இன்று சாமான்யன் முதல் மெத்தப்படித்த அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் மன அழுத்தம். பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படும் என்றாலும், பொதுவாக இதை பொருளாதாரம், உறவுகள், கடமைகள், ஆரோக்கியம், சமுதாயச் சூழல் ஆகிய ஐந்து விதமாக வரையறை செய்யலாம். சாதாரண மனிதர்களுக்கு பொருளாதாரமே மிகப்பெரிய மன அழுத்தத்தை தருகிறது என்றால், பணம் படைத்தவர்களுக்கு பொறுப்புகள் சார்ந்த வகையில் மன அழுத்தம் அதிகம். மற்றவர்களோடு தங்கள் வாழ்வை ஒப்பிட்டு மன அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பான்மை சதவீதத்தினர். இதை எளிதாக கையாள இயல்பான மருந்து என்பது மனம் விரும்பும் வேலை, செயல்கள், சூழல்களை சுவீகரியுங்கள் என்பதுதான். ஏமாற்றத்திற்கு உள்ளாபவர்கள்தான் மன நோயாளிகளாகின்றனர். இன்றைய பதிவில் ஜோதிட ரீதியாக மன அழுத்தத்தை கையாள்வது எவ்வாறு என்று ஆராய இருக்கிறோம்.
ஜோதிடத்தில் மனதை ஆளும் கிரகமாக சந்திரனே கூறப்படுகிறார். இதனால் ஒருவரின் மனநிலையை, விருப்பு, வெறுப்புகளை ஆராய ஜாதகத்தில் கடக ராசி, சந்திரன், மனதை குறிக்கும் பாவமான 5 ஆமிடம் இவற்றின் தொடர்புகளை ஆராய வேண்டும். சந்திரன் இருக்கும் ராசி, சந்திரனை பார்க்கும் கிரகங்கள், சந்திரனின் சார நாதர்கள், சந்திரனின் சாரம் பெற்றோர் மற்றும் சந்திரனுக்கு நெருங்கிய பாகை பெற்றோர் என்ற வகையில் சந்திரனை ஆராய வேண்டும்.
ஒருவரின் தீவிர மன அழுத்தத்திற்கு ஜனன ஜாதகத்தில் ஒளி கிரகமான சந்திரனோடு நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களின் தொடர்பே முக்கிய காரணமாகிறது. ஜாதகத்தில் புதனும், 5 ஆவது பாவமும் பாதிக்கப்பட்டு, சந்திரனுக்கு ராகு தொடர்பு இருந்தால், பாதகமான தசா-புக்திகளில் அந்த ஜாதகர் புத்தி பேதலித்து பைத்தியம், பேய் பிடித்தல் போன்ற நிலையை அடைகிறார். மனம் பேதலிக்கப்பட ராகுவும், மன அழுத்தத்திற்கு கேதுவும் காரணமாகின்றன. கேதுவால் ஏற்படும் மன அழுத்தத்தை நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்பிட்ட சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் பெருமளவு கட்டுப்படுத்தலாம். கடுமையான மன அழுத்தங்கள் குறிப்பிட்ட சில தசா-புக்திகளில்தான் அதிகம் வெளிப்படும். அவை குறிப்பிட்ட தசா-புக்திகளை கடந்த பிறகு நீங்கிவிடும். கோட்சார சந்திரனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பொதுவாக சந்திரன் குறிப்பிட்ட ராசியை கடக்கும் இரண்டேகால் நாளில் முடிவுக்கு வந்துவிடும். இன்றைய பதிவில் கேதுவால் ஏற்படும் மன அழுத்தத்தை ஜோதிட ரீதியாக எப்படி கையாள்வது என்பதை காண்போம்.
ஜாதகர் 1988 ல் பிறந்த ஒரு ஆண். இவரது ஜாதகத்தில் கேது சந்திரனை நோக்கி வருகிறது. கேதுவால் தீண்டப்படும் சந்திரன் பாதிப்படைகிறது. கடக சந்திரன் அரசியல், மக்கள் நலம், பொதுச்சேவை ஆகியவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். இதனால் இவர் மன அழுத்தம் நீங்க பொதுச்சேவையில் ஈடுபடுகிறார். அதனால் தனது மனம் நிறைவடைவதாக கூறுகிறார்.ராகு-கேதுக்கள் பொதுச்சேவையை ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் ஊர் சுற்றி கிரகங்கள் என்பதால் அது இவருக்கு நிறைவு தருகிறது. இத்தகையவர்கள் வீட்டிலேயே அடைந்துகிடந்தால் நிச்சயம் மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
ஜாதகர் 1944 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசின் வணிகத்துறையில் வரி வசூல் ,அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது ஜாதகத்தில் சந்திரனை நோக்கி கேது வருகிறது. இதனால் இவரது மனம் பாதிக்கப்படும். பொதுவாக ராகு-கேதுக்கள் 3, 6, 11 ஆகிய பாவங்களில் அதிக தீமையை செய்யாது. இங்கு 6 ஆம் பாவத்தை நோக்கி வரும் கேது அதிக பாதிப்பை வழங்க மாட்டார். ஆனால் சந்திரன் எப்படியும் பாதிப்படைவார். ஆனால் சந்திரனை அவர் நிற்கும் வீட்டோனும் பரம சுபருமான குரு தனது 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் கேது சந்திரனை தீண்டுவதால் ஏற்படும் தோஷம் ஜாதக அமைப்பிலேயே குருவின் வீடு, 6 ஆம் பாவம், குரு பார்வை ஆகியவற்றால் நீங்கிவிடுகிறது. எப்படி எனில், கேது சட்டம், வரி வசூல் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். இவரது பணியே வரி வசூல் தொடர்புடையதுதான். தனது காரக வேலையை ஜாதகர் செய்வதால் கேது தனது பாதிப்பை கொடுக்காமல் தவிர்க்கிறார். பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பதால், தற்போது ஜாதகர் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் பணி ஓய்வுக்குப் பிறகு இவர் குத்தூசி மருத்துவம் (Acupuncture) பயின்று சேவை செய்து வருகிறார். குத்தூசி மருத்துவம் கேதுவின் காரகத்தில் வருவதாகும் இதனால் பணி ஓய்விலும் மனம் விரும்பிய செயல்களால் தனது மனநிலையை பாதிப்பின்றி வைத்துக்கொள்கிறார்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவி இவர். ஜாதகத்தில் கல்வி, புத்தி, காதல் ஆகியவற்றின் காரக கிரகமான லக்னாதிபதி புதன் நீசமானது பெரிய பலவீனம். மனோ காரகரான சந்திரனும் நீசமடைந்து கேது அவரை நோக்கி வருகிறார். இதனால் இவரது மனநலம் பெரிதும் பாதிக்கப்படும். இவர் பள்ளி செல்கையில் சக மாணவன் ஒருவன் காதல் கடிதம் கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட மனப்பதட்டம் மனப்பயமாக மாறியுள்ளது. இதனால் எங்கே பள்ளிக்கு சென்றால் மாணவன் தன்னை கடத்தி விடுவானோ என்ற அச்சத்தில் பள்ளி செல்லவே தங்குகிறார். பயம் அதிகமானதால் மின் அதிர்வு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருந்தும் பலனில்லை. இத்தகைய தீவிர பாதிப்பிற்கு மனவளப்பயிற்சி மட்டுமின்றி தொடர்ந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். சாதகமான தசா-புக்தியும், கோட்சாரமும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகையவர்களுக்கு மனநிலை மேம்படும்.
26 வயது இளைஞர் இவர். சந்திரன் கேது சேர்க்கை மேஷத்தில் இருப்பது கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜாதகருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இவர் செய்யும் தொழில் அதற்கு தடையாக உள்ளதாக கருதும் பெற்றோர், அதை விடுத்து வேறு தொழில் செய்ய கூறுகிறார்கள். ஆனால் அது தனது விருப்பத்தொழில் என்பதால் விட மறுக்கிறார் ஜாதகர். இவ்விழைஞர் வண்ண மீன்களை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். கூடுதலாக பறவைகளையும் வளர்த்து வருகிறார். வளர்ப்பு பிராணிகளை குறிக்கும் பாவம் 8 ஆம் பாவமாகும். சுக்கிரன் அதன் காரக கிரகமாகும். கேது, சந்திரன் இருவரும் ராசிக்கு 8 ல் இருக்கும் சுக்கிரனின் சாரத்தில் இருப்பதால் இவர் மீன் வளர்ப்பை விரும்பிச் செய்கிறார். சந்திரனும் கேதுவும் நீர் கிரகங்கள் என்பதோடு, ஒருவர் தனது மகிழ்ச்சிக்காக செய்யும் செயல்களை குறிக்கும் 11 ஆம் பாவத்தில் இவ்விரு கிரகங்களும் இணைந்திருப்பதால் இதில் ஜாதகருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது. இதனால் இதை விடுத்து வேறு தொழிலுக்கு மாறுவது தனக்கு மகிழ்வை தராது என்பதால் தொழிலை விட முடியாது என்கிறார். இத்தொழிலில் இருப்பதால் இவருக்கு ஜாதகத்தில் இருக்கும் மன அழுத்த அமைப்பை தனது தொழிலாலே போக்கிக்கொள்கிறார்.
பெரும்பாலான மன அழுத்த பாதிப்புகளுக்கு அதிக பொழுதுபோக்குகள், புதிய அனுபவங்களைத்தரும் சுற்றுலாக்கள். இசை, புத்தக வாசிப்பு, ஆன்மிகம், இயற்கையோடு இணைந்து இருத்தல், மன மகிழ்வான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை நல்ல பலனை தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501