ஜோதிடராக இருப்பதன் நன்மை என்னவென்றால் நமது நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணம் என்னவென்று அறிந்துகொள்வது. இதனால்தான் இது நடக்கிறது என்று ஜோதிடத்தை முற்றிலுமாக கற்று உணர்ந்த ஒரு ஜோதிடர் தெளிந்த நீரோடை போன்ற சலனமற்ற மனதைக்கொண்டிருப்பார். அவருக்கு உலகின் ஆர்பாட்டங்களும் சிரமங்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. அது ஒரு ஞானியின் நிலை. அனைவருக்கும் இது சித்திக்காது. உலகிலேயே எளிதான வேலை அடுத்தவருக்கு ஆலோசனை சொல்லும் ஜோதிடராக இருப்பதுதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் ஜோதிடராக இருப்பதனாலும் சில சிரமங்கள் உண்டு. ஜோதிடரிடம் வந்தவர் ஒரு எதிர்பார்ப்பைக்கொண்டிருப்பார். சில சமயங்களில் ஜோதிடம் எதிர்பார்ப்பிற்கு மாறான தகவல்களைக் கூறும். வேறு சமயம் எதிர்பார்ப்பு எத்தகைய தடை வந்தாலும் நிறைவேறும் என்று காட்டும். இதனால் ஜோதிடரிடம் ஆலோசனை பெற வரும் அனைவரும் மகிழ்வான பதிலை பெற்றுச் செல்வர் என்று கூற இயலாது. அதனால் சாதகமற்ற பலன்களை வந்தவரின் மனதை காயப்படுத்தாமல் கூற வேண்டும். ஜோதிடரின் ஒரு சொல்லால் உத்வேகம் பெற்று செயலில் தீவிரமாக இறங்கி வெற்றி பெறுவோரும் உண்டு. மோசமான ஜோதிடரின் கடுமையான வார்த்தைகளால் சோர்ந்து முயற்சியையே கைவிடுவோரும் உண்டு. ஒரு விஷயத்திற்கான ஜாதக சூழ்நிலைகள் சாதகமாக இல்லையேல் அது சாதகமாக வரும் வரை முயற்சியை கைவிடாது அதை நோக்கிச் செல்வோர் ஒரு காலத்தில் அந்த விஷயத்தில் சாதித்துவிடுவர். உதராணமாக கூற வேண்டுமெனில் அரசு வேலையை எடுத்துக்கொள்வோம். ஜாதகத்தில் அரசு வேலைக்கு சாதகமற்ற நிலை இல்லை என்பதால் அதை விடுத்து வேறு வேலைக்கு முயலுங்கள் என்று கூறிய சிலர் பல காலங்கள் கடந்து அரசு வேலையில் இருக்கின்றனர். அது ஒருவரின் கடின முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதையே வள்ளுவர்
“தெய்வத்தான் ஆதா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார்.
அப்படியானால் ஜோதிடத்திற்கு இங்கே என்ன வேலை? என்றால், அப்படி அரசு வேலையை பெற்ற ஒரு சிலர் அரசு வேலை கிடைத்த பிறகு திருமணம் என்ற முடிவை எடுத்து, அது நாற்பது வயதை கடந்த பிறகு கிடைத்து, திருமண வயதை கடந்துவிட்டதால் திருமணமின்றி இருக்கின்றனர். ஜோதிடர் அரசு வேலை ஒருவரின் வாழ்க்கையில் கடும் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் கூறியது பலித்துவிட்டது புரிந்து தற்போது வருந்துவோரும் உண்டு.
இந்நிலையில் கவனச் சிதறலால் கல்வி பாதிக்கப்பட்ட ஒரு 11 ஆம் வகுப்பு மாணவனுக்குப் பார்க்கப்பட்ட பிரசன்னம் மாணவனின் கவனச் சிதறலுக்காண காரணத்தை காட்டியபோது தனது மகனுக்காக பிரசன்னம் பார்க்க வந்த தாயார் திகைத்துவிட்டார். கீழே நீங்கள் காண்பது மாணவனுக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே.

உதயமும் ஆரூடமும் கும்பத்தில் அமைந்துள்ளது. உதயம் நின்ற நட்சத்திராதிபதி குரு 5 ஆமிடமான மிதுனத்தில் கவிப்புடன் இணைந்து நிற்கிறார். பள்ளிக் கல்வியை குறிக்கும் மிதுன ராசியாதிபதி புதன் உயர் கல்வியை குறிப்பிடும் தனுசு ராசியாதிபதி குருவுடன் பரிவர்த்தனையாகியுள்ளார். இது கல்வி தொடர்பான கேள்வி என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தில் அமைந்த ராகு கேள்வியாளன் 11 ஆம் வகுப்பில் கணினியியல் படிப்பதை குறிப்பிடுகிறார்.

உதயமும், ஆரூடமும் குருவின் பூரட்டாதியில் அமைந்துள்ளன. உதயாதிபதி சனி உள்வட்டத்தில் அதே குருவின் பூரட்டதியிலேயே மீனத்தில் நிற்க, வெளிவட்டத்தில் சனி கடகத்தில் குருவின் புனர்பூசத்தில் நிற்கிறார். உதயத்தை 5 ஆமிட குரு பார்க்கிறார். இதனால் கேள்வியாளன் படிக்க வீட்டில் நல்ல தன வசதி உள்ளது புரிகிறது. காதலை குறிப்பிடும் 5 ஆமிடத்தில் கவிப்பு குரு மற்றும் மனோ காரகர் சந்திரன் இணைந்து நின்று 11 ஆமிட குரு , புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரின் பார்வையை பெறுகிறது. இதில் மனோ காரகர் சந்திரனுடன் களத்திர காரக கிரகங்கள் சுக்கிரன்-செவ்வாய், 7 ஆமதிபதி சூரியன், குடும்ப காரகர் குரு, காதல் காரகர் புதன் ஆகியோர் தொடர்பாகிறார்கள். உதயாதிபதி உள்வட்டதிலும், வெளிவட்டதிலும் 5,11 ஆமிட குருவுடன் தொடர்பாவதால் கேள்வியாளன் மனதில் கல்வியைவிட காதலே மேலோங்கி நிற்பது புரிகிறது. 2 ஆமிடமான மீனத்தில் உள் வட்ட உதயாதிபதி சனியுடன் 7 ஆமதிபதியும், கனவின் காரக கிரகமுமான சூரியன் இணைந்து கன்னிச் சுக்கிரனால் பார்க்கப்படுகிறார். உதயம், ஆரூடம், கவிப்புடன் தொடர்பாகும் பரிவர்த்தனைகள் மட்டுமே பிரசன்னத்தில் முக்கியமாக செயல்படும் என்பதால் இங்கு சுக்கிரன்-புதன் பரிவர்த்தனை செயல்படாது.
உச்ச நீச கிரகங்கள் பிரசன்னத்தின் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும். இதன்படி கனவு பாவகமான 12 ஆமிடம் மகரத்தில் 7 ஆமிடாதிபதி சூரியனின் சாரத்தில் உச்ச செவ்வாய் நின்று வெளிவட்ட சனியை பார்க்கிறார். 7 ஆமாதிபதியும், கால புருஷ 7 ஆமதிபதி சுக்கிரனும் காமத்தை குறிப்பிடுபவை. இதனால் கேள்வியாளன் கனவில் விடலைப் பருவதிற்கே உரிய காதலும் காமமும் நிறைந்து கேள்வியாளனின் கல்வியில் கவனச் சிதறல்களை ஏற்படுத்துகிறது. 5 ஆமிட குரு 11 ஆமிட புதனுடன் பரிவர்த்தனையாவது. இது கேள்வியாளனின் கவனம் கல்வியிலிருந்து காதலுக்கு இடம் பெயர்வதை குறிப்பிடுகிறது. இதுவே மாணவனின் கவனச் சிதறல்களுக்கு காரணம்.
பிரசன்னம் காட்டிய மேற்கண்ட தகவல்களை மகனுக்காக பிரசன்னம் கேட்ட தாயிடம் கூறினேன். கல்வியை கேட்கப் போய் மகனது காதல் வெளிப்பட்டதால் “கிணறு வெட்ட பூதம் வந்தது போல” தாயார் அதிர்ச்சியடைந்தார். பலன்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். “இந்த ஜோசியர்களே இப்படித்தான். ஏன்தான் எங்களை எல்லாம் பயமுறுத்துகிறீர்களோ?. 16 வயதில் காதல் என்றால் என்னேவென்றே புரியாத வயதிலிருக்கும் என் பையன் இப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை” என்று கூறி சண்டையிட்டார். இந்தப் பருவத்தில் இவை சகஜம். கண்டிக்காமல் மகனை நட்போடு அணுகுங்கள் என்று சமாதானம் கூறினேன். அவர் அதை ஏற்கவில்லை. ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் மகனின் அலை பேசியை ஆராய்ந்து மகனது காதலை கண்டுபிடித்துவிட்டார். பிறகு என்னை தொடர்புகொண்டு மன்னிப்புக் கோரினார். கட்டளைக்குக் கட்டுப்படுவதா காதல்?
இப்பருவத்தில் துளிர்க்கும் ஆசையை அடைய தேவையான தகுதியை வளர்த்துக்கொள்ள அறிவுரை சொல்ல வேண்டுமே அன்றி குரூரமாக அணுகினால் அது விடலைகளின் மனச் சிதைவுக்கு வழி வகுக்கும். தேவைப்படின் ஒரு மன நல ஆலோசகரை அணுகுங்கள் என்றேன். தாயும் தந்தையும் மகனுடன் இணைந்து எண்பதுகளில் வெளிவந்த “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்தை பாருங்கள் என்றேன்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501
