பொதுவாக ஜோதிடத்தில் குரு ஒரு சுபக் கிரகம். பரம சுபர் என்றும் அவரைக் கூறலாம். ராகு-கேதுக்கள் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பை தரும் கிரகங்கள் என்று கூறலாம். சுபர்களுக்கும் பாவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதன் சுபாவ இயல்புதான். மற்றபடி அவை வழங்கும் பலன்களில் அவை நல்லவையாக இருப்பினும் தீயவையாக இருப்பினும் மாறுதலை தராது. மருத்துவ ஜோதிடத்தைப் பொருத்தவரை ராகு-கேதுக்களே மிக உன்னத கிரகங்கள் எனப் போற்றப்படுகின்றன. மருத்துவ ஜோதிடத்தில் இருப்பதிலேயே மிக மோசமான கிரகமாக குரு அழைக்கப்படுகிறார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நோயைப் பொருத்தவரை குரு பார்க்கும் இடத்தில் வியாதி வளரும் என்பதுதான் அதற்கு காரணம். குரு ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அதாவது லக்னத்தில் திக்பலத்தில், 5 மற்றும் 9 ஆவது பாவகத்தில் அமையப் பெற்றவர்கள் பொதுவாகவே ஆரோக்கியமாகத் திகழ்வதை காண இயலும். காரணம் வியாதி பாவகமான 6 ன் விரைய பாவகம் 5 ஆமிடத்தோடு குரு தொடர்பானால் ஆரோக்கியம் விருத்தியடையும். 9 ஆமிடம் என்பது மருத்துவம் சிறப்பாக பலனளிக்கும் பாவகமாகும். வியாதியால் ஒருவர் சிரமப்பட்டாலும் 9 ல் குரு அமையப் பெற்றவர்கள் நல்ல மருத்துவ உதவியுடன் தங்களது ஆரோக்கிய பாதிப்பில் இருந்து மீண்டுவிடுகிறார்கள். குரு கால புருஷனுக்கு 9 ஆமதிபதி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. நமது உடலில் எலும்பில்லா உறுப்புகளின் காரக கிரகமாக அமைபவர் குரு பகவான். கல்லீரல், மண்ணீரல், கொழுப்பு, மூளை என்று பல உறுப்புகளின் மீது குரு ஆதிக்கம் செலுத்துகிறார். குரு அனைத்து உயிரினங்களின் உள்ளுணர்வையும் ஆளுகிறார்.

ஒரு தகாத செயலின் மீது ஒருவருக்கு நாட்டம் ஏற்படுகிறது எனில் அதை குரு உள்ளுணர்வு மூலம் எச்சரிக்கிறார். உள்ளுணர்வை புறந்தள்ளிவிட்டு அச்செயலில் ஈடுபடும்போது செயலின் பின்விளைவால் அவர் பாதிக்கபடுகிறார் என்றால் அவரது ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டிருப்பார். நல்ல சிந்தனை, செயல், நேர்மையான பொருளாதாரம், குடும்ப வளமை, குழந்தை இவைகளின் மீது ஒருவருக்கு இயல்பாக நாட்டம் உள்ளதெனில் அவருக்கு குரு கடாட்சம் உண்டு எனலாம். தினசரி பழகும் வட்டத்தில் ஒரு தவழும் குழந்தையே ஜாதகரை வெறுக்கிறது எனில் ஜாதகரின் அரவணைப்பை ஏற்க மறுக்கிறது எனில் அவருக்கு குரு தோஷம் நிச்சயம் இருக்கும். ஒரு மோசமான கோட்சாரத்தை, தசையை கடந்த பிறகும் ஒருவருக்கு வீட்டில் பொருளாதாரப் பாதிப்பு எப்போதும் இருந்துகொண்டே உள்ளது எனில் அவருக்கு குரு ஜாதகத்தில் பாதிக்கப்பட நிலையில் இருப்பார். ஒரு மோசமான தசையிலும் குரு புக்தி ஒருவருக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பலனளிக்கிறது என்றால் அவரது மோசமான நிலைக்கு காரணம் அவரது கர்ம வினை என்றால் அதிலிருந்து ஜாதகரை காப்பாற்றுவது குரு என்று கூறலாம். இப்பதிவில் உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலை ஆளும் குரு மருத்துவ ஜோதிடத்தில் எப்படி செயல்படுகிறார் என்று காண்போம்.

லக்னமும் ஆரோக்கியமும்.
ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, ஐந்தாம் பாவகம், ஐந்தாமதிபதி, 9 ஆம் பாவகம், ஒன்பதாமதிபதி மற்றும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் சிறப்பாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல உடல் வலுவும் ஆரோக்கியமும் ஏற்படும். மாறுபட்டு அமைந்தால் ஆரோக்யத்தில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் ஒரு ஜாதகத்தில் சிறப்பாக அமைந்த பாவகங்களும், ராசிகளும், கிரகங்களும் ஜாதகரின் ஆரோக்கியத்தில் சிறப்பைத் தரும். மாறுபட்டு அமையும் பாவகங்களும், ராசிகளும், கிரகங்களும் ஜாதகருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பை வழங்கும்.
மேலே நீங்கள் காண்பது கடக லக்னத்தில் பிறந்த ஒரு இளைஞனின் ஜாதகம். லக்ன புள்ளி புதன் சாரம் ஆயில்யத்தில் அமைந்து, கால புருஷ ரோகாதிபதி புதன் லக்னத்திற்கு 6 ல் அமைகிறார். இதனால் இவருக்கு வியாதியால் சிரமப்படும் அமைப்பு உள்ளது. லக்னாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் ஜாதகரின் உடல் பலகீனமடையும், உடலின் தாங்கு திறன் குறையும், ஆரோக்கிய குறைவால் ஜாதகர் அதிகம் சிரமப்படுவார். லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் சந்திரன்-ராகு சேர்க்கை உள்ளதால் கண் பார்வையாலும், சந்திரன் பாதிக்கப்படுவதால் உணவு ஜீரணமடைவதில் ஏற்படும் பாதிப்புகளாலும், சந்திரன்-ராகு சேர்க்கையால் ஜாதகரின் மனநல நிலையும், கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும் 5 ஆமிடமான சிம்ம ராசியில் சந்திரன்-ராகு சேர்க்கை ஏற்படுவதால் ஜாதனுக்கு வயிற்றிலும் ஆரோக்கிய பாதிப்பு வெளிப்படும்.
வியாதியும் குறைபாடும்.
ஜோதிடத்தில் தீர்க்கக்கூடிய வியாதிகளை ஆரோக்கிய பாதிப்புகள் எனவும், தீர்க்க இயலா வியாதிகளை குறைபாடுகள் எனவும் அழைக்கலாம். குரு இந்த ஜாதகத்தில் கேதுவுடன் இணைந்து பாதிக்கப்பட்டு, தீர்க்க இயலா குறைபாட்டைக் குறிக்கும் லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளதால் இவருக்கு குருவின் காரக வியாதி வந்தால் அது தீர்க்க இயலாததாக இருக்கும்.
வியாதியை வழங்கும் கிரகங்கள்.
ஒரு ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரகமும் குறைந்த பாகை பெற்ற கிரகமுமே பாகை முறை மருத்துவ ஜோதிட விதிப்படி ஜாதகருக்கு வியாதியை வழங்கும் கிரகங்களாகும். இந்த ஜாதகத்தில் குரு இதர கிரகங்களைவிட குறைந்த பாகை 1.48 பெற்று செவ்வாயின் அவிட்டம்-3 ல் அமைந்துள்ளார். அதிக பாகை பெற்ற கிரகமாக செவ்வாய் 29.14 பாகையில் சுய சாரம் அவிட்டம்-2 ல் நிற்கிறார். இதனால் இவ்விரு கிரகங்கள் தொடர்புடைய வியாதிகளே ஜாதகருக்கு வரும். மரபு வழி கர்மாவை தெரிவிக்கும் செவ்வாய் சுய சாரத்தில் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் இவருக்கு வரும் வியாதி ஜாதகரின் பரம்பரை வகையில் மரபணு குறைபாடால் ஏற்படும் வியாதியாகும்.
என்ன வியாதி?
கால புருஷ 5 ஆம் பாவகம் சிம்மமும், லக்னத்திற்கு 5 ஆம் பாவகமும் கல்லீரலின் காரக பாவகமாகும். கன்னி ராசி கல்லீரலின் காரக ராசியாகும். குரு கல்லீரலின் காரக கிரகமாகும். இந்த ஜாதகத்தில் லக்ன புள்ளிநாதரும் கன்னி ராசியதிபதியுமான புதன், குரு வீட்டில் லக்னத்திற்கு 6 ல் கேது சாரத்தில் நிற்பதால் இவருக்கு கல்லீரல் இயக்கத்தில் பாதிப்பு தடை ஏற்பட்டது. கல்லீரலின் காரக பாவகமான 5 ன் அமதிபதி செவ்வாய் இந்த ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது வியாதி?
இந்த ஜாதகருக்கு கால புருஷனுக்கு 5 ஆம் ஆமதிபதி சூரியனில் உத்திராடத்தில், சூரியனில் அஸ்தங்கமாகி நிற்கும் பாதகாதிபதி சுக்கிரனின் தசையில், சரியாக குரு புத்தி துவங்கியவுடன் ஜாதகனின் 5 ஆவது வயதில் கல்லீரலில் பாதிப்பு வந்தது. 25 வயதான ஜாதகனுக்கு தற்போதும் சிகிச்சை தொடர்கிறது. கல்லீரலின் ராசியாதிபதி புதன் கல்லீரல் இயக்கத்தை தடை செய்யும் கேதுவின் சாரம் மூலத்தில் லக்னத்திற்கு 6 ல் நிற்பதும், கல்லீரலின் காரக கிரகம் குரு குறைந்த பாகை பெற்று லக்னத்திற்கு 8 ல் குருவின் இயக்கத்தை தடை செய்யும் கேதுவோடு இணைந்ததும் தொடர்புடைய தசா-புக்தியில் இந்த ஜாதகனுக்கு கல்லீரல் இயக்கத்தில் தடையும், பாதிப்பும் ஏற்பட்டு அது குறைபாடாக மாறியுள்ளது.
தீர்வு உண்டா?
6 ஆமிடம் வியாதியை குறிப்பிட்டால் 5 ஆமிடம் வியாதியின் நிவர்த்தியை குறிப்பிடும். 5 ஆமதிபதியும் லக்ன யோகாதிபதிமான செவ்வாய் இந்த ஜாதகத்தில் உச்சம் பெற்று நிவர்த்தி ஸ்தானம் எனப்படும் 7 ஆமிடத்தில் அஸ்தங்கமடையாமல் சிறப்பாக அமைந்துள்ளார். பாதகாதிபதி பாதிப்பை தந்தாலும் அஸ்தங்கமடைந்தது ஒரு வகையில் நன்மையே. வியாதியை குணப்படுத்தும் 5 ன் பாவத் பாவகமாக 9 ஆமிடம் அமைகிறது. இந்த ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சனியுடன் பரிவர்தனையாகும் குரு 9 ல் பரிவர்த்தனைக்குப் பிறகு ஆட்சி பெற்று லக்னத்தையும், 3, 5 ஆகிய பாவகங்களையும் முறையே தனது பார்வையால் சுபப்படுதுகிறார். இதனால் சனியுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு குரு 9 க்கு இடம் பெயர்வதாலும் ராகு-கேதுக்களுடன் குரு தொடர்பாவதாலும் ஒருவேளை பாதிக்கப்படும் உறுப்பை மாற்றினால் ஜாதகருக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். கூடவே தெய்வ அனுக்கிரகத்தையும் ஜாதகர் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501