மனம் விட்டுப் பேசி மகிழ நல்ல நட்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நண்பர்களே இல்லாத மனிதர்கள் தங்களது சந்தோஷமான தருணங்களைக்கூட தனிமையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும். உறவுகளும், சுற்றமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு இயல்பாக அமைபவை. இவையே ஆத்மார்த்தமான நட்பாக அமைத்துவிட்டால் அத்தகையோர் வாழ்வே ஒரு சொர்க்கமாகும். ஆணாகினும் பெண்ணாகிலும் தங்களது வாழ்க்கைத் துணைவரே நல்ல நண்பராக அமைந்தால் நல்லது என்று எதிர்பார்ப்பது இயல்புதான். இத்தகைய எதிர்பார்ப்புக்கள் ஒரு சிலருக்கு நிறைவேறிடும். ஆனால் இதற்கு மாறான உறவுகளும் சுற்றமுமே பெரும்பாலோருக்கு வாய்க்கின்றன என்பது நடைமுறை உண்மையாகும். மாமாக்களையும் சித்தப்பாக்களையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நாம் பழகும் மனிதர்களில் நல்ல நண்பர்களை இனங்கண்டு அவர்களை நமது ஆத்மார்த்தமான நட்பு வட்டத்திற்குள் அமைத்துக்கொள்வது சாத்தியம். இன்றைய நவீன உலகில் ஒரு வசதி என்னவென்றால் இத்தகைய நல்ல பள்ளி, கல்லூரி நட்புகளையும், பணியிட நட்புகளை கால ஓட்டத்தில் பிரிந்தாலும் இன்று கைபேசிகள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை நம்மோடு இணைத்து வைக்கின்றன. இன்றைய நமது பெரும்பாலான நட்புகள் கைபேசிகளாலேயே உயிர்ப்புடன் இருக்கின்றன. விபரீதமாக சில கைபேசி நட்புகளெல்லாம் உன்னதமானவை என்று முகமறியா நட்புகளிடம் அகப்பட்டுக்கொண்டு கண்முன் நடமாடும் உறவுகளை தவற விடுவோர் சிலர். நல்ல குணங்களைக்கொண்ட நமது மனவோட்டத்தை ஒத்த நண்பர்கள் அமைவது ஒரு கொடுப்பினைதான். குண வேறுபாடுகள் சில இருந்தாலும் அவற்றை சீர்தூக்கிப் பார்த்து நல்ல குணங்கள் மிகுதியாயின் அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்ககொளல்”
எனும் குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். சினிமா கதாநாயகர்களுக்கு உடனிருக்கும் கோமாளி நண்பர்கள் போல, நண்பர்களில் ஒருவர் மட்டும் பலனடைந்தால் அது ஒரு போதும் நல்ல நட்பாக இருக்க முடியாது. இருவரும் பலனடைந்தாலே அது உண்மையான நட்பாக இருக்க முடியும். நல்ல நட்பும், உறவும் இரு கை ஓசையாக இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் நமது சாதனைகளுக்கு உதவிகரமாயிருப்பர். வேதனைகளுக்கு மருந்தாக அமைவர். இன்றைய பதிவு நட்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே.
ஜாதகத்தில் அடிக்கடி நாம் தொடர்புகொள்ளும் நபர்களை பொதுவாக குறிப்பது 7 ஆமிடமானாலும், நட்பு என்பது நமது விருப்பத்தின் பேரில் நாம் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்வது என்ற அடிப்படையில் நட்புக்குரிய பாவகம் என்பது 11 ஆமிடமாகும். நண்பர்களை குறிப்பிடும் கிரகம் புதனாகும். எனவே ஒரு ஜாதகத்தில் நல்ல நண்பர்கள் அமைய லக்னத்திற்கு 11 ஆமிடமும் அதன் கேந்திரங்களான 3, 7 ஆகியவையும், கால புருஷனுக்கு 3, 7, 11 ஆமிடங்களான வாயு ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை நல்ல நிலையில் பாவிகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் காரக கிரகம் புதனுக்கும் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் சுபர் தொடர்பு விரும்பத்தக்கது. குறிப்பாக புதனுக்கு சுக்கிரனின் தொடர்பு அமைந்தால் நண்பர்கள் நமது மனம் மகிழும்படி நகைச்சுவையாக பேசி நம்மை ஊக்கப்படுத்துபவர்களாக அமைவர். புதனுக்கு குரு தொடர்பு பெருந்தன்மையான நண்பர்களை அமைத்துத் தரும். புதனுக்கு சூரியன் அல்லது செவ்வாய் தொடர்பு அமைந்தால் அத்தகைய ஜாதகர்களுக்கு தன்முனைப்பு காட்டும் நண்பர்களே (Egoist Friends) அமைவர். புதனுக்கு சனி தொடர்பு ஏற்படுவது முழுமையாக நம்பாமல் ஏமாற்றும் நண்பர்களை குறிப்பிடும் அமைப்பாகும். புதன்+சனி சேர்க்கையில் புதன் சனியைவிட அதிக பாகை பெற்றால் ஜாதகர் நண்பரை ஏமாற்றுவார். புதன் சனியைவிட குறைந்த பாகை பெற்றால் நண்பர் ஜாதகரை ஏமாற்றுவார். புதனுடன் ராகு-கேதுக்கள் இணைவில் நட்பு ஏமாற்றத்தில் முடிவது தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆனால் புதன் வக்கிரம் பெற்றுவிட்டால் நண்பரால் தான் ஏமாற்றப்படுவதை ஜாதகர் கடைசி நேரத்தில் உணர்ந்து சுதாகரித்துக்கொள்வார். இதை ஒருவர் ஜாதகத்தில் புதன்-ராகு தொடர்புடைய தசா-புக்தி காலங்களில் ஜனன புதன் மீது கோட்சார ராகு-கேதுக்கள் செல்லும் காலங்களில் தெளிவாக உணரலாம். புதன் லக்னத்தில் திக்பலம் பெற்றால் அந்தகைய ஜாதகர் நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார். ஆனால் நண்பர்களால் ஜாதகர் பயனடைவது குறைவே. புதன் 4 ல் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் பயனற்ற நண்பர்கள் அமைவர். புதனுக்கு 11 ன் எதிர் பாவகமான 5 ஆவது பாவக தொடர்பு சிறந்த மனதிற்கினிய நண்பர்கள் அமையும் யோகமாகும். ஆனால் புதனின் பிற கிரக சேர்க்கை பார்வை பொறுத்து மாறுபட்ட பலன்கள் அமையும் என்பதை கவனத்தில் கொள்க. புதன் ஜாதகத்தில் தாரா காரக (குறைந்த பாகை பெற்ற) கிரகமாக அமைந்துவிட்டால் ஜாதகர் நல்ல நட்புக்கு ஏங்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் 11ல் ஒரு வலுவான கிரகம் சுபர் தொடர்பு பெற்று நின்றால் குறைவான ஆனால் நிறைவான நண்பர்கள் அமைவார்கள். இதுவே புதன் ஆத்ம காரகராக ஜாதகத்தில் அதிக பாகை பெற்று நின்றால் நண்பர்கள் ஜாதகரின் நட்புக்கு ஏங்குவர். பொதுவாக புதன் ஜாதகத்தில் வக்கிரம் பெற்று நின்றால் ஜாதகரிடம் இணக்கம் குறைந்து காணப்படும். இதனால் அவர் நண்பர்களை சிரமப்படுத்துபவராக இருப்பார்.
பின் வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
கும்ப லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் நண்பர்களை குறிப்பிடும் புதன், ஆட்சியுடன் திக்பலமும் பெற்ற சுக்கிரனுடன் சிறப்பாக அமைந்துள்ளார். இதனால் ஜாதகரின் நண்பர்கள் சிறப்பான குணங்களும் நல்ல பொருளாதார, கல்வி, வாகன வசதி வாய்ப்புகளை பெற்ற மதிப்பானவர்களாக இருப்பர். ஆனால் புதன் நட்பு பாவகமான 11 க்கு 6 ல், 5 க்கு விரையத்தில் அமைந்துள்ளார். இத்தகைய அமைப்பு ஜாதகரின் நட்பு வட்டத்தில் சிறந்த நண்பர்கள் அமைந்தாலும் அவர்களால் ஜாதகருக்கு பயனற்ற நிலையை ஏற்படுத்தும். இந்நிலையில் லக்னாதிபதி வலுப் பெற்றால் மட்டுமே நட்பால் ஜாதகருக்கு மதிப்பு ஏற்படும். ஆனால் லக்னாதிபதி சனி கேதுவுடன் இணைந்து பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வினைவு புதன் நீசமாகும் மீனத்தில் அமைவது சிறப்பல்ல சனி-கேதுவின் நிழல் 4 ஆமிட புதன்-சுக்கிரன் மீது விழுவதால் நண்பர்கள் ஜாதகரால் கசப்படைவர். 2 ல் ஏற்படும் இவ்வினைவால் ஜாதகருக்கு குடும்பம், பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் நண்பர்களால் மதிக்கப்படுவர். இல்லாவிட்டால் நண்பர்கள் ஜாதகரை மதியார். ஜாதகருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் பணியில் இருக்கிறார். ஜாதகருக்கு 3 ஆமிடத்தில் அமைந்த செவ்வாய் தசை நடக்கிறது. செவ்வாய் சுக்கிரனுக்கு சம கிரகமானாலும், அவர் புதனுக்கு எதிரியாகி புதனுக்கு விரையத்தில் நின்று தசை நடத்துவதால் நண்பர்கள் ஜாதகரால் பாதிப்படைவர். அதிகார கிரகமான செவ்வாய், ஆளுமை கிரகமான சூரியனுடன் இணைந்து தசை நடத்துவதால் பொதுவாக ஜாதகரின் செயல்கள் மற்றவரை அதிகாரம் செய்யும் வகையில் இருக்கும். ஆனால் சுதந்திரமான செயல்களை விரும்பும் புதனுக்கு இவை பிடிக்காது என்பதால் அதிகாரம் செய்யும் ஜாதகரை நண்பர்கள் விரும்பமாட்டார்கள். இதனால் ஜாதகர் நண்பர்களின் இணைக்கமின்மையால் வருதப்பட்டுகிறார். கும்ப லக்னத்திற்கு 5, 8 க்குரியவராக புதன் இருந்தாலும் அவர் கேந்திரத்தில் வலுபெற்ற சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் நல்ல நண்பர்கள் வட்டத்தில்தான் ஜாதகர் இருக்கிறார். ஆனால் மன விருப்பங்களை குறிப்பிடும் 5 க்கு விரையமான பயனற்ற நண்பர்களை குறிப்பிடும் 4 ல் புதன் அமைந்துவிட்டதால், ஜாதகருக்கு அமைந்த நண்பர்களும் ஜாதக அமைவாலும், ஜாதகருக்கு தற்போது நடக்கும் செவ்வாய் தசையின் அதிகார குணத்தாலும் பயனற்றவர்களாகி விலகிச் செல்லும் அமைப்பை ஜாதகம் குறிப்பிடுகிறது. நல்ல நண்பர்கள் விலகிச் செல்வதால் ஜாதகர் தற்போது காரணம் புரியாமல் என்னை தொடர்புகொண்டார்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501