உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

அன்பர் ஒருவர் நன்கு படித்த தனது மனைவிக்கு சரியான வேலை அமையவில்லை. இதனால் அவர் கற்ற கல்வி வீணாகிக்கொண்டிருக்கிறது என்ற புலம்பலுடன் மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்யக் கூறினார். மெத்தப் படித்த மேதாவி என்று தனது மனைவியை திருமணம் செய்திருந்தவர் அவர். படித்த மனைவியும் வேலைக்கு சென்றால் வாழ்க்கை வசதிகளை எளிதில் அடைய இயலும் என்பது இன்றைய உலகின் எதிர்பார்ப்பு. மேலும் வீட்டிலேயே ஆண்களை சார்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த பெண்ணினம் தற்போது சொந்தக்காலில் ஆணை மட்டும் சாராமல் ஆணுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் கோலோச்சுகிறது. ஆனால் தனது மனைவிக்கு மட்டும் ஏன் வேலையே அமையவில்லை என்று அன்பர் வருத்தப்பட்டார். இதில் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் ஏற்கனவே கணவரைவிட  நிரம்பப் படித்த மனைவிக்கு வேலை கிடைக்காதலால் பொழுதை வீணாக்காமல் மேலும் தனது கல்வியை தொடர்ந்துகொண்டுள்ளார்.

 

ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவகமும் தனிச்சிறப்பானவை. அனைத்து பாவகங்களும் ஒன்றை ஒன்று எதோ ஒரு விதத்தில் சார்ந்திருந்தாலும் ஒன்றை ஒன்று பாதிக்கும் அம்சங்களும் பாவகங்களுக்கு உண்டு. பொதுவாக ஒரு பாவகத்திற்கு கேந்திர பாவகங்கள் பொருள் காரக அடிப்படையிலும், திரிகோண பாவகங்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் அடிப்படையிலும் இணைந்து செயல்படும். மாறாக ஒரு பாவகத்திற்கு 6, 8, 12 பாவகங்கள் அபூர்வமான சில விஷயங்களைத் தவிர பெரும்பாலும் பாதிப்பையே ஏற்படுத்தும். ஒரு பாவகத்தின் எண்ணங்களையும், செயல்களையும் அவை தொடர்புடைய தசா-புக்திகள் தெளிவாக வெளிப்படுத்தும். லக்ன ரீதியான பாவகங்கள், பாவாதிபதிகளுடன் கால புருஷ தத்துவ அடிப்படையிலான பாவகங்களும், பாவாதிபதிகளும் இணைந்தே  செயல்படும் என்பதை நினைவில் கொள்க.

 

முதல் பத்திக்கும் இரண்டாவது பத்திக்கும் என்ன தொடர்பு?. முதல் பத்திக்கான கேள்விக்கு இரண்டாவது பத்தியின் ஜோதிட அடிப்படைதான் பதிலை தரவுள்ளது. அது எப்படி? என்பதே இன்றைய பதிவு.

 

கீழே மேற்குறிப்பிட்ட பெண்ணின் ஜாதகம்.

 

 

 

துலாம் லக்ன ஜாதகம். லக்னாதிபதி சுக்கிரன் 8 ல் ஆட்சி பெற்றுள்ளதால் அதை மறைவு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 8 ஆமதிபதி சுக்கிரன் 12 ஆமதிபதி புதனுடன் 8 ல் மறைவது ஒரு வகையில் விபரீத ராஜ யோகமாகும். ஆனால் உயர்கல்வியை குறிப்பிடும் பாக்யாதிபதி புதன், 9 க்கு 12 ல் மறைவது ஆராய்சிக் கல்வியை தொடர்வதை குறிப்பிட்டாலும் கற்ற உயர் கல்வியை பயன்படுத்த இயலாத நிலையையும் குறிப்பிடும். இந்த அமைப்புதான் ஜாதகிக்கு வேலை கிடைக்காமைக்கும் காரணம். எப்படி எனில் இவர்கள் இருவரின் பார்வையும் தன ஸ்தானம் விருட்சிகத்தின் மீது விழுவதால் போதுமான பண வருவாய் குடும்பத்திற்கு கிடைப்பதால் இவர்கள் வேலைக்கு சென்றுதான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை மீறி இவர்கள் வேலைக்கு செல்வதென்றால் இவர்கள் கற்ற கல்வி பயனற்றுப் போகக்கூடாது என்ற எண்ணமும், மிகச் சிறந்த பொருளாதாரத்தை தரக்கூடிய வேலையும் கிடைத்தால் மட்டுமே ஜாதகி வேலைக்கு செல்வார். ஏனெனில் ஏற்கனவே வசதியான ஜாதகிக்கு எளிய வேலை என்பது அனாவசியம்.

 

லக்னாதிபதி சுக்கிரன் நண்பரும், வித்யா காரகரும் , உயர்கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதியுமான புதனுடன் இணைந்திருப்பதால் ஜாதகிக்கு   கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையும் ஏற்படும். ராசிச் சக்கரம் பொதுவானது என்றால் ஒருவரின் உள்ளார்ந்த மனநிலையை நவாம்சம் தெளிவாக உணர்த்திவிடும். நவாம்சத்தில் கும்ப லக்னத்தை 7 ஆமிட புதன் பார்ப்பதால் ஜாதகிக்கு படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது என்பது புரிகிறது. 7 ஆமதிபதி சூரியன் லாப ஸ்தானமான தனுசில் இருப்பதை காண்க. நல்ல மதிப்பும், சம்பாத்தியமுள்ள அரசுத்துறை வேலையிலிருக்கும் கணவரால் குடும்பத்திற்கு லாபகரமான பணவரவு வந்துகொண்டுள்ளது.

 

உயர் கல்விக்கான சதுர் விம்சாம்சத்தில் கடக லக்னாதிபதி சந்திரன் கன்னியில்   வித்யா ஸ்தானாதிபதி (4 ஆமதிபதி) சுக்கிரனுடன் இணைந்து அமைந்துள்ளார். புதனின் உச்ச வீட்டில் லக்னாதிபதி அமைந்துள்ளதால் ஜாதகிக்கு இயல்பிலேயே  நல்ல கல்வி நாட்டமிருக்கும். லக்னத்தில் எட்டாமதிபதி சனி வக்கிரம் பெற்று ராகு-கேதுக்களுடன் அமைந்தது சிறப்பு. ஆராய்ச்சி அறிவை குறிப்பிடும் சனி வக்கிரம் பெற்று ராகு-கேதுக்களுடன் இணைவதால் ஜாதகிக்கு ஆராய்ச்சி மனோபாவம் அதிகம் உண்டு. ராகு-கேதுக்கள் வக்கிர கிரகங்களுக்கு நன்மை செய்வர் என்பதை அறிக. லக்னத்தை சூரியன் பார்ப்பதால் கல்வி தனக்கு கௌரவத்தை தர வேண்டும் என்பதற்காகவே படித்துக்கொண்டிருப்பார். உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதி குரு, வித்யா காரகர் புதனுடன் ஆராய்ச்சி பாவகமான 8 ஆமிடத்தில் அமைந்ததால் ஜாதகி நுட்பமான, ஆய்வு ரீதியான கல்விகளை கற்றுக்கொண்டே இருப்பார். லக்னத்தை செவ்வாய் பார்ப்பதால் ஜாதகி கல்வியை தொடர்வதை கணவரும் ஊக்குவிப்பார். மேலும் ஜாதகிக்கு தொடர்ந்து கல்வி கற்பதில் செவ்வாய் குறிக்கும் தீவிர மனப்பான்மையும் இருக்கும். தற்போது புதனுடன் இணைந்த குரு தசையை கடந்துகொண்டிருக்கும் ஜாதகி M.COM, CA, MBA, B.Ed ஆகிய பட்டங்களை முடித்து வேறு என்ன படிக்கலாம்? என்ற யோசனையில் உள்ளார். ராசிச் சக்கரத்திலேயே எட்டாமிடம் சிறப்பாக அமைந்த நிலையில், சதுர்விம்சாம்சத்திலும்  8 ஆமிட தொடர்பு வலுவாக அமைந்து அதிலுள்ள குரு தசையும் நடப்பதால் ஜாதகி நிச்சயம் PhD படிப்பார். 

 

ஜாதகிக்கு சம்பாத்திய ரீதியான அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை அதற்கான வர்க்கச் சக்கரம் தசாம்சம் மூலம் ஆராய்வோம்.

 

 

 

கும்ப லக்னத்தில் ராகுவுடன் 4, 9 அதிபதி சுக்கிரன் அமைந்துள்ளார். லக்னாதிபதி சனி 8 மறைவது அத்தனை சிறப்பல்ல. சனி 8 ல் அமைவது அவமானங்களை சகித்துக்கொண்டு பணிபுரிய வைக்கும் அமைப்பாகும். ஆனால் சனி இங்கு வக்கிரமாகிவிட்டதால் சகிப்புத் தன்மை இருக்காது. நேர்கதி புதன் உச்சமாகி சனி வக்கிரமானதால் இருவருக்கும் ஒருங்கிணைவு இருக்காது. அதாவது உச்ச புதன் கொடுக்கும் கல்வியறிவை சனி வக்கிரமானது நிராகரிக்கும். சனி வக்கிரம் என்பது வேலையில் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட மன நிலையில் ஜாதகி இருப்பதை குறிப்பிடுகிறது. கௌரவ காரகர் சூரியன் லக்னத்தை  கேதுவுடன் இனைந்து பார்ப்பதால்  வேலையிடத்தில் தனது கெளரவத்தை முன்னிட்ட பயம் ஜாதகிக்கு இருந்துகொண்டே இருக்கும். இதுவே ஜாதகி வேலைக்கு செல்வதை பாதிக்கும் அமைப்பாகும். வேலை, சம்பாத்தியம் ஆகியவற்றை 2, 6, 1௦ ஆகிய பாவகங்களே குறிக்கின்றன. இவற்றின் விரைய பாவகங்கள் என்பது 1, 5, 9 ஆகும்.

 

மேற்கண்ட ஜாதகத்தில் 2 ஆமதிபதி குரு நீசம். 6 ஆமபதி சந்தரன் 6 க்கு விரையமான 5 ஆமிடம் மிதுனத்தில் 1௦ ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்துள்ளார். 1௦ ஆமதிபதி செவ்வாய் 1௦ க்கு 8 ல், 6 க்கு 12ல் மறைவு. லக்னத்திற்கேனும் 2, 6, 1௦ ஆமதிபதிகள் தொடர்பு அல்லது ஜீவன காரகர் சனி, கால புருஷ 6 ஆமதிபதி புதன் தொடர்பு இருந்தாலும் வேலை, சம்பாத்தியம் ஒரு வகையில் ஏற்படும். ஆனால் இங்கு இவர்கள் தொடர்பு இல்லாதது மட்டுமின்றி 1௦ ன் விரையாதிபதி சுக்கிரன் அமைந்துள்ளதும் சம்பாத்திய மறுப்பைத்தான் காட்டுகிறது. இவற்றையும் மீறி தசா-புக்தி நாதர்கள் நிலையை கவனித்தால் ஜாதகி குரு தசையின் இறுதியில் இருக்கிறார். சம்பாத்தியத்தை வரையறுக்கும் தசாம்சத்தில்  தன வரவை குறிப்பிடும் குரு 12 ல் மறைந்துடன் நீசமாகவும் அமைந்தது இவர் கற்ற கல்வியை பலனற்றுப் போகச் செய்துள்ளது புரிகிறது. ராசிச் சக்கரத்திலும் சம்பாத்திய பாவகமான 1௦ ன் விரைய பாவகம் 9 ஆமிடத்தில்தான் அதிக கிரகங்கள்  அமைந்துள்ளனர். அதிக கிரகங்கள் அமைந்த பாவகங்கள்தான் ஜாதகரை வழிநடத்தும் என்றபடி 9 ஆமிடம் வலுப்பெற்றதால் 1௦ ஆமிடம் பாதிக்கப்படுகிறது.

 

மேற்கண்ட அமைப்புகளை கூறி மெத்தப்படித்து வசதியான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜாதகத்தை ஆராயும்படி கொடுத்த அன்பரின் மனைவி ஏன் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை குறிப்பிட்டவுடன் “அழகை மட்டும் பார்க்காமல் மனைவி குடும்பத்திற்கு சம்பாதித்துத் தரும் அமைப்பு உள்ளதா? என்பதையும்  பொருத்தம் பார்த்த ஜோதிடரிடம் கேட்டிருக்க வேண்டும்” என்று புலம்பினார் அன்பர். It is too late.

 

விரைவில் மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

 

Leave A Comment

WhatsApp