அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு
கல்வி என்பது மனிதனுக்கு கண்களைப் போன்றது. கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன் என்பது அன்றோர் வாக்கு. சூழ்நிலை சந்தர்பங்களாலும் பொருளாதார சூழ்நிலையின் பொருட்டும் பள்ளிப்படிபோடு கல்வியை விட்டவர்களும் வாழ்வில் நல்ல சூழ்நிலைக்கு வந்த பிறகு கற்காமல் விட்ட காலங்களை நினைத்து ஏங்குவர். அத்தகையோர் தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் புத்தகங்களை தேடிச் சென்று தங்களது அறிவு தாகத்திற்கு வழி செய்துகொள்கின்றனர்.
சிலர் சமூக அந்தஸ்திற்காகவும் தொழில் சூழ்நிலைகளின் பொருட்டும் அஞ்சல் வழியில் பயின்று தங்களக்கான தகுதியை பட்டங்களின் மூலம் வெளிக்கட்டிக்கொள்கின்றனர். கௌரவ டாக்டர் பட்டங்களை பணம்கொடுத்துப் பெற்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மக்கள் நம்புவதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். இதில் திருமணதிற்காக சொல்லப்படும் பொய்யை மெய்ப்பிக்க திருமணப் பத்திரிகையில் பட்டங்களை போட்டுவிட்டு திருமணம் செய்பவர்கள் ஒருவகை. இவர்களை எதிர்கால அரசியல்வாதிகள் எனலாம். அடைப்புக்குறிக்குள் பட்டங்களை அடக்கிவிட்டு மற்றையோரை அடக்க நினைப்போர் ஒருவகை.
இப்பதிவில் நாம் உயர்கல்வியில் தடைகளை சந்திக்கும்போது அஞ்சல்வழியில் அதை தொடர சாதகமான ஜாதக அமைப்புகளை அலசவிருக்கிறோம்.
கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.
17.09.1977 – இரவு 7.24 மணி.
மீன லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்தில் 2 மற்றும் ஒன்பதாமதிபதி செவ்வாயோடு அமைந்துள்ளார். இதனால் வித்யா ஸ்தானம் பலம் பெறுகிறது. ஆனால் குருவும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகள் என்பதையும் தொழிலுக்கு இது சாதகமான அமைப்பு என்ற ஒரு கோணமும் உள்ளதை கவனிக்க வேண்டும். ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் நட்சத்திரமே முதல் திசையாக வந்தது பால்ய வயது யோகமாக இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.
ஜாதகரின் 10 ஆவது வயதில் சனி திசை ஆரம்பித்துள்ளது. சனி தனது பகை வீட்டில் லக்ன பாதகாதிபதியுடன் இணைந்து வித்யா ஸ்தானமான 4 க்கு விரையாதிபதியும் உயர்கல்வியை குறிப்பிடும் ஸ்தானமான 9 க்கு விரையமான 8 ஆமதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து வித்யா காரகனான புதனின் மூலத்திரிகோண வீட்டிற்கும் லக்னத்திற்கு 6 லும் அமைந்து திசை நடந்துவது கல்விக்கு சிறப்பான அமைப்பு என கூறுவதற்கில்லை. திசா நாதனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாதக ஸ்தானத்தில் பாதகாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் உள்ளது. இது சூரியன் நிற்கும் பாவ அடிப்படையில் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை அமைப்பு கோட்சாரத்தில் பலனளிக்கும் திசா புக்தியில் கிரகங்கள் தாங்கள் நின்ற இட பலனையே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சனி கேது சாரம் பெற்று கேது லக்னத்தில் புதனின் சாரத்தில் நிற்பது சனி திசையில் பாதிப்பு கல்வியில்தான் ஏற்படும் என்பதை இது குறிப்பிடுகிறது.
எப்போது கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதை புதிகார கிரகங்களும் கோட்சாரமும் சுட்டிக்காட்டும். ஜாதகர் சனி திசை சுக்கிர புக்தியில் 1994ம் முற்பகுதியில் ஜாதகர் 12 ஆம் வகுப்பை முடித்தார். அதன்பிறகு ராசியின் மீது ராகுவோடு இணைந்து லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8 ல் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடதிற்கு விரையத்தில் நின்றபோது ஜாதகரின் உயர் கல்வி தடைபட்டது. சனி திசையில் சுக்கிர புக்தியில் பாதக ஸ்தானத்தில் நின்ற சூரியனின் அந்தரத்தில் கல்விக்கு சூரியன் மூலம் தடை ஏற்பட்டது. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜாதகரின் தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க அவர் ஜாதகருக்கு உயர்கல்வியை தொடரும் அமைப்பு இல்லை என்று கூற ஜாதகரை தான் நடத்தும் மளிகை கடையை கவனிக்குமாறு பணித்தார். கவனிக்க – புதன் ஜோதிடர், கல்வி, வியாபாரம் இவைகளை குறிக்கும். சுக்கிர புக்தியில் 9 க்கு விரையத்தில் நின்ற சந்திரனின் அந்தரத்திலும் தடை தொடர்ந்தது. கவனிக்க ஜாதகருக்கு யோகியாக குருவும் அவயோகியாக சூரியனும் ஜாதகத்தில் அமைந்துள்ளனர்.
கல்வி தடைபட்ட பிறகு கோட்சார குரு லக்னத்திற்கு 9 ல் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்லும்போது கல்வியை தொடர பள்ளி நண்பர் உந்துதலாக இருந்தார். அதனால் ஜாதகர் அஞ்சல் வழியில் இளநிலை தமிழ் பட்டப்படிப்பில் 1996 ஆம் ஆண்டு சேர்ந்தார். அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் 3 ஆம் இடாதிபதி சுக்கிரனின் புக்தியில் அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் புதனின் அந்தரத்தில் ஜாதகர் கல்வியை அஞ்சல் வழியில் தொடர்ந்தது கவனிக்கத்தக்கது. பாவ சக்கரத்தில் சனியும் சுக்கிரனும் ஐந்தாமிட தொடர்பு கொண்டதும் ஜாதகருக்கு சுக்கிரன் தனது புக்தியில் உதவியுள்ளது தெரிகிறது. புதனும் 7 ஆமிடமும் நண்பனை குறிக்கும். தொடர்ந்து ஜாதகர் அஞ்சல் வழியிலேயே முதுநிலை தமிழ் பட்டத்தையும் படித்து முடித்தார். 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாதகர் சனி திசையில் லக்னாதிபதி குரு புக்தியில் M Phil பட்டம் பெற்றார்.
ஜாதகர் 2009 ஜூனில் லக்னத்திற்கு 6 ல் நின்ற புதன் திசை அதே ஆறாமிடத்தில் நின்ற சுக்கிர புக்தியில் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். புதன் திசையில் இட மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் புக்தியில் 2013 ல் ஜாதகர் வேறொரு கல்லூரிக்கு மாறினார். அங்கு ஜாதகருக்கு முனைவர் பட்டம் ஏற்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். 2017 ல் ராகு புக்தியில் ஜாதகர் தமிழில் சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2014 ல் புதன் திசை செவ்வாய் புக்தியில் NET தேர்வில் வெற்றி பெற்றார். பாதகாதிபதியின் வீடுகளான மிதுனமும் கன்னியும் ஜாதகருக்கு திதி சூன்ய வீடுகளானது கவனிக்கத்தக்கது. மேலும் திசா நாதன் புதனின் நிலையால் ஜாதகர் அக்கு பங்சர் மருத்துவமும் பயின்று மருத்துவம் பார்த்து வருகிறார். கல்லூரி சென்று பயிலாத ஜாதகர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிகிறார் என்றால் அது ஜாதகரின் முயற்சியால் மட்டுமின்றி கிரகங்களின் ஆசீர்வாதத்தால் என்றால் மிகையல்ல.
எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு 3 ஆம் பாவமும், தூது மற்றும் அஞ்சல் போன்றவற்றிற்கு காரகன் புதனும் சாதகமாக இருப்பது அவசியம் என்பது புலனாகிறது.
லக்னப்புள்ளியும், லக்னத்தில் அமைந்த கேதுவும் புதன் சாரம் பெற்றதனாலும் லக்னாதிபதி புதன் வீட்டில் அமைந்து ராகு சாரம் பெற்று அந்த ராகுவும் மலைப்பகுதியை குறிக்கும் சூரியனோடு தொடர்பு கொண்டு புதன் வீட்டில் அமைந்து லக்னத்தை பார்வையிடுவதால் ஜாதகரின் பெயர் மலைமீது இருக்கும் பெருமாளின் பெயராகும்.
ஜாதகத்தில் இரண்டாமிடம் தாய் மொழிக் கல்வியையும் செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை தமிழின் வடிவமாகவே தமிழர்களாகிய நாம் வணங்குகிறோம் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜாதகத்தில் உள்ள குரு – மங்கள யோகம் மிகச் சிறப்பான பலனை ஜாதகருக்கு வணங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. செவ்வாய் நான்கில் அமைந்து தொடர்புகள் ஸ்தானமான 7 ஆமிடத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகரின் தொடர்புகளில் செவ்வாய் முன்னிலை வகிக்கிறது. மேலும் செவ்வாய் குருவை விட அதிக பாகை பெற்று நின்றதால் இந்த ஜாதகரை வழிநடத்துவதில் முன்னிலை வகிக்கிறது.
எவ்வாறெனில் ஜாதகரை அஞ்சல் வழிக்கல்வியில் படிப்பை தொடர உந்துதலாக இருந்த பள்ளித் தோழனின் பெயர் முருகநாத பூபதி.
ஜாதகர் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழை விடுத்து வேறு பாடம் எடுக்க முயன்றபோது அவரது முதுநிலையிலும் தமிழையே எடுத்து படிக்குமாறு தூண்டிய நண்பரின் பெயர் சரவணன்.
ஜாதகருக்கு சுக்கிரனின் சாரம் பெற்ற 7 ஆமதிபதி புதன் திசை துவங்கிய 2 ஆவது மாதமே 2006 ல் திருமணத்தை நடதிவைதுள்ளது. மாமனாரின் பெயர் ஆறுமுகம்.
2008ல் ஜாதகரது திருமண மோதிரம் தொலைந்துவிட்ட அதை கண்டுபிடித்துக் கொடுத்த ஜாதகரின் கடை ஊழியரின் பெயர் தங்கவேல்.
முதலில் சேர்ந்த கல்லூரியில் ஜாதகரின் திறமையை பரிசோதித்து வேலை கொடுத்த முதல்வரின் பெயர் சிங்காரவேலன்.
ஜாதகரிடன் வேலைக்கான உத்திரவாத கடிதத்தை வழங்கிய நபரின் பெயர் சரவணகுமார்.
ஜாதகரை முதன் முதலில் பாடம் எடுக்க வகுப்பிற்கு அழைத்துச் சென்ற நபரின் பெயர் சிவசுப்பிரமணியன்.
2013 ல் பணிமாறிச் சென்று சேர்ந்த கல்லூரியின் முதல்வர் பெயர் பாலமுருகன்.
2015 ல் புதிதாய் கட்டிய வீடு உள்ள பகுதி மந்திரகிரி நகர் எனும் முருகனின் பெயர்கொண்டது.
அந்த வீட்டிற்கு தச்சு வேலை செய்த நபரின் பெயர் சக்திவேல்.
வீட்டை கட்டிக்கொடுத்த பொறியாளரின் பெயர் மந்திராசலம் என்ற முருகனின் பெயர்.
வீட்டில் மின்சார வேலை மற்றும் நீர் குழாய் அமைத்துத்தந்த நபரின் பெயர் கார்த்திகேயன்.
ஜாதகர் அக்குபஞ்சர் மருத்துவமனை நடத்த இடன் கொடுத்து உதவிய இடத்தின் உரிமையாளர் மந்த்ராசலம் என்ற முருகனின் பெயர்.
அந்த மருத்துவமனையில் ஜாதகரிடன் மருத்துவம் பார்க்க வந்த முதல் நோயாளியின் பெயர் ஆறுமுகம்.
இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் ஜோதிடரான அடியேனது பெயர் பழனியப்பன்.
கிரகங்கள் எப்படி நம் வாழ்வில் பங்காற்றுகின்றன என்பதை இது போன்ற ஜாதகங்களை ஆராயும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த ஜாதகத்தை மேலும் சில கோணங்களில் ஆராயும்போது இன்னும் சில ஆச்சரியங்களை காண்கிறேன். பதிவின் நீலம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
ஜோதிட ஆர்வலர்களுக்காக – ஜாதகம் K.P அயனாம்சம் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.
விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,அதுவரை,வாழ்த்துக்களுடன்,
அன்பன்,பழனியப்பன்.
கைபேசி: 07871244501