ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது வாழ்வின் அனைத்து வளமைகளையும் அனுபவிக்க முடியும். நான்கில் பாவிகள் அமைந்தால் ஒருவர் தனது கடும் உழைப்பால் தனக்குப் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழ்நிலைகளை அமைத்துக்கொள்வார். 4 ல் சுபர்கள் அமைந்தால் உடல் உழைப்பற்ற வாழ்க்கை அமையும். சோம்பேறித்தனமும் ஏற்படும். இப்பாவகம் 2 ஆம் பாவகத்தின் முயற்சி பாவகமாவதால் ஒருவர் தனது முயற்சியால் பொருளாதாரத்தில் முன்னேறி வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்வதை குறிக்கும். 2 ஆமிடம் 4 ஆவது பாவகத்தின் லாப பாவகமாக அமைவதால் ஒருவரது பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் எதுவரை கிடைக்கும், எப்போது அதில் தடை ஏற்படும் என்பதையும் குறிப்பிடும். ஒருவரது முயற்சிகளை குறிப்பிடும் 3 ஆமிடம் 4 ஆமிடத்தின் விரைய பாவகமாகும். இதன் பொருள் தனது எதிர்கால வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒருவர் தனது சுகத்தை 3 ஆமிடம் இயங்கும்போது துறக்க வேண்டியிருக்கும் என்பதாகும். ஒரு சிலர் ஜாதகத்தில் மூன்றாமிடமும் 4 ஆமிடமும் இணைந்து இயங்கும் அமைப்பு இருக்கும்.அப்படியான நிலையில் தனது முயற்சியால் அடையும் விஷயங்களால் ஜாதகர் சுகப்பட முடியாது என்பதை குறிப்பிடும். உதாரணமாக பெரும் முயற்சியில் நல்ல வாகனம் வாங்கும் ஒருவர் அதை பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிறகு விற்பது போன்ற நிலையை எடுப்பார். வீடு கட்டி விற்பனை செய்வோருக்கும் 3 ஆமிடமும் 4 ஆமிடமும் இணைந்து இயங்கும் அமைப்பு இருக்கும். இது போன்ற 3 மற்றும் 4 ஆமிடங்கள் இணைந்து இயங்குவதால் ஏற்படும் விளைவுகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே நமது இன்றைய பதிவு.
கீழே நடுத்தர வயதிலுள்ள ஒரு பெண்மணியின் ஜாதகம்.
கும்ப லக்னத்தை அதன் அதிபதி சனி, லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் 4,9 அதிபதி சுக்கிரனோடு இணைந்து தான் நின்ற பாவகாதிபதி குருவின் பார்வையை பெற்று லக்னத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். சனி லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் வெறும் இல்லத்தரசியாக இல்லாமல் நிச்சயம் உழைத்துச் சம்பாதிப்பவராக இருப்பார். சனி லாப ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று அமைந்துள்ளதால் ஜாதகர் பொதுவாகவே பொருளாதார விஷயங்களில் லாப நோக்கத்தைக் கொண்டிருப்பார். சனியோடு குரு, சுக்கிரன் ஆகிய பொருளாதார கிரகங்கள் தொடர்பாவதால் ஜாதகர் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் தனது சம்பாத்தியத்தை அமைத்துக்கொள்வார். லக்னாதிபதி சனி, 4 ஆமதிபதி சுக்கிரனோடு இணைந்துள்ளதால் ஜாதகிக்கு தனது உழைப்பால் வீடு, வாகனம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளும் மனோபாவம் மிகுந்திருக்கும். லக்னத்தை சனி தவிர குருவும் 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு சனி, குரு சார்ந்த உண்மை, உழைப்பு, நேர்மை, குழந்தை, பொருளாதாரம் ஆகிய விஷயங்களில் தெளிந்த நோக்கம் இருக்கும். குரு வக்கிரமாகியுள்ளதால் அதன் காரக விஷய ஞானம் ஜாதகிக்கு அதிகமிருக்கும். ஜாதகி சந்திர தசாவில் உள்ளார். ஜாதக அமைப்பின்படி ஜாதகி வளைகுடா நாடு ஒன்றில் அரசுத்துறை வங்கி ஒன்றில் உயரதியாக பணிபுரிகிறார். 7 ஆமதிபதி சூரியன் தனது நீச்சப்பாகையை தாண்டி திக்பலத்திற்கு நெருக்கமாக அமைந்துள்ளதால் முதன்மையான அதிகாரியாக உள்ளார்.
தசாநாதர் சந்திரன் ராசிச் சக்கரத்தில் 4 ஆமதிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செவ்வாயின் மேஷ வீட்டில் அமைந்துள்ளார். இப்படி வீட்டின் காரக கிரகங்களான செவ்வாயும், சுக்கிரனும் தசாநாதர் சந்திரனோடு தொடர்பாவதால் ஜாதகிக்கு நிச்சயம் சந்திர தசாவில் வீடு பாக்கியங்களுண்டு. வீடு பாக்கியங்களைக் குறிக்கும் சதுர்தாம்சத்தில் வீட்டின் காரக கிரகங்களான செவ்வாயும், சுக்கிரனும் உச்சமாகியுள்ளதை கவனியுங்கள். தசாநாதர் சந்திரன் சூரியன், புதனோடு இணைந்து உச்ச செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் இவருக்கு வீடு கட்டினால் சூரியன் குறிக்கும் பெரிய, மதிப்பான வீடாகத்தான் கட்டுவார் அல்லது வாங்குவார். புதன் தொடர்பாவதால் ஜாதகி அதற்காக கடன்படவும் தயங்க மாட்டார். பலகால் உயிரியான நண்டைக் குறிக்கும் கடகத்தில் தசாநாதர் சந்திரன் அமைந்துள்ளதால் ஜாதகிக்கு சந்திர தசாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமையும். கடகம் நீர் ராசி என்பதால் ஜாதகி கடல் கடந்து வெளிநாட்டில் வசிக்கும் சூழலில் வெளிநாட்டிலும் வீடு வாங்குவார். ஜாதகப்படி இவருக்கு தாய் நாடான இந்தியாவில் இரு வீடுகளும் தான் பணிபுரியும் வளைகுடா நாட்டில் ஒரு வசதியான வீடும் உள்ளது. வீடு காரகரான உச்ச செவ்வாயின் நேர்பார்வையில் கடகத்தில் நிற்கும் சந்திர தசாவில், புதன் புக்தியில், 4 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் ஜாதகி வளைகுடாவில் வீடு வாங்கினார்.
கடன் மற்றும் வியாதியை குறிக்கும் கால புருஷனின் 6 ஆமதிபதியான புதன் அதற்கான வர்க்கம் சஷ்டாம்சத்தில் லக்னத்திலேயே திக்பலத்துடன் உச்சமாகி விரையாதிபதி சூரியனுடன் அமைந்துள்ளார். இதனால் இவருக்கு இயல்பாகவே கடன் மற்றும் வியாதியாலான அவஸ்தைகளும் அதிகம். கால புருஷ 6 ஆமதிபதியான புதன் அரசு மற்றும் வெளிநாட்டை குறிக்கும் சூரியனுடன் இணைந்து உச்சமாகியுள்ளதால் இவருக்கு எளிதில் குறிப்பாக வெளிநாட்டில் நிதித்துறையில் அரசாங்க வேலை கிடைக்கும். (புதன்-கணக்கு, 12 ஆமிடம்-வெளிநாடு, சூரியன்-அரசுத்துறை) 10 ஆமிடத்தில் 3, 8. 9, 11 ஆமதிபதிகள் இணைந்துள்ளதாலும் இவருக்கு வேலை சிறப்பானதாக இருக்கும். 10 ல் திக்பலத்தில் அமைந்த செவ்வாய் பணியில் ஆளுமையை தரும் அதே சமயம் அஷ்டமாதிபதி என்பதால் வேலையில் கடும் மன உழைச்சலையும் தருவார். செவ்வாய் 3 , 8 அதிபதியாகி சுக்கிரன், சந்திரனுடன் இணைந்து லக்னம், 4, 5 ஆகிய பாவகங்களை பார்ப்பதால் இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கும் வீடுகளால் ஏற்படும் கடன்களாலும் மன உழைச்சல்களாலும் ஆரோக்யமும் சீர் கெடும். எப்போது ஆரோக்கியம் சீர் கெடும் என்பதை தசா-புக்திகள் கூறும். இங்கு தசா கிரகம் சந்திரன் ராசிச் சக்கரத்தில் சுகத்தை கெடுக்கும் 3 ல் நின்று சஷ்டாம்சத்தில் 3, 8 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து தசை நடத்துவதால் செவ்வாய் சந்திரன் குறிக்கும் ரத்தம் தொடர்பான பாதிப்புகள்தான் வரும். இங்கு லக்ன யோகாதிபதியான சுக்கிரன், மனோ காரகர் சந்திரனோடும், 3, 8 ஆமதிபதி செவ்வாயோடும் கால புருஷனுக்கு போக ஸ்தானமான மிதுனத்தில் இணைவது அதிக போக இன்பம் பெறுவதால் உடல்நிலை ஓரளவு பாதிக்கப்படுவதையும், வீடு, வாகன ஆசையை தூண்டுவதைத் தவிர வேறு கடும் பாதிப்பை சந்திரன், செவ்வாய் அளவு சுக்கிரன் தர மாட்டார்.
இந்த ஜாதகிக்கு 2021 துவக்கம் முதல் குறை ரத்த அழுத்த நோய் (Low BP) உள்ளது. மாதவிடாய் பாதிப்புகளும் உள்ளது. ரத்தத்தை குறிக்கும் சந்திரனோடு இணைந்த செவ்வாய் லக்னாதிபதி புதனை பார்ப்பதால் சந்திர தசை, புதன் புக்தியில் ஜாதகிக்கு ரத்த அழுத்த நோய் வந்துள்ளது. குறைபாட்டை குறிக்கும் 8 ஆமதிபதியாக செவ்வாய் அமைவதால் இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர நிரந்தரமாக குணப்படுத்த இயலாத குறைபாட்டு நோயாகும். 8 ஆமிடமும் செவ்வாயும் ஜனன உறுப்பையும், பெண்களுக்கு மாதவிடாயையும் குறிப்பதால் ஜாதகிக்கு மாதவிடாய் பாதிப்புகள் வந்துள்ளது. கணவரால் பொருளாதார ரீதியாக சரியான பங்களிப்பை அளிக்க இயலாத நிலையில், கடும் பணிசுமையால் ஜாதாகி வாடிய போதும், வீட்டுக் கடன்களை மனதில்கொண்டு வேலையை விட முடியாத சூழலில் கடும் ஆரோக்ய பாதிப்பை ஜாதகி எதிர்கொண்டுள்ளார். சந்திர தசையில் கேது புக்தியில் சந்திரனின் அந்தரத்தில் ஜாதகி தான் பணிபுரியும் வங்கியிலேயே மயங்கி விழுந்துள்ளார். 8 ஆமதிபதி செவ்வாயோடு சந்திரன் தொடர்பாவதால் அதன் பிறகும் சில முறை ஜாதகி கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டுக்கொண்டுள்ளார். ரத்த ஓட்டத்தை குறிக்கும் சந்திர தசையில், தடையை குறிக்கும் கேது புக்தியில் ஜாதகிக்கு ரத்த ஓட்டம் மிக குறைந்துள்ளது. கேது ராசிச் சக்கரத்தில் லக்னத்திற்கு 6 ஆமிடமான கடகத்தில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இங்கு ரத்த ஓட்டத்தை சந்திரன் குறித்தால் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை மற்றும் குறை ரத்த அழுத்தத்தை கேது குறிப்பார். சஷ்டாம்சத்தில் லக்ன பாதகாதிபதியான குரு ரத்த ஓட்டத்தை குறிக்கும் கடகத்தில் 6 ஆமதிபதி சனியோடு இணைந்து பாதக ஸ்தானமான மீனத்திலமைந்த புக்தி நாதர் கேதுவை பார்ப்பதால் ஜாதகி குறை ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்துள்ளார். ஜாதகிக்கு ஒரு குழந்தை உள்ள சூழலில் இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்புகளும் ஜாதகியின் பணி, ஆரோக்ய நிலையால் தடைபடுகிறது.
ஜாதகிக்கு அவரது ஜாதகம் குறிப்பிடும் அமைப்புகளை கூறி, வாழ்வில் எதற்கு எந்த அளவு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சொத்துக்களையும் பணிச்சூழலையும் அமைத்துக்கொள்ளுமாறும், ஜாதகப்படியான ஆரோக்ய வழிபாடுகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501