வாழ்வில் பல உயர்வு, தாழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கலாம். உயர்வில் கொண்டாடவும், தாழ்வில் தன்னமிக்கை ஊட்டவும் நல்ல உறவும், நட்பும் எப்போதும் நமக்குத் தேவை. நட்பை விட உறவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் சமுதாயத்தில் உறவுகளைவிட நல்ல நட்புக்கள் நமக்கு உதவுவதையும், உறவுகள் நம்மை கண்ணீர்விட வைப்பதையும் ஒரு பக்கம் பார்த்தால், மறுபக்கம் நட்பு ஒரு சிலரை கதறடித்தது உறவுகளால் அவர்கள் காப்பாற்றப்படுவதையும் காணமுடிகிறது. உறவுகளில் முக்கியமானது பெற்றோர். அதனால்தான் ஒளி கிரகங்களான சூரியனை தந்தைக்கும், சந்திரனை தாய்க்கும் காரக கிரகமாகக் குறிப்பிடுகின்றனர். வாழ்வில் ஒருவர் முன்னேற பெற்றோர்களே முதன்மையான வழிகாட்டியாக இருப்பார் என்பதால்தான் இவ்விரு கிரகங்களுக்கும் பெற்றோர் எனும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் பெற்றோரிடத்தில் இருந்தவரை கடும் மன வலிகளை அனுபவித்திருப்பர். இத்தகையவர்களில் சிலர் திருமண உறவு மூலம் நல்ல ஆதரவை பெறுகின்றனர். வேறு சிலர் பணியிடத்தில், அண்டை அயலார் மூலம் உறவில் கிடைக்காத ஆதரவை பெறுகின்றனர். ஜோதிடத்தில் ஒரு ஜாதகருக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவை லக்னத்துடன் 4, 9 பாவாதிபதிகளும், சூரிய-சந்திரர்களும் எவ்விதம் தொடர்பாகிறார்கள் என்பதை ஆராய்வதன் மூலம் அறியலாம். இதை மேலும் துல்லியமாக துவாதாம்சம் எனும் வர்க்கச் சக்கரம் மூலம் அறியலாம். ஒரு குழந்தை பிறந்தவுடன் உயர்தர குடும்பங்களில் தகுந்த ஜோதிடர்களிடம் காட்டி அக்குழந்தையால் பெற்றோர்களுக்கோ அல்லது பெற்றோர்களால் அக்குழந்தைக்கோ தீங்கு நேரும் என அறிந்தால் குழந்தையின் வளர்ப்பை, ஜாதகத்தில் நல்ல நிலை பெற்ற கிரக காரக உறவிடம் ஒப்படைப்பது பண்டைய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபு. உறவுகளுடன் ஒரு ஊரிலோ, தெருவிலோ இணைந்து வாழும் சமூக அமைப்பை கடந்துவிட்ட இன்றைய காலத்தில் இதுவும் சாத்தியப்படாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் திருமண உறவின் மூலம் இணையும் ஒரு ஆணும் பெண்ணும் தனது துணைவரிடமாவது தனக்கு அன்பும் ஆதவும் கிடைக்குமா? என எதிர்பார்ப்பது இயல்பு. நமது உணர்வுகளை புரிந்துகொண்டு நமக்கு உயர்வுக்கு யார் வழிகாட்டியாக இருப்பர்?, ஏன் ஆதரிக்க வேண்டிய பெற்றோர்களே சிலரை பாதிக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கு விடை காணமுற்பட்டதன் விளைவே இப்பதிவு.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
ஜாதகி தற்போது திருமணமாகி தனது குடும்பத்துடன் வசிக்கிறார். கன்னி லக்ன ஜாதகம். லக்னத்தில் லக்னாதிபதி புதன் வக்கிரம் பெற்று வலுக் குன்றிவிட்டார். லக்னத்தில் சூரியன் நிற்கிறார். சூரியன் லக்னாதிபதிக்கு புதனுக்கு நண்பர் ஆனாலும் அவர் விரையாதிபத்தியம் பெறுவதால் மிகுந்த நன்மையை செய்ய வாய்ப்பில்லை. மேலும் சூரியன் தனது நீச்ச வீட்டை நோக்கிச் செல்கிறார். தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவகாதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 12 ல் தனது பகைக்கிரகமான சந்திரனுடன் சேர்ந்து கேது தொடர்பில் மறைந்துவிட்டார். சுக்கிரனும் தனது நீச்ச வீட்டை நோக்கிச் செல்கிறார் என்பதை கவனிக்க. இதனால் ஜாதகி தனது தந்தையிடம் மிகுந்த அன்பை எதிர்பார்க்க இயலாது. தாயை குறிக்கும் சந்திரன் 12 ல் மறைந்ததைவிட கேதுவுடன் இணைந்தது கடும் கிரகண தோஷமாகும். சூரியனுக்கு கிரகண தோஷமில்லை. ஆனால் சந்திரனுக்கு கிரகண தோஷம் ஏற்பட்டுள்ளதால் ஜாதகி தாயிடம் அன்பை எதிர்பார்க்க வாய்ப்பில்லை. தாயை குறிப்பிடும் 4 ஆம் பாவகத்தில் சனி அமைந்துள்ளதை கவனிக்க. அவரும் கேதுவின் மூல நட்சத்திரத்திலேயே அமைந்துள்ளதை கவனிக்க. இது ஜாதகியின் தாய் பாச உணர்வு குன்றியவர் என்பதைக் குறிக்கும். 4 ஆமதிபதி குருவே கன்னி லக்னத்திற்கு பாதகாதியாகவும் வருகிறார் என்பதை அறிக. மாத்ரு ஸ்தானமான 4 ஆமதிபதி குரு, 4 க்கு 6 ல் ரிஷபத்தில் சந்திரனின் நட்சத்திரமான ரோஹிணி-1 ல் மறைந்துவிட்டார். இதனால் ஜாதகிக்கு தாயின் அன்பு மறுக்கப்படும் என்பது தெரிகிறது. குரு வக்கிரமடையாமல் சந்திரனின் சாரம் பெற்றிருந்தால் அது சந்திரனை வலுப்படுத்தும். ஆனால் வக்கிரம் பெற்றுவிட்ட குருவின் கட்டளையை வக்கிரமடையாத சந்திரன் ஏற்க மாட்டார் என்பதால் சந்திரன் சாரத்தில் வக்கிர குரு நிற்பது சந்திரனுக்கு பயனைத் தராது. ஆனால் வக்கிரம் பெற்றாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு. இதனடிப்படையில் 9 ல் வக்கிரம் பெற்ற குரு லக்னத்தில் அமைந்த சூரியனை பார்ப்பதால் ஜாதகியின் தந்தை, தாய் அளவு இல்லாமல் ஜாதகியிடம் ஓரளவு அன்பை காட்டுவார் எனலாம்.
பெற்றோர்களுக்கும் ஜாதகிக்கும் உள்ள பிணைப்பை துவாதசாம்சம் துல்லியமாகக் காட்டிவிடும்.
தசாம்சத்தில் லக்னத்தில் சனி ஆட்சி பெற்றுள்ளார். இது பெற்றோர்களின் பாசம் கிடைக்காவிட்டாலும் ஜாதகி கலங்க மாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் அஷ்டமாதிபதியாகிவிட்டதால் தந்தை வகையில் போதிய பாசப் பிணைப்பு ஜாதகிக்கு கிடைக்காது. 8 ல் 9 ஆமதிபதி புதன் வக்கிரம் பெற்று அமைந்தது தந்தை குறிப்பிட்ட மனச் சுழற்சியில் அதாவது தான் இப்படித்தான் என்ற மன நிலையிலேயே மகள் மீது பாசத்தை காட்டுவார். தந்தையை குறிப்பிடும் 9 ஆமிடமான கன்னியில் ராகுவுடன் குரு வக்கிர நிலையில் இணைந்தது ஒரு சிறப்பான அம்சம். வக்கிர கிரகங்களை ராகு-கேதுக்கள் பாதிக்காது என்பதே காரணம். ராகுவுடன் இணைந்த குரு சூரியனை தனது 9 ஆம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகிக்கு தந்தையின் பாசம் ஓரளவு கிடைக்கும். இதே குரு நேர்கதியில் ராகுவோடு இணைந்து சூரியனை பார்த்தால் பலன் குறைவு. சூரியன் தன் வீட்டிற்கு 1௦ ல் அமைவதால் தந்தை தனக்கே உண்டான ஆதிக்க மனப்பான்மையால் ஜாதகியிடம் அதிகமாக பாசத்தை காட்டமாட்டார். தாயை குறிப்பிடும் 4 ஆமிடமான மேஷம் லக்னாதிபதி சனியின் நீச ராசியாவதால் தாய்க்கு இயல்பாகவே ஜாதகி மீது ஈடுபாடு குறைந்திருக்கும். ஆனால் 4 ஆமதிபதி செவ்வாயின் உச்ச ராசியாக மகரம் வருவதால் தாயார் ஆத்மார்த்தமாக அல்லாமல் கடமைக்கு ஜாதகி மீது ஈடுபாட்டை காண்பிப்பார். 4 ஆமதிபதி செவ்வாய் வக்கிரம் பெற்று லக்னத்திற்கு 6 ல் அமைந்தது தாய்க்கு ஜாதகி மீது உள்ள ஈடுபாட்டை குறைக்கும் விதமாகவே உள்ளது. இந்நிலையில் காரக கிரகம் சந்திரனின் நிலை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சந்திரன் சுக்கிரனுடன் இணைந்து தனது நீச வீடான விருட்சிகத்தில் அமைந்துள்ளது தாய் ஜாதகியிடம் பாச உணர்ச்சியற்று நடந்துகொள்வார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. இந்த ஜாதகத்தில் தந்தையின் நிலை ஓரளவுக்காவது ஜாதகி மீது பாசத்தை காட்டும் நிலையில் உள்ளது. ஆனால் தாயின் பாசம் ஜாதகிக்கு மிகக் குறைவு என்பதையே காட்டுகிறது. சந்திரன் சுக்கிரனுடன் இணைந்து சூரியன் பார்வையை பெறுவது பெற்றோர்களுக்கிடையே ஒற்றுமை உள்ளதை குறிப்பிட்டாலும், தாய் உறவைவிட பணம், கௌரவம் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுப்பார் என்பதை குறிப்பிடுகிறது. ஜாதகியின் தாய் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்.
இந்தப்பெண்மணிக்கு ஜாதகம் குறிப்பிட்டவாறு தந்தையின் பாசம் தனக்கு ஓரளவே கிடைத்தது. அதிலும் தந்தை தான் சொல்வதை ஜாதகி மறுக்கக்கூடாது என்ற மனோபாவம் கொண்டவராக இருந்தார் என்று கூறுகிறார். இவரது தாயார் இயல்பிலேயே தன்மீது பாச உணர்ச்சியற்று நடந்துகொண்டார் என்று கூறுகிறார். தனது தாயார் தன் அண்டை வீட்டு சிறுமிக்குக்கூட தலையில் பூச்சூடி அழகு பார்த்தவர். பெற்ற மகளான தனக்கு பூச்சூடிவிட்டது இல்லை என்று வருத்தப்பட்டார்.
பெற்றோரிடம் கிடைக்காத பாசத்தை ஒரு பெண் தனது கணவரிடம் எதிர்பார்ப்பது இயல்பு. அதற்கு இவரது நவாம்சத்தை ஆராய்வோம் வாருங்கள்.
நவாம்சத்தில் மேஷ லக்னத்திற்கு பாக்யாதிபதி குரு லக்னத்தில் அமைந்தது சிறப்பே என்றாலும் அவர் வக்கிரம் பெற்று அமர்ந்தது குருவின் நற்பலன்கள் ஜாதகிக்கு கிடைப்பதை தடுக்கிறது. லக்னாதிபதி செவ்வாயும் வக்கிரமாகி லக்னத்திற்கு 6 ல் மறைந்துவிட்டது கூடுதல் தீமை. ஆனாலும் 6 ல் பாவிகள் அமைவது நன்மையே என்ற விதியையும் பார்க்கவேண்டும். களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைத்து, 7 ஆமாதிபதி சுக்கிரன் 7 க்கு திரிகோணத்தில் மிதுனத்தில் நட்பு பெற்று அமர்ந்தது ஒரு நல்ல நிலையே. அதுவும் செவ்வாய்க்கு தசம கேந்திரத்தில் சுக்கிரன் அமைந்ததால் கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஒரு புரிதல் நிச்சயம் இருக்கும். ஆனால் இதிலும் ஒரு Twist உள்ளது. சுக்கிரன் இங்கு நேர்கதியில் உள்ளார். செவ்வாய் வக்கிரம். இதனால் இருவருக்குமிடையே ஒருங்கிணைவு இருந்தாலும் நேர்கதி கிரகமும், வக்கிர கிரகமும் மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவை. இது இருவருக்கும் வாழ்வை பார்க்கும் விதத்தில் வேறு வேறு கண்ணோட்டத்தை கொடுக்கும். இதனால் ஒருவர் அருமையும், அன்பும் மற்றவருக்குத் புரியாது. இது அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டியதுதான் எனும் நிலைக்கு இட்டுச் செல்லும். உண்மையும் அதுதான்.
என் பெற்றோர்களின் அன்பை ஏன் நான் பெற முடியவில்லை?. கணவரால் மதிக்கப்படுகிறேன் என்றாலும் என்னை ஏன் தனது கணவர் முழுமையாக புரிந்துகொள்ள மறுக்கிறார்? என கேட்ட ஜாதகிக்கு இங்கு சொல்லப்பட்ட காரணங்கள் ஜோதிட ரீதியானவை என்றாலும், தனிப்பட்ட ஒருவர் எந்தச் செல்வ நிலையையும் தாண்டி அடிப்படையில் உண்மையான அன்பிற்கும் புரிதலுக்குமே ஏங்குகிறார் என்ற அப்பட்டமான உண்மையை உரக்கச் சொன்னது இந்தச் ஜாதகம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501