உடல் அழகை பேணுவதில் அக்கறை காட்டாத உயிரினமே உலகில் இல்லை எனலாம்.எதிர்பாலினரை கவர அழகு அவசியம். மயில், புறா போன்ற பறவைகள் தங்களது தோகை, இறகுகளை பயன்படுத்தி நடனமாடி தங்களது எதிர்ப்பாலினரை ஈர்க்கின்றன. அதிலும் தலை முடியை அழகு படுத்திக்கொள்வதில் மனிதர்கள் காட்டும் அக்கறை, அதற்காக செலவிடும் நேரம், தொகை அதிகம். இன்று மனிதர்கள் தங்கள் கேசத்தை பராமரிப்பதற்காக செலவிடும் தொகை ஒரு ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் என்கிறது புள்ளி விபரங்கள்.
தலை முடி நன்கு வளர ஜோதிடத்தில் அழகுக்கு காரக கிரகமான சுக்கிரனின் பங்கு மிக முக்கியம். அதனால்தான் ஆண் வழுக்கையர்கள் உண்டு. பெண்ணே சுக்கிரனின் அம்சம் என்பதால் பெண்ணுகளுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை. சுக்கிரன் முடி வளர்ச்சிக்குத் தேவையான சுரப்பிகளின் செய்யல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. கேசத்தை நேரடியாக குறிப்பிடும் கேதுவும் ஜாதகத்தில் சிறப்பாக இருத்தல் நன்று. தலையை குறிக்கும் லக்னமும், கால புருஷ தத்துவப்படி தலையை குறிக்கும் மேஷமும், மேஷத்தில் உச்சமாகும் தலைக்கு காரக கிரகமான சூரியனும் ஒருவரது ஜாதகத்தில் தலை முடியின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன.
ஜோதிடத்தில் தலை முடியை நேரடியாக குறிக்கும் கேதுவே சுக்கிரனுடன் தொடர்புகொண்டால் முடி வளர்ச்சிக்கு தடையை உண்டு செய்வார். அதே சமயம் மேஷத்திற்கு பாதக அதிபதியும் மேஷத்தில் நீச்சமடையும் மேஷ அதிபதி செவ்வாயின் பரம எதிரியான சனி மேஷத்துடனோ, லக்னத்துடனோ தலை முடி வளர்ச்சிக்கு தடையை உண்டு செய்வதில் முன்னிலை வகிக்கிறார். சனி மயிர்க்கால்களை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாயின் மற்றொரு எதிரி கிரகமான புதன் மேஷத்துடனோ அல்லது லக்னத்துடனோ தொடர்புகொண்டாலும் சனியை விட தீவிரமாக செயல்பட்டு தலையில் வழுக்கையை உண்டு செய்கிறது. காரணம் புதன் தோலில் சுரக்கும் ஒருவிதமான எண்ணைப் பசையை சுரக்க உதவும் காரக கிரகமாகும். இந்த எண்ணைப் பசையே மயிர்க்கால்கள் உடலில் ஊன்றி வளர உதவுகின்றன.
செவ்வாய் – வேகம், புதன் – விவேகம். இதனை முன்னிட்டே தலை முடி கொட்டி வழுக்கை நிலை பெற்றவர்கள் புதனின் தாக்கம் நிறைந்தவர்கள் எனவும் செவ்வாயின் தாக்கம் குறைந்தவர்கள் எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டு விவேகம் குடிகொண்டுள்ள ஒருவரிடம் வேகம் கட்டுப்பாட்டுடனே இருக்கும் என்ற அடிப்படையில் வழுக்கையர்கள் புத்திசாலிகள் எனவும் காம தத்துவத்தை குறிப்பிடும் புதனின் அம்சம் நிரம்ப பெற்றவர்கள் என்பதாலும் காம உணர்வு நிரம்பியவர்கள் எனவும் பொதுவான ஒரு கருத்து உண்டு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
கன்னி லக்ன ஜாதகத்தில் ஆறாமதிபதி சனி லக்னத்திலேயே நிற்கிறது. நவாம்சத்தில் சனி மேஷத்தில் நிற்பதால் ஜாதகருக்கு சனியில் வெளிப்பாடு தலையில் வெளிப்படும். மயிர்க்கால்கள் வழு குறைந்தவை என்பதை இது குறிக்கிறது. சுக்கிரன் ஜாதகத்தில் நீச்சம். இதனால் முடி வளர்ச்சிக்கான சுரப்பிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்காது. சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது உள்ளதால் சுக்கிரனின் செயல்பாடு கேதுவால் பாதிப்படையும். இதனால் முடி வளர்ச்சி தடைபடும். பாதகாதிபதி குருவே தலையை குறிக்கும் லக்னத்தில் அமர்ந்துள்ளதால் பாதகாதிபதியும் தலையில் பாதிப்பை ஏற்படுத்துவார்.
திருவாதிரை முதல் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு குரு திசையில் சூரியன் சாரத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் 26 வயதில் தலைமுடி கொட்டத் துவங்கியது. தற்போது 39 வயதில் ஜாதகர் சனி திசையில் கேது புக்தியில் தலையில் ஒரு முடிகூட இல்லாத முழு வழுக்கையாக மறைந்த சோ – ராமசாமி போல (பத்திரிகையாளர், வழக்கறிஞர் முழுமையான புதனின் அம்சம்) காட்சியளிக்கிறார்.
கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகத்தில் லக்னமே தலைக்கு காரக கிரகமான சிம்மமாக அமைந்துள்ளது. சூரியன் செவ்வாயின் விருசிட்சிக ராசியில் சனியின் அனுஷ நட்சதிரத்தில் அமைந்துள்ளது. சூரியனுக்கு பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. இந்த ஜாதகத்திலும் சுக்கிரன் நீச்சம். மேஷத்தில் ராகு, மேஷாதிபதி செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளது. சனி லக்னத்திற்கு 8 ல் வக்கிர கதியில் மறைந்து சூரியனுக்கு திரிகோணத்தில் சுய சாரத்தில் உத்திரட்டாதியில் நிற்கிறார். கேது முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சுக்கிரனின் மூலத்திரிகோண வீட்டில் அமைந்து நீச சுக்கிரனை நோக்கியபடி கால புருஷனின் தலையைக் குறிக்கும் மேஷாதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நிற்கிறார். அஸ்டமாதிபதி குரு தலையை குறிக்கும் லக்னத்தில் நிற்பது போன்ற அமைப்புகள் தலை முடி வளர்ச்சிக்கு சாதகமானவை அல்ல.
ஜாதகருக்கு அவரது 28 ஆவது வயதில் கால புருஷனின் தலையை குறிக்கும் செவ்வாயின் சாரம் பெற்று தலைக்கு காரக கிரகமான சூரியனுக்கு விரையத்தில் இருந்து கேது திசை நடத்த துவங்கியது முதல் தலை முடி கொட்டத் துவங்கியது. தற்போது நீச சுக்கிர திசையில் மேஷத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற புதனின் புக்தியில் முழு வழுக்கையாக காட்சி தருகிறார்.
இப்படி தலை முடி கொட்ட துவங்குபவர்களுக்கு உரிய பரிகாரங்கள் ஏதேனும் உள்ளதா எனில் இதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்றுதான் கூறமுடிகிறது. சர்க்கரை வந்தவர்கள் நடைப்பயிர்ச்சியின் மூலம் சர்க்கரையின் தாக்கத்தை குறைத்துக்கொள்வது போல சில முறைகள் உண்டு. அவைகளில் சிலவற்றை கீழே அளித்துள்ளேன்.
சூரியனுக்கு பரிகாரமாக பிரதோஷ வழிபாடு மற்றும் சூரினோடு செவ்வாய்க்கும் சேர்த்து பழனிமுருகன் மற்றும் சுவாமிமலை முருகன் ஆகியோரையும் அனைத்து மலை மீது இருக்கும் முருகனையும் வணங்கி வரலாம்.
காவல் காரகன் செவ்வாய்க்கு பரிகாரமாக வீட்டு பாதுகாப்புக்கு நாய் வளர்ப்பது நல்ல பலனைத் தரும். அதோடு செவ்வாய் குறிப்பிடும் சில உடற்பயிற்சிகளை குறிப்பாக யோகாசனங்களை அதிலும் குறிப்பாக தலைக்கு இரத்த ஓட்டம் செல்லும் சிரசாசனத்தை தகுந்த யோகா ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்து வருவது அணைத்து வகை பரிகாரங்களிலும் மிகுந்த பலனளிக்கும் ஒன்று. விவசாயிகளுக்கு முடிந்த உதவிகள் செய்தல் அவர்களின் விளைச்சலுக்கு உகந்த விலை கிடைக்கச் செய்தல் ஆகியவை நல்ல பலனளிக்கும். நல்ல விளைச்சல் பூமியை கழிவுகளை கொட்டி வீணடிக்காமல் பாதுகாத்து உகந்த வகையில் மரங்களையாவது நட்டு பராமரிப்பது, குறிப்பாக குல்மொஹார் வகை மரங்களை நட்டு பராமரிப்பது நல்ல பலனை அளிக்கும்.
புதனின் அம்சமான பள்ளி செல்லும் சிறார், சிறுமியருக்கு அவர்தம் கல்விக்கு விளையாட்டிற்கு உதவுதல் மற்றும் இசைக் கலைஞர்களை ஆதரித்தல். மகா விஷ்ணுவை வணங்கி வருதல். புதன் செவ்வாய் குறிக்கும் நரசிம்மரை வழிபடுதல் ஆகியவை நன்மை பயக்கும்.
சுக்கிரனின் அம்சமான பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை மதித்து மரியாதையும் கௌரவமும் கொடுத்து நடத்துதல். வேதம் ஓதும் பிராமணர்களை ஆதரித்தல். இவற்றோடு புதன் சுக்கிரன் இருவருக்குமாக வியாபாரிகளை ஆதரித்தல். பதுக்கல் காரர்களை ஆதரிக்காமல் இருத்தல் ஆகியவை நலம் பயக்கும்.
சனிக்கு பரிகாரமாக எளியோர், நோயாளிகள், நீதிபதிகள், உழைப்பாளிகள், கடை நிலை ஊழியர்கள் ஆகியோருக்கு உதவுதலும் ஆஞ்சநேயர், பைரவர், குல தெய்வம், காவல் தெய்வம், பைரவர் ஆகியோரை வணங்கி வரலாம்.
கேதுவிற்கு பரிகாரமாக கணபதியை வணங்கி வருதல். முருகனோடு இணைந்த கணபதியையும் வணங்கி வரலாம். இது செவ்வாய் கேது இரண்டிற்கும் பரிகாரமாக அமையும். ஞானிகளை கண்டு ஆசி பெறுதல் ஜீவ சமாதியான மகான்களை வழிபடுதலும் சிறப்பு. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள், கோவில் பணியாளர்களை ஆதரிப்பது ஆகியவை கேதுவால் ஏற்படும் தலை முடி பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பது உறுதி. சங்கட ஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து கணபதியை வணங்கி வருவது சிறந்த பரிகாரமாகும்.
மேற்சொன்னவற்றில் குறிப்பாக முடி கொட்டத் துவங்கும் போது திசை நடத்தும் கிரகத்தின் தாக்கத்தை அறிந்து அதற்குரிய வழிபாடுகளை செய்வதே மிகுந்த பலனளிக்கும் பரிகாரமாகும்.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,பழனியப்பன்.
கைபேசி: 8300124501