
சென்ற பதிவில் ஒரு ஜாதகத்தில் களத்திர பாவகமும், களத்திர காரகரும் அமையும் நிலையை பொருத்து ஒருவருக்கு அமையும் திருமண வாழ்வு, அதன் போக்கு ஆகியவற்றை 3 திருமணங்கள் செய்த ஒரு ஆணின் ஜாதகம் மூலம் ஆராய்ந்தோம். கடந்த பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர்வது உபயோகமாக இருக்கும். இன்றைய பதிவில் ஒரு குடும்பத்திற்கு திருமணமாகி வரும் பெண்ணால் எப்படி அந்தக் குடும்பம் மாறுதலடையும் எனக் காண்போம். பானை பிடித்தவள் என்பது அந்தக்காலத்தில் கணவனின் வருமானம் மூலம் பானை பிடித்து சமையல் செய்யும் குடும்பத் தலைவியை குறிக்கும். மனைவி ஜாதகம் கணவனின் ஜாதகத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தால் அப்பெண்ணால் குடும்பம் தழைக்கும். பெண் என்பவள் குடும்பத்தின் குத்து விளக்கு என்று கூறுவர். விளக்கு குடும்பத்திற்கு ஒளி கொடுக்கவும் செய்யும். குடும்பத்தை எரிக்கவும் செய்து விடும் என்பதால்தான் திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் ஜாதகத்தை முதன்மைப்படுத்தி பொருத்தம் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு மணமாகி வரும் பெண் என்பவள் அனைத்து வளங்களையும் அருளும் மகா லக்ஷ்மியின் அம்சமாவாள். இன்றைய பதிவில் குடும்பத்திற்கு வந்து பானை பிடித்து சமைக்கும் மனைவி பாக்கியசாலியா? என சில உதாரண ஜாதகங்கள் மூலம் ஆராய்வோம்.
கீழே மணமான ஒரு பெண்ணின் ஜாதகம்.

கன்னி லக்னம் ஜாதகம். லக்னமும் 7 ஆமிடமும் ராகு கேதுக்களால் பாதிக்கப்பட்டதுடன் பெரும்பாலான கிரகங்கள் ராகு-கேதுக்களின் தொடர்பில் உள்ளன. 7 ஆமிடம் வக்கிர சனி மற்றும் கேதுவால் பாதிக்கப்பட களத்திர காரரும் மாங்கல்ய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் நீசமாகியுள்ளார். 2 ஆமதிபதி சுக்கிரன் 12 ல் மறைந்துள்ளார். இந்நிலையில் இப்பெண் கணவரின் குடும்பத்திற்கு வந்ததும் ஜாதகியும் கணவரும் குடும்ப வாழ்வில் சிறப்பை சந்திப்பார்களா? அல்லது பாதிப்பை சந்திப்பார்களா? என்று காண்போம். 7 ஆமிடத்தில் கேது அமைந்தாலும் 7 ஆமதிபதி குரு 4 ஆமிடத்தில் ஆட்சி பெற்று ஹம்ச யோகத்தில் சிறப்பாக அமைந்துள்ளார். 7 ல் அமைந்த சனி வக்கிரம் பெற்று கேதுவுடன் இணைந்துள்ளதால், ஏழாமிடம் பாதிப்பிற்குப் பதில் வலுவடைகிறது. லாப ஸ்தானத்தில் செவ்வாய் நீசமானாலும் அவர் உச்ச புதனின் ஆயில்யத்தில் நின்று நீச பங்கம் பெறுவதால் செவ்வாய் இங்கு யோக பலன்களையே வழங்கியாக வேண்டும். லக்ன புதன் சூரியனை விட்டு 15 பாகைகள் விலகியுள்ளதால் அஸ்தங்கமடையவில்லை. புதன் கன்னி லக்னத்தில் ஆட்சி, உச்சத்துடன் திக்பலமும் பெறுகிறார். ஆட்சி, உச்ச கிரகங்களுடன் ராகு-கேதுக்கள் இணைவு யோக பலன்களையே வழங்கும் என்ற அடிப்படையில் லக்ன ராகு இங்கு தீய பலன்களை வழங்க மாட்டார். 12 ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் சுய சாரம் பூரம்-1 ல் அமைந்து 4 ஆமிட குருவின் 9 ஆவது பார்வை பெறுவதால் ஜாதகி குடும்பத்திற்கு வந்ததும் வெளிநாடு சென்று பாக்கியங்களை அனுபவிக்கும் வாய்ப்புகள் ஏற்பட வேண்டும். லக்ன தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களின் நிலையாலும், லக்னத்தில் நிற்கும் சந்திரனின் நிலையாலும், 12 ஆமதிபதி சூரியன் லக்னத்தில் அமைந்ததாலும் 11 ஆமிட செவ்வாய் கடகத்தில் அமைந்து தனது நான்காம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதாலும், இந்த ஜாதகி குடும்பத்திற்கு வந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்று தனது வாழ்வின் உயர்வுகளை அடைவதுடன் கணவருக்கும் சிறப்பை சேர்ப்பாள். எனவே இங்கு ஜாதகிக்கும் யோகங்கள் உண்டு. அந்த யோகத்தால் தான் செல்லும் குடும்பத்திற்கும் சிறப்பை சேர்க்கும் அமைப்புகள் உண்டு. உண்மையும் அதுதான். ஜாதகிக்கு திருமணமாகி கணவருடன் வெளிநாட்டில் சிறப்பான குடும்ப வாழ்வை அனுபவித்துக்கொண்டுள்ளார்.
கீழே இரண்டாவதாக மற்றுமொரு மணமான பெண்ணின் ஜாதகம்.

அதே கன்னி லக்னம். 7 ஆமதிபதி குரு லக்னத்தில் திக்பலம் பெறுவதால் கணவர் தேடி வருவார். 7 ஆமதிபதி லக்னத்தில் அமர்ந்துவிட்டதால் எந்தச் சூழ்நிலையிலும் கணவரை விட்டுத்தர மாட்டார். 8 ஆமதிபதி செவ்வாய் தனது நட்பு வீட்டில் 12 ல் மறைவது ஓரளவு நன்மையே என்றாலும், களத்திர காரகர் விரைய ஸ்தானத்தில் மறைந்து, செவ்வாய் நின்ற ஸ்தானாதிபதி சூரியன் 2 ல் நீசமானது கணவர் வகையில் இந்த ஜாதகிக்கு ஏற்படும் பாதிப்பை கூறுகிறது. லக்னாதிபதி புதனும் செவ்வாயின் சித்திரையில் வக்கிரமானதால் கணவர் வகையில் ஏற்படும் விரையங்களை ஜாதகி ஏற்றுக்கொண்டு அதை சரி செய்ய முயல்வார். 7 ஆமதிபதி குரு லக்னத்தில் செவ்வாயின் சித்கிரையில் நின்று 7 ஆமிடத்தை பார்வையிடுவதால் கணவர் வகை விரையங்களை சமாளிக்க ஜாதகி போராடும் நிலையை இது குறிப்பிடுகிறது. ஜாதகி அரசு வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கணவரும் அரசுப் பணியாளரே. கணவரது பணி வழக்கால் பாதிக்கப்பட்டு அவரது உத்தியோக உயர்வுகள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தின் நிதி நிலையை சரி செய்ய ஜாதகியின் வருமானமே முக்கியமாகிறது. இங்கு மனைவியின் ஜாதக அமைப்பு கணவரின் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. இங்கு பாக்கியசாலி கணவரே. ஜாதகியின் உழைப்பு கணவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
கீழே மூன்றாவதாக மற்றொரு மணமான பெண்ணின் ஜாதகம்.

மிதுன லக்ன ஜாதகம். இந்த ஜாதகத்திலும் லக்னாதிபதி புதன் உச்ச சுக்கிரனுடனும், திக்பல சூரியனுடனும் 1௦ ல் நீச பங்கம் பெற்று வலுவோடு நிற்கிறார். 7 ஆமதிபதி குரு 3 ல் வக்கிரமாகி மறைவு. களத்திர காரகர் செவ்வாய் தனது பகை வீடான கும்பத்தில் ராகுவின் சதயம்-4 ல் நின்று 3 ல் மறைந்து கேது சாரம் பெற்ற குரு, சந்திரன், மாந்தி பார்வையை பெறுகிறார். களத்திர பாவாதிபதி குருவிற்கும், களத்திர காரகர் செவ்வாய்க்கும் சுதத்துவ தொடர்புகள் எதுவும் இல்லை. மேலும் குரு, செவ்வாய் இருவருக்கும் லக்னாதிபதியுடனோ லக்னத்துடனோ தொடர்பில்லாமல், லக்னாதிபதிக்கு ஆறிலும், பனிரெண்டிலும் மறைந்துள்ளனர். இதனால் இவரது கணவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆவதாக பார்த்த ஜாதகி போல இவர் தனது வாழ்வை கணவருக்காக அர்ப்பணிக்க மாட்டார். இவரது கணவர் விபத்தால் முடங்கிவிட்டார். கணவரின் உயிர் காக்க உதவிகள் புரிந்த மனைவி தற்போது கணவரை பிரிந்து தனது தொழிலை கவனித்து வருகிறார். இங்கு மனைவியின் ஜாதகம் வலுவாக உள்ளது. ஆனால் கணவருக்கு ஓரளவிற்கு மேல் உதவ மறுக்கிறது. இவர் முன் பார்த்த ஜாதகி போல தியாகி அல்ல. போராட்டமாகிவிட்ட தனது வாழ்வை தனது தொழில் திறமையால் சரி செய்ய முயன்றுகொண்டுள்ளார்.
கணவன்-மனைவி உறவு என்பது இரு கரங்கள் இணைந்து ஒலிக்கும் ஓசையாக இருக்க வேண்டும். ஒரு கை வீச்சு ஓசையாகாது. மற்றொரு கரம் உதவ கடமைப்பட்டுள்ளது என்றாலும் அது இணையும் கரத்தின் ஒத்துழைப்பை பொறுத்தே அமைகிறது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.











