சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எனப் பல துறைகள் உலகமயமாக்கலின் காரணமாக 24 மணி நேரமும் “ஷிப்ட்” (Shift) முறையில் சுழன்று கொண்டிருக்கின்றன.

இரவைப் பகலாக்கும் இந்த நவீனப் பணி கலாச்சாரம், பலருக்குப் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தைக் கொடுத்தாலும், இயற்கை விதிகளுக்கு முரணான இந்த மாற்றம் மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பின்னடைவுகள் ஏராளம். பகலில் உழைத்து இரவில் உறங்குவதுதான் இயற்கையின் நியதி. ஆனால், இந்த உறக்கக் கால மாறுபாட்டால் நமது உயிரியல் கடிகாரம் (Biological Clock) முழுமையாகச் சீர்குலைகிறது. இதன் விளைவாக நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள்:

  • உடல்நலப் பாதிப்புகள்: செரிமானக் கோளாறுகள், நாள்பட்ட சோர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்.
  • மன அழுத்தமும் குழப்பமும்: இயற்கையான உறக்கம் தடைபடுவதால் ஏற்படும் காரணமற்ற கோபம் மற்றும் மனச்சோர்வு (Depression).
  • முடிவெடுக்கும் திறனில் சரிவு (Decision-Making Impairment): மூளைக்குத் தேவையான ஓய்வு கிடைக்காததால், முக்கியமான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத தடுமாற்றம் மற்றும் சிந்தனைத் தெளிவின்மை.

ஜோதிடப் பின்னணி:

இவற்றை மருத்துவ அறிவியல் ஒருபுறம் விளக்கினாலும், ஜோதிட ரீதியாக இதற்குப் பின்னால் மாபெரும் கிரக சூட்சுமங்கள் ஒளிந்துள்ளன. ஒரு மனிதனின் மன அமைதிக்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும், சிந்தனைத் தெளிவிற்கும் ஆணிவேராக விளங்குபவர் ‘மனோகாரகன்’ ஆகிய சந்திரன் ஆவார். அதேபோல, உயிரோட்டத்திற்கும், ஆன்ம பலத்திற்கும் காரகன் சூரியன்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பலவீனமடையும் போதோ, அல்லது நிழல் கிரகங்களான ராகு-கேது மற்றும் கர்ம காரகனான சனி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் போதோ ஒருவருக்கு இரவு நேரப் பணிகள் அமையும் கட்டாயம் உருவாகிறது. இந்தத் தூக்கமின்மை எப்படி ஒருவரின் சுய சிந்தனையையும், வாழ்வில் அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும் பாதிக்கிறது? உதாரண ஜாதகங்கள் மூலம் விரிவாக அலசுவோம்!

உதாரண ஜாதகம் 1 (ஆண்)

சந்திரன் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான 4-ஆம் இடத்தின் அதிபதி. சந்திரன் உணவு, தூக்கம், மனநிலை ஆகியவற்றைக் குறிப்பிடும் கிரகம். உழைப்பைக் குறிக்கும் கிரகமான சனிக்கும், தூக்கத்தைக் குறிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு, வேலை காரணமாக ஜாதகருக்கு அலுப்பு, அசதியை ஏற்படுத்தி ஆரோக்கியச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். ஜாதகத்தில் சந்திரனுக்கு ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்பட்டாலோ அல்லது ஒருவருக்குத் தூக்கம் பாதிக்கப்பட்டாலோ, மனநிலை பாதிப்பு ஏற்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்.

உடல் ஆரோக்கியச் சீர்கேட்டில் முக்கியப் பங்கு வகிப்பது ஜாதகத்தில் குறைந்த பாகை பெற்ற கிரகமும், அதிக பாகை பெற்ற கிரகமும்தான். லக்ன பாகை மற்றும் 8-ஆம் இடத்து கிரக பாகை தொடர்புடைய தசா-புக்திகளில் ஆரோக்கியப் பாதிப்பு வெளிப்படும்.

குறைபாட்டைக் குறிக்கும் பாவகம் என்பது 8-ஆம் இடமாகும். தூக்கத்தைக் குறிப்பிடும் பாவகம் 12-ஆம் பாவகமாகும். இந்த ஜாதகத்தில் சந்திரன் நீசமாகும் இடமும், கால புருஷனுக்கு 8-ஆம் இடமுமான விருச்சிகமே லக்னமாக அமைந்து, லக்னாதிபதி செவ்வாய் கால புருஷனுக்கு 12-ஆம் இடமான மீனத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் இரவுப்பணி புரியவும், தூக்கம் பாதிக்கப்படவும் இயல்பான வாய்ப்பு உள்ளது.

சிம்ம சந்திரனுக்கு மிதுன சனியின் 3-ஆம் பார்வை விழுகிறது. சந்திரன் 13 பாகையில் இருக்க, ராகு-கேதுக்கள் 14 பாகையில் இருப்பதால் பாகை முறை இணைவு உள்ளது. (3 பாகைகளுக்குள் நெருக்கத்தில் அமைந்த கிரகங்கள் பாகை முறை இணைவில் உள்ளதாக மருத்துவ ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன). இதனால் பணிச் சூழல் காரணமாகவும், தூக்கம் பாதிக்கப்படுவதன் காரணமாகவும் ஜாதகருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும் அமைப்பு உள்ளது.

மேற்சொன்ன விதிகளின்படி, ஜாதகருக்கு 4 வயது நடந்தபோது, லக்ன பாகை 14-க்கு நெருங்கி, 11 பாகையில் இருக்கும் சுக்கிர தசையில், 8-ஆம் இடத்தில் அதிக பாகை பெற்ற சூரிய புக்தியில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தார். கண்பார்வையின் காரக கிரகமான சூரியன் ராகு சாரத்தில் 8-ஆம் இடத்தில் நின்று இருள் கிரகங்களான ராகு-கேதுக்களுடன் தொடர்பாவதாலும், சந்திரன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் நின்றதாலும் பார்வை இழப்பு பாகை இணைவு பெற்ற கிரக தசா-புக்திகளில் ஏற்பட்டுள்ளது. ஆனால், லக்ன பாகைக்கு நெருக்கமாக தன ஸ்தானத்தில் நின்ற ராகு பார்வையைப் பறித்தாலும் ஜாதகருக்கு முதலில் மருத்துவப் படியெடுத்தல் (Medical Transcription) துறையிலும், பிற்பாடு மென்பொருள் (IT) துறையிலும் வேலைவாய்ப்பை வழங்கியது.

கண்பார்வையற்ற ஜாதகருக்குப் பிறர் பணிபுரியச் சிரமப்படும் இரவு நேரப்பணி (Night shift) எளிதில் கிடைத்தது. தற்போது ஜாதகருக்கு லக்ன பாகை 15-க்கு நெருக்கமாக 14 பாகையில், லக்னத்திற்கு 2-ஆம் இடத்தில் நின்று 8-ஆம் இடத்துடன் தொடர்புகொள்ளும் ராகு தசையில் சர்க்கரை வியாதி வந்துள்ளது. கவனிக்க: தசாநாதர் ராகு இனிப்பைக் குறிக்கும் குருவின் வீட்டில், மற்றொரு இனிப்பு கிரகமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் நின்று திசை நடத்தும் நிலையில் சர்க்கரை வியாதி வந்துள்ளது.

கேது சாரத்தில் நிற்கும் ரத்த காரகரான சந்திரன், ராகு-கேதுக்களின் பாகைக்கு நெருக்கமாகவும் நின்று சனி பார்வை பெற்றதால் ஜாதகருக்குச் சர்க்கரை வியாதி வந்துள்ளது. கண்பார்வையற்ற ஜாதகர் தூங்கும் காலத்தைக் கண்களால் உணராவிட்டாலும் உடல் உணரும். இதனால் சர்க்கரை வியாதி வந்துவிட்டது. மனநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஜாதகர் தினசரி யோகா, தியானம், முத்திரைகள் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார். 4 வயதில் மருத்துவமனை சென்றவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் பணிபுரிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனை சென்று வந்தார். இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறவுள்ளார்.

உதாரண ஜாதகம் 2 (பெண்)

சந்திரன் இந்த ஜாதகத்தில் தூக்கத்தைக் குறிப்பிடும் கால புருஷனுக்கு 12-ஆம் இடத்தில், இதர அனைத்து கிரகங்களையும் விடக் குறைந்த பாகை பெற்று அமைந்துள்ளார். இதனால் ஜாதகிக்குத் தூக்கத்தால் பாதிப்பு வருவது நிச்சயம். சந்திரனுக்கு 6-ல், லக்னத்திற்கு 8-ல் நிற்கும் புதன் தசை துவங்கியது முதல் கடந்த 35 வருடங்களாக ஜாதகி தூக்க மாத்திரையின் உதவியால்தான் உறங்குகிறார்.

பெண்ணுக்குச் சந்திரன் கர்ப்பப்பையைக் குறிப்பிடுபவர் என்பதால் ஜாதகிக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. இனிப்பு கிரகம் குருவின் வீட்டில் குருவின் பூரட்டாதியில் சந்திரன் நிற்பதால் ஜாதகிக்குச் சர்க்கரை வியாதியும் உள்ளது. கழிவு வெளியேற்றத்தைக் குறிக்கும் நீர் ராசியில் சந்திரன் நிற்பதால் ஜாதகிக்குச் சிறுநீர் கழிக்கும்போது உதிரப்போக்கு ஏற்படுகிறது. ரத்த காரகர் சந்திரனும், அழுத்த (Pressure) காரகர் செவ்வாயும் குருவின் நட்சத்திரத்திலேயே (சந்திரன்-பூரட்டாதி, (செவ்வாய்-விசாகம்) ஜாதகிக்கு ரத்த அழுத்தமும் (BP) உள்ளது. பாதங்களைக் குறிப்பிடும் மீனத்தில் சந்திரன் குறைந்த பாகை பெற்று நிற்பதால், கால்களில் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் சுருள் சிரை (Varicose Veins) வியாதியும் உள்ளது.

ஜாதகியின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறதா? என்றால், பணியிடப் பிரச்சனைகளைச் சரியான திட்டமிடலோடு எதிர்கொள்ள இயலாமல், ஆரோக்கியத்தையும் மனநிலையையும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்த ஜாதகி, இன்னும் சில ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பிருந்தும் விருப்ப ஓய்வில் (VRS) வெளியேறிவிட்டார்.

முடிவுரை:

மேற்கண்ட இரு ஜாதகர்களுமே தூக்கம் பாதிக்கப்படுவதை இருவேறு வழிகளில் எதிர்கொள்கிறார்கள். உறக்க பாதிப்பு இருவருக்குமே ஆரோக்கியப் பாதிப்புகளைக் கொடுத்துவிட்டது. முதலாமவர் ஆரோக்கியத்தைப் பேண யோகா, தியானம் என்ற வழியில் செல்கிறார். இரண்டாமவர் வேலையை விட ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்வதே முக்கியம் என்று பணியைத் துறக்கிறார். பெண்ணுக்குச் சந்திரன் கூடுதலாகக் கர்ப்பப்பையையும் குறிப்பதால் ஆணை விடப் பாதிப்புகள் அதிகம்.

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துகளுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil