திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும். ஆனால் ஒருவருக்கு இந்த வயதில்தான் காதல் வரும், இந்த விதத்தில்தான் காதல் வரும், இத வித துணைவர் அமைவார் என்று ஜோதிடத்தில் கூற முடியுமா? என்று நண்பர் ஒரு ஜோதிட விவாதத்தின்போது கேள்வி எழுப்பினார். உறுதியாக கூற முடியும் என்று அவருக்கு உதாரணங்களுடன் விளக்கியவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இங்கு வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக பதிவிடுகிறேன்.
திருமணத்தைப்பற்றி 2,7 ஆகிய பாவகங்கள் அவற்றில் அமைந்த கிரகங்கள் அவற்றின் பாவகாதிபதிகள், களத்திர காரகர் ஆகியோர் குறிப்பிடுவர். ஆனால் காதலை குறிப்பிடுவது லக்னத்திற்கு 5 ஆவது பாவகமும், அதில் அமைந்த கிரகமும், காதலின் காரக கிரகம் புதனும்தான். முக்கியமாக வாலிப வயதில் இவை தொடர்புடைய தசா-புக்திகள் வர வேண்டும். அப்போதைய காதலும் திருமணமும் இனிக்கும் விதத்தில் அமையும். காதலிக்கும் காலத்தில் 5 ஆம் பாவகாதிபதி, புதன், களத்திர காரகர் , தசா-புக்தி கிரகம் ஆகியோர் முன்பு சொன்ன பாவகங்களோடு 6 ஆவது பாவக தொடர்பு பெற்றால் காதல் முதலில் மோதலிதான் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
கும்ப லக்ன ஜாதகி. லக்னாதிபதி உச்சம் பெற்று வக்கிரமாகி செவ்வாயுடன் இணைந்துள்ளார். லக்னாதிபதி வக்கிரமானால் லக்னாதிபதியின் காரக வகையில் ஜாதகருக்கு பிடிவாத குணம் மிகுந்திருக்கும். ஜாதகி குடும்ப சூழலால் பணிபுரிவதில் பிடிவாதமாக இருந்தார். தற்போதும் தொழில் செய்கிறார். சனியுடன் உடன் களத்திர காரகரும் பிடிவாத காரகர் செவ்வாயும் இணைவு பெற்றிருப்பதால் ஜாதகிக்கு தனது களத்திர வகையில் பிடிவாத குணமிருக்கும். ஜாதகி வேலைக்கு சென்றால் வேலையில் மிகுந்த கோபமும் அதிகாரமும் இருக்கும். தசா-புக்தி தொடர்பானால் தனது கணவரை பணிபுரியுமிடத்திலேயே தேர்ந்தெடுப்பார். குடும்ப காரகர் குருவும் வக்கிரமாகியுள்ளதை கவனியுங்கள். இது ஜாதகிக்கு அமையும் குடும்பம் ஜாதகியின் விருப்பத்தின்படிதான் அமையும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. வேலை பாவகமான 6 ன் அதிபதி சந்திரன் 7 ல் நிற்பது இக்கருத்தை உறுதி செய்கிறது. தசா-புக்தி தொடர்பானால்தான் சம்பவங்கள் நடக்கும். ஜாதகி சந்திர தசாவில் வேலையில் இருந்தார். சந்திரன் சூரியனின் வீட்டில் நிற்பதால் ஜாதகி அதிகாரமும் பிடிவாதமும் போர்க்குணமும் கொண்டவராக இருப்பார். வேலை பாவகமான ஆறாவது பாவகமே சண்டை சச்சரவுகளுக்குரிய பாவகமாகவும் அமைவதால் சந்திர தசையில் ஜாதகிக்கு வேலையும் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் மோதல் போக்கும் ஏற்படும். காரணம் தொடர்பு பாவகமான 7 ல் 6 ஆமதிபதி அமைவதுதான். அதுவும் தினக்கோளான சந்திரன் 7 ல் நிற்பதால் ஜாதகிக்கு தினசரி எதிர்கொள்ளும் நபர்களாலேயே சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதே சமயம் உணர்வுகளுக்குரிய சந்திரனின் தசை நடப்பதால் உணர்வு பூர்வமான பெண்ணாகவும் ஜாதகி இருப்பார். சரியான விரல்களில் இந்த வீணையின் நரம்புகள் நாதம் எழுப்ப காத்துக்கொண்டிருக்கும். உணர்வுகளுக்குரிய சந்திரன் காம, களத்திர பாவகமான 7 ஆமிடத்தில் இருப்பதுதான் இதற்கு காரணம்.
ஜாதகிக்கு சந்திரன் தசையில் சனி புக்தி தொடங்கியது. லக்னாதிபதி சனி உச்சமாகி வக்கிரமாகியுள்ளது பலகீனமே. ஆனால் ராசியாதிபதி சூரியன் மிதுனத்தில் தனது நண்பர் புதனின் வீட்டில் குரு பார்வை பெற்று நிற்கிறார். இதனால் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியே அதிக வலுப்பெற்று விளங்குகிறது. காதலின் காரக கிரகம் புதன் இதர கிரகங்களைவிட குறைந்த பாகை பெற்று தாரா காரகராக இருப்பதால் ஜாதகர் தனது வாழ்வில் காதலை உறுதியாக சந்தித்தே தீருவார். உணர்வுகளுக்குரிய சந்திரனின் வீட்டில் புதன் வர்கோத்தமம் பெற்றுள்ளது, புதனின் தீர்க்கமான நிலையை ஜாதகம் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால் வெளித்தோற்றத்தில் கடுமையும் உள்ளூர மென்மையும் கொண்டவராக ஜாதகி இருப்பார். நடப்பது சனி புக்தி என்பதாலும், சனி சண்டைக்கிரகமான செவ்வாயுடன் இணைந்துள்ளதாலும் வேலை செய்யுமிடத்தில் குற்றம் காண்டுபிடிப்பதில் ஜாதகி புலியாகவும் சண்டைக்கோழியாகவும் விளங்கினார் என்றே சொல்ல வேண்டும். இதனால் இவரது நிறுவன ஊழியர்கள் இவரிடம் மாட்டிக்கொண்டு விழித்தனர் என்றே சொல்ல வேண்டும். தசாநாதன் சந்திரன் லக்னத்திற்கு 5 ல் நிற்கும் சுக்கிரனின் பூரத்தில் நின்று தசை நடத்துகிறார். புக்தி நாதன் சனி ராசிக்கு 5 ஆம் பாவகத்தை 3 ஆம் பார்வை பார்க்கிறார். ஒரு கிரகம் தனது தசா-புக்தியில் தான் பார்க்குமிடத்திற்கும் பலனை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜாதகிக்கு காதலை சனி ஏற்படுத்த வேண்டும். செவ்வாயோடு இணைந்த சனி ஜாதகிக்கு கண்டிப்பையும், கோபத்தையும், காதலுடன் இணைத்து வழங்கியாக வேண்டும். மோதல் போக்கை கடைபிடிக்கும் ஜாதகியின் குணத்தில் உள்ள நேர்மையையும், உண்மையையும் புரிந்துகொண்ட ஊழியர் ஒருவருடன் மோதலில் துவங்கிய உறவு பிறகு ஆத்மார்த்தமான காதலாக மாறியது.
திருமண உறவுகளுக்கு ஆராய வேண்டிய நவாம்சம் இதை விரிவாக கூறுகிறது. காதல் ஏற்பட்ட தசா காலத்தின் தசாநாதர் சந்திரன் நவாம்ச லக்னத்திற்கு 5, 8 க்குரிய புதனோடு பரிவர்த்தனை ஆகியுள்ளார். 5 ஆமிடம் காதலையும், 6 ஆமிடம் வேலையையும், 8 ஆமிடம் வேற்று குல உறவையும் குறிப்பிடுகிறது. மேலும் இது வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் காதல் என்பதையும் தெரிவிக்கிறது. லக்னம் வர்கோத்தமம் ஆகியுள்ளது. அதில் சனி வக்கிரமாகியுள்ளார். இது ஜாதகியின் உறுதியான நிலைப்பாட்டை கூறுகிறது. பரிவர்த்தனைக்கு முன்பு குருவும் பரிவர்த்தனைக்கு பிறகு 7 ஆமதிபதி சூரியனும் சனியின் பார்வை பெறுகின்றனர். இது களத்திர விஷயம் ஜாதகி முடிவுக்குட்பட்டதே என்பதை கூறுவதோடு மட்டுமின்றி, கால புருஷனின் 5 ஆவது பாவகமே நவாம்சத்தில் களத்திர பாவகமாக வருவது கவனிக்கத்தக்கது. ஜாதகிக்கு நவாம்ச லக்னத்திற்கு 2 ல் நிற்கும் செவ்வாயின் தசையில், 7 ல் நிற்கும் குரு புக்தியில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சனி அந்தரத்தில் திருமணம் நடந்தது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501