இன்று வாக்கியப் பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி நடந்து முடிந்துவிட்டது. கிரகப்பெயர்ச்சிகளில் சந்திரன் விரைவாகச் சுழலும் கிரகம் என்பதால் அதன் தாக்கம் உடனுக்குடன் மாறிவிடும். மாதக்கிரகங்கள் தரும் பலன்களும் ஒரு மாதத்தில் மாறிவிடும். ஆனால் வருடக்கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு, சனியும், ராகு-கேதுக்களும் வருடம் முழுமைக்கும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நம்மை இருக்க வைக்கும். வருடக்கிரகங்களில் ராகு-கேதுக்கள் தாங்கள் நின்ற பாவாதிபதிகளை சார்ந்துதான் செயல்படும் என்றாலும் அவற்றிற்கும் தனிப்பலன்கள் உண்டு. இதர அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைக்கும் வல்லமை பெற்றவை நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள். குருவும் சனியும்தான் மனித வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வேலையை செய்பவை. இதில் சனி தாட்சன்யமின்றி சில சூழ்நிலைகளுக்கு மனிதர்களை இட்டுச்செல்வார். சனி அளவு கடுமை காட்டாமல் அதே சமயம் ஒரு மனிதன் அடைய வேண்டிய இலக்கை நோக்கி குரு செலுத்துவார் எனலாம்.
வருட கிரகப்பெயர்ச்சிகள் நடக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊன்றிக்கவனித்தால் நம் வாழ்க்கையில் வருட கிரகங்கள் ஏப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு அறியலாம். எனினும் அனைத்து கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்றங்களும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்குத்தக்கபடி அவரவர் திசா-புக்திகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதே உண்மை. அதனால்தான் கிரகப்பெயர்ச்சிகளின் பலன்கள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகின்றன.
கீழே நான் அறிந்த அன்பர் குமரனின் ஜாதகம்.
மேஷ லக்ன ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய் களத்திர ஸ்தானமான 7ல் நின்று லக்னத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகம் வலுவடைகிறது. லக்னாதிபதி செவ்வாய் தனது பகை கிரகமான வித்யாகாரகன் புதனுடன் இணைந்து தொடர்பு ஸ்தானத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் ஒரு ஆசிரியராக உருவெடுத்தார்.
காதல் காரகனான புதன் 7 ல் நிற்கிறார். 7 ஆமதிபதி சுக்கிரன் 7 க்கு பாதகமான காதலைக் குறிக்கும் 5 ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கிறார். 5 ஆமதிபதி சூரியன் 6ல் லக்ன சத்ரு புதனின் வீட்டில் புதன் மற்றும் லக்னாதிபதிக்கு விரையத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் காதல் வயப்பட்டார். மகர ராசி சந்தியில் நின்று நீச குருவோடு இணைவு பெற்ற பாதகாதிபதி சனி 12, 4, 7 ஆமிடங்களை பார்க்கிறார். பாதகாதி சனி தொடர்பு பெரும் குரு, பாதகாதிபதி சனிக்கு கட்டுப்பட்டவர் ஆகிறார். இதனால் சனி-குரு இணைவு ஆசிரியராக ஜாதகர் உருவெடுத்து பொருளாதார சிறப்புகளை கொடுத்தாலும் திசா நாதனான 10 ஆமிட குரு குடும்ப வகையில் பாதகத்தையும் தயங்காமல் செய்வார் எனலாம். இதில் சனி செவ்வாய் இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்கின்றன என்பதும் சனி வர்கோத்தமம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அமைப்புகள் காதலுக்கு சாதகமானது அல்ல. காதல் ஆசையைத்தூண்டும் கேது லாபத்தில் நின்றாலும் பாதகத்தில் நிற்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. காதலுக்கு உதவும் 5 க்கு லாப பாவமான 3ல் மாந்தியுடன் சேர்க்கை பெற்று கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் நிற்கிறார். குருவோடு இணைந்த சனி ராசிக்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். திருமணதிற்கு முன் ஜாதகர் காதலால் பெருத்த அவமானத்தை சந்திக்க இருப்பதையும் அது மரணத்திற்கு சமமானதாக இருக்கும் என்பதையும் மாந்தியோடு இணைவு பெற்று புதனின் வீட்டில் நிற்கும் சந்திரன் உணர்த்துகிறது.
காதலால் ஜாதகர் அவமானப்பட்ட காலத்தில் (1989) குரு மிதுனத்திலும் கேது சிம்மத்திலும் ராகு கும்பத்திலும் அமைந்திருந்தனர். அப்போது குரு திசை கேது புக்தி நடந்தது.
காதலால் அவமானப்பட்ட பிறகு 1990 ல் குரு ஜாதகருக்கு நன்மையை செய்யும் நிலைக்கு கோட்சார ரீதியாக கடகத்தில் வந்து உச்சமடைகிறார். கடகத்தில் உச்சமான குரு ஜனன காலத்தில் மகரத்தில் அமைந்த நீச குருவையும் சனியையும் தனது உச்ச பார்வையால் பார்த்து சமாதானமடைய செய்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனன காலத்தில் கும்பத்தில் பாதகத்தில் அமைந்த கேதுவோடு கோட்சாரத்தில் கடகத்தில் கூடி சர்ப்ப கிரகங்களையும் சமாதானப்படுத்துகிறார். பாதகாதிபதி சனியும் கோட்சாரத்தில் உச்சமான குருவின் வீட்டில் தனுசுவில் நிற்கிறார். இதனால் குருவின் கட்டளைகளை சனி ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருப்பார் எனலாம். குரு திசையில் 7 ஆமதிபதி சுக்கிரனின் புக்தி நடந்த இக்காலகட்டத்தில் ஜாதகருக்கு திருமணம் நடந்தது.
தற்போது 1992. கோட்சார குரு 7ஆமிடமான துலாத்திற்கு பாதகமான சிம்மத்திற்கு வருகிறது. அங்கு ஜனன சுக்கிரன் ஏற்கனவே ராகுவோடு இணைந்து பாதிக்கப்பட்டிருக்கிறார். கோட்சார குரு ஜனனத்தில் தன நின்ற பாவத்திற்கு அஷ்டமத்தில் வந்த நிலையில் கோட்சார சனி ஜனன சனி-குருவோடு மகரத்தில் சேர்க்கிறது. கோட்சார கேது ஜனன சந்திரன் மேல் மிதுனத்திலும் ராகு தனுசுவிலும் அமைகிறது. நடப்பது குரு திசையில் லக்னத்திற்கு 6ல் நிற்கும் சூரிய புக்தி. ஜாதகரின் முதல் திருமணம் முறிவுற்றது.
ஜாதகர் தற்போது 1998ல் வந்து நிற்கிறார். ஜாதகரை பாடாய் படுத்திய குரு திசை முடிவுக்கு வந்துவிட்டது. 1, 6, 10 திசா-புக்திகள் பொதுவாக பிரிவினையை சொல்லும் என்றாலும் குரு பாதகாதிபதி சனியோடு 10 ல் சேர்ந்ததால் சனியின் குணங்கள் அனைத்தும் குருவுக்கு இருக்கும். அதனால் வாழ்க்கை குருவின் அனைத்து காரகத்துவ ரீதியாகவும் பாழ்பட்டது எனலாம். தற்போது சனி திசை என்பதால் குருவோடு சேர்க்கை பெற்ற சனிக்கு குருவின் அணைந்து தன்மைகளும் இருக்கும். தற்போது சனி திசை துவக்கம். சனி 12, 4, 7 ஆம் பாவங்களை குருவோடு இணைந்த நிலையில் ஜனனத்தில் பார்க்கிறார். கோட்சார சனி மேஷத்தில் நிற்கிறார். ராகு கேதுக்கள் ஜனனத்தில் நின்ற அதே சிம்மம் கும்பத்தில் நிற்கின்றன. கோட்சார குருவும் ராசிக்கு 9ல் நின்று ராசியையும் களத்திர ஸ்தானமான துலாமையும் பார்ப்பதோடு கும்பத்தில் கேதுவோடு கூடி சிம்ம ராகுவை பார்த்து சர்பங்களை சாந்தி செய்கிறார். இதனால் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஜாதகருக்கு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு இக்காலத்தில் இரண்டாவது திருமணம் நடந்தது.
ஜாதகருக்கு 2 ஆவது திருமணமான சில மாதங்கள் கழிந்த நிலையில் கோட்சார குரு தற்போது மீனத்திற்கு பெயர்ச்சியாகி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று 6 ஆமிட ஜனன சூரியனை பார்வை செய்கிறது. ஜீவன காரகன் சனி, வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் மகரத்தில் நின்று திசை நடத்துகிறது. இந்தக்காலத்தில் ஜாதகருக்கு நல்லதொரு பள்ளியில் அரசு பணிக்கு இணையான கௌரவமான சம்பாத்தியத்தில் வேலை கிடைத்தது.
தற்போது 1999 இறுதி மாதம். கோட்சார குரு மேஷத்திற்கு வந்து நீச சனியோது இணைகிறது. கோட்சார ராகு சிம்மத்தை விட்டு நகர்ந்து கடகத்திலும் கேது மகரத்திலும் நிற்கிறது. கோட்ச்சாரத்தில் சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு 5, 7, 9 ஆமிடன்களை பார்வை செய்கிறது. ஜாதகரின் மனைவிக்கு தற்போது பெண் குழந்தையை அருளினார் குரு.
தற்போதைய காலம் 2007 பிப்ரவரி 26. குரு திசையில் முதல் பகுதியான 9 ஆவது ஆதிபத்தியம் முடிந்து 2 வது ஆதிபதியமான 12 ஆமிட விரைய ஆதிபத்தியம் நடக்கிறது. குரு ராசிக்கு 6 லும் லக்னத்திற்கு 8 லுமான விருட்சிகத்தில் கோட்சாரத்தில் வந்து அமைந்துள்ளார். கோட்சார குருவின் பார்வை ராசி மற்றும் லக்னத்திற்கு இல்லை. பாதகாதிபதி சனி கோட்சார குருவின் 9 ஆவது பார்வையை வாங்கினாலும் கோட்சார குருவிற்கு கோட்சார சனி பாதகத்தில்தான் அமைந்துள்ளது. எனவே குருவின் கட்டளையை ஏற்றுக்கொள்ள சனிக்கு மனமில்லை. கோட்சார சனி லக்னத்திற்கு 4ல் தனது பகை வீட்டில் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கோட்சார கேது சிம்மத்திலும் கோட்சார ராகு கும்பத்திலும் நிற்கிறது. வாகனங்களை குறிக்கும் செவ்வாய் கோட்சாரத்தில் மகரத்தில் உச்சம் பெற்று ஜனனத்தில் லக்னத்திற்கு 6 நின்ற சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நிற்கிறது. மற்றொரு வாகன கிரகம் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று பாதகாதிபதி சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது. கோட்சார சந்திரனும் கோட்சார மாந்தியும் ஜனன காலத்தில் நின்ற அதே மிதுன ராசியில் நிற்கின்றன. நடப்பது சனி திசையில் ஜனனத்தில் ராகுவோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட சுக்கிரனின் புக்தி. கோட்சார சந்திரன் நிற்பது ராகுவின் திருவாதிரை நட்சத்திரம். இந்த நாளில் ஜாதகர் வாகன விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். வலது காலில் ஏற்பட்ட எழும்பு முறிவுக்காக ஜாதகருக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.
தற்போது 2016 நவம்பர் மாதம் 29 ம் நாள். குருவின் தன்மையை பெற்ற சனியின் திசையில் சனியின் தன்மையை பெற்ற குருவின் புக்தி. குரு பாதகத்தை செய்வார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கோட்சார குரு லக்னத்திற்கு 6 ல் மறைந்துள்ளது. கோட்சார சனி லக்னத்திற்கு 8 ல் பகை வீட்டில் விருட்சிகத்தில் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன காலத்தில் நின்ற அதே இடத்தில் நிற்கின்றன. கோட்சார குரு ஜனனத்தில் 3 ல் நின்ற சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கோட்சார சனி 6 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் நிற்கின்றன. இதனால் விபரீதமாக ஒரு விழைவு நடக்கும் என்பது உறுதியாகிறது. ஜாதகருக்கு அன்றைய நாளில் நடந்த வாகன விபத்தில் இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.
தற்போது இன்று 29.10.2019ல் ஜாதகர் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் திசையில் ஜனன காலத்தில் பாதகத்தில் நிற்கும் கேதுவின் புக்தியில் உள்ளார். கோட்சாரத்தில் சனியும் கேதுவும் இணைவு பெற்றுள்ளார்கள். புதன் வேலையை குறிக்கும் 6 ஆமதிபதி. கேது தடையை குறிக்கும் கிரகம். சனி ஜீவனத்தை குறிக்கும் கிரகம். தற்போது ராசிக்கு 7 லும் லக்னத்திற்கு 9 லிலும் குரு வந்து அமர்ந்துள்ளார். ஜாதகர் தற்போது பணி ஓய்வு பெறவுள்ளார். தந்தையார் காலத்தில் விட்டுப்போன தனது குல தெய்வ வழிபாடுகளை முறைப்படுத்தி ஜாதகர் செய்து வருகிறார். தனது மகளின் வாழ்வை நல்ல முறையில் அமைத்துத்தர வேண்டிய நிலையில் புதிய ஒரு சூழலில் ஒரு எளிய பணியை ஜாதகர் நாடுகிறார்.
கோட்சார கிரகப்பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நமக்கு வழங்கிவிட முடியாது. கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன்களும் திசா-புக்திகளின் அனுமதியின் பேரிலேயே நடக்கும். கோட்சார கிரகங்கள் தோஷம் தரக்கூடிய இடங்களில் அமைந்தாலும் திசா-புக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் பெரிய சிரமங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாக ஏழரை சனியில் உயர்வு பெரும் எண்ணற்றவர்களின் ஜாதகங்களை என்னால் கூற முடியும்.
வருட கிரகங்களின் பெயர்ச்சிகளை குறிப்பாக குருப்பெயர்ச்சியை நாம் கொண்டாடுவோம். அதைவிட முக்கியமாக நேரிய வழியில் வாழ்ந்திடுவோம். நேரிய வழியில் செல்வோருக்கு கிரகப் பெயர்ச்சிகள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளும் பக்குவமிருக்கும். சாதகமான காலம் வரும் வரை சாந்தமான வாழ்வு வாழ்வோருக்கு நிச்சயம் நல்ல பலன்கள் உரிய காலத்தில் கிடைக்கும்.
மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501