தன் பிறப்பின் நோக்கம் என்ன?
தனது கர்மா என்ன?
தன்னை எது வழிநடத்துகிறது?
என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும். இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.
ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன் அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர் லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன் சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.
இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்) கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.
இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின் பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின் வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.