ஜோதிடத்தில் அறியப்பட்டதைவிட அறியப்படாதவை அதிகம். அதில் ஒன்று லக்ன, ராசி, நட்சத்திர சந்திகள் தொடர்பான விஷயங்களாகும். சாதாரணமாக கருதும் இந்த விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்தால் அவை பல அதிசய தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்துள்ளன. பொதுவாக பெற்றோர்கள் குழந்தை பெறும் காலத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கும், உணரும், அனுபவிக்கும் விஷயங்களின் அடிப்படையிலேயே அவர்களது குழந்தைகளின் லக்னம் ராசி போன்றவை அமையும் என்றொரு கருத்து உண்டு. பெற்றோர்களின் செயல்களை அவர்களது தசா-புக்தி கிரகங்களும், அவர்களது மனோநிலையை அவர்களது ராசிகளுக்கான கோட்சார நிலைகளையும், அவர்களது உணர்வுகளை அவர்களது தசா-புக்தி கிரகங்களுடன் தொடர்புகொள்ளும் கோட்சார கிரகங்களை வைத்தும் ஓரளவு கணிக்க இயலும். இவை தவிர பெற்றோர்களின் ஜாதகங்களின் அடிப்படையில் தொடர்ந்து வரும் யோகங்களும் தோஷங்களும் குழந்தைகளின் ஜாதகங்களிலும் எதிரொலிப்பதை வைத்து அவற்றின் தாக்கத்தை அறியலாம். பெற்றோர்கள் யோக, தோஷங்களை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதையும் குழந்தைகளின் ஜாதகங்களையும் பெற்றோர்களின் ஜாதகங்களையும் ஒப்பிடுவதன் மூலம் அறியலாம். இந்தப்பதிவில் சந்தி லக்ன, ராசி, நட்சத்திரங்கள் குறிப்பிடும் சில அபூர்வ தகவல்களை வாசகர்களுடன் ஒரிரு உதாரண ஜாதகங்கள் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கீழே ஒரு சிறுமியின் ஜாதகம்.
சந்திரன் கடகத்தை தாண்டி வந்து சிம்மத்தில் 0.41 பாகையில் நிற்கிறார். ராசி சந்தியில் சந்திரன் என்பதோடு ஆயில்யம் முடிந்து மகம் நட்சத்திர துவக்கத்தில் சந்திரன் நிற்பதால் இது நட்சத்திர சந்தியும் கூட. இதன் பின்னணியில் சில விஷயங்கள் இருக்க வேண்டும். சந்திரன் கால புருஷனின் பூர்வ புண்ணிய பாவகமான 5 ஆவது பாவகத்தில் நிற்கிறார். இதனால் இந்த ஜாதகியின் பூர்வீக விஷயங்கள் சந்தியில் நிற்கும் கிரக காரக உறவு காலத்தில்தான் மாறுதலை சந்தித்திருக்க வேண்டும். சந்திரன் தாயை குறிக்கும் கிரகம் அவர் தந்தையை குறிக்கும் சூரியனின் வீடான சிம்மத்தில் வந்தமைகிறார். இதனால் இவரது தாய் வழி பூர்வீகம் தந்தை வழிக்கு மாறி வந்துள்ளது புரிகிறது. சந்திரன் கடகத்தில் புதனின் ஆயில்ய நட்சத்திரத்தை கடந்து சிம்மத்தில் கேதுவின் நட்சத்திர சந்தியில் நிற்பதால் இவரது தாயின் பூர்வீகம் தந்தையின் பூர்வீகத்திற்கு புதன் மற்றும் கேது தொடர்பான காரக விஷயங்களால் மாற்றமடைந்து வந்திருக்க வேண்டும். புதன் கல்வி, காதலை குறிக்கும் கிரகமாகும். ராகு-கேதுக்கள் நவீன தொழில் நுட்பம், மருத்துவம், ஆன்மிகம், மாற்று பாரம்பரிய விஷயங்களில் ஈடுபாடு ஆகியவற்றின் காரக கிரகங்கள் ஆகும்.
இந்த ஜாதகத்தில் பூர்வீகத்தை குறிக்கும் 5 ஆமதிபதி சனி 12 ஆமதிபதி புதனுடன் பரிவர்தனையாகியுள்ளார். இது இச்சிறுமியின் பூர்வீகம் மாற்றத்தை சந்தித்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. மேலும் இது பணி செய்யுமிடத்தில் பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்ட காதலையும் குறிப்பிடுகிறது. 5 ல் அமைந்த பாதகாதிபதி சூரியன், இதர கிரகங்களை அஸ்தங்கப்படுத்தி வலுவிழக்க வைத்துள்ளார். 5 ஆமிடத்தை சந்திரன் பாதக ஸ்தானத்தில் இருந்து பார்க்கிறார். சூரியனும் சந்திரனும் தந்தை, தாயை குறிக்கும் கிரகங்கள் என்பதால் இவரது பூர்வீகம் மாற்றமடைய பெற்றோர்களே காரணம் என்பது தெரிகிறது. இந்த மாற்றத்தில் தந்தையே முக்கிய பங்கு வகித்திருப்பார். தன்னுடன் இணைந்த இதர கிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன் வீட்டை தானே பார்க்கும் சூரியன் அங்குள்ள தாயை குறிக்கும் சந்திரனையும் கட்டுப்படுத்துகிறார்.
5, 11 பாவகங்களோடுதான் அதிக கிரகங்கள் தொடர்பில் இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் பௌர்ணமி யோகத்தில் உள்ளனர். இதனடிப்படையில் பார்த்தால் தாய்-தந்தையரின் விருப்பங்களின் அடிப்படையே இந்த ஜாதகியின் பூர்வீகம் மாறுதலை சந்தித்திருக்க வேண்டும். இவரது பெற்றோர் கலப்புமணம் புரிந்தவர்கள். தாயார் புதனின் அம்சமான பெருமாளை வழிபடும் வைஷ்ணவ மரபில் வந்தவர். பெற்றோர்களிடையே பணி புரியுமிடத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. தாய் காதல் மணம் புரிந்த பிறகு தந்தையின் மரபிற்கு மாறினார். இதையே புதனின் ஆயில்ய நட்சத்திரத்தை கடந்து கேதுவின் மகம் நட்சத்திர சந்தியில் நிற்கும் இந்த ஜாதகியின் சந்திரன் குறிப்பிடுகிறது. நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களே ஒருவரின் வழிபாட்டு மரபு மாறுவதை குறிப்பிடுகிறது. சந்திரன் இந்த ஜாதகத்தில் நட்சத்திர சந்தியில் நிற்பது மட்டுமின்றி ராசி சந்தியிலும் நிற்பது கவனிக்கத்தக்கது. சந்திரனின் ராசியான கடகம் பிராமணத்துவத்தை குறிக்கும் ராசியாகும். கடக ராசி அதிபதி சந்திரன் இங்கு ஷத்திரிய ராசியான சிம்மத்தில் நிற்கிறார். இந்த ஜாதகியின் தாய் வைஷ்ணவ பிராமணர். தந்தை ஷத்ரியர். இதை தெளிவாக ராசி சந்தியில் நிற்கும் சந்திரனும் சந்திரனோடு தொடர்புடைய கிரகங்களும் பாவகங்களும் குறிப்பிடுகின்றன. 5 ஆவது பாவகமும், புதனும் காதலை குறிப்பிடுபவை. சூரியனும் சந்திரனும் தந்தை-தாயை குறிக்கும் கிரகங்களாகும். சந்திரன் மாறுதலை குறிக்கும் கிரகமாகும். கேது கலாச்சார மாற்றத்தை குறிக்கும் கிரகமாகும். கடக ராசி பிராமண ராசியாகும். சிம்மம் ஷத்திரிய ராசியாகும். கேது-சந்திரன் தொடர்பு கலாச்சார மாற்று காதலை பெற்றோர்களுக்கு தந்து இச்சிறுமியின் பூர்வீக குல வழக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.
இந்த ஜாதகத்தில் முந்தைய ஜாதகத்தினை போல சந்திரன் ராசி சந்தியில் நிற்கவில்லை. ஆனால் தாயை குறிக்கும் 4 ஆம் பாவகாதிபதி சுக்கிரன் ராசி சந்தியிலும், நட்சத்திர சந்தியிலும் நிற்கிறார். தாயை குறிக்கும் சந்திரனும், 4 ஆம் பாவகாதிபதி சுக்கிரனும் குருவின் நட்சத்திரமான விசாகத்தை கடந்து சனியின் அனுஷ நட்சத்திரத்திற்கு வந்துள்ளதை கவனிக்கவும். இது குரு குறிக்கும் உடல் உழைப்பற்ற மத சம்பிரதாயங்களை கொண்ட பண்பாட்டில் இருந்து, சனி குறிக்கும் உடல் உழைப்பை குறிக்கும் பண்பாட்டிற்கு குழந்தையின் தாய் மாறி வந்துள்ளதை குறிப்பிடுகிறது. நீசமான சந்திரனுடன் 4 ஆமதிபதி சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் இணைவு பெற்றதால் தாயே இங்கு தனது குல மரபுகளை கைவிட்டவர் என்பது புரிகிறது. கால புருஷனின் 9 ஆவது பாவகமான தனுசு குல மரபுகளை குறிக்கும் ராசியாகும். எதனை முன்னிட்டு இங்கு மரபுகள் மீறப்பட்டுள்ளன என காண்போம். தந்தையை குறிக்கும் சூரியன் இங்கு குருவின் வீட்டில் லாப ஸ்தானத்தில் நட்பு பெற்று லக்னாதிபதியுடன் அமைந்துள்ளதால் தந்தை குல மரபுகளை தக்க வைத்துக்கொள்கிறார். சூரியன் சனி, புதனுடனும் லாப ஸ்தானத்தில் இணைந்துள்ளார். இது தந்தையின் குலம் உழைப்பு, கல்வி, நிதி, திட்டமிடல் ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது.
சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் தாய்க்கு உயரிய நோக்கங்களை உடனிருக்கும் சுப கிரகங்களான குருவும் சுக்கிரனும் அளிக்கின்றனர். ஆனால் இதுவும் குரு-செவ்வாய் பரிவர்த்தனையால் மாறுகிறது. பரிவர்தனைக்குப் பிறகு செவ்வாய் விருட்சிகத்திற்கு வந்து, ஆட்சியுடன் திக்பலம் பெற்று, அங்குள்ள சந்திரனை நீச பங்கப்படுதுகிறார். இதனால் ஜாதகியின் தாய்க்கு குருவும் சுக்கிரனும் ஏற்படுத்தும் எண்ணங்களில் தன் விருப்பப்படியான மாறுபட்ட எண்ணங்களை செவ்வாய் ஏற்படுத்துகிறார். அதனால் கணவன் எனும் செவ்வாய் வந்த பிறகு இக்குழந்தையின் தாய் தனது உடல் உழைப்பற்ற, சம்பிரதாயங்களை கடைபிடிப்பதன் மூலம் பெறும் வாழ்வியல் உயர்வுகளைவிட, பொருளாதார உயர்வுகளால் கிடக்கும் அங்கீகாரத்தையே விரும்பியுள்ளது தெரிகிறது. அதற்கு பொருளாதார உயர்வை முன்னிட்டு கணவருடன் இக்குழந்தையின் தாய் ஏற்றுக்கொண்ட திருமண உறவு காரணமாக இருக்க வேண்டும். இதை ராசி, நட்சத்திர சந்தியில் நின்று தன் ஆட்சி வீட்டை பார்க்கும் சுக்கிரனும், நீசம் பெற்று தனது உச்ச வீட்டை பார்க்கும் சந்திரனும் உறுதி செய்கின்றனர்.
இந்த பெண் குழந்தையின் பெற்றோரும் கலப்பு மனம் புரிந்துகொண்டவர்களே. தாய் பிராமண குலத்தை சார்ந்தவர். தந்தை சனி குறிக்கும் உழைக்கும் குலத்தை சார்ந்தவர். தனது பொருளாதார வளத்தை எண்ணி தாய் மாற்றுக் கலாச்சாரத்தில் மணம் புரிந்துள்ளார்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501