
லக்னத்தில் அமையும் கிரகம், இரண்டாமிடத்திற்கு விரயத்தில் அமைவதால் அதன் பாதிப்புகள் என்ன? என்றொரு கேள்வி ஒரு ஜோதிட விவாதத்தின்போது எழுந்தது. விவாதம் மிக நீண்டது என்றாலும் அதன் முடிவு வாசகர்களுக்கும் பலனளிக்கும் என்ற அடிப்படையில் இன்றைய பதிவாக வருகிறது. இரண்டாவது பாவகத்தை எடுத்துக்கொண்டால் அதை லக்ன கிரகம் பாதிக்கலாம், ஆனால் 2 ல் அமையும் கிரகம், இரண்டை பார்க்கும் கிரகம், இரண்டாமதிபதி மற்றும் அவைகளின் சாரத்தில் நிற்கும் கிரகங்களும் 2 ஆமிடத்தை ஆளுமை செய்யும் என்பதால் லக்ன கிரகம் மட்டும் இரண்டாமிடத்தை பாதித்து விடும் என்று அச்சப்பட வேண்டாம்.
இரண்டாவது பாவகத்தை வருமானம் தொடர்புடைய வகைகளில் ஆராய வேண்டுமானால் இரண்டாவது பாவகாதிபதி, இரண்டாவது பாவகத்தின் திரிகோணங்களாகிய 6, மற்றும் 1௦ ஐயும் இவற்றில் நிற்கும் கிரகங்களின் சாரம் பெற்ற கிரகங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மேலும் இரண்டாம் பாவக காரகர் குருவையும், ஜீவன காரகர் சனியின் நிலையையும் கவனிக்க வேண்டும். இரண்டாம் பாவகத்தை குடும்பம் தொடர்புடைய விஷயங்களில் கவனிக்க வேண்டும் என்றால் கூடுதலாக குருவின் நிலையோடு களத்திர காரகர், களத்திர பாவகாதிபதி ஆகியோரின் நிலையையும் சேர்த்து கவனிக்க வேண்டும். தசா-புக்திகளின் பங்கு இவற்றில் முக்கியமானது. தசா-புக்திகளின் அனுமதியின்றி ஒரு சம்பவம் நடந்து விடாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
26 வயதான இந்த பெண்ணின் ஜாதகத்தில் 8 ஆமதிபதி சூரியனுடன் உச்சம் பெற்ற 4, 11 அதிபதி செவ்வாய் ஆகியோர் லக்னத்தில் அமர்ந்துள்ளார். பாதகாதிபதி செவ்வாய் அஸ்தங்கமானது ஒருவகையில் நன்மையே. இப்போது ஜாதகிக்கு குரு தசை தசை நடப்பில் உள்ளது. ஜாதகி குரு தசையில் சூரிய புக்தியில் உள்ளார். இதனால் சூரியன் தனது புக்தியில் ஜாதகிக்கு என்ன பலனை தரவிருக்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன. தசாநாதர் குரு தனது மூலத்திரிகோண வீட்டில் ஆட்சி வலுவோடு 6 ஆமதிபதி புதனோடு இணைவு பெற்று அமர்ந்துள்ளார். 6, 12 ஆமதிபதிகள் 12ல் இணைவு பெற்றுள்ளது ஒருவகையில் விபரீத ராஜ யோகமாகும். 2 க்கு லாபத்தில் 6 ஆமதியோடு இணைந்து 4, 6, 8 ஆகிய இரட்டைப்படை பாவகங்களை பார்வை செய்யும் தற்போதைய குருவின் தசையில் ஜாதகிக்கு வேலை கிடைக்கும், சுகம், ஆரோக்கியம், வசதி வாய்ப்புகள் ஆகியவை ஏற்படும்.
இப்போது லக்ன கிரகங்களுக்கு வருவோம். லக்ன சூரியனும் செவ்வாயும் ஜாதகிக்கு பெயர் தந்துள்ளனர். லக்ன கிரகம் லக்னத்தை ஆளுமை செய்யும் என்பதற்கேற்ப, ஜாதகி உச்ச செவ்வாய் குறிக்கும் கட்டுமான பொறியியல் (Civil Engineering) படித்துள்ளார். லக்னத்தில் சூரியன் செவ்வாயோடு இணைவு பெற்றதால் தந்தை ஒரு விவசாயி. சூரிய புக்தியில்தான் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இது எப்படி என்றால், சூரியன் 6 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் திருவோணத்தில் நிற்பதுதான் காரணம். புக்தி காரக கிரகம் தன பாவத்திற்கு விரயத்தில் நின்றாலும் 2, 6, 10 பாவக, பாவகாதிபதிகள், சனி தொடர்புகள் பெற்றால் சம்பாத்தியத்தை தரவேண்டும். இதனடிப்படையில் 6 ஆமிட கிரக தொடர்பு பெற்ற சூரியன் தனது காரகத்தையும் இணைந்து ஜாதகிக்கு அரசு வேலையை அளித்து லக்னத்தின் மீதான தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறார். 8 ஆமிட கிரகம் ஜாதகிக்கு பாதிப்பை தரவில்லையா? என்றால் தந்தையின் குடும்ப உறவுகளால் ஜாதகி அவமானமாக உணர்கிறார். (8 ஆமிடம் அவமானம்) தந்தை இரு திருமணம் செய்தவர் என்பதால் தந்தையோடு ஜாதகிக்கு நல்லுறவில்லை.
இப்போது இரண்டாமிட கிரகங்களுக்கு வருவோம். லக்னாதிபதி சனி 5, 1௦ ஆமதியும் , தனது நண்பருமான சுக்கிரனுடன் தனது மூலத்திரிகோண வீட்டில் இணைந்துள்ளார். 5,1௦ ஆமதிகள் சனியோடு நல்ல பாவகங்களில் இணைவது அரசு வேலைக்கு சிறப்பு. இதனால் ஜாதகிக்கு 2 ஆமிட கிரகங்கள் சிறப்பை தருகின்றன. 2 ஆமிடம் வலுவடைந்ததும், 2 ன் திரிகோணங்கள் வலுவடைந்ததும் சூரியன் 2ஆமிடத்தை பொருளாதார ரீதியாக பாதிக்க முடியாது என்பதற்கு ஒரு காரணம்.
இப்போது இரண்டாவது பாவகத்தின் மற்றொரு காரகமான குடும்ப உறவை ஆராய்வோம். 2 க்கு லாபத்தில் நிற்கும் குரு தனது தசையில் ஜாதகிக்கு திருமணம் செய்து வைப்பார். 2 ஆமிட சனி குரு சாரம் பெற்று, லக்ன சுபரான சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவ அமைப்பில் உள்ளதால் தாமதமாகவேனும் ஜாதகிக்கு திருமணம் நடந்துவிடும். 7 ஆமதிபதி சந்திரன் 6 ல், 9 ஆமிட ராகு சாரத்தில் இருப்பதாலும், செவ்வாய் அஸ்தங்கமானதாலும் ஜாதகிக்கு குடும்ப வகையில் மேலும் ஒரு குறை ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அது வருமானத்தை பாதிக்காது. ஏனெனில் 2 ஆம் பாவக காரகங்களுள் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் மற்றவற்றில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தை குறிக்கும் இரட்டைப்படை பாவகங்கள் ஜாதகத்தில் சிறப்புற்றுள்ளதால் லக்னத்தில் அமைந்த சூரியனாளோ, செவ்வாயாலோ ஜாதகிக்கு பொருளாதார வகையில் பாதிப்பை தர இயலாது. ஆனால் உயிர் காரணிகளை குறிக்கும் ஒற்றைப்படை பாவகங்கள் சிறப்பாக அமையவில்லை என்பதை கவனிக்கவும். இதனால் பொருட்காரணிகள் வகையில் நன்மை செய்யும் லக்ன சூரியன் செவ்வாய் சேர்க்கை உயிர் காரகத்துவங்கள் வகையில் தங்களது புக்தி காலங்களில் குடும்பம், குழந்தை, உறவுகள் வகையில் பாதிக்க வாய்ப்புண்டு என அறியலாம். இதுவே ஒற்றைப்படை பாவகங்கள் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் லக்ன கிரகங்கள் உயிர் காரணிகள் வகையில் ஜாதகருக்கு தீமை செய்ய இயலாமல் பொருட்காரணிகள் வகையில் பாதிக்க வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்க. அதாவது லக்ன கிரகம் சம்பாத்தியத்தை கொடுத்துவிட்டால் குடும்ப வகையில் பாதிக்க வழியுண்டு. குடும்பத்தை சிறப்புறச் செய்தால் சம்பாத்திய வகையில் கடுமை காட்டும் என்பதை நினைவில் கொள்க. லக்னத்தில் அமையும் கிரகங்கள் ஜாதகருக்கு நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் தனது தசா-புக்திகளில்தான் செய்யும். எனவே மேற்கண்ட ஜாதகத்தில் சூரிய தசா-புக்திகளில் குடும்ப வகையில் ஜாதகி கவனமாக செயல்பட வேண்டும்.
லக்ன கிரகம் இதர பாவகங்களின் நிலையைக்கொண்டே தனது செயல்பாட்டை தீர்மானிக்கிறது என்பது நமது ஆய்வின் முடிவாகும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501