
செலவு செய்வது நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாம் செய்யும் அனைத்து செலவுகளுமே நமக்கு மகிச்சியை தருவதில்லை. உதாரணமாக பாதுகாப்புக் கவசமணியாமல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகையில் செய்யும் செலவு கசப்பானது என்றால், காதலுக்காக செய்யும் செலவுகள் மகிழ்ச்சியானது எனலாம். மதுவிற்கு செய்யும் செலவு வீண் செலவு என்றாலும் தெரிந்தேதான் போதை ஆசாமிகள் மது அருந்துகிறார்கள். மருந்துவச் செலவு நமக்கு மகிழ்சியை தராவிட்டாலும் அது நாம் உடல் நலம் பெற அத்தியாவசியமானது என்பதால் ஏற்றுக்கொள்கிறோம். லாட்டரி மோகத்தில் செய்யும் செலவுகள் இதில் ஒரு வகை. இந்த வகை அதிஷ்டத்தை நம்பி செய்யப்படும் செலவுகள் ஒரு அளவை மீறும்போது ஜாதகரும் அவரை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். மது அடிமைகளை மீட்க மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புவது போல இப்படி லாட்டரி மோகத்தில் வீழ்ந்தவர்களை மீட்கவும், பங்கு வணிகத்தில் பைத்தியமாகி வாழ்வின் ஆதாரங்களை இழந்தவர்களை மீட்கவும் மனநல மருத்துவர்களிடம் அவர்களின் குடும்பத்தார் அழைத்து வருகிறார்கள். ஜாதகத்தில் ஒருவர் எந்த வகை செலவுகளில் மனம் மகிழ்வார். எந்த வகை செலவுகள் அவருக்கு தவிர்க்க இயலாததாக இருக்கும். எந்த வகை செலவுகள் ஒருவரின் மனக்கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில உதாரண ஜாதகங்களுடன் ஆராய்வதே இன்றைய பதிவு.
ஜோதிடத்தில் குரு, சுக்கிரன் ஆகியோர் பணத்தை குறிப்பிட்டாலும் குரு நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வதையும், சுக்கிரன் மகிழ்ச்சிக்காக செலவு செய்வதையும் குறிப்பவராகிறார். இவர்கள் ஒரு ஜாதகத்தில் பெறும் ஆதிபத்தியமும், அமையும் நிலையும் பண விஷயங்களில் ஜாதகரின் செயல்பாட்டை சுட்டிக்காட்டும். 2 ஆமிடம் பண வரவையும் 12 ஆமிடம் விரையத்தையும் குறிப்பிடும். 12 ன் திரிகோணமாகிய 4 ஆமிடம் செலவினால் நாம் உணரும் மன நிலையை குறிப்பிடும். லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி ஆகியோர் நல்ல நிலை பெறுவது செலவு செய்வதில் கட்டுப்பாடான நிலையில் ஒருவர் இருப்பதையும் பாதிக்கப்படின் செலவை கட்டுப்படுத்த இயலாத நிலையில் ஜாதகர் இருப்பதையும் குறிப்பிடும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் 12 ல் குருவுடன் மறைந்துவிட்டார். 12 ஆமிட குரு, 8 ஆமிட செவ்வாயுடன் பரிவர்த்தனையாகிறார். இவர் குடும்பத்தை இந்தியாவில் விட்டுவிட்டு வெளிநாட்டில் பணிபுரிகிறார். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையின் பொருட்டு பாவிகளுடன் தொடர்பாகிறார்கள். இதனால் இவர் செய்யும் செலவுகளில் மகிழ்ச்சி இருந்தாலும் நெருக்கடிகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. ஜாதகர் ராகு தசையில் சனி புக்தியில் இருக்கிறார். லக்னாதிபதி சுக்கிரன் 12 ல் மறைந்துவிட்டார். ஆனால் ராசி பரிவர்த்தனையால் வலுப் பெறுகிறது. அதனால் இந்த ஜாதகத்த்தில் லக்னத்தை விட ராசியே வலுவாக உள்ளது. அதாவது ஜாதகரின் சுய முடிவுகளே அவரது வாழ்வை நிர்ணயிக்கும். ஜாதகர் ராகு தசையில் சனி புக்தியில் உள்ளார். ராகு ராசியின் 4 ஆமதிபதி குருவின் பூரட்டாதி-3 ல் நிற்கிறார். புக்தி நாதர் சனி ராசிக்கு பாக்கியத்திலும், லக்னத்திற்கு 4 லிலும் நிற்கும் கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்கிறார். இந்த அமைப்பால் ஜாதகர் தனது வெளிநாட்டு சம்பாத்தியம் மூலம் இந்தியாவில் வீடு வாங்கி தற்போது அதற்கான தவணைகளை கட்டி வருகிறார். ஆனால் இவர் வீடு வாங்க பெற்றோர் உடன்படவில்லை. பல்வேறு காரணங்களை கூறி தடுத்தனர். ஜாதகத்தில் பெற்றோர்களைக் குறிக்கும் சூரியனும் சந்திரனும் பாதிக்கப்பட்ட அமைப்பில் இருப்பதும், சூரிய-சந்திரர்களுக்கு கடும் எதிரியான ராகு தசை நடப்பதுமே இதற்குக் காரணம். சனி புக்தியில் 12 ல் செவ்வாய் வீட்டில் மறையும் சுக்கிரன் குருவுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு செவ்வாயுடன் இணைகிறார் என்பதால் இவரது முயற்சிக்கு மனைவி உந்து சக்தியாக இருந்தார். ராகு தசையில், சனி புக்தியில், சுக்கிரன் அந்தரத்தில் இவர் செய்த செலவுகள் அணைந்தும் மனைவியின் ஆலோசனைப்படியும் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாயும் இருந்ததாக கூறுகிறார். சனி தசையில் சுய சாரம் பெற்ற சுக்கிரன் அந்தரம் முடிந்து, ராகுவுடன் சேர்க்கை பெற்ற சூரியன் அந்தரம் துவங்கியது முதல் தான் செய்யும் செலவுகள் தனக்கு மன நிறைவை தரவில்லை. செலவு செய்தும் மகிழ்ச்சியில்லை என்கிறார். வீடு காரகர் சுக்கிரன் 7 ஆமதிபதியும் பூமி காரகருமான செவ்வாயுடன் தொடர்பு பெற்றதால் வீடு வாங்கினார். மனைவி ஆலோசனையும் பயன்பட்டது. தற்போது சனி புக்தியில் ராகுவுடன் இணைந்த சூரியன் அந்தரம் செய்யும் செலவுகளில் மகிழ்ச்சியை தராமல் கசப்பை தருகிறது.
இரண்டாவதாக மற்றுமொரு ஆணின் ஜாதகம்.

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் ஆட்சி பெற்று அமைத்துள்ளனர். இதனால் இவரது வாழ்க்கை இவரது கட்டுப்பாட்டை மீறிச் செல்லாது. ஆனால் மோசமான தசா-புக்திகள் ஜாதகரை உலுக்கிவிட்டுச் செல்வது தவிர்க்க இயலாதது. சனியும் சந்திரனும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே பாவ கர்தாரி யோகத்தில் அமைந்திருப்பதை கவனிக்க. சந்திரனையும், மகிழ்ச்சி காரகர் சுக்கிரனையும் சனி பார்வை செய்கிறார் என்பதோடு, உச்சம் பெற்றாலும் சுக்கிரன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்துள்ளதை கவனிக்க. இதனால் ஜாதகரின் வாழ்வு இவரது கட்டுப்பாட்டில் இருந்தாலும் இவரது பாதிப்புகளுக்கு இவரின் தவறான முடிவுகளே காரணமாக இருக்கும் என்பது புரிகிறது. சூரியனுடன் பரிவர்த்தனையாகும் குரு வக்கிரமாகியுள்ளத்தை கவனிக்க இது பண விஷயங்களில் ஜாதகரை யாரும் கட்டுப்படுத்த இயலாது என்பதை குறிக்கிறது. ஜாதகர் சுக்கிர தசையில் விரைய ஸ்தானத்தில் (12 ல்) அமைந்துள்ள ராகு புக்தியில் இருக்கிறார். தசாநாதரான மகிழ்ச்சி காரகர் சுக்கிரன் இருப்பது கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனத்தில், புக்திநாதர் ராகு இருப்பது லக்னத்திற்கு 12 ஆமிடமான தனுசில். 12 ஆமிடம் படுக்கை, படுக்கை சுகம், தாம்பத்தியம் ஆகியவற்றை குறிக்கும். காதல் பாவமான 5 ஆமதிபதி சுக்கிரன் , காதல் காரகர் புதனை நீச பங்கப்படுத்தி 5 க்கு லாபத்தில் அமைந்து தசை நடத்துகிறார். இதனால் ஜாதகருக்கு காதல் திருமணம் நடந்துவிட்டது. அஸ்தங்கமடையாத உச்ச சுக்கிரன், தான் அமர்ந்த பாவகத்தையும் வலுப்படுதுகிறார். 3 ஆமிடம் போக ஸ்தானம். இவர் படுக்கையறை சகல வசதிகளையும் கொண்டது. நவீன குளிரூட்டிகளை (Air Condition) கொண்டது. காதல் ஓவியங்களும், நவீன மின்னணு இசைச் சாதனங்களும் (Music System) நிரம்பியதாக உள்ளது இவரது படுக்கையறை. அங்கு நீர் ராசியான மீன ராசி குறிப்பிடும் நீர்ப்படுக்கைகளை (Water Bed) அமைத்துக்கொள்வதற்கும் ஜாதக அமைப்பு உள்ளது. மீனத்தில் புதன் நீச பங்கம் என்பதை கவனிக்க. இதனால் இவரது படுக்கையறையில் புதன் குறிப்பிடும் பல்வேறுவகை நூல்களும் உண்டு. இப்படி படுக்கையறையை அமைத்துக்கொள்ள ஜாதகர் மிக மகிழ்ச்சியாக செலவிடுகிறார்.
ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் பங்கு வணிகத்தை ஆளுமை செய்யும் கிரகங்களாகும். கால புருஷனுக்கு 3 ஆவது பாவகம் மிதுனமும், லக்னத்திற்கு 3 ஆவது பாவகமும் பங்கு வணிகத்தை குறிப்பிடும். இதனால் ஜாதகர் பங்கு வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 8 ஆமிட குரு, பங்கு வணிகத்தை குறிப்பிடும் 3 ஆமிடத்தில் நிற்கும் சூரியனுடன் பரிவர்த்தனையாகியுள்ளதால் ஜாதகர் தனது அதிஷ்டத்தை பங்கு வணிகத்தில் சோதிக்கிறார். ஜாதகருக்கு குரு வக்கிரமாகியுள்ளதால் பொருளாதார அறிவு மிக அதிகம். ஆனால் அது பொருளீட்ட உதவாது. ஜாதகருக்கு நடப்பது சுக்கிர தசையில் விரைய ஸ்தானத்தில் நிற்கும் ராகு புக்தி. இதனால் ஜாதகர் பங்கு வணிகத்தில் சிறிய லாபங்களும் பெரிய நஷ்டங்களும் அடைவார். புக்திநாதரான 12 ஆமிட ராகு அதனதிபதியான வக்கிர குருவின் 5 ஆம் பார்வையை பெறுகிறார். இதனால் பங்கு வணிகத்தில் நஷ்டங்களை சந்தித்தாலும் வெறித்தனமான ஈடுபாட்டுடன் அதில் ஈடுபட்டுள்ளார். கிட்டத்தக்க மந்திரிந்துவிடப்பட மனநிலைதான். கோட்சாரத்தில் மீனத்தில் கோட்சார ராகு நிற்கிறார். இதனால் இவரது காதல் மனைவி நல்ல உத்தியோகத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் சம்பாத்தியத்தை பங்கு வணிகத்தில் இழப்பதால் கோபித்துக்கொண்டு பிரிந்து விட்டார். எனினும் சமாதானப்படுத்தி அழைத்து வந்து மனைவி சொல் பேச்சு கேட்பதாக உறுதியளித்து குடும்பம் நடத்துகிறார். ஆனாலும் ஜாதகர் மனைவிக்கு தெரியாமல் கடன் வாங்கி பங்குவணிகத்தில் ஈடுபடுகிறார். கடனும் பெருகுகிறது, இழப்பும் படுத்துகிறது. ஆனாலும் பங்கு வணிகத்தை ஜாதகரால் விட இயலவில்லை. அதில் வரும் வருமானத்தையும் தக்கவைத்துக்கொள்ள இயலாமல் தான் மனைவிக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைக்க கொடுத்துவிடுகிறார். பங்கு வணிகத்தில் இவர் மகிழ்ச்சியாக ஈடுபடுகிறார். ஆனால் அதன் வகை லாபங்களைவிட இழப்புகளே அதிகம். பங்கு வணிகத்தில் வரும் வரவையும் மகிழ்சியாக அனுபவிக்க இயலவில்லை. ஜாதகருக்கு 12 ஆமிடம் குறிக்கும் படுக்கையறையை அழகு படுத்த நிறைவாக செலவுசெய்து அனுபவிக்கிறார். ஆனால் அதே 12 ஆமிட தொடர்பு பங்கு வணிகத்தில் வீண் செலவாகி மனதை கசக்கிப் பிழிகிறது. மனோ காரகர் சந்திரன் சனியின் நேர் பார்வையை பெறுவதும் புத்தி காரகர் புதன் பலவீனமாகி சூரியன், சனி போன்ற பாவிகளின் தொடர்பை பெறுவதும் செய்யும் செலவில் ஜாதகருக்கு புத்தி பேதலிப்பை ஏற்படுத்துகிறது. இது போன்று அளவுக்கு மீறி குடும்பத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் உளவியல் ஆலோசனைகளும் தேவை. மனக்கட்டுப்பாடும் தேவை.
பணத்தை செலவு செய்வதிலும் அது மகிழ்ச்சிக்காகவே இருந்தாலும் அதன் விளைவை தெரிந்து செலவு செய்வது நல்லது.
மீண்டும் மற்றுமொரு பதவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501