ஜாதக தோஷங்களை பரிகாரங்களின் மூலம் போக்கிக்கொள்ள முயல்வதைவிட உரிய காலத்தை பயன்படுத்தி அவற்றை எதிர்கொள்வதே நடைமுறையில் மிகச் சிறந்த வகையில் பலனளிக்கிறது. பரிகாரங்கள் தோஷத்தின் தீவிரத்தை குறைப்பதோடு சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்குகின்றன என்பதே உண்மை. தோஷங்களை வழங்கும் கிரகங்களின் தசா-புக்திகளை ஜாதகர் எதிர்கொண்டால்தான் அந்த தோஷத்தால் ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படும். இல்லையேல் ஜாதகர் அதுபற்றி கவலைகொள்ள வேண்டியதில்லை. ஒரு பாவகத்தில் நிற்கும் கிரகம் அந்த பாவக பலனை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட அக்கிரகம் சார்ந்த வகையில் ஜாதகருக்கு அப்பாவக பலனை வழங்குவதில் தடையை ஏற்படுத்துவதில்லை. அதன் காரக வகையை மீறி மாறுபட்ட காரகம் தொடர்புபெற்றால் அப்பாவக பலனை தடுக்கிறது. உதாரணமாக 7 ல் நிற்கும் கிரகம் ராகு என்றால், ஜாதகருக்கு திருமண உறவு அந்நிய தொடர்பில், வெளிநாடு, மின்னணு மென்பொருள், மருத்துவம் அல்லது குறைபட்டவை போன்ற தனது காரகத்தில் அமைவதை ராகு தடுப்பதில்லை. இதர வகைகளில் ஜாதகர் திருமண உறவை விரும்பினால் மிகுந்த தடை தாமதத்தை ஏற்படுத்தி ஜாதகரின் திருமண வாழ்வையே கேள்விக்குறியாக்குகிறது. இன்றைய பதிவில் திருமண தோஷத்தை சாதகமான கிரக புக்தி காலத்தையும் கோட்சாரத்தையும் பயன்படுத்தி குறைத்துக்கொள்வது பற்றி ஒரு உதாரண ஜாதக ஆய்வு மூலம் காண்போம்.
முறையான உடல் ரீதியான சுகத்தை அடைய கால புருஷனின் சுக ஸ்தானாதிபதி சந்திரனும், புத்திரப்பேறு அமைய கால புருஷனின் 5 ஆமதிபதி சூரியனும் ஜாதகத்தில் பாதிப்பின்றி அமைந்திருப்பது அவசியம். இவை இரண்டும் ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான உடல் சுகம பெறுவது தாமதப்படும் அதன் காரணமாக புத்திரப்பேறும் தாமதமாகும். குடும்பம் உரிய காலத்தில் அமைய குடும்ப காரகர் குரு ஜாதகத்தில் சிறப்புற அமைந்திருக்க வேண்டும். களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாய் மற்றும் களத்திர பாவாதிபதி ஆகியோரும் பாதிப்பின்றி அமைந்திருக்க வேண்டியது முக்கியம்.
மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய் ராசி அதிபதியாகி, சுபரான சுக்கிரனுடன் இணைவதால் செவ்வாய் தோஷம் வேலை செய்யாது. ஆனால் 2 ஆமதிபதி செவ்வாய் அஷ்டமாதியுடன் இணைவு பெறுவது தோஷத்தை ஏற்படுத்தும். இது பொருளாதாரத்தை வழங்கி குடும்ப விஷயங்களில் தடை தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். 7 ஆம் பாவகத்திற்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. 7 ஆமதிபதி புதன் 6 ல் அமைந்து ராகு சேர்க்கை பெற்றிருப்பது களத்திர தோஷமே. இந்த தோஷம் செயல்படுமா என்று பார்த்தால் ஜாதகிக்கு அஷ்டமாதிபதியான சுக்கிரனின் தசை தற்போது துவங்கியுள்ளது. இதனால் தோஷம் செயல்படும் அமைப்பு உள்ளது.
சுக்கிர தசையில் சுய புக்தி 2௦23 பிற்பகுதி வரை உள்ளது. சுக்கிரன் சாரத்தில் 6 ஆமிடத்தில் சூரியனும், ராகுவும் கேது சாரம் பெற்ற புதனுடன் உள்ளனர். தசாநாதன் 6 ஆமிட தொடர்பு பெற்றதால் ஜாதகிக்கு படித்த உடனே வேலையும் கிடைத்தது. 1997 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது திருமண காலம். 7 ஆமிடத்திற்கு பாவ கர்த்தாரி யோகம் உள்ள நிலையில் 8 ஆமதிபதி சுக்கிரன் 6 ஆமிட தொடர்பில் இருந்து தசை நடத்துகிறார். 7 ஆமதிபதி ராகு தொடர்பில் 7 க்கு விரையத்தில் 6 ல் நிற்க களத்திர காரகர் செவ்வாயும் 8 மறைவது திருமணம் உரிய காலத்தில் நடக்க வாய்ப்பில்லா நிலையை குறிக்கிறது. மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி சுக்கிரன் கடும் பாதிப்பை தருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜாதகிக்கு திருமணம் செய்வித்தால் என்னவாகும். அதற்காக தற்போதுதான் துவங்கியுள்ள சுக்கிர தசையின் 2௦ வருடங்களை கடந்த பிறகு திருமணம் செய்யலாம் என்றால் வாழ்க்கை வீணாகிவிடும். இத்தகைய சூழலில்தான் ஒரு ஜோதிடருக்கு பொறுப்பு அதிகமாகிறது. சுக்கிர தசை 2௦ வருடம் என்றால் அதில் முதல் 1௦ வருடங்கள் தான் நின்ற 8 ஆமிட பலனையும் அடுத்த 1௦ ஆண்டு காலம் ரிஷபதிற்கான பலனையும் அளிப்பார் எனலாம். ரிஷபம் காமத்திரிகோணத்தின் முதல் திரிகோணமான 3 ஆம் பாவகம் என்பதால் அப்போது திருமணம் செய்வது நன்மையே. ஆனால் அப்படிப் பார்த்தாலும் ஜாதகிக்கு 3 ஆம் பாவக பலன் கிடைக்கும் காலம் வயது 32 க்கும் மேலாகிவிடும். லக்னத்தில் ஒரு வக்கிர கிரகமான சனி, லக்னாதிபதி குரு நீசமாகி வக்கிரம், 7 ஆமதிபதியும் வக்கிரம் என்பதால் ஜாதகிக்கு திருமண தோஷம் ஜாதகியின் இணக்கமற்ற, பிடிவாதம் சார்ந்த வகையில்தான் அமையும். எனவே ஜாதகியின் எண்ணங்களுக்கேற்ப வரனை பொருத்தினால் இந்த தோஷத்தை ஓரளவு சரி செய்ய இயலும். இந்நிலையில் 8 மறைவிடம் என்பதால் ஜாதகிக்கு திருமணம் செய்வித்தால் வெளிநாட்டில் வாழ வழியுண்டு. அதாவது சொந்த ஊரை விட்டு விலகி வெகுதொலைவில் மறைந்து வாழ்வதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. எனவே ஜாதகிக்கு வெளிநாட்டு வரனை திருமணம் செய்விப்பது ஓரளவு பலன் தருவதாக அமையலாம். செவ்வாய் ராசி அதிபதி என்பதுடன் அவர் லக்னாதிபதி குருவின் விசாகத்தில் நிற்பதால் ஜாதகி வெளிநாடு தொடர்புடைய வரனை திருமணம் செய்ய வாய்ப்புண்டு. களத்திர காரகர் செவ்வாயே ராசி அதிபதியாகி ராசிக்கு 7 ஆமதிபதி சுக்கிரனுடன் சுக்கிரனின் மூலத்திரிகோண வீட்டில் ராசிக்கு 12 ல் மறைவது ஜாதகிக்கு கணவரோடு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி 12 ல் இருப்பதும் இதை தெளிவாக்குகிறது. உண்மையில் அப்படி ஒரு ஆலோசனையும் வழங்கப்பட்டது. இங்கு லக்னாதிபதி சாரத்தில் ராசி அதிபதியும், களத்திர காரகருமான செவ்வாய் இருப்பதும், அவர் ராசிக்கு 7 ஆமதிபதி சுக்கிரனும் இணைவு பெற்றிருப்பதும் ஒருவகையில் நன்மையே. இதனால் செவ்வாய் தசாநாதரான 8 ஆமதிபதியின் கடுமையை பெருமளவு குறைத்துவிடுகிறார். செவ்வாய் சுக்கிரனைவிட அதிக பாகை பெற்று நிற்பது கணவருக்கு ஜாதகி கட்டுப்பட்டவர் என்பதை குறிக்கிறது.
இப்போது திருமண காலத்தை கவனமாக தெர்ந்தெடுப்பது மிக முக்கியம். தற்போது ஜாதகி சுக்கிர தசை சுய புக்தியில் உள்ளார். அடுத்த புக்திநாதரான 6 ஆமதிபதி சூரியன் சுக்கிரனின் பூர நட்சத்திரத்திலேயே இருப்பதால் சூரிய புக்தியிலும் திருமணம் செய்விப்பது கூடாது. சூரிய புக்திக்கு அடுத்த புக்தி நாதர் சந்திரன் 7 ன் லாபாதிபதி என்பதோடு அவர் 7 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே உள்ளார். இதனால் இந்த ஜாதகிக்கு சுக்கிர தசையின் சந்திர புக்தியில்தான் திருமணம் செய்ய வேண்டும். முன்னதாக திருமணம் செய்தால் என்ன நடக்கும் என்பதை கோட்சாரம் தெளிவாக்குகிறது. தற்போது கோட்சாரத்தில் கேது ஜனன கால சுக்கிரன் மற்றும் களத்திர காரகர் செவ்வாயின் மீதும் சென்றுகொண்டிருக்கிறார். இதனால் தற்போது திருமணம் செய்வது பிரிவினையை ஏற்படுத்தும். ஜாதகிக்கு அத்தகைய பாதிப்புகள் எதுவும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் கோட்சாரத்தில் லக்னத்திலேயே லக்னாதிபதி குரு வலுவாக நிற்கிறார். பரிவர்த்தனை கோட்சாரத்தில்தான் செயல்படும் என்பதற்கேற்ப தற்போது மீனத்தில் சனியும் மகரத்தில் குருவும் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். பரிவர்த்தனைக்குப் பிறகும் குரு மகரத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக 7 ஆமிடத்தை தனது கட்டுப்பாட்டில் வைக்கிறார். பரிவர்த்தனை குரு மகரத்தில் பலவீனமாக இருப்பதாக இங்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் பரிவர்த்தனை கிரகங்கள் உச்ச கிரகத்தைவிட வலுவானவை. எனவே குரு மகரத்தில் இருந்தாலும் பலமாகவே இருப்பார்.
திருமண காலமான சந்திர புக்தியில் ராசிக்கு 7 ல் சுக்கிரனுக்கு 8 ல் ரிஷபத்தில் நின்று தனது சிறப்பு வாய்ந்த 5 ஆம் பார்வையால் 7 ஆம் பாவத்தை குரு பார்ப்பார். ஜனன சுக்கிரனுக்கு ஆயுள் ஸ்தானமான ரிஷபத்தில் நிற்கும் கோட்சார குரு சுக்கிரனை முழுமையாக கட்டுப்படுத்துபவராகிறார். அப்போது அஷ்டமாதிபதி சுக்கிரனுக்கு குரு தனது சுபத்தன்மையை வழங்கி சாந்தமாக்குவார். அப்போது லக்ன பாகையை கோட்சார ராகு-கேதுக்கள் கடந்த பிறகு ஜாதகிக்கு திருமணம் செய்வது பாதிப்பை முற்றிலும் தவிர்க்கும். அதாவது 2024 இறுதியில் இருந்து 2025 முற்பகுதி வரையிலான காலத்தில் ஜாதகிக்கு 27 வயது முடிந்த பிறகு திருமணம் செய்தால் தசாநாதர் சுக்கிரனால் ஜாதகிக்கு 8 ஆமிட தோஷத்தை வழங்க இயலாது. புக்திநாதன் சந்திரன் 7 ஆமதிபதி சாரம் என்பதால் கோட்சார ரிஷப குரு பார்வையை கோட்சாரத்தில் பெறும்போது திருமணத்தையும் பிறகு 5 ஆமதிபதி என்பதால் புத்திரப்பேறையும் வழங்கியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே ஜாதகி திருமணம் முடிந்தவுடன் கருத்தரிப்பார். வருட கிரகங்களான ஜனன சனியும் குருவும் வக்கிரம் என்பதால் இவை கோட்சாரத்தில் வக்கிரமாக இருக்கும் காலத்தில்தான் திருமணம் நடக்கும்.
ஜாதகத்தில் விதிகளைவிட விதி விலக்குகளையும் தோஷத்துடன் தோஷத்தை வழங்கும் கிரகங்கள் எப்போது கோட்சாரத்தில் வலுவிழக்கும் என்பதையும் அறிந்து தசா-புக்திகளுடன் அவற்றை பொருத்திப் பார்த்தால் சம்பவங்களை தெளிவாக முன்னோக்கலாம். இதனால் ஒரு ஜாதகரை சரியாக வழிநடத்த தேர்ந்த ஒரு ஜோதிடரால் இயலும்.
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.