உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

தனது மகனுக்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஒறு தாய் வந்தார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார். இதற்கு முன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் மகனைப் பற்றி கூறியவை சரியாக இல்லை. உண்மையில் அவர்கள் கூறியதற்கு நேர் மாறாகவே நடந்துள்ளது. நீங்கள் சரியான வழி காட்டுவீர்கள் என்று தோழி கூறியதால் உங்களைக் காண வந்துள்ளேன் என்றார். மகனது ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். ஜாதகப்படி கோட்சாரமும் தசா-புக்திகளும் நன்றாகவே இருந்தன. ஆனால் 3௦ வயதை கடந்த மகனின் நிலையால் கௌரவமான அரசு வேலையில் இருக்கும் நானும் கணவரும் நிலை குலைந்து போயுள்ளோம் என்றவர் மகனது வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என்றார். வேறு விபரங்களை கூறவில்லை. ஜாதகனின் தந்தையும் தாயும் அரசுப்பணியில் உள்ளனர் என்று கூறியதுதான் திருப்பமாகப் பட்டது. தந்தையும் தாயும் அரசு வேலையில் இருக்க வாய்ப்பில்லை என்பதை மகனது ஜாதகம் காட்டியது. இதனால் ஜனன விபரங்களை உறுதி செய்ய  சில விளக்கங்களை கேட்டபோது தாயார் கூறியது. மகன் பிறந்தபோது ஜனன விபரங்களை குறித்து வைக்க மறந்துவிட்டோம். மகன் பிறந்து சில காலங்கள் கழித்து ஜாதகம் எழுதாததை உணர்ந்து உத்தேசமாக நினைவுக்கு வந்த விபரங்களை வைத்து ஜாதகம் எழுதினோம் என்றார்.  ஏன் இதற்கு முன் பார்த்த ஜோதிடர்கள் கூறியவை அனைத்தும் தவறு என்றதற்கான காரணம் புரிந்தது. இதனால் உத்தேச விபரங்களை வைத்து பலன் கூறுவது வீண் என்ற நிலையில் கையில் வைத்திருந்த டாரட் அட்டையிலிருந்து ஒரு அட்டையை உருவி எடுத்தேன். மகனது ஜாதகத்தை நான் கையில் வாங்கிய நேரத்திற்கான பிரசன்ன ஜாதகத்தை கணினியில் சேமித்திருந்தேன். இவற்றை வைத்துத்தான் பலன் கூற வேண்டும்.  வந்த பெண்மணி எப்படியாவது என் மகனது வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் என்றார்.

 

கீழே மகனுக்காக எடுக்கப்பட்ட டாரட் அட்டை.

 

                                                           

மேற்கண்ட படத்தில் ஒரு நபர் மேல் நோக்கிய பார்வையில் உள்ளார். அது கவலைகளற்றவர் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் ஒரு பூ மனதில் மகிழ்ச்சியான நிலை. வலது கையில் உள்ள தடியின் ஒரு முனையில் கட்டப்பட்டுள்ள மூட்டை அவருக்கு தேவையான பணம் உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. தலையில் அணிந்த தொப்பியில் இறகு உள்ளது அவர் வசதியான பின்னணியில் இருந்து வந்தவர் என்பதை குறிப்பிடுகிறது. மகிழ்வானவர் என்பதுடன் பொறுப்பற்றவர் என்பதை இவரது தோற்றம் குறிக்கிறது. நேர்த்தியான ஆடை பணக்கார குடும்பத்தவர் என்பதை குறிப்பிடுகிறது. பின்னணியில் உள்ள மஞ்சள் வர்ணம் இவ்விளைஞன்  அனுபவிக்கும் நல்ல வாழ்க்கைச் சூழ்நிலையை குறிக்கிறது. ஆடையில் உள்ள அடர் கருமை, பச்சை, சிவப்பும் தொப்பியிலுள்ள  சிவப்பு வர்ணமும் இளைஞனின் அதிகாரத்தை குறிக்கிறது. இளைஞன் தனியான நடந்து செல்கிறான். உடன் ஒரு நாய் இவரை தடுக்கிறது. பணியாளர்கள் போன்ற எளிய மனிதர்கள் இவருக்கு ஆதரவாக உள்ளதை இது குறிக்கிறது. இளைஞன் கீழே உள்ள பள்ளத்தை கவனிக்காது செல்வதில் உள்ள பாதிப்பை கண்ட நாய் இளைஞனை தடுக்கிறது. எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வாழ்வு வீழ்ச்சியடையும் என்பதை இது குறிப்பிடுகிறது.

 

ஒரு டாரட் அட்டை முழுமையான ஜாதக பலன்களை குறிப்பிடாது என்றாலும் ஒரு தனி மனிதனது தற்காலச் சூழலை மட்டும் தெளிவாக சுட்டிக்காட்டும்  என்பதால் அதற்கேற்ப ஒருவர் செயல்பட அறிவுரை கூறலாம். இதற்கு மேல் வாழ்நாள் முழுமைக்கும் தசா-புக்தி அடிப்படையில் என்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை அறிய ஜாதகம் இல்லாததால் பிரசன்ன ஜாதகம் மேற்கொண்டு எதை குறிப்பிடுகிறது என்று பார்த்தேன். கீழே பிரசன்ன ஜாதகம்.

                

 

 

மிதுன லக்னத்தில் 7 ஆமதிபது குரு வக்கிரம் பெற்று நிற்கிறார். லக்ன குரு நன்மை. ஆனால் வக்கிர குரு எதிர்மறைப் பலன். அதுவும் 7 ஆமதிபதி லக்னத்தில் வக்கிரமானதால் களத்திர வகை பாதிப்பை இது குறிப்பிடுகிறது. 7 ஆமிடத்தை 1௦ ல் அமைந்த 8 ஆமதிபதி சனி 1௦ ஆம் பார்வையில் பார்ப்பது பாதிப்பான நிலையே. 7 ஆமதிபதி குரு கெட்ட  நிலையில், 7 ஆம் பாவகமும் சனியால் பாதிக்கப்பட்டுவிட்டது. களத்திர காரகர் சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் சூரியனில் அஸ்தங்கமடைந்துள்ளனர். இது ஜாதகருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப வாழ்வும் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை குறிப்பிடுகிறது.

 

எப்போது திருமணம் நடந்திருக்கும்?

ஜாதகனின் ஜனன நாள் விபரங்கள்தான் தெரியவில்லையே தவிர பிறந்த ஆண்டை வைத்து பார்க்கையில் தற்போது மத்திய வயதில் உள்ள ஜாதகனுக்கு திருமணம் 6 வருடங்களுக்கு முன்பு (கொரானா காலத்திற்கு முன்பு) நடந்திருக்க வேண்டும். காரணம் 12 ஆமிடம் ரிஷபத்தில் நிற்கும் 2 ஆமதிபதி சந்திரன் 7 ஆமிடமான தனுசை கடந்து 6 ராசிகள் தள்ளி வந்துள்ளார்.

 

எப்போது குடும்ப வாழ்வு பாதித்திருக்கும்?

பிரசன்ன ஜாதகப்படி ஜாதகனுக்கு சந்திர தசை குரு புக்தி நடக்கிறது. சந்திரன் 7 ஆமிடமான தனுசுக்கு 8 ஆமதிபதியாகி 7 ஆமிடம் தனுசிற்கு 6 ல் ரிஷபத்தில் லக்ன விரையத்தில் நிற்பதுடன், குடும்ப ஸ்தானமான 2 க்கு பாதகத்திலும் நிற்பதால் சந்திர தசை துவங்கியவுடன் மகனின் குடும்ப வாழ்வு பாதித்திருக்க வேண்டும்.

 

எதனால் மணவாழ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்?

பிரசன்ன லக்னாதிபதி புதன் 8 ஆமிடத்தில் மறைந்ததே சிறப்பல்ல எனும் சூழலில் அங்கு சூரியனில் அஸ்தங்கம். இதனால் ஜாதகனுக்கு சுய புக்தி இல்லை. வருமானத்தை குறிக்கும் 2 ஆமதிபத்தி 12 ல் மறைந்த நிலையில் வேலை வாய்ப்பை குறிக்கும் 6 ஆமதிபதி செவ்வாயும் 8 ல் மறைவுடன் அஸ்தங்கமும் பெற்றுவிட்டார். சனி 1௦ இருப்பது நல்லது என்றாலும் சனியின் இரு வீடுகளிலும் கடும் பாவிகள் அமைந்து, சனிக்கு வீடு கொடுத்த குரு வக்கிரமாகிவிட்டதால் உழைக்க இயலவில்லை. சனி 3 ஆம் பார்வையாக சந்திரனை பார்ப்பதால் ஜாதகன் சோம்பேறி. உறக்கத்தை குறிப்பிடும் பாவகம் 12 ஆமிடம். தூக்கத்தை குறிப்பிடும் ராசி கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசி. தூக்கத்தின் காரக கிரகம் சந்திரன். இங்கு மீன சனி 12 ஆமிட சந்திரனை 3 ஆம் பார்வையாக பார்ப்பது ஜாதகன் உழைக்காமல் உறங்குவதை குறிப்பிடுகிறது. 8 ஆமிட சூரியன் தன்னுடன் இணைந்த பிர கிரகங்களை அஸ்தங்கப்படுத்தி 2 ஆமிடத்தை பார்க்கிறார். வீட்டிற்கு அரசு வருவாய் வருவதை இது குறிக்கிறது. 2 ஆமதிபதி சந்திரன் 2 ஆமிடமான கடகத்திற்கு 11 ல் உச்சம். இதனால் ஜாதகன் உழைக்காமல்  தனது குடும்ப தேவைக்கு தனது பெற்றோரை சார்ந்திருக்கிறான். உச்ச செவ்வாயுடனும், சூரியனுடனும் இணைந்த லக்னாதிபதி புதனுக்கு செவ்வாயின் கடும் கோபமும் சூரியனின் அதிகாரமும் இருக்கும். புதன் சுக்கிரனுடன் ஒரே பாகையில் நிற்பதால் ஜாதகன் தனது கோப குணத்தை மனைவியிடன் காண்பிப்பார். இதுவே குடும்ப  பிரிவினைக்கு காரணமாக இருந்திருக்கும். லக்னாதிபதிக்கும், சுக்கிரனுக்கும் அடுத்த வீட்டிலிருந்து இவர்களை நோக்கி ராகு நிற்பது ஜாதகனது குடும்ப  பிரிவினையை குறிப்பிடுகிறது.

 

தற்போது ஜாதகம் பார்ப்பதன் நோக்கம் என்ன?

பிரசன்ன லக்னம் அமைந்த மிதுனம் இரட்டை ராசி என்பதை அறிக. அங்கு 7 ஆமதிபதியும், குடும்ப காரகருமான குரு நிற்பதால் இழந்துவிட்ட மகனது மண வாழ்க்கையை இரண்டாவதாக அமைத்துத்தர வேண்டிய நிலையில் தாயார் வந்து ஜாதகம் பார்க்கிறார்.

 

மேற்கண்ட விஷயங்களை வந்திருந்த பெண்மணியிடம் கூறியபிறகு அவர் சொன்னதாவது “நானும், கணவரும் அரசு வேலையில் இருப்பதால் மகனை கவனித்து வளர்க்க இயலவில்லை. இதனால் பொறுப்பற்ற குணங்களுடன் வளர்ந்த மகன் பள்ளியில் தோல்வியுற்று கல்லூரிக்கும் செல்ல இயலாமல் சாதாரண வேலை பார்த்தான். வசதியான சூழலில் வளர்ந்ததால் சாதாரண வேலையையும் அவனால் செய்ய இயலாத சோம்பேறியாகிவிட்டான். நீங்கள் கூறியது போல 6 வருடங்களுக்கு முன்னதாக 2௦19 ல் ஜாதகனுக்கு திருமணம் நடந்தது. அதிக செல்லம் கொடுத்து சரியாக வளர்க்காமல் விட்டுவிட்ட மகனது பொறுப்பின்மையாலும், கோப குணத்தாலும் மனைவியையும் தக்கவைத்துக்கொள்ள இயலாமல் மணமுறிவுற்று 2 ஆண்டுகளாகிறது” என்று கூறினார். ஆனால் சரியான ஜாதகம் இல்லாமல் நீங்கள் கூறிய பலன்கள் துல்லியமானவை என்றார்.

 

மகனுக்கு இரண்டாவது திருமணத்திற்கு அவரது மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் என்பதைக் கூறி அதற்கான சில வாழ்வியல் பரிகாரங்களையும், வழிபாடுகளையும் பரிந்துரைத்து அனுப்பி வைத்தேன். மகனது செயல்களில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு மீண்டும் பிரசன்னம் பார்த்து மறு திருமணத்தை முடிவு செய்யலாம். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

 

 

Leave A Comment

WhatsApp