
“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
ஔவையாரின் இந்த வாக்கு பல தலைமுறைகளாக நாம் போற்றி வந்த மகத்தான உண்மை. “நன்கு படித்திருந்தால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தலைநிமிர்ந்து வாழலாம்; நல்ல வேலை தேடி வரும்” என்ற நம்பிக்கை சமீப காலம் வரை நிலவி வந்தது.
ஆனால், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழல் (Global Economic Crisis) அந்த நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் திடீர் ஆட்குறைப்பு (Layoffs), பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால், இன்று உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் ஒருவித நிச்சயமற்ற பணிச்சூழலையே (Job Insecurity) எதிர்கொண்டு வருகிறார்கள்.
தேடி வந்த ஒரு இளைஞரின் கதை!
சமீபத்தில் என் வாடிக்கையாளர் ஒருவர் என்னை அணுகினார். வெளிநாட்டில் பல ஆண்டுகள் நல்ல வருமானத்தில் பணிபுரிந்த ஓர் இளைஞர் அவர். எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட பணியிழப்பினால், வேறு வழியின்றித் தாய்நாடான இந்தியா திரும்ப வேண்டிய சூழல் அவருக்கு உருவானது.
இந்தியாவிற்கு வந்த பிறகாவது தன் திறமைக்கேற்ற நல்ல வேலையோ அல்லது வருமானமோ கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், ஓரிரு ஆண்டுகள் கழிந்தும் கூட, அவரால் இங்கு பொருளாதார ரீதியாக நிலைபெற முடியவில்லை. இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான அவர்:
- “மீண்டும் எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா?”
- “திறமையும் அனுபவமும் இருந்தும் என்னால் இந்தியாவில் ஏன் சம்பாதிக்க இயலவில்லை?”
என்ற வினாக்களுடன் என்னை நாடினார்.
ஒரு ஜோதிடராக அவருடைய ஜாதகத்தையும் வர்க்கச் சக்கரங்களையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்தபோது சில வியப்பூட்டும் உண்மைகள் வெளிப்பட்டன!
- திறமை இருந்தும் தாய்நாட்டில் வருமானம் ஈட்ட முடியாமல் போவது ஏன்?
- ஒருவரது ஜாதகத்தில் 9 மற்றும் 12-ஆம் பாவங்கள் வெளிநாட்டு வாழ்க்கையை எப்படித் தீர்மானிக்கின்றன?
- மீண்டும் வெளிநாடு செல்லும் யோகம் ஒருவருக்கு எந்தக் காலத்தில், எந்த தசா-புக்தியில் கைகூடி வரும்?
இவற்றுக்கான தெளிவான ஜோதிட ரீதியான காரணங்களையும், அவருக்கு நான் வழங்கிய வழிகாட்டலையும் இந்த ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்…

எண்பதுகளின் இறுதியில் பிறந்த ஓர் ஆணின் ஜாதகமே மேலே நீங்கள் காண்பது.
- லக்ன அமைப்பு: சிம்ம லக்னம். லக்னாதிபதி சூரியன், 2 மற்றும் 11-ஆம் அதிபதியான புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் (11-ஆம் வீடு) சிறப்பான நிலையில் உள்ளார். லக்னம் ராகு-கேதுக்களின் அச்சில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது, ஜாதகரை அன்னிய தேசத்தவரும் வேறு இனத்தவருமே அரவணைப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.
- ஆதார ஸ்தானம் (7-ஆம் வீடு): 7-ஆம் இடம் என்பது ஒரு ஜாதகருக்குக் கிடைக்கும் வாழ்வாதாரத்தைக் குறிப்பது. இங்கு 7-ஆம் இடத்தில் இருக்கும் ராகு, 8 ஆமதிபதி குருவின் பூரட்டாதி-1 ஆம் பாதத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகரின் வாழ்க்கைக்கான ஆதாரம் 8 ஆமிடம் குறிக்கும் கண்காணா தொலைவில் அந்நிய தொடர்பில்தான் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
- வெளிநாட்டுத் தொடர்பு: ஆட்சி பெற்ற 10-ஆம் அதிபதி சுக்கிரனுடன் தன காரகரான குரு இணைந்துள்ளார். இது ஜாதகருக்கு அன்னியத் தொடர்பிலும், குரு குறிப்பிடும் வெளிநாட்டு வகையிலும் தன வரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. மேலும், கால புருஷ தத்துவப்படி 12-ஆம் அதிபதியான குரு, 10-ஆம் இடத்தில் அதன் அதிபதியோடு தொடர்பாவதால் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் அமையும்.
- அருகிலுள்ள நாடா? தூரத்து நாடா?: லக்னாதிபதி சூரியன், கால புருஷனுக்கு 3-ஆம் இடமான மிதுனத்தில் அதன் அதிபதியுடன் இணைந்து நிற்கிறார் (3-ஆம் இடம் என்பது பக்கத்து நாடுகளைக் குறிக்கும்). லக்னாதிபதி சூரியன் 11-ஆம் இடத்தில் குருவின் புனர்பூசம்-3 இல் நிற்க, 10-ஆம் இடத்து குரு சூரியனின் கார்த்திகை-3 இல் நின்று நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிறார். இதனால், ஜாதகரின் சம்பாத்தியமும் லாபமும் அருகிலுள்ள ஒரு நாட்டிற்கு இடம் பெயர்ந்து செல்வதன் மூலம்தான் கிடைக்கும் என்பதை அறியலாம்.
பணியிழப்பு ஏன் ஏற்பட்டது?
- வேலையைக் குறிக்கும் 6-ஆம் அதிபதி சனி, 6-க்கு விரையத்தில் (5-ஆம் இடத்தில்) நிற்பது, ஜாதகருக்கு வேலையில் ஒரு கட்டத்தில் இழப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.
- 5-ஆம் இடத்து சனி தன் 10-ஆம் பார்வையால் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சனி தசா-புக்தி நடக்கும்போதோ அல்லது கோட்சார சனி 2 மற்றும் 8-ஆம் வீடுகளோடு தொடர்புகொள்ளும்போதோ வேலையில் அவமானகரமான நெருக்குதலை ஏற்படுத்தி பணியிழப்பு மூலம் வருமானத் தடையை தருவார்.
- தற்போதைய புதன் திசையில் சனி புக்தி நடப்பில் உள்ளது. கோட்சார சனி கும்ப ராசியில் ராகுவை நெருங்கியபோது, வேலையில் கடும் நெருக்கடி ஏற்பட்டு பணியிழப்பைச் சந்தித்தார்.
- தற்போது கோட்சார சனி மீன ராசியில் (லக்னத்திற்கு 8-ஆம் இடத்தில்) நின்று 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தான் ஏமாற்றப்பட்டதாகவும், இந்த இழப்பை அவமானமாகவும் உணர்கிறார்.
- ராகு-கேதுக்களின் அச்சிற்கு வெளியே சனி மட்டும் விலகி நிற்பது, குடும்பத்தைப் பிரிந்து ஜாதகர் தனியாகச் சென்று பணிபுரிவதைக் காட்டுகிறது. வக்கிர சனி என்பது பலன்களை பெற தடை, தாமதப்படும் தொழிலறிவைக் குறிக்கும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் சரியான வருமானமின்றி இருக்கும் இவருக்கு, மீண்டும் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா என்பதைத் துல்லியமாக அறிய தசாம்சச் சக்கரத்தை (D10 Chart) ஆராய்வோம்.
தசாம்சப் பகுப்பாய்வு & எதிர்காலக் கணிப்பு (D10 Chart & Future Prediction)

- கடந்த கால பயணம் (புதன் திசை): தசாம்சத்தில் தசாநாதன் புதன், பக்கத்து நாட்டைக் குறிக்கும் 3-ஆம் அதிபதியாகி, வேலைவாய்ப்பைக் குறிக்கும் 6-ஆம் இடமான கன்னியில் ராகுவுடன் இணைந்து மீன ராசியைப் பார்க்கிறார். இந்த அமைப்பால்தான் புதன் திசையில் ஜாதகர் கடல்கடந்து பக்கத்து நாடான சிங்கப்பூருக்குச் சென்றார்.
- பணியிழப்புக்குக் காரணம்: புக்தி நாதன் சனி 10-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று, உச்சம் பெற்ற லக்னாதிபதி செவ்வாயுடன் இணைந்திருந்தாலும், அவர் வக்கிரம் பெற்றுவிட்டதால் பணியிழப்பு நிகழ்ந்தது.
- மீண்டும் வெளிநாட்டு யோகம் (கேது திசை): தற்போது ஜாதகருக்கு 12-ஆம் இடத்தில் நிற்கும் கேதுவின் திசை தொடங்குகிறது (கேது, உச்சம் பெற்ற 6-ஆம் அதிபதி புதனின் சாரத்தில் நிற்கிறார்). இதனால் ஜாதகர் உறுதியாக மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வார்.
சிங்கப்பூரா? அல்லது வேறு நாடா?
ராசிச் சக்கரப்படி முந்தைய தசாநாதன் புதன், ராகு-கேதுவின் நேரடித் தொடர்பில் இல்லாமல் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் நின்றதால் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்போதைய தசாநாதன் கேது, ராகுவின் நேரடித் தொடர்பைப் பெறுவதால், இம்முறை அருகிலுள்ள ஒரு இஸ்லாமிய நாட்டிற்கு (Middle East / Gulf Country) செல்லவே வாய்ப்புகள் அதிகம் என்று கணித்துக் கூறினோம்.
இதைக்கேட்ட ஜாதகர், தனக்கு ஏற்கனவே வளைகுடா நாடு ஒன்றிலிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், ஆனால் அங்கு ஊதியம் சிங்கப்பூரை விடக் குறைவாக இருப்பதாகவும் கூறினார்.
வழிகாட்டல் & பலன்கள்:
- கேது சுருக்கும் கிரகம் என்பதோடு, ராசிச் சக்கரத்தின் லக்னத்திலும், தன-குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு விரையத்திலும் நின்று திசை நடத்துகிறார்.
- எனவே, குடும்பத்தோடு வெளிநாட்டில் தங்கிச் சிறப்பாக வாழும் அளவுக்குப் பெரிய வருமானத்தைத் தர வாய்ப்பில்லை. குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழக்கூடிய அளவிலான ஊதியத்தையே தருவார்.
- கேதுவின் இந்தச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டால், அடுத்து வரக்கூடிய ஆட்சிபெற்ற சுக்கிர திசை, குடும்பத்தோடு இணைந்து வாழக்கூடிய வளமான மற்றும் உயர்வான வாழ்க்கை வாய்ப்புகளை ஜாதகருக்கு நிச்சயம் வழங்கும்.
மீண்டும் உங்களை மற்றுமொரு சுவாரசியமான ஜோதிடப் பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501











