட்டால் காட்டை நோக்கி நடக்கும் மாடுகள் போலத்தான் வாழ்கிறோம். வாழ்வு நம்மை கொண்டுசெலுத்தும் பாதையிலேயே செல்வதை “Niagara syndrome” என அழைக்கிறார்கள். ஒரு சிலருக்கே அப்பாதைகள் இயல்பாக நன்கு அமைகின்றன. நீயா-நானா கோபிநாத் போன்ற ஒரு சிலர் அத்தகைய பாதையை நேசிக்கும்போது அதிலும் சாதனை புரிய முடிகிறது. ஆனால் இவர்கள் மிக குறைவான சதவீதத்தினரே. குறிப்பிட்ட பாதையை நேசிக்க இயலாதோர் வாழ்வின் ஒரு கட்டத்தில் அவை மன அழுத்தங்களாக வெடிக்கும்போது விளைவுகள் விபரீதங்களாகின்றன. இத்தகையோருக்காணாதே இப்பதிவு. இதை ஜோதிட ரீதியாக இங்கு ஆராயவிருக்கிறோம்.
மன அழுத்தங்களை குறைத்துக்கொள்ள “Masterdating” அவசியம் என இன்றைய மனநல வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். Masterdating என்பதை “நாம் நமது சுயத்தை மேம்படுத்திக்கொள்வதற்காண தனிமை” என மொழியாக்கம் செய்யலாம். தன்னை மேம்படுத்தி, தனது ஆன்மாவை மகிழ்விக்கும் அனைத்தும் இதில் அமையும். தான் யார். தனது வாழ்வின் நோக்கம் என்ன?, தனது தனித்திறமைகள் என்ன? தன்னை மேம்படுத்துவதற்கு, தன்னை மகிழ்வாக, ஆரோக்கியமாக, நிறைவாக வைத்துக்கொள்வதற்கு தான் என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு தன்னிடமே கேள்வியெழுப்பி விடை காணுவதற்கான தனிமையே “Masterdating“ எனப்படுகிறது.
தன்னை உணர்வதற்கு ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி ஆகியோர் சிறப்பாக அமைந்திருப்பது அவசியம். லக்னாதிபதி கெட்டுவிட்டால் அவர் இந்த சமூகத்தின் அடிமைதான். அவரின் சுய விருப்பங்களுக்கு இந்த பூமியில் இடம் இல்லை என்பதுதான் பொருளாகும். “Niagara syndrome” மிற்கு இவர்களை உதாரணமாக கூறலாம். தனது நலத்தை நாடும் ராசிகளுள் முதன்மையானது மேஷமாகும். செவ்வாய் இதன் காரக கிரகமாகும். ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டவர்கள் தனது நலத்தை, தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிப்பது மிகக் குறைவு. அதேபோல மேஷத்தில் சனி நீசமானவர்கள் தனது வாழ்வில் மிக மிகத் தாமதமாகவே தனது சுய விருப்பங்களை அடையும் செயல்களில் இறங்குகிறார்கள். தனது விருப்பங்களை அடையாளங்கண்டவுடன் ஒருவரது அடுத்த நகர்வு அதை அடைய தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியாகும். இதை லக்னத்திலிருந்து 3 ஆம் பாவகம் காட்டும். 3 ஆமிடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றாலும், 3 ஆவது பாவகாதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒருவர் தன்னலம் கருதி அதை அடைய முயற்சிகளில் இறங்க மாட்டார். இதை ராசியைவிட திரேக்காணத்தில் துல்லியமாக அறியலாம். மிதுனம் முயற்சியின் காரக ராசியாகும். மிதுனாதிபதி புதன் முயற்சியின் காரக கிரகமாகும். ஒருவரது முயற்சியில் எந்த அளவு வெற்றி பெறுவார் என்பதை 5 ஆம் பாவகமும் அதோடு தொடர்புடைய கிரகங்களும் குறிப்பிடும். இதை பஞ்சாம்ச சக்கரம் மேலும் தெளிவு படுத்தும். சிம்ம ராசி இதன் காரக ராசியாகும், சிம்மாதிபதி சூரியன் இதன் காரக கிரகமாகும். ஒருவர் வாழ்வில் தனது விருப்பப்படியான இலக்கை அடைவதை தனுசுவும், தனுசு அதிபதி குருவும் குறிப்பாக பஞ்சாம்சத்தில் அமையும் நிலை சுட்டிக்காட்டும். ஒரு ஜாதகம் சுட்டிக்காட்டும் விஷயங்கள் அனைத்தும் ஜாதகருக்கு நடக்குமா? நடக்காதா? என்பதை தசா-புக்திகளே தீர்மானிக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகர் எனது நட்பு வட்டத்தை சார்ந்தவர். அறுபதுகளின் இறுதியில் பிறந்த ஆண். கன்னி லக்னத்தில் திக்பலம் பெற்ற குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 6 ஆமதிபதி சனி மேஷத்தில் நீசமாகி 10, 2, 5 ஆகிய பாவகங்களை பார்வை செய்கிறார். இவர் பள்ளியை முடித்து கல்லூரி செல்லும் காலத்தில் சனி தசை 10 வருடங்கள் மீதமிருந்தது. வீட்டின் வறுமையான சூழ்நிலை உயர் கல்வியை தொடர இயலாமல் செய்துவிட்டது. முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் 8 ஆமிட சனியின் அனுஷ நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று 4 ஆம் பார்வையாக 6 ஆமிட கிரகங்களை பார்க்கிறார். 8 ல் நீசமான சனி கல்வித்தடை, அவமானங்கள், தாமதங்களை கொடுத்தாலும் சனி முயற்சி ஸ்தானாதிபதி செவ்வாயுடன் நட்சத்திர தொடர்பு பெறுவதால் அவமானங்களையும் தடைகளையும் தாண்டி தான் முன்னேற வேண்டும் என்ற வெறி அவரை வீட்டை பிரிந்து வாழ்வைத்தேடி கண்காணாத இடத்திற்கும் அழைத்துச் சென்றது.
6 ல் ராகு அமைவது சிறப்பு என்றாலும் சந்திரன் ராகுவோடு இணைவது உறவுகள் வகையில் பாதிப்பை கொடுத்தாலும், முயற்சிகள் வகையில் வெறித்தனமான முயற்சியை கொடுக்கும். 6 ஆமிட கிரகங்களை 3 ஆமிட செவ்வாய் 4 ஆம் பார்வையாக பார்ப்பதால், சனி கொடுத்த கடும் தடைகளை தாண்டியதாக இவரது தீவிர முயற்சி இருந்தது என்றால் அது மிகையல்ல.
திரேக்காணத்திலும் தசா நாதர் சனி 8 ஆமிடத்தில் அமைந்துள்ளதை கவனிக்க. சனி அமைந்தது சூரியன் வீடாகி, சந்திரனும் ராகுவோடு இணைந்துவிட்டதால் ஜாதகரின் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவில்லை. வறுமையே அதற்குக் காரணம். அதிஷ்டவசமாக 3 ஆமிடாதிபதி குருவோடு 9 ஆமதிபதி புதன் பரிவர்த்தனை ஆவதை கவனியுங்கள். இதனால் தனது முயற்சிகளில் வெற்றி கிடைக்க ஜாதகர் தனது சொந்த ஊரை விட்டு, பெற்றோரை பிரிந்து சென்னை சென்றார். கவனிக்க நீர் ராசியான மீனம் சென்னையை குறிக்கிறது. மூன்றாமிடம் ஒரு நாளில் சென்று வருவதற்கான தொலைவாகும். சனி 3 ஆமிடத்தை பார்க்கவில்லை என்பதால் சென்னை சென்ற ஜாதகர் இரவு பகல் பாராது கிடைத்த வேலைகளை செய்துகொண்டு கடுமையாய் உழைத்தார். தன்னை மேம்படுத்திக்கொள்வதற்காக விடுபட்ட கல்வியை தபால் வழியில் தொடர்ந்தார். இங்கு இரவிலும் தனது முயற்சியில் வெல்ல ஜாதகர் உழைப்பதை கால புருஷனுக்கு 12 ஆம் ராசியான தூக்கத்தை குறிக்கும் மீனம் குறிக்கிறது. கடும் வேலைகளை சனியும் குறிக்கிறார்கள். 3 ஆமிடம் தபால் வழி கல்வியை குறிக்கிறது. 9 ஆமிடம் அதனால் பெரும் உயர்வை குறிக்கிறது. பரிவர்த்தனைக்குப் பெறகு புதன் உச்சமாவதை கவனியுங்கள். இதனால் ஜாதகர் கல்வியில் அதிகபட்ச நிலையை அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறார். 8 ஆமிட சனி குடும்பத்தை பிரிந்து ஜாதகரை தனிமையில் தள்ளினாலும் தனிமையையே தன்னை பிற தொல்லைகளற்ற உயர்வுகளுக்கு சிந்திக்க வாய்ப்பையும் வழங்கியது என்றால் அது மிகையல்ல. இந்த வகையில் முயற்சிப்போருக்கு வறுமை ஒரு வரமே.
பஞ்சாம்சத்தில் லக்னத்தில் 6 ஆமதிபதி சூரியன் அமைந்தது ஜாதகர் பணியிடத்தில் தனது பூர்வ ஜென்ம கொடுப்பினையால் உண்மையான உழைப்பால் உயர் நிலையை அடைவதை குறிக்கிறது. 5 ஆமதிபதி சந்திரன் 8 ல் ராகு கேதுக்களுடன் இணைந்து மறைந்தது ஜாதகர் சட்டம், ஆய்வு, தணிக்கை போன்ற விதங்களில் ஈடுபடுவதை குறிக்கிறது. சனி தசையை அடுத்து வந்த புதன் லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் அமைந்துள்ளதை கவனிக்க. பஞ்சாம்சதிலும் புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகிறார்கள். புதன் பரிவர்த்தனைக்குப் பிறகு குருவோடு இணைந்து லக்னத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகர் பொருளாதாரம் சார்ந்த துறையில் வெளிநாட்டு வாணிக நிறுவனத்தில் தணிக்கை அதிகாரியாக உயர்ந்தார். சட்டம் பயின்று அதிலும் திறமை பெற்றார். தனது முயற்சியால் வீடு , வாசல், வாகன வசதிகள் அனைத்தையும் ஜாதகர் குறைவின்றி புதன் தசையிலே அடைந்துவிட்டார் என்றால் அது மிகையல்ல. 4, 7 அதிபதி புதன் இங்கு 5 ன் திரிகோணமான 9 ஆமிடமும் நீர் ராசியுமான விருட்சிகத்தில் அமைந்து 3 ஆமிடத்தை பார்ப்பதால் தனது முயற்சிகளின் பலனை நீர் ராசி குறிப்பிடும் சென்னையில் அடைந்தார். குரு லக்னத்தை பார்ப்பதால் ஜாதகரின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. 10 ஆமிடமான தனுசில் அமைந்த சனி கடும் உழைப்பால் ஜாதகர் உயர்நிலையை அடைவதை குறிப்பிடுகிறது. சனி தனது தசையில் கடினமான சூழ்நிலையை உருவாக்கியதன் மூலம் ஜாதகருக்கு தனிமையை வழங்கியதை ஜாதகர் நேர்மறையாக முயற்சிகளுக்கு உரிய காலமாக பயன்படுத்திக்கொண்டதன் பலனை புதன் தசையில் அறுவடை செய்துள்ளார்.
தனது விருப்பங்களை அடையாளம் கண்டு அதை அடைய தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை செய்யாதவர் அவற்றை அடைய முடியாது. தனது விருப்பங்களை அடைவதற்கான தகுதியை பெற ஒவ்வொரு மனிதருக்கும் Masterdating எனும் தனிமை தேவைப்படுகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501