சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய நிகழ்வொன்றை ஜோதிட ரீதியாக இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன். முடிவுகள் ஆச்சரியமானவை என்றாலும் ஊமைகள் பேசவும் கிரகங்கள் சம்மதிக்க வேண்டும். இப்பதிவில் நாம் ஆராயவிருக்கும் ஜாதகி 1981 ல் பிறந்தவர். பிறவி ஊமை. ஆனால் தனது 14 ஆம் வயதிற்குப்பிறகு பேச்சு வந்தது. தற்போது சிறந்ததொரு குடும்பத்தலைவியாக திகழும் இவரா சிறுவயதில் ஊமையாக இருந்தார்? என நம்ப முடியாதவராக காட்சியளிக்கிறார். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.
ஜோதிடத்தில் பேச்சுக்கு உரிய காரக கிரகம் சந்திரன். பேச்சுத்திறமைக்கு உரிய காரக கிரகம் வாக்கு காரகன் என அறியப்படும் புதன். கால புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷபம் பாவ கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது நல்ல நாவன்மைக்கு அவசியம். சந்திரன் மட்டுமல்ல சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். மேலும் சந்திரன் நீசமடையும் விருட்சிக ராசி, கடகத்தில் உச்சமடையும் குருவின் மீன ராசி ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருப்பது ஒருவரின் பேச்சு பாதிக்கப்படாமல் இருக்க உதவும். அதனால்தான் மூன்றுநீர் ராசிகளும் ஜோதிடத்தில் ஊமை ராசிகள் என அழைக்கப்படுகின்றன. புதனும் சுக்கிரனும் அடுத்ததாக ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றிருப்பது நாவன்மைக்கு சிறப்பு. காரணம் சுக்கிரன் காலப்புருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதி என்பதோடு அவர் சுரப்பிகளுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் சிந்தனையில் எழும் எண்ணங்கள் பேச்சு வடிவம் பெற எண்ணச்சமிக்கைகள் காலபுருஷனின் குரல்வளையை குறிக்கும் மிதுனத்திற்கு தடையின்றி செல்ல ரிஷப ராசியும் சுரப்பிகாரகன் சுக்கிரனும் உதவ வேண்டும். நாவன்மைக்கு உரிய புதனும் மிதுன ராசியும் அதன் பகை கிரகமான செவ்வாயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நின்று தன் வீட்டில் நீசம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதி சந்திரனை பார்க்கிறார். ரிஷப ராசி பாதிக்கப்பட்டாலும் செவ்வாய் ராசி அதிபதி ஆவதால் சந்திரனுக்கு நீச பங்கம் கொடுத்தாக வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரனும் சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு காரகன் புதன், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாகியுள்ளார். மிதுன ராசிக்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. மிதுன ராசியை பாதகாதிபதி குருவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியும் பேச்சு காரகனுமான நீசம் பெற்ற சந்திரனை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் 7 ஆம் பார்வையாகவும் பார்கின்றனர். சனி செவ்வாய் பார்வை பெற்ற பாவங்களும் அதில் இருக்கும் கிரகங்களும் பாதிப்படைய வேண்டும். சுக்கிரனும் புதனும் அஸ்தங்கமடையாவிட்டலும் சுக்கிரனனும் புதனைப்போலவே ராகுவின் திருவாதிரை சாரம் பெற்று பாதிக்கப்பட்டுள்ளார். லக்னாதிபதியும் வாக்கு காரகனுமான புதன் வக்கிரமாகியுள்ளார். அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் திருவோணம்-1 ல் நின்று சந்திரனை முதலில் தொடவிருக்கும் கேதுவும் சந்திரனின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.
இவை யாவும் ஜாதகிக்கு பேசும் திறன் பாதிக்கப்படும் என்பதை குறிக்கின்றன. இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள செவ்வாயால் ராசி வலுவடைகிறது. செவ்வாய் சந்திரனை நீசபங்கப்படுத்துவதோடு ராசிக்கு 2 ஆம் இடத்தையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சந்திரன் பாதகாதிபதி குருவின் விசாகம்-4 ல் நின்று நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். சனியும் குருவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். ராசியாதிபதி செவ்வாய், ராசியின் யோகாதிபதியும் லக்னாதிபதி புதனின் நண்பருமான சூரியனின் சிம்ம ராசியை தனது நான்காம் பார்வையாக பார்க்கும் சூழலில் சூரியனும் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் ஒரு இணைந்து செயல்படும் தன்மை ஏற்படும்.
ஜாதகி பிறந்தது முதல் 2 வயதுவரை பாதகாதிபதி குருவின் திசையில் பேசவில்லை. அதன்பிறகு 1983 முதல் 2002 வரை சனி திசை. லக்னத்திற்கு 8 & 9 ஆம் அதிபதியாக சனி வருகிறார். சனிக்கும், சூரியனுக்கும் அஷ்டமாதித்ய தோஷமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாதகாதிபதி தொடர்பால் தோசமுண்டு. 19 வருட சனி திசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் முடிந்து இரண்டாவது பகுதி 1995 ல் வந்தது. அப்போது சனி திசையின் சந்திர புக்தியில் ஜாதகி இருந்தார். சந்திரன் செவ்வாயால் நீசபங்கப்படுதப்பட்டுள்ளார். சந்திரன் தந்து புக்தியில் 6 ஆமிட பலனையும் 11 ஆமிட பலனையும் வழங்க வேண்டும். சந்திர புக்தியில் இரண்டாம் பகுதியான லாப ஸ்தான பலனை சந்திரன் வழங்கத்துவங்கிய காலம். ஜாதகிக்கு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரிரு வார்த்தைகள் பேசத்துவங்கினார். சந்திரனை நீச பங்கப்படுத்திய செவ்வாய் புக்தி துவங்கிய பிறகு ஜாதகி எல்லோரையும் போல சாதாரணமாக பேச ஆரம்பித்தார். அப்போதைய கோட்சார நிலை (1997 துவக்கம்) கீழே.
ஒரு நல்ல திசா-புக்திகள் வரும்போது சர்ப்ப கிரகங்கள் ஜாதகருக்கு இருக்கும் பிரச்னையை கோட்சாரத்தில் அவை தொடர்புகொள்ளும் பாவங்கள் மற்றும் கிரகங்களின் மூலம் தீர்த்து வைக்கும். அதே போன்று ஒரு மோசமான திசா – புக்தி காலங்களில் அவை வரும் ராசியை சார்ந்து அதிலுள்ள கிரகங்களை சார்ந்து இல்லாத பிரச்னையை ஜாதகருக்கு உருவாக்கி விட்டுச்செல்லும். ஜனன காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துவிட்ட ராகு அந்த பாவ பலனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது கோட்சார ராகு ராசிக்கு லாபத்தில் ஜனன சனி-குரு மீது வந்து நிற்கிறது. பாதகாதிபதி குருவை கட்டுப்படுத்தும் கோட்சார ராகு, திசா நாதன் சனியின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு-கேதுக்கள் மருத்துவ ஜோதிடத்தில் மிகச்சிறந்த பலன்களை வழங்குபவை என்பது யாவரும் அறிந்ததே. லக்னத்திற்கு சுகஸ்தானத்தில் மருத்துவ கிரகம் புதனின் மூலத்திரிகோண வீட்டில் வந்தமரும் ராகு, திசா நாதன் சனிக்கு புதனின் மருத்துவ குணத்தையும் தனது நுட்பத்தையும் சேர்த்து வழங்கி தற்போது செயல்பட வைப்பார். கோட்சாரத்தில் குரு நீசமாகி சனியோடு பரிவர்த்தனை பெறுகிறது. இதனால் குருவும் சனியும் சம கிரகங்களானாலும் சனியின் தயவில்தான் பரிவர்த்தனையால் குரு நீச பங்கம் அடையவேண்டும். எனவே குரு தனது பாதகாதிபத்தியத்தை இழப்பார். ஜனன சனி, குருவிற்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது கோட்சாரத்திலும் இவ்விரு கிரகங்களோடு தொடர்புகொள்வதை கவனிக்கவேண்டும். இதனால் இவை கேதுவின் மருத்திவ நுட்பத்தை கோட்சாரத்தில் பெறுகின்றன.
அதே சமயம் கோட்சாரத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் கேதுவின் பிடியில் சிக்குவதால் குரு தனது பாதகாதிபத்திய தோஷத்தை இழபார். சனியும் குருவும் கோட்சாரத்தில் கடக ராசியை பார்வை செய்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குரு ஜனன காலத்தில் கேது நின்ற சந்திரனின் அதே திருவோண நட்சத்திரத்தில் கோட்சாரத்தில் சென்ற போது ஜாதகி முழுமையாக பேசத்துவங்கினார். ஜாதகி சனி திசையின் செவ்வாய் புக்தியில் பரிபூரணமாக பேசத்துவங்கினார். ஜனன காலத்தில் சனி,குருவிற்கு திரிகோணத்தில் செவ்வாய் நின்றதால் புக்தினாதனின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சனி திசை சந்திர புக்தியில் ஜாதகி பேச முயற்சித்தார் என்றால் செவ்வாய் புக்தியில் தெளிவாக தங்குதடையின்றி பேசத்துவங்கினார். இதற்கு ஜனன காலத்தில் சேர்க்கை பெற்ற வருட கிரகங்களான சனியும் குருவும் காரணம். திசா புக்தி கிரகங்கள் இவ்விரு கிரகங்களோடு தொடர்பானது மிக முக்கிய காரணம். இவ்விரு கிரகங்களுக்கும் தங்களது மருத்துவ குணத்தை அதிசய மாற்றத்தை கோட்சாரத்தில் வழங்கிய ராகுவும் கேதுவும் மிக மிக முக்கிய காரணம். ராகு-கேதுக்களின் ஒப்புதலின்றி ஒருவர் கடும் சோதனைகளை சந்திக்கவும் முடியாது. அதிலிருந்து விடுபடவும் முடியாது. ஜனன காலத்தில் லக்னத்தை நோக்கி நகரும் ராகு ஜாதகியின் வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கோட்சாரத்தில் ஜாதகியின் பிரச்னையை சீராக்கினார் என்றால் அது மிகையல்ல.
பேசா ஊமை ஒருவர் திடீரேன பேசம் அதிசயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும் ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு.
மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களோடு,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.