மக்களின் நாயகர்கள்.
மக்கள் போற்றும் மகத்தான ஜாதக அமைப்பை கொடுக்கக் கூடிய கிரகம் எதுவெனக் கேட்டால் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தயக்கமின்றி உடனே கூறும் கிரகம் சனி ஆகும். சனியின் பரிபூரண பாக்கியங்கள் நிறைந்த அத்தகைய ஜாதகர்களை சனியின் அம்சங்களான அடித்தட்டு மக்கள் தங்களை வாழ்விக்க வந்த நாயகர்களாகப் பார்க்கின்றனர். சனியின் தெய்வீக சக்தி இத்தகைய ஜாதகர்களை அவர்களின் பால்ய வயதின் துயரங்களிலிருந்து மீட்டுக்கொண்டு வருவதுடன் ஒரு குழந்தையை அதன் தந்தை கையைப்பிடித்துக்கொண்டு வருவதுபோல் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் துணை நிற்கும். என்ன ஒரு பாதகம் என்றால் இத்தகைய ஜாதகர்கள் அவர்களின் பால்ய வயதிலேயே கொடுமையான காலகட்டத்தினை பார்த்திருப்பார்கள். பால்ய வயதில் ஏற்பட்ட அத்தகைய பாதிப்புகள் இவர்களின் வாழ்நாளின் இறுதிவரை இவர்களை நல்வழியில் நடத்தும்.
இது விஷயத்தில் செவ்வாயும் சனிபோன்று ஜாதகரை வழிநடத்தும் என்றாலும் சனிக்குப் பிறகே செவ்வாய் எடுத்துக்கொள்ளப்படுகிறார். ராகு-கேதுக்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சனியும்-செவ்வாயும்தாம் கிரகங்களிலேயே கடுமையானவை. சட்டம், நீதி, காவல், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் சம்மந்தம்பெறும் கிரகங்கள் இவை. ஜாதகத்தில் நன்கு அமைந்தால் ராகுவைப்போல தன் திசா-புக்திகளில் கொடுக்கக் கூடிய கிரகங்கள் எதுவுமில்லை என்றாலும் அவை விரையமாகிவிடக்கூடியவை. சனி மற்றும் செவ்வாய் கொடுக்கும் பாக்கியங்கள் மட்டுமே தலைமுறைகளுக்கும் நீடித்து நிற்பவை.
இவ்விரு கிரகங்களிடம் பாக்கியங்களைப் பெறவேண்டும் என்றால் இவை ஜாதகத்தில் நீசம், பகை, வக்கிரம், அதிசாரம் போன்ற தோஷங்களின்றி வலுவாக அமையவேண்டும். கிரகங்கள் வக்கிரமானால் ஜாதக அமைப்பை பொறுத்து சில நன்மைகளை தரும் என்றாலும் தங்கள் தனித்துவமான காரகத்தில் சொதப்பிவிடும்.
மக்களால் கொண்டாடப்பட்ட நாயகர்களான காமராஜர், ரவீந்திரநாத் தாகூர், M.G.R, ரமண மகரிஷி மற்றும் சமீபத்தில் மறைந்த இசைமேதை M.S.விஸ்வநாதன் போன்று பலரது ஜாதகங்களை இது விஷயத்தில் உதாரணமாகக் கொள்ளலாம் என்றாலும் இங்கு நாம் அலசவிருக்கும் ஜாதகம் கடந்தவாரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி திரு.A.B.J.அப்துல்கலாம் அவர்களுடையது.
15.10.1931 – 1.15 AM – ராமேஸ்வரம்.
சிறந்த பிறவிவிகளாக பரிணமிக்க தேவையான அடிப்படை ஒரு ஜாதகரின் பால்யவயதிலேயே விதைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் சன்னதி தெருவில் பல்வேறு மதச்சூழலில் வளர்ந்தவர் கலாம். கோவிலின் தலைமை குருக்களின் மகனுடன் பள்ளியில் இஸ்லாமியச் சிறுவன் அமர்ந்திருக்க இயலாது என்று கடைசி பெஞ்சிற்கு அனுப்பப்பட்டவர் கலாம். நண்பன் குருக்களான தன் தந்தையிடம் முறையிட்ட பிறகு குழந்தைகளிடம் வேற்றுமை பாராட்டாதீர்கள் என்று ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டு நண்பர்கள் ஒன்றுசேர்ந்தனர்.
ஒரு மீன்பிடி படகிற்கு சொந்தக்காரரான தன் தந்தையின் சம்பாத்தியத்தில் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தவர் கலாம். தந்தைக்கு உதவி செய்ய காலை 4.30 மணிக்கு கிளம்பி ராமேஸ்வரத்திற்கு வரும் செய்தித்தாள்களை வீடுதோறும் சென்று விநியோகித்துவிட்டு 8.00 மணிக்கு வீடு வந்து பள்ளி செல்வார் கலாம். இது போன்ற சிறுவயதுச் சம்பவங்கள் கலாம் மனதில் பெரிய பாதிப்பை கொடுத்திருக்க வேண்டும்.
கடக லக்னத்தில் கடன், வியாதி, எதிரியை குறிக்கும் 6ம் பாவாதிபதியும் 9ஆம் பாவமான பாக்கிய ஸ்தானத்தைக் குறிப்பவருமான பரம சுபன் குரு உச்சம். ஸ்திர ராசியான விருச்சிக ராசிக்கு பாதக ஸ்தானமான 9ல் தனித்த குரு உச்சமானதால் குடும்ப வாழ்வை கேள்விக்குறியாக்கி தனது உச்ச பலனை ஜாதகருக்கு நல்ல குணங்கள் மற்றும் நல்ல வாய்ப்புகளாக மாற்றிவிட்டார். தன் வீட்டில் ஒரு உச்ச கிரகம் அமைந்ததால் சந்திரன் நீச பங்கம் பெற்றார். உச்சன் குருவின் வீட்டில் அமைந்த சனியும் ராகுவும் வலிமை பெற்றனர்.
அஷ்டமாதிபதி சனி வலிமை பெற்றதால் தீர்க்கமான ஆயுள் பெற்றார். ஆனால் 7 ஆமதிபதி சனி தன் 7ஆவது பாவத்திற்கு 12 ல் அமைந்ததால் குடும்ப வாழ்வு ஜாதகருக்கு வாய்க்கவில்லை. 7 ஆமதிபதி சனியும் குடும்ப காரகன் குருவும் சடாஷ்டகத்தில் (6 – 8) அமைப்பில் அமைந்ததும் இதற்கு முக்கிய காரணம். ராசிப்படி ஆராய்ந்து இதை உறுதி செய்யலாம். ஸ்திர ராசியான விருச்சிக ராசிக்கு பாதக ஸ்தானமான 9ஆமிடத்தில் ராசிக்கு 2ஆமிடாதிபதியான குரு தனித்த நிலையில் உச்சமானது மற்றும் ராசிக்கு 2 ஆமிடத்தில் சனி அமைந்தது போன்ற இத்தகைய அமைப்புகள் எல்லாம் குடும்ப வாழ்வு ஜாதகருக்கு இல்லை என்பதை தெள்ளத்தெளிவாய் விளக்குகிறது. காரக அடிப்படையில் தான் அமைந்த வீட்டின் செயல்களை கடைசி நேரத்தில் தடுக்கும் விசேஷ குணம் கொண்டது மாந்தி. குடும்ப ஸ்தானத்தில் அமைந்த மாந்தி ஜாதகரின் பெண்பார்க்கும் படலத்தை கடைசி நேரத்தில் தடுத்துள்ளது தெரிகிறது. அக்னிச் சிறகுகளில் தனது பெண்பார்க்கும் படலம் கடைசியில் தடுக்கப்படுவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜாதகத்தில் குரு, சனி மற்றும் ராகுவும் ஜாதகரின் வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களாக வருகின்றன. ஆறாமதிபதி குரு உச்சமாகி ஜாதகருக்கு வாழ்வில் பல எதிர்ப்புகளை கொடுத்தார். ஆனால் 6 ஆமிடமான எதிரி ஸ்தானத்தில் வலுவாக அமைந்த குருவின் சமக் கிரகமான சனி அந்த எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கினார். பாக்ய ஸ்தானத்தில் வலுவாக அமைந்த ராகு ஜாதகரை புதுமையான முறையில் சிந்திக்கத் தூண்டினார். ராக்கெட், ஏவுகணை, அணுவியல் போன்றவை ராகுவின் காரகத்துவத்தில் வருகின்றன. 9 ஆமிடம் நுண்ணிய சிந்தனைகளுக்கான பாவம். குரு ஆழ்ந்த சிந்தனைகளுக்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குரு – ராகு சம்மந்தமே ஜாதகர் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படக் காரணம்.
கடக லக்னத்திற்கு யோக காரகனான செவ்வாய் திசை 1996 அக்டோபரில் துவங்கியது. செவ்வாய் உச்சன் குருவின் விசாக நட்சத்திரத்தில் அமைந்ததால் ஜாதகருக்கு “பாரத ரத்னா” விருது கிடைத்தது. அதே செவ்வாய் திசையின் சுக்கிர புக்தியில் ஜாதகர் இந்திய குடியரசுத் தலைவரானார். லக்ன கேந்திரத்தில் திக்பல வலுவுடன் ஆட்சி வீட்டில் அமைந்த சுக்கிரனுடன் பூமிகாரகன் செவ்வாய் இணைந்தது சிறப்பு. இயற்கை அன்னையின் மீது ஜாதகருக்கு இணையற்ற காதலை ஜாதகருக்கு இவ்வமைப்பு வழங்கிருக்க வேண்டும். செயற்கைக்கோள் அனுப்பிய வெற்றியை கொண்டாட 1 லட்சம் மரக்கன்றுகளை தனது உயரதிகாரியிடம் கலாம் கேட்டுள்ளார் என்பது இயற்கையின் மீதான அவரது நேசத்தை நிரூபிக்கிறது. குருவின் வீட்டில் அமைந்த ராகு திசை ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையை கொடுத்தது. ஜாதிமத பேதமின்றி அனைவரையும் நேசிக்கும் மனோ பாவத்தை தந்தது. தனது ஜனனத்தின் காரணத்தையும் மரணத்தின் காலத்தையும் ஒரு வட இந்திய ஜோகியின் மூலம் அறியச் செய்தது. மரணத்தையும் நிதானத்துடன் எதிர்கொள்ளச்செய்தது.
உச்சமாக அமைந்த புதனும் குருவும் வளரும் சமுதாயத்தினரான மாணவர்களை நோக்கிய திசையில் ஜாதகரின் கவனத்தை திருப்பின என்றால் அது மிகையல்ல.
மரணம் பற்றிய திசா புக்தி நுட்பங்கள் வாசகர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதால் அதுபற்றி இங்கு குறிப்பிடவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்களை ஒரு ஆட்டுமந்தைக் கூட்டங்களாகத்தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பரந்த ஆடு மந்தைக்கூட்டங்களை அடிக்கடி வெவ்வேறு பாதையில் திருப்பிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை ஒன்றை ஒன்று முட்டிச் சண்டையிடுவது மற்றுமின்றி மேய்ப்பவனையும் முட்ட ஆரம்பித்துவிடும்.
இந்திய அரசியல்வாதிகள் நல்ல மேய்ப்பர்கள்.
மக்களின் மனோபாவத்தை கலாமை நோக்கிச் சிலநாட்கள் செல்ல வழிவகுத்திருப்பவர்கள் ஆட்சியாளர்கள். உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான, பயங்கரவாதிகளையும், குதர்க்கவாதிகளையும் அரசியல்வாதிகளாகக் கொண்டிருக்கும் தேசமிது. குறிப்பாக தமிழகம்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.
அன்பன்,
பழனியப்பன்.
செல்பேசி: 7871244501.