கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும், இது தகவல்களை குறியீடுகளாக மாற்றியமைத்து பாதுகாக்கும் Cryptography எனும் குறியாக்கவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பொதுவான மையம் ஏதுமற்ற Decentralized பணமாக இவை இருப்பதால், எந்த ஒரு தனிப்பட்ட வங்கியாலும் கிரிப்டோகரன்சிகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆனால் Blockchain தொழில் நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இதனால் இவை உலகளாவிய பரிமாற்றங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. பிட்காயின் (Bitcoin) மற்றும் எத்தீரியம் (Ethereum) போன்றவை இவற்றில் பிரபலமான கிரிப்டோகரன்சிகளாகும் . கிரிப்டோகரன்சிகள் ஆன்லைன் பரிமாற்றங்களில் பாதுகாப்பையும், விரைவையும் வழங்குகின்றன. ஆனால் இவை இன்னும் பல தேச அரசுகளால் முழுமையாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தங்கள் நாணய மதிப்பால் உலகை இன்றுவரை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. இதற்கு கிரிப்டோகரன்சி மாற்றாக அமையும் என்பதால் பல நாடுகள் இதை வரவேற்கின்றன. ஆனால் உலகின் மீதான தங்கள் பிடி தளரும் என்பதால் அமெரிக்கா மற்றும் NATO நாடுகள் இதை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து இதை அங்கீகரித்தால் வெளிப்படையான நம்பகத் தன்மையுடன் கூடிய நாணயமாக டாலருக்கு மாற்றாக கிரிப்டோகரன்சி உருவெடுக்கும் வாய்ப்புள்ளது. கிரிப்டோகரன்சிகள் மதிப்பில் மிகுந்த ஏற்ற இறக்கங்களை சந்திப்பதால் குறுகிய காலத்தில் தங்களது பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள இதில் முதலீடு செய்ய பலரும் இன்று முயல்கிறார்கள். சர்வதேச நாடுகள் அனைத்தாலும் ஒருங்கினைந்து அங்கீகரிக்கப்படாத நிலையில், சில நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் சூழலில் இதன் மதிப்பு ஏறுவதும், மறுக்கும் சில நாடுகளில் மாற்று அரசு அமையும் தேர்தல் சூழலிலும், சர்வதேச பொருளாதார நிலையை ஒட்டியும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு மாறுவதையும் இன்று காண முடிகிறது. இத்தகைய நிலையில் பங்கு வணிகம் தனக்கு லாபகரமானதா? என்பதுடன், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஜாதகப்படி தனக்கு லாபகரமானதாக அமையுமா? என்ற கேள்வியுடன் என்னை அணுகும் நபர்கள் சமீப காலங்களில் அதிகம். இன்றைய பதிவு கிரிப்டோகரன்சி முதலீடு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜோதிடத்தில் முதலீட்டை குறிப்பிடும் பாவகம் 2 ஆமிடமாகும். பலரும் தங்கள் அதிஷ்டத்தை நம்பி பங்கு வணிகத்தில் முதலீடு செய்வதால் அதிஷ்ட பாவகம் எனும் லக்னத்திற்கு 5 ஆமிடமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8 ஆமிடம் பூர்வ புண்ணிய அதிஷ்டத்தின் மூலம் உழைக்காமல் ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்தை குறிப்பிடும் பாவகமாகும். எனவே பங்கு வணிகம், கிரிப்டோகரன்சி போன்ற யூக வகை வணிகங்களுக்கு 5 மற்றும் 8 ஆம் பாவக வலு முக்கியம். எனவே 5 ம் பாவகமும் 8 ம் பாவகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இவற்றில் லாபம் காண இயலும். பங்கு வணிகத்திற்கு மிதுன ராசி காரக ராசியாகும். ஆனால் கிரிப்டோகரன்சியில் சூழல் மாறுகிறது. ஒருவர் செய்யும் ரகசியமான முதலீடுகளையும் லக்னத்திற்கு 12 ஆமிடமே குறிக்கும். கிரிப்டோ கரன்சிகள் பொது வெளியில் நேரடியாக நடக்கும் பரிவர்த்தனை அல்ல என்பதாலும், 12 ஆமிடம் குறிப்பிடும் உலகளாவிய பொதுப் பரிவர்த்தனையையை குறிப்பதாலும் கிரிப்டோகரன்சியை குறிக்கும் பாவகமும் 12 ஆமிடமே ஆகும். கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனமும் குறிப்பாக மீனத்திலமைந்த புதனின் ரேவதி நட்சத்திரமும் கிரிப்டோகரன்சியை ஆளுமை செய்கின்றன. தனத்தை குறிப்பிடும் குருவும் சுக்கிரனும் பொதுக்காரக கிரகங்களாகின்றன என்றால், இதை Blockchain எனும் தொழில் நுட்ப ரீதியாக பயன்படுத்த ராகுவும்-கேதுவும் காரகம் வகிக்கின்றன. வரவு செலவுகளை பதிவு செய்து பயன்படுத்த காரக கிரகமாக புதன் கிரிப்டோகரன்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கிரிப்டோகரன்சிகளை பங்கு வணிகத்தின் ஒரு மாறுபட்ட அம்சமாகப் பார்க்கலாம் என்பதால் பங்கு வணிகத்தின் காரகங்களும், கிரிப்டோகரன்சியின் காரகங்களும் இணைந்தே செயல்படும் என்பதை அறிக. எப்படியெனில் கிரிப்டோகரன்சிகள் டாலருக்கு மாற்றாக மட்டுமே பயன்படுத்தப்பட்டால் இவை பங்கு வணிகத்தின் ஒரு அங்கமாகிவிடாது. ஆனால் பங்கு வணிகத்தை போன்றே முதலீட்டை பெருக்க கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தும் நிலையில் இவை பங்கு வணிகத்தின் மற்றொரு அங்கமாகின்றன. குறிப்பாக பங்கு வணிகத்தில் கரன்சி ட்ரேடிங் எனும் முறையை ஒத்ததுதான் கிரிப்டோகரன்சிகளும். கரன்சி ட்ரேடிங்கானது டாலர், யூரோ, ரூபாய், ஜப்பானிய Yen போன்ற பல தேச நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களை அனுமானித்து செயல்படுகிறது. கிரிப்டோகரன்சியிலும் Bitcoin, Ethereum, Tether போன்ற இதன் பல வகை நாணயங்களின் ஏற்ற இறக்கங்களை அனுமானித்தே முதலீடு செய்யப்படுகிறது.
மேற்கண்ட ஜாதகத்தில் தனுசு லக்னத்தில் கேதுவும் மிதுனத்தில் ராகுவும் அமையப் பெற்றுள்ளதால் ஜாதகர் பிறரைவிட மாறுபட்டு செயல்படுபவர் எனலாம். முன் குறிப்பிட்ட முக்கிய காரக பாவகங்களுள் ஒன்றான 5 ஆமிடத்தில் 9 ஆமதிபதி சூரியன் 5 ஆமதிபதி செவ்வாய் மற்றும் மிதுன ராசியாதிபதி புதனுடன் இணைந்து உச்சமடைந்துள்ளார். சுக்கிரன் ஆட்சி பெற்ற இந்த ஜாதகத்தில் அவர் உச்சமான 8 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கிரிப்டோகரன்சியை குறிப்பிடும் ராசியான மீனத்தை, கிரிப்டோகரன்சியின் காரக பாவமான 12 ஆமிடத்திலும் கால புருஷனுக்கு 8 ஆமிடமுமான விருட்சிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருந்து குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜாதகத்தில் ஆசை, அதிஷ்டங்களுக்குரிய பாவகம் என்பது 5 ஆமிடமாகும். 5 ல் உச்ச சூரியன் இருப்பதால் இவரது ஆசைகளும் மதிப்பானதாகவே பெரிய அளவில் இருக்கும். பேராசை பாவகம் என்பது 8 ஆமிடமாகும். 8 ஆமதிபதி சந்திரன் கால புருஷனுக்கு 2 ஆமிடமான ரிஷபத்தில் உச்சம். இதனால் இவரது ஆசை பொருளாதார வகையில் பேராசையாக உருவெடுக்கும். இம்மாதிரியான அமைப்புள்ள ஜாதகர்களே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வர். இம்மாதிரியான அமைப்பு இருந்தும் கிரிப்டோகரன்சிகளின் பக்கம் செல்லாதவர்களும் உண்டு. காரணம் அதற்கு தசா-புக்திகள் வர வேண்டும். ஜாதகருக்கு நடப்பது குரு தசை. ஜாதக அமைப்பு சாதகமாக உள்ளதாலும், 12 ஆமிடத்துடன் தொடர்புடைய தசை என்பதாலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய ஜாதகம் தூண்டுகிறது. இதனடிப்படையில் ஜாதகரும் அதில் முதலீடு செய்து தனது முதலீட்டைவிட பல மடங்கு லாபம் பார்த்தவர்.
ஒரு ஜாதகத்தில் லக்னமும் ராசியும் கேந்திர கோணமாக அமைந்தால் அவரது எண்ணமும் செயலும் ஒருங்கிணைந்து முடிவெடுப்பதில் தெளிவையும் செயலில் துல்லியத்தையும் கொடுத்து அவரை வாழ்வின் வளமைக்கு எளிதாக அழைத்துச் செல்லும். மேற்கண்ட ஜாதகத்தில் தனுசு லக்னமும் ரிஷப ராசியும் சஷ்டாஷ்டகமாக (6/8 ஆக) அமைந்துள்ளன. இது ஜாதகரின் எண்ணங்களும் செயல்களும் ஒருங்கினையாததை தெரிவிக்கிறது. லக்னாதிபதி குரு 12 ல் மறைந்தது கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய நல்ல அமைப்பு. ஆனால் அவர் வக்கிரமாகிவிட்டதால் ஜாதகர் தனது செயல்களில் தயக்கம் காட்டுவார். பொதுவாக சந்திரன் உச்சமானால் முடிவெடுப்பதில் தெளிவிருக்கும் ஆனால் அந்த முடிவை எடுக்க ரிஷப ராசியினர் மிகுந்த நிதானம் காட்டுவர். இத்தகைய அமைப்பால் ஜாதகரின் கிரிப்டோகரன்சி முதலீடு வளர்கையில் எப்போது முதலீட்டை அறுவடை செய்வது என்ற முடிவை ஜாதகரால் எடுக்க இயலவில்லை. முதலீடு பன்மடங்காக பெருகிய போது அதிலிருந்து லாபத்தை எடுக்க ஜாதகர் காட்டிய தயக்கமும், நிதானமும் அவரது பலமடங்கு லாபத்தை சொற்பமாக்கிவிட்டன.
இந்த ஜாதகர் கிரிப்டோகரன்சியின் காரக பாவகமான 12 ஆமிடத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கும் குருவின் தசையில், சூதாட்டத்தை குறிப்பிடும் 5 ஆமிடத்தில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நிற்கும் புதன் புக்தியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார். புதன் புக்தி முடிந்து, கேது புக்தியும் முடிந்த காலத்தில் ஜாதகரின் முதலீடு சுமார் ஒரு கோடியை நெருங்கியது. கேது புக்தியை அடுத்து வந்த ஆசையின் காரக கிரகமும் பேராசையின் காரக பாவாதிபதியான (8 ஆமதிபதி) சந்திரனோடு இணைந்து நிற்கும் சுக்கிர புக்தி முதல் இவரது முதலீடு படிப்படியாக குறைந்து தற்போது சுமார் 7 லட்சத்தை ஒட்டி நிற்கிறது. ஜாதகர் முடிவெடுக்க காட்டிய தயக்கமும் கூடுதலாக ஏறக்கூடும் என்ற பேராசையும் இதற்குக் காரணம். இதை ஜோதிட ரீதியாக முன் கூட்டியே கணிக்க இயலுமா? என்றால் தசா-புக்தி மற்றும் கோட்சார கிரகங்களின் நகர்வுகளின் அடிப்படையில் கணிக்க முடியும். உங்களை 2 வருடங்களுக்கு முன் தொடர்பு கொண்டிருந்தால் முதலீட்டை எடுத்திருப்பேன். பெரும் தனத்தை தவற விட்டேனே என ஜாதகர் என்னிடம் கூறினார். நல்ல ஆலோசனைகள் மூலம் ஒருவர் பலனடையவும் அவரது ஜாதகத்தில் அமைப்பு இருக்க வேண்டும்.
மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சர்யா பழனியப்பன்.
கைபேசி:8300124501