ஜாதகம் இல்லாதோருக்கு பிரசன்னம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கேட்கப்படும் கேள்விக்கு துல்லியமான பதிலை, கேள்வியின் தன்மையை, கேள்வியாளரின் நிலையை சுட்டிக்காட்டவல்லது. பிரசன்னங்களில் இதர வகை பிரசன்னங்களைவிட பலபடி உயர்ந்தது, எளிமையானது, துல்லியமானது ஜாமக்கோள் பிரசன்னமாகும். நம்பிக்கையான பதிலை தரவல்லது. நான் எப்போதும் ஜாதக பலன் கூறும்போது ஜாமக்கோள் பிரசன்னத்தை ஒப்பிட்டே பலன் கூறி வருகிறேன். ஜாதகம் தவறாக இருப்பின் பலன்களும் தவறாகவே அமையும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பிரசன்ன ஜாதகத்தை ஜோதிடர்களை காக்கும் கருவியாக பயன்படுத்தலாம்.
ஜோதிடரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது எனில் கேள்வியின் காரக, பாவங்களையும், திசா-புக்திகளையும், கோட்சாரத்தையும் ஒப்பிட்டு பதிலளிப்பது என்பது பெரும்பாலும் அனைத்து ஜோதிடர்களும் கடைப்பிடிக்கும் எளிய முறையாகும். ஆனால் கேள்வி தொடர்பான விஷயத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலையையும் அதன் போக்கையும் துல்லியமாக அறிய ஜாமக்கோள் ஆரூடம் மிகச்சிறப்பாக பயன்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல.
கீழே வேலை தொடர்பாக ஒரு ஆணுக்காகக் கேட்கப்பட்ட பிரசன்னம்.
துலாம் உதயம்.ஜாம உதயாதிபதி துலாத்தில் ஆட்சி பெற்று ராகுவின் சுவாதி-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரன் ராகுவோடு சேர்க்கை பெற்று உதயத்திற்கு 9 ல் மிதுனத்தில் நிற்கிறார். இரு சுக்கிரனும் ராகுவோடு தொடர்புகொண்டதால் ஜாதகர் ஏதோ ஒரு தடையை சந்தித்துக்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவம், ஜீவன பாவமான 1௦க்கு விரைய பாவமாகிறது. இதனால் ஜீவனம் தடையாகியுள்ளது. வெளிவட்ட சுக்கிரன், தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் உதயத்திலேயே நிற்பதால் தன வரவு தடையாகிக்கொண்டிருப்பது தெரிகிறது. உள்வட்ட சுக்கிரன், வேலை பாவமான உதயத்திற்கு 6 ஆமிடாதிபதி குருவின் புனர்பூசம்-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரனின் சார நாதன் குருவெளிவட்டத்தில் நீசமாகியுள்ளார். உள்வட்ட குரு, கேதுவோடு இணைந்து பாதிக்கப்பட்டுள்ளார். இரு குருக்களும் ஜாதகரின் பணி இழந்த சூழலை தெளிவாக கூறுகின்றனர்.
ஜீவன பாவமான 1௦ ஆமதிபதி சந்திரன் உள் வட்டத்தில் புதனின் கேட்டை-4 ல் நீசமாகியுள்ளார். வெளிவட்ட சந்திரன் அதே புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். இது ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வேலையில் வெளிநாடு தொடர்புடைய வகையில் முன்னர் பணிபுரிந்து தற்போது பணி இழந்துள்ள சூழலை தெரிவிக்கிறது. உதயத்திற்கு 6 ஆமிடம் நீர் ராசியாகி அதன் அதிபதி குரு நீர் கிரகமாகி, 1௦, 2 ஆகிய பாவங்கள் நீர் ராசியான கடகமும், விருட்சிகமும் ஆகி, அதன் அதிபதிகள் நீர் கிரகமான சந்திரனே ஆவது ஆகியவை ஜாதகரின் முந்தைய பணிச்சூழலை தெளிவாக கூறுகிறது. ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து பணியிழப்பை சந்த்திதவர். கவிப்பு உதயத்திற்கு 1௦ ல் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. இது ஜீவனத்தில் பாதிப்பையும்.உறுதி செய்கிறது.
வேலைக்கு காரக கிரகம் சனி வெளிவட்டத்தில் உதயத்திற்கு விரையத்தில் கன்னியில் சூரியனின் உத்திரம்-3 ல் நிற்கிறது. உள்வட்ட சனி 4 ஆம் பாவத்தில் வக்கிரம் பெற்று அதே சூரியனின் உத்திராடம்-2 ல் நிற்கிறது. இது ஜாதகர் தனது பணியில் நிறைந்த மதிப்பையும் கௌரவத்தையும் எதிர்பார்ப்பவர் என்பதை குறிக்கிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவ ராகு செவ்வாயின் மிருகசீரிஷத்தில் நிற்கிறது. செவ்வாய் பாதகாதிபதிபதி உச்ச சூரியனோடு இணைந்து உதயத்திற்கு 7 ல் உச்சம் பெற்று நிற்பது ஜாதகரின் வேலையில் அவருக்குறிய மதிப்பும், அங்கீகாரமும் ஜாதகரின் உயர் அதிகாரிகளால் மறுக்கப்படும் என்பதை தெரிவிக்கிறது. இங்கே உயர் அதிகாரி என்பதை செவ்வாயும் உயரதிகாரியால் வேலையில் பாதிப்பு என்பதை செவ்வாய் சாரத்தில் நிற்கும் ராகுவும் குறிப்பிடுகின்றனர். செவ்வாய் இங்கு உயரதிகாரி (Team Leader) என்பதையும், தலைமை அதிகாரி என்பதை சூரியனும் (Owner & Project Head) சுட்டிக்காட்டும். உள்வட்ட சனி கேதுவை கடந்து மகரத்திற்கு போயுள்ளது. இது ஜாதகர் சனி+கேது சேர்க்கையால் கடந்த ஓரிரு வருடங்களாகவே சரியான பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்நிலையில்உள்வட்ட குரு வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்திற்கு செல்ல மேலும் 2 வருடங்களுக்கு மேலாகும்.உள்வட்ட கேது உதயத்திற்கு 1௦ ஆமதிபதியான நீச நிலைபெற்ற சந்திரனை நோக்கி வருகிறது. இது ஜீவன தடை தொடர்வதையே குறிக்கிறது. கேது சந்திரனை கடந்து உதயத்திற்கு செல்லும்வரை தடை நீடிக்கும்.அதுவரை ஜாதகருக்கு சரியான வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இடையே கிடைக்கு ஓரிரு வாய்ப்புகளும் ஜாதகருக்கு பொருந்தாதவைகளாகவே அமையும் என்பதை பிரசன்னம் குறிப்பிடுகிறது. பிரசன்னத்தில் தெரியும் இந்த நிலையை ஜாதகருக்கு எடுத்துச்சொல்லி ஜாதகரை அதுவரை தாற்காலிக வேலைகளிலோ அல்லது தனது திறனை வளர்த்துக்கொள்வதிலோ கவனத்தை செலுத்தச்செய்து தெம்பூட்ட வேண்டும். இது ஒரு ஜோதிடரின் தலையாய கடமை ஆகும். இது கேள்வியாளர் தனது நிலையில் சோர்வடையாமல் திட்டமிட மிக உதவும்.
மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501