மாறிவரும் உலகில் உடல் உழைப்பை இயந்திரங்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை நவீன கண்டுபிடிப்புகளாலும் மனதையொத்த கருவியை உருவாக்கிவிட முடியாது என்று கூறுவர். ஆனால் இன்று நமது மனநிலையை புரிந்துகொண்ட செயல்படும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் வெளிப்பாடே AI எனும் செயற்கை நுண்ணறிவு. இதன் தாக்கத்தை இன்று நமது வீட்டு வரவேற்பறையிலேயே நாம் உணரத் துவங்கிவிட்டோம். “You Tube” ல் ஒரு பாடலை ரசித்துக் கேட்கும்போது அதையொத்த பாடல்களை You Tube நமக்கு பரிந்துறைப்பதெல்லாம் ஒருவகையில் AI ன் கைங்கர்யமே. பேருந்து நிறுத்தத்தில் நாம் நிற்கையில் நமக்கான பேருந்து வருகையில் நாம் கைகாட்டும் முன்னரே அது நமக்காக நிற்பதை கற்பனைசெய்து பாருங்கள். நாம் நிறுத்தவில்லை. நமது முக உணர்வுகளை புரிந்துகொள்ளும் பேருந்தின் முகப்பில் உள்ள சென்சார்கள் நமக்காக பேருந்தை நிறுத்துவதை இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறையில் காணலாம். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் AI ன் தாக்கம் இருக்கும். இந்நிலையில் இதில் ஒருவர் ஈடுபட ஜாதக அமைப்பு என்ன? என்று சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வியை முன்னிட்டு கேள்வி எழுப்பியதன் விளைவே இப்பதிவு. 9௦ களில் இந்தியாவில் பிரபலமடைந்த கணினிகளும், கைபேசிகளும் இல்லாமல் இன்று மனித வாழ்வே இல்லை என்றாகிவிட்டது. அதுபோல இன்னும் ஓரிரு தசாப்தங்களில் AI நுட்பமில்லாத மின்னணுப் பொருட்களே இல்லை என்ற நிலை உருவாகும். அப்போது அதுபற்றி அனைவருமே ஓரளவு அறிந்தவர்களாக இருப்பர் என்றாலும், மனித வாழ்வை Smart ஆக மாற்றும் இத்தகைய செயற்கை தொழில் நுட்பங்களை உருவாக்கி அதை பயன்பாட்டிற்கு அளிக்கும் Smart People எனும் வித்தகர்களுக்கான ஜாதக அமைப்பு பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு. AI அனைத்து துறைகளையுமே கோலோச்சும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட துறையில் AI வல்லுனர்களாக அத்துறையின் காரக கிரகம் வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு AI தொழில் நுட்பத்தை ஆளும் காரக கிரகங்கள் ஜாதகத்தில் வலுவாக அமைந்திருக்க வேண்டும். இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.
செயற்கை நுண்ணறிவை ஆளுமை செய்யும் கிரகங்கள் என்று பார்க்கும்போது செயற்கை எனும் வார்த்தையே ராகு-கேதுக்களுடன் தொடர்புடையது என்பது புலனாகும். நுண்ணறிவுக்கு உரிய கிரகம் புதனாகும். மனதோடு தொடர்புடைய துறை இது என்பதால் மனோகாரகர் சந்திரன் இத்துறையின் முக்கியமான காரக கிரகங்களுள் ஒருவராகிறார். முக்கியமாக சந்திரனுக்கு ராகு-கேதுக்களின் தொடர்பு AI எனப்படும் இத்துறைக்கு நன்று. புத்தி ஸ்தானம் எனப்படும் 5 ஆவது பாவகமும் இத்துறைக்கு நன்கமைய வேண்டும். ஆராய்ச்சி பாவகம் எனப்படும் 8 ஆவது பாவகமும், கால புருஷனுக்கு 8 ஆவது பாவகாதிபதியுமான செவ்வாயின் நிலையும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு அவசியம்.
மேற்கண்ட ஜாதகத்தில் தனுசு லக்னத்தில் 7,1௦ அதிபதி புதன் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். ஜோதிடத்தில் Smart எனும் வார்த்தை புதனுக்கே உரியதாகும். லக்னத்தில் புதன் திக்பலத்தில் அமைந்து, சனி 4 ஆமிடமான மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்தது ஜாதகர் ஜீவன விஷயத்தில் அறிவுசார் துறையில் ஈடுபட விரும்புவார் என்பதை குறிக்கிறது. கும்ப குரு சனியுடனான பரிவர்த்தனையால் 4 ஆமிடத்தில் ஆட்சி பலம் பெற்று ஹம்ச யோகத்தில் அமருவார். இதனால் வீடு, வாகன பாவகம் வலுவடைகிறது. பரிவர்த்தனை பெற்று அமரும் 4 ஆவது பாவகத்திற்கு குரு திக்பலம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வீடு, வாகனங்களை குறிக்கும் 4 ஆவது பாவகம் வலுவடைகிறது. சனியுடன் குரு பரிவர்தனையாகிறார் என்பதால் ஜாதகருக்கு பணி கிடைத்த பிறகே இந்த பரிவர்த்தனை யோகம் ஜாதகருக்கு செயல்படத் துவங்கும். ஜாதகத்தில் உச்ச கிரகம் ஜாதகரை ஆளுமை செய்யும் என்பதற்கேற்ப இந்த ஜாதகத்தில் செவ்வாய் சுய சாரத்தில் (அவிட்டம்-2) உச்சம் பெற்று, சுய சாரத்திலமைந்த சூரியனுடன் அஸ்தங்கமடையாமல் இணைந்துள்ளார். சுக்கிரன் வக்கிரம் பெற்று சூரியனுடன் அஸ்தங்கம் பெற்றுள்ளார். இதனால் சுக்கிரனது காரகங்களை சூரியன் சுவீகரிப்பார். வக்கிர சுக்கிரன் என்பதால் சுக்கிரன் சார்ந்த பிடிவாதமான காரகங்களை சூரியன் தனதாக்கிக் கொண்டு ஜாதகருக்கு பலன்களை வழங்க வேண்டும். 2 ஆமிடத்தில் அமைந்த 3 கிரகங்களும் 8 ஆமிடத்தை நேர் பார்வை பார்க்கின்றன. இதனால் ஆராய்ச்சி பாவகமெனும் 8 ஆமிடம் வலுவடைகிறது. இது ஜாதகருக்கு இயல்பாக ஆராய்ச்சித் திறனை அளிக்கும். உச்ச செவ்வாயும், வக்கிர சுக்கிரனும் சூரியனும் இணைந்து 2 ல் அமைந்திருப்பதால் செவ்வாய், சுக்கிரனின் பொதுக்காரகங்களான வீடு, வாகன விஷயத்தில் ஆய்வுத் திறன் ஜாதகருக்கு ஏற்படும். 8 ஆமிடாதிபதி சந்திரன், ராகு தொடர்பில் பாக்கிய ஸ்தானமான 9 ஆமிடத்தில் அமைந்தது ஜாதகரது ஆய்வுகள் அவருக்கு வெற்றியையும் நன் மதிப்பையும் பெற்றுத் தரும் என்பதை உறுதி செய்கின்றன. சந்திரன் கால புருஷனுக்கு வீடு, வாகனங்களை குறிக்கும் 4 ஆமிடாதிபதி என்பதை அறிக.
பொதுவாக ஒருவர் தனது கல்வியறிவை தனது ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்வார். அதனடிப்படையில் இவரது கல்வியறிவை அறிய சதுர்விம்சாம்சத்தை ஆராய்வோம் வாருங்கள்.
சதுர்விம்சாம்சமெனும் ஒரு ராசியை 24 பிரிவுகளாக பிரித்து ஆராயும் வர்க்கச் சக்கரத்தில் லக்னமும், லக்னத்தின் திரிகோண தொடர்புகளும் ஜாதகரின் கல்வி விருப்பங்களை தெரிவிக்கும். ஆனால் தசா-புக்தி கிரகங்கள் தங்களது விருப்பங்களை ஜாதகரின் விருப்பங்களை மீறி அவருக்குத் திணிக்கும். எனவே குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ஜாதகரது விருப்பத்திற்கு ஒத்திசைவான தசா-புக்திகள் வருவது அவசியம். சதுர்விம்சாம்சத்தில் வித்யா காரகர் புதன் மேஷத்தில் பாவர் தொடர்பற்று அமைந்து, துலாம் லக்னத்தை நேர் பார்வை செய்கிறார். இது கல்வியில் சிறந்த சாதனை படைக்க ஜாதகருக்கு உதவும். உயர்கல்வி பாகமான 9 ஆமதிபதி புதன், 9 ஆமிடத்திலமைந்த செவ்வாயுடன் பரிவர்த்தனையாகிறார். இது ஜாதகருக்கு பொறியியல் கல்வி கற்க ஆர்வமேற்படுத்தும் அமைப்பாகும். ஜாதகர் கல்லூரி செல்லும் காலத்தில் சுக்கிர தசையில் சனி புக்தியில் இருந்தார். புதன் சதுர்விம்சாம்சத்தில் அஸ்வினி-4 ல் அமைய, தசாநாதர் சுக்கிரன் வக்கிரம் பெற்று ராகு-கேதுக்கள் தொடர்பில் அமைந்ததாலும், 9 ஆமிட செவ்வாயின் சித்திரையில் ராகு-கேதுக்கள் அமைந்ததாலும், ஜாதகர் பொறியியல் கல்வியில் மின்னணு தகவல் தொடர்பியல் BE-ECE படித்து சிறப்பாகத் தேறினார்.
ஒரு ஜாதகரின் அறிவு சாதனையாக வெளிப்படுவதை அவரது வேலையின் மூலமே உணர முடியும். அதற்கு தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம் வாருங்கள்.
தசாம்ச மற்றும் ராசி லக்னமும் தனுசாகி வர்கோத்தம லக்னமாக அமைந்து லக்னாதிபதி குருவும் வர்கோத்தமம் பெற்றது ஜாதகர் அம்பு போன்ற தனது இலக்கில் தெளிவாக இருப்பதை தெரிவிக்கிறது. தசாம்சத்தில் ஒருவரது சம்பாத்தியக் கர்மா என்ன என அறிய லக்னம் மற்றும் லக்னத்துடன் தொடர்பாகும் கிரகங்களும், 1௦ ஆமிடமும் மிக முக்கிய ஆராயப்பட வேண்டிய பாவகங்களாகும். ஜீவன காரகர் சனியின் நிலை முக்கியமாக ஆராயப்பட வேண்டும். லக்னத்தை மிதுன செவ்வாய் நேர் பார்வை பார்க்கிறார். வாயு ராசியிலமைந்த செவ்வாய் வாகனத்தை குறிப்பார். வாகன ஸ்தானமான 4 ஆமிடம் மீனத்தில் அமைந்த புதன் 1௦ ல் திக்பலம் பெற்ற பாக்யாதிபதி சூரியனையும் மற்றொரு வாகன காரகர் சுக்கிரனையும் பார்க்கிறார். ஜீவன காரகர் சனியை, விரைவாக நகரும் கால புருஷ 4 ஆமதிதி சந்திரன் விருட்சிகத்தில் இருந்து பார்க்கிறார். இவை ஜாதகருக்கு வாகனத்துறை மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அதற்கான வாய்ப்புகளை வழங்கும். வாகன ஸ்தானமான 4 ல் நீசம் பெற்றாலும் 4 ஆம் பாவகத்திற்கு புதன் திக்பலத்தை ஏற்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஜாதகர் புகழ் பெற்ற 4 சக்கர பன்னாட்டு வாகன நிறுவனம் ஒன்றின் இந்தியப் பிரிவில் R&D எனும் ஆய்வு மற்றும் மேம்படுத்தல் துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். சூரியன் சுக்கிரனின் காரகங்களை தனதாக்கிக் கொண்டதுடன் அவரே தற்போதைய தசாநாதராகிறார். இதனால் ஜாதக அமைப்பு இவரை வாகனத் துறையில் ஆய்வுப் பிரிவில் அமர்த்தியுள்ளது. மின்னணுத் தகவல் தொடர்புப் பொறியியல் பட்டம் பெற்றவராதலால் வாகனம் மனித உணர்வுகளை புரிந்துகொண்டு , தானியங்கியாக வாகன ஓட்டியின்றி இயங்கும் வகையில் வாகனத்திற்கு செயற்கை நுண்ணறிவை புகுத்துவது ஜாதகரின் பணி. ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் விரைவில் ஜாதகரை தனது பணியில் தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்துவார் என்பது உறுதி. ராசியில் திக்பலம் பெற்ற புதன், தசாம்சத்தில் Smart ஆன வாகன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். ராசியில் உச்சமான செவ்வாய், தசாம்சத்திலும் லக்னத்துடனும், 1௦ ஆமிடத்துடனும் தொடர்பானதால் செவ்வாயின் காரகம் ஜாதகரின் பணியில் முதன்மை அம்சமாகிறது. வாகனத்திற்கு செயற்கை நுண்ணறிவை புகுத்தும் ஆய்வில் ஈடுபட ராசியில் ராகு-சந்திரன் இணைவும், தசாம்சத்தில் ராகு-செவ்வாய் நட்சத்திரப் பரிவர்த்தனையும் (ராகு-அவிட்டம்-1, செவ்வாய் திருவாதிரை-4) உதவுகிறது.
ஜாதகர் தனது ஆய்வுப் பணியில் சாதிப்பாரா? என்ற கேள்வி எழும் போது ஆய்வு பாவகமான 8 ஆமிடாதிபதி செயற்கையை குறிக்கும் ராகு-கேதுக்களுடன் ஆய்வின் வெற்றியைக் குறிக்கும் 9 ஆமிடத்துடன் தொடர்பாக வேண்டும். மேலும் ராகு-கேதுக்கள் ஆய்வு நோக்கத்தின் காரக கிரகத்துடனும் தொடர்பாக வேண்டும். ராசிச் சக்கரத்தில் 9 ஆமிடத்தில் அமைந்த 8 ஆமதிபதி சந்திரன் ராகு இணைவு பெற்று, வாகனத்தை குறிக்கும் செவ்வாயுடனும் ராகு நட்சத்திரப் பரிவர்த்தனை பெற்றது ஜாதகர் இந்தப் பணியில் சாதிப்பார் என்பதையே குறிக்கிறது. லக்னத்தை பார்க்கும் வாகன காரகர் செவ்வாயை லக்னாதிபதி குரு தசாம்சத்தில் 5 ஆம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகர் உறுதியாக தனது பணியில் சாதனை படைப்பர் என்று கூறலாம். ஏனெனில் ஒரு துறையில் ஜாதகர் ஜொலிக்க அத்துறையின் காரக கிரகம் லக்னத்துடன் தொடர்பாக வேண்டியது அவசியம். இங்கு வாகனத்தின் காரக கிரகம் செவ்வாய், செயற்கை அறிவை குறிக்கும் ராகுவுடனும் லக்னத்துடனும் தொடர்பாவதால் ஜாதகரின் சாதனை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் வாகனத்துறையில் AI தொழில் நுட்பக்கல்வி பயில சாதனை படைக்கலாம். எதிர்காலத்தில் இதர துறைகளிலும் AI தொழில் நுட்ப அமைப்புகளைப் பற்றி ஆராய்வோம்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501