ஒருவரின் ஜாதக அமைப்பிற்குத் தக்கபடி நாம நட்சத்திரங்களின் அடிப்படையில் பெயரமைப்பது நமது பாரம்பரியத்தில் உண்டு. பெயரியல் ஜோதிடம் என்று தற்போது விரிவானதொரு ஜோதிடப் பிரிவாக அது வளர்ந்து வருகிறது. ஒருவரின் பெயர், அவரை ஆளுமை செய்கிறதா? என்றால் ஆம் என்பதுதான் பதிலாக அமையும். ஒரு தனி நபருக்கான பெயரை அவரது ஜென்ம லக்னம் மற்றும் லக்னாதிபதியோடு தொடர்புடைய கிரகங்களே வழங்குகின்றன. லக்னத்தைவிட ராசி வலுவாக அமைந்திருப்பின், ராசி மற்றும் ராசி அதிபதி தொடர்புடைய கிரகங்களும் ஒருவருக்கு பெயரை வழங்கும். பெயர்களை லக்னம், ராசி கிரகங்கள் வழங்குகின்றன என்பதோடு நில்லாமல், ஒருவரின் பெயரை ஜோதிடத்தில் பல்வேறு வகையில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதே இன்றைய பதிவின் நோக்கமாகும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மேற்கண்ட ஜாதகரின் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வியுடன் என்னை பார்க்க வந்திருந்தனர். ஜாதகரும் உடன் வந்திருந்தார். ஜாதகர் தனது பெயர் பாலச்சந்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஜாதகரின் தந்தை ஜாதக குறிப்புகளை ஒரு துண்டுச்சீட்டில் குறித்து எடுத்து வந்திருந்தார். அவரே ஜனன விபரங்களை கூறினார். லக்னத்தை உச்ச சூரியன் பார்க்கிறார். இது இவரது ஜாதகம் இல்லையே, இந்த ஜாதகரின் பெயர் சூர்யா அல்லது சிவா என்று இருக்க வேண்டும் என்றபடி அவரை ஏறிட்டேன். தந்தை மீண்டும் குறிப்பை பார்த்தபடி, மன்னியுங்கள், அது எனது மூத்த மகன் ஆதித்யாவின் ஜெனன குறிப்பு என்றபடி பாலச்சந்திரனின் சரியான ஜனன குறிப்பை கூறினார்.
மேற்கண்ட அண்ணனின் ஜாதகத்தில் உச்ச சூரியன் லக்னத்தை பார்ப்பதால் அவரின் பெயர் சூரியன் அல்லது சூரியனின் அதிதேவதை சிவனின் பெயராகத்தான் இருக்க வேண்டும் என்றபடி ஆதித்யா என்ற பெயர் அமைந்துள்ளது. லக்னத்தை சூரியனைத்தவிர சனியும், புதனும், குருவும் பார்க்கின்றனர். ஆனால் சனியும், புதனும் வக்கிரமாகி பின்னோக்கிய நிலையில், லக்னத்தை பலகீனமாக பார்க்கின்றனர். வக்கிர புதனின் வீட்டில் மிதுனத்தில் நின்று லக்னத்தை 5 ஆவது பார்வை பார்க்கும் குருவிற்கும் புதனின் வக்கிர குணமே இருக்கும் என்பதாலும், இம்மூன்று கிரகங்களின் பார்வையும் லக்னத்திற்கு உறுதியான ஆதிக்கத்தை வழங்கவில்லை. ஆனால் லக்னத்தை 7 ஆமிடத்தில் உச்ச கதியில் இருந்து நேர் பார்வை செய்யும் சூரியன், தனது ஆதிக்கத்தை ஜாதகரின் மீது நிலை நாட்டி ,தனது பெயரை வழங்கியுள்ளது தெளிவாகிறது. தம்பியைக் குறிக்கும் 3 ஆவது பாவத்தில் உள்ள சந்திரனை மிதுன குரு பார்ப்பதால் தம்பியின் பெயர் சந்திரன்+குரு தொடர்பில் அமைந்த பாலச்சந்திரன் என்பதாகும். குரு பாலகனை குறிப்பவர்.
ராம் & லக்ஷ்மன் என்ற இரட்டையர்கள் ஜாதகம் கீழே.
மேற்கண்ட ஜாதகம் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள் ஜாதகம். லக்னாதிபதி சனி மிதுனத்தில் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நிற்கிறார். லக்னாதிபதி சனி, புதனின் வீட்டில் நின்று, சனிக்கு வீடு கொடுத்த புதன் விருட்சிகத்தில் சனியின் அனுஷத்தில் நிற்பதால் ஏற்பட்ட தொடர்பால் மூத்தவருக்கு ராம் என்று பெயர் ஏற்பட்டுள்ளது. புதன் லக்னத்தோடோ அல்லது லக்னாதிபதியோடோ தொடர்பாகாமல் ராம் என்ற பெயர் அமையாது என்பது குறிப்பிடத்தக்கது. புதன் சனி தொடர்பு ஒரு ஜாதகருக்கு இரட்டை பெயரை வழங்கும். உதாரணமாக ராமகிருஷ்ணன். ஆனால் இங்கு புதன் சனி இரண்டும், இரட்டைப்பிறவிகள் என்ற வகையில் தொடர்பை ஏற்படுத்திகொண்டுள்ளன. ஜாதகத்தில் சகோதர காரகர் செவ்வாய், புதனோடு பரிவர்தனைக்குப் பிறகு விருட்சிகத்திற்கு வந்து லக்னாதிபதி சனியை பார்க்கிறார். இளைய சகோதர பாவாதிபதி செவ்வாய் புதனோடு பரிவர்த்தனையாவதால் காப்பிய நாயகர்களில் இளையவரான லக்ஷ்மனின் பெயர் இளையவருக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இரட்டைப்பெயர் அமைய வேண்டுமெனில், அங்கு இரட்டைக்கிரகமான புதனின் தொடர்பு இருக்க வேண்டும். ராசிகளில் மிதுனமும், மீனமும் தொடர்பாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஒரு ஆணின் ஜாதகம் அடுத்து.
ஜாதகரின் ஜனனக் குறிப்பில் தேதி, நேரம் குறிப்பிட்டிருந்து, பிறந்தது 6 மணி. ஆனால் அது காலையா? அல்லது மாலையா? எனக்குறிப்பிடப்படவில்லை. இவர் காலை 6 மணிக்கு பிறந்தாரா? அல்லது மாலை 6 மணிக்குப் பிறந்தாரா? என்பதை பெயரைக்கொண்டு அணுகுவோம் வாருங்கள். மேற்கண்ட ஜாதகரின் பெயர் இரட்டைப்பெயரான ராம்குமார். முதலில் இவர் காலை 6 மணிக்கு பிறந்ததாக எடுத்துக்கொண்டு பார்ப்போம். விதிப்படி ஒருவருக்கு பெயரைத்தருவது லக்னம் மற்றும் லக்னாதிபதியை தொடர்புகொண்ட கிரகங்களே. அதன்படி பார்த்தால் லக்னத்தில் சூரியன், குரு, சந்திரனும், லக்னாதிபதி சுக்கிரனுடன் கேது, செவ்வாயும் இணைந்துள்ளனர். ராம்குமார் என்பதில் உள்ள ராம் என்பது புதனின் அதிதேவதையான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. குமார் என்பது செவ்வாயின் அதிதேவதையான குமரக்கடவுள் முருகனின் பெயராகும். புதனும் செவ்வாயும் இணைந்து லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்புகொள்ளவில்லை. எனவே பெயரை காலையில் பிறந்த லக்னமும் லக்னாதிபதியும் குறிப்பிடவில்லை.
இப்போது இவர் மாலை 6 மணிக்கு பிறந்திருப்பதாகக்கொள்வோம்.
துலாம் லக்னத்திற்கு 7 ல் புதன் நின்று லக்னத்தை நேர் பார்வை பார்க்கிறார். செவ்வாய் 8 ஆவது பார்வையாக லக்னத்தை பார்க்கிறார். வேறு கிரகங்கள் லக்னத்தை பார்க்கவில்லை. இப்போது லக்னத்தை நேர் பார்வை செய்யும் புதன் ஜாதகருக்கு பெயரில் முதல் பகுதியை வழங்கியுள்ளது தெரிகிறது. லக்னத்தை நேர் பார்வை செய்யாமல் 8 ஆம் பார்வை செய்யும் செவ்வாய், பெயரின் 2 ஆவது பகுதியை வழங்கியுள்ளது தெரிகிறது. எனவே இவர் பிறந்தது மாலையில்தான் என்பது தெளிவாகிறது. பிற்பாடு மாலை என்பதே உறுதி செய்யப்பட்டது.
நவீன அர்த்தமற்ற பெயர்களைவிட பாரம்பரியமான பெயர்களை ஜாதகத்தில் பயன்படுத்துவது எளிதாகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501