தங்கம் சென்ற ஆண்டு யாரும் எதிர்பார்க்காத அளவு ஏற்றம் கண்டு சாமான்ய மக்கள் வாங்க இயலாத விலைக்குச் சென்றுவிட்டது. வெள்ளி 2025 ஆண்டு பிற்பகுதியில் திடீர் ஏற்றம் கண்டது. தங்கம் சுமார் எழுபது சதவீதம் ஏற்றம் கண்டது என்றால், வெள்ளி தங்கத்தைவிட அதிகமாக குறுகிய காலத்தில் பலமடங்கு ஏற்றம் கண்டது. இந்நிலையில் யாரடா நீ? புதிய போட்டியாளன் எனும்படி தாமிரம் (Copper) “புதிய தங்கம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு விலையேற்றம் கண்டது. பங்கு வணிகத்தில் சிறப்பாக முதலீடு செய்பவர்கள் கூட சராசரியாக வருடத்திற்கு சுமார் முப்பது சதவீதம் வருமானம் ஈட்டுவதே அதிஷ்டகரமானது எனும் சூழலில், வெள்ளி விலையின் உச்சத்தை யாராலும் நம்ப இயலவில்லை. இந்நிலையில் வங்கிகளில் 7 முதல் 8 சதவீதம் நிரந்தர வைப்பு நிதிக்கு (FD) கிடைப்பதால் பலரும் வங்கிப் பணத்தை எடுத்து தங்கம், வெள்ளி, தாமிரம் என்று முதலீடு செய்துள்ளனர். முதலீட்டையே தொழிலாக செய்பவர்கள் வணிகச் சந்தை ஏற்ற இறக்கங்களை கவனித்து தங்கள் முதலீட்டை மாற்றி அமைப்பர். ஆனால் இவற்றில் அனுபவமற்ற சாமான்யர்கள் இவற்றை செய்ய வாய்ப்பு குறைவு. தற்போது மேற்கண்ட மூன்று உலோகங்களுமே சந்தையில் இறக்கம் காண்கிறது. இதில் தங்கம் மட்டும் பெரிய இறக்கத்தை சந்திக்கவில்லை. ஆனால் வெள்ளி அடைத்த உச்சத்திலிருந்து பாதியாக இறங்கிவிட்டது. தாமிரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் வெள்ளி, தாமிர முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர். பெரிய தனவந்தர். எனது கணிப்புகளின்மீது மிகுந்த மதிப்புக்கொண்டவர். தமிழகத்தின் தலைசிறந்த ஜோதிடர்களை தனது வீட்டிற்கு அழைத்து ஜாதகம் பார்ப்பவர். ஜோதிடர்களின் வீட்டிற்கு செல்லமாட்டார். ஆனால் அவருக்கு நான் கூறிய சில ஜாதக விஷயங்களை பிற ஜோதிடர்கள் கூறவில்லை என்று கூறுவார். இதற்கு ஜோதிடர் மற்றும் ஜோதிடம் பார்ப்பவர் ஆகியோருக்கிடையே ஜாதக ரீதியான ஒருங்கினைவே காரணம். அபூர்வமாக பார்க்க வேண்டும் என்று நேரம் வாங்கிவிட்டு எனது வீட்டிற்கு வந்தார். வந்தவர் முகம் வாடியிருந்ததது. பல தொழில்களில் முதலீடு செய்துள்ளவர் என்பது நான் அறிந்து வைத்திருந்த ஒன்று. பல ஆண்டுகளாக பங்கு வணிகத்திலும் ஈடுபட்டுள்ளவர். Commodity market முதலீடும் செய்து வருபவர். “குருகிய காலத்தில் அதிக பணம் பண்ணலாம் என்று ஒரு நிதி ஆலோசகர் சொன்னதை நம்பி வெள்ளியிலும், தாமிரத்திலும் பெரிய அளவு முதலீடு செய்து தற்போது அவற்றில் பெரிய சரிவில் உள்ளேன். போட்ட பணத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்ற நிலை. ஜாதகம் பார்க்க வேண்டாம் பிரசன்னம் பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அவர் வருவதாக கூறியிருந்ததால் என்னிடமிருந்த அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து வைத்திருந்தேன். தற்போது அது தேவையற்றதாகிவிட்டது என்பதால் பிரசன்னம் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்தேன்.
மேற்கண்ட அன்பரின் கேள்விக்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

தனுசு உதயாதிபதி குரு பங்கு வணிகத்தின் காரக ராசியான மிதுனத்தில் அமைந்துள்ளது கேள்வியாளர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்பதை உறுதி செய்கிறது. பங்கு வணிகத்தை குறிப்பிடுவது 5 மற்றும் 8 ஆகிய பாவக தொடர்புகளே. ஐந்து எனும் பூர்வ புண்ணியத்தை குறிப்பிடும் பாவகத்தின் கொடுப்பினை இருந்தால் மட்டுமே எட்டு எனும் உழைக்காமல் அதிஷ்டத்தினால் பண வரவை அடைய இயலும் என்பதே இதன் அடிப்படை. இந்த பிரசன்னத்தில் 8 ஆமிடத்தில் கவிப்பு அமைந்து அதன் அதிபதி சந்திரன் 12 ஆமிடத்தில் நீசம் பெற்றது பங்கு வணிகத்தில் அடைந்த இழப்பை குறிப்பிடுகிறது. தாமிரத்தைக் குறிப்பிடும் செவ்வாய் 5 ஆமிடத்தில் இருந்து நான்காம் பார்வையாக தனது நீச வீட்டில் அமைந்த கவிப்பை பார்ப்பதோடல்லாமல், விருட்சிகத்தில் நீசம் பெற்ற கவிப்பின் அதிபதி சந்திரனையும் தனது 8 ஆம் பார்வையால் பார்க்கிறார். இது செவ்வாய் குறிப்பிடும் தாமிரத்தால் கேள்வியாளர் இழைப்பை சந்தித்ததை தெளிவாக காட்டுகிறது. வெள்ளியின் காரக கிரகம் சுக்கிரன் உதயத்தில் அமைந்து லாப ஸ்தானம் துலாத்திலமைந்த சனியின் மூன்றாம் பார்வையை பெறுவது வெள்ளியில் செய்த முதலீடுகள் தாமதமாகவே லாபமளிக்கும் என்பதை குறிப்பிடுகிறது. மேலும் உதயத்தை உச்ச சனி பார்ப்பதே பொதுவாக கேள்வியாளரது முதலீடுகள் அனைத்துமே நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்றால் நீண்ட காலமாகும் என்பதை குறிப்பிடுகிறது. இதை முதலீட்டு பாவகமெனும் நான்காமிடம் மீனத்தில் வெளிவட்ட குரு உள்வட்டத்தில் தாமத கிரகம் சனியுடன் இணைத்திருப்பதிலிருந்து தெளிவாக அறியலாம்.

உள்வட்டத்தில் உதயாதிபதி குரு பாதக ஸ்தானத்தில் வக்கிரமாகியுள்ளார். இது கேள்வியாளரது பாதகங்களுக்கு அவரே காரணம் என்பதை குறிப்பிடுகிறது. மிதுனத்தில் உதயாதிபதி குருவை உடன் இணைந்த ஜாமச் சூரியன் அஸ்தங்கப்படுதியுள்ளது சூரியன் குறிப்பிடும் அரசாங்க கொள்கைகளே இவரது பாதிப்புகளுக்குக் காரணம் என்பதை குறிப்பிடுகிறது. மிதுனம் என்பது அமெரிக்காவை குறிக்கும் ராசி என்பதை அறிக. நிலையற்ற வாயு ராசினான மிதுனத்தில் சூரியன்+குரு இணைவு அமெரிக்க அரசின் உறுதியற்ற திடீர் கொள்கை மாற்றங்களே ஜாதகரின் முதலீடுகள் பாதிக்க காரணம் என்பதை குறிப்பிடுகிறது. குரு அஸ்தங்கமானாலும் வக்கிரமானதால் தங்க முதலீடுகளில் கேள்வியாளர் உறுதியுடன் இருக்கிறார் என்பதை கூறுகிறது. அவர் அதிகம் சிக்கிக் கொண்டது வெள்ளி மற்றும் தாமிரத்தில்தான்.
வெள்ளியை குறிப்பிடும் சுக்கிரன் தடைகளை குறிப்பிடும் ராகுவுடன் இணைந்துள்ளதால் வெள்ளி விலை ஏற்றம் தற்போது தடைகளை சந்திக்கிறது. வெள்ளியில் கேள்வியாளர் நஷ்டத்தை தவிர்க்க வேண்டுமெனில் உள்வட்ட சுக்கிரன் துலாத்திற்கு வரவேண்டும். அதுவரை கேள்வியாளர் பொறுமையோடிருக்க வேண்டும்.
தாமிரத்திலும் கேள்வியாளர் முதலீடுகள் செய்துள்ளார். தாமிரத்தின் காரக கிரகம் செவ்வாய் மேஷத்தில் இருந்தாலும் அவர் சந்திரனின் ரோஹிணியில் நிற்கிறார். உள்வட்டத்தில் மகரத்தில் உச்சமானாலும் அவரும் சந்திரனின் திருவோணத்தில்தான் நின்று பகைக்கோள் ராகுவை நோக்கிச் செல்கிறார். இரு செவ்வாய்களின் நட்சத்திராதிபதி சந்திரன் உதயத்தின் அஷ்டமாதிபதியாகி நீசம் பெற்று நிற்க, அஷ்டமத்தில் கவிப்பு நிற்பது கேள்வியாளரது தாமிர முதலீடு லாபமடைய வாய்ப்புகளைக் காட்டவில்லை.
ஆசையின் காரக கிரகம் சுக்கிரன், முயற்சியின் காரக கிரகம் புதன் இவ்விரு கிரகங்களும் இவற்றின் ராசிகளான ரிஷபமும் மிதுனமும்தான் பங்கு வணிகத்தை ஆட்டுவிக்கின்றன. சுக்கிரன் ராகுவுடன் தொடர்பாகும்போது ஆசை பேராசையாகிறது. இவற்றுடன் பாதக ஸ்தான தொடர்பு ஏற்படுகையில் பேராசை பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. இந்த பிரசன்னத்தில் சுக்கிரனும், புதனும் ராகுவுடன் இணைவது பாதிப்பை குறிப்பிடுகிறது.
பிரசன்னம் சுட்டிக்காட்டிய விபரங்களை கேள்வியாளரிடம் எடுத்துக்கூறினேன். மன உறுதி கொண்டவர்தான். அவசரப்பட்டு ஆராயாமல் செய்த முதலீடு என்னை தூங்கவிடாமல் செய்கிறது என்று கூறினார். உலக பொருளாதாரத்தை பல்வேறு காரணிகள் கட்டுப்படுத்துவதால் உடனடியாக கேள்வியாளர் நஷ்டத்திலிருந்து லாபமடைய தனி மனித பரிகாரங்கள் உதவாது. பொறுமைதான் பரிகாரம்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501
