
ஒரு விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. திருமண விஷயங்களில் கடந்த தலைமுறை வரை ஜோதிடத்தை நம்பினர் என்றால், அதனுடன் கூடவே உறவுகள், நட்புகள் போன்ற பல வகைகளில் திருமண வரனைப் பற்றிய தகவல்களை சில சமயங்களில் பணம் செலவு செய்தும் உறுதிப்படுத்திக்கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையில் தங்கள் வாழ்க்கைத் துணைவராக வர இருப்பவருடன் சில காலம் பழகி, பிறகு திருமணம் செய்துகொள்ளும் “Dating” கலாச்சாரம் வந்துவிட்டது. இது மேல்நாட்டுக் கலாச்சாரமானாலும் காலத்தின் அவசியத்தால் இன்று இந்திய உயர், உயர் நடுத்தர குடும்பங்களில் இது நடைமுறையில் வந்துவிட்டது. அடுத்த தசாப்தங்களில் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் இது நடைமுறைக்கு வந்துவிடும் என்பது தெளிவு. இதன் விளைவுகளை தற்போதே பார்க்கத் துவங்கிவிட்டோம். நிச்சயமான மண மகனையோ அல்லது மணப் பெண்ணையோ பிடிக்கவில்லை என்று கூறி விலகுவது பரவலாகிவிட்டது. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி பெற்ற பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி போன்ற பல நகரங்களில் இவை இன்று சாதாரணம் என்றாகிவிட்டது. திருமணமாகி பிறகு வருந்துவதை விட முன்னரே அறிந்து விலகுவது ஒரு வகையில் புத்திசாலித்தனமே. ஜோதிடத்தில் தகுந்த ஜோதிடர் ஒருவரால் இருவருக்கிடையேயான குண இயல்புகளை தெள்ளத்தெளிவாக கூற இயலும் என்றாலும், இன்றைய இளம் தலைமுறை ஜோதிடத்தை முழுமையாக நம்மைத் தயாரில்லை என்பது தெளிவு. Dating சரியா, தவறா என்பதை விடுத்து இந்த மறுக்க இயலாத நடைமுறை உண்மையை ஜோதிட ரீதியாக ஆராய்வதே இன்றைய பதிவு.
ஜோதிடத்தில் Dating என்பதற்கு லக்னத்திற்கு மூன்றாமிம் காரக பாவகமாகும். கால புருஷனுக்கு மூன்றாமிடமாகிய மிதுனம் காரக ராசியாகும். மிதுனாதிபதி புதன் காரக கிரகமாவார். முயன்று பார்ப்போம் எனும் நிலையே இந்த காரக நிலைக்கு காரணம். மேலும் 3 என்பது காதல் பாவகமான 5ன் லாப பாவகம் என்பதாலும் முயன்று பார்த்து அது லாபகரமான காதலானால் வெற்றியே என்பதே இதன் அடிப்படை. தொடர்பு ஸ்தானமெனும் 7 ஆம் பாவகமும் இதில் முக்கிய பங்காற்றும். லக்னாதிபதியும், லக்னத்தில் நின்ற கிரகமும் ஜாதகரின் குணம், ரசனை, மற்றவர்களை எதிர்கொள்ளும் தன்மை ஆகியவற்றை அறிவிக்கும். இவற்றுடன் பார்வை, சேர்க்கை, சாரம் ஆகிய வகைகளில் தொடர்பாகும் கிரகங்களும் ஜாதகரின் குணத்தை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றன. இதே போல 7 ஆமிடம், 7 ல் நின்றோன், 7 ஆமதிபதி இவற்றின் மூலம் ஒரு ஜாதகரை தொடர்புகொள்ளும் நபரின் குண இயல்புகளை அறியலாம். நவாம்சமும் துணைவரை மட்டுமல்ல, ஜாதகரை ஈர்க்கும் நபரின் குண இயல்புகளை அறிந்துகொள்ளவும் துணை புரியும். லக்ன திரிகோணங்களாகிய ஐந்தும், ஒன்பதும் ஜாதகரின் எண்ணங்களை முறைப்படுத்த முக்கிய பங்காற்றும். அதே போல 7 ன் திரிகோணங்களாகிய பதினொன்றும், மூன்றும் ஜாதகரோடு தொடர்பாகும் நபரின் எண்ணங்களை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றும். அக்ஷவேதாம்சம் எனும் ஒரு ராசியை 45 பகுதிகளாக பிரித்து ஆராயும் வர்க்கச் சக்கரத்தில் ஒருவர் எதிர்பாலினரை எப்படி அணுகுவார் என்பதை ஆராய்ந்து தெரியலாம்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

1992 ல் பிறந்த ஜாதகி தன்னை வசீகரிக்கும் தகுந்த வரனை இன்னும் அடையாளம் காண இயலாததால் தனது திருமணத்தை தாமதப்படுத்துகிறார். மேஷ லக்னாதிபதி செவ்வாய் ஆமிடம் கன்னியின் வக்கிரமாகி ராகுவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். லக்னாதிபதி வக்கிரமானது ஜாதகியின் பிடிவாத நிலைகளை குறிக்கிறது. ராகுவுடன் செவ்வாய் வக்கிரம் பெற்று அமர்ந்துள்ளதால் அவர் ராகுவால் பாதிக்கப்பட மாட்டார். மாறாக ராகுவும் தன்னுடன் ஒரு வக்கிர கிரகம் அமர்ந்ததால் நன்மையே செய்வார். 6 ஆமிடம் என்பது வேலையை குறிக்கும். செவ்வாய் என்பது பெண்ணுக்கு கணவனை குறிக்கும். ஜாதகி வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார். களத்திர காரகர் செவ்வாய் வக்கிரமானதால் தனக்கு கணவராக வருபவரை பற்றி இந்த ஜாதகி பிடிவாதமான சில கொள்கைகளை வைத்திருப்பார் எனலாம். ராகு-கேது அச்சை விட்டு லக்னம் மட்டும் தனியாக பிரிந்துள்ளது. இது தனது சொந்தம், சுற்றம் இவர்களை விட்டு ஜாதகி மட்டும் தனியே பிரிந்து வாழும் நிலையை குறிக்கிறது. இந்த ஜாதகி பெற்றோர்களை தனது உத்தியோக நிமித்தம் பிரிந்துள்ளார். தாம்பத்ய ஸ்தானமெனும் 12 ஆமிடத்தில் சனி, கேது இணைவு தாம்பத்ய சுகத்தை தாமதப்படுத்தும். கேதுவுடன் இணைந்த சனி தன குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தை பார்ப்பதாலும், 10 ஆமிடம் மகரத்தில் நீசமான குருவுடன் பரிவர்த்தனை ஆவதாலும் ஜாதகி வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தனக்கு குடும்பம் அமைத்துக்கொள்ள கொடுக்க மாட்டார். அதாவது திருமணத்திற்கு அவசரம் காட்ட மாட்டார்.
ஜாதகி ராகு தசை, குரு புக்தியில் உள்ளார். 7 ஆமதிபதி சுக்கிரன் மூன்றாமதிபதி புதனுடன் இணைந்து, 11 ல் சூரியனுடன் நிற்பதால் தனது வாழ்க்கைத் துணைவரை பழகி புரிந்து பிறகு மணம் புரிய எண்ணுகிறார். 6 ஆமிடத்தில் புதனின் வீட்டில் நிற்கும் தசாநாதர் ராகு, Dating ஐ குறிக்கும் மூன்றாமிடம் மிதுனத்தில் கிரகங்கள் இல்லாததால் மூன்றாமிடத்திற்கும் தனது தசா பலனை பிரித்து கொடுப்பார். ராகுவை பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் புக்திநாதர் குரு பார்க்கிறார். ஜாதகி ராகு தசை, குரு புக்தியில் உள்ளார். இதனால் தற்போது குருவின் அம்சமுடைய ஒருவரின் தொடர்பு ஜாதகிக்கு ஏற்பட வேண்டும். பிராமணரல்லாத ஜாதகி, தற்போது குருவின் அம்சமான பிராமண வர்க்கத்தை சார்ந்த ஒரு நபரை விரும்புகிறார். அவருடன் Dating செய்து தனக்கு அவர் பொருத்தமானவரா? என தெரிந்துகொள்ள எண்ணம். ஜாதகியின் தொடர்பு வட்டத்தில் இணைந்துள்ள நபரின் குண இயல்புகளை நவாம்சம் மூலம் அறியலாம்.

நவாம்சத்தில் ரிஷப லக்னத்திற்கு Dating ஐ குறிக்கும் மூன்றாமதிபதி சந்திரன், தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடம் விருட்சிகத்தில், காரக கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே நீசம். லக்னத்தில் எட்டாமதிபதி குரு அமர்ந்துள்ளார். தசாநாதர் ராகு, Dating ன் காரகர் புதனை நோக்கி வருகிறார். காரகர் புதன் ராகுவால் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட நபரின் குண இயல்புகள் ஜாதகியின் எண்ணத்திற்கு மாறாக இருக்கும். இதனால் ஜாதகி Dating செய்யும் நபர் ஜாதகிக்கு பொருத்தமானவரல்ல. 10 ல் லக்னாதிபதியுடன் புதன் இணைந்துள்ளதால் பணியிடத்தில் ஏற்பட்ட தொடர்பாக அது இருக்கும். எட்டாமதிபதி குரு லக்னமேரி புத்தி நடத்துவதால் அவமானமும், 7 ல் நீச சந்திரன் புதனின் சாரத்தில் நிற்பதால் மனக்காயங்களும் அவரால் ஜாதகிக்கு ஏற்படும். ஜாதகி அந்த நபரை என்ன மனநிலையில் வைத்து பழகுவார் என அக்ஷவேதாம்சம் மூலம் அறியலாம்.

பொதுவாக அக்ஷவேதாம்சம் தந்தைவழி உறவுகளை அறிய பயன்படும். இவ்வர்க்கத்தை ஆராய்வதன் மூலம் மற்றொரு பலன் என்னவெனில், ஒருவர் தனது எதிர்பாலினரிடம் என்ன அணுகு முறையுடன் பழகுவார் என்பதை அறிவதாகும். அக்ஷவேதாம்சத்தில் விருட்சிக லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய் வக்கிரமாகி நிலை குலைந்த நிலையில் உள்ளார். இது ஜாதகி தன்னுடன் பழகும் எதிர்பாலினர் தனது எண்ணப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பிடிவாதமாக இருப்பதை குறிப்பிடும். அதாவது பொதுவாக எதிர்பாலினரிடம் விட்டுக்கொடுத்து போகும் இயல்பு ஜாதகிக்கு குறைவு. லக்னத்திற்கு 3 ஆமதிபதி சனி பாதக ஸ்தானமான கடகத்தில் அமைந்த நிலையில், காரக கிரகம் புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்றது சிறப்பே. எனினும் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் 6/8 ஆக அமையபெற்ற நிலையில், 7 ஆமதிபதி சுக்கிரனும் லக்னத்திற்கு 6 ல் மறைந்துள்ள நிலையில் 7 ஆமதிபதி சுக்கிரனும் லக்னாதிபதி செவ்வாயும் 6/8 அமைப்பில் நின்றது, கருத்தொருமிப்பு இல்லா நிலையை குறிப்பிடும். தசாநாதர் ராகு 10 ல் சிறப்புற அமைந்திருந்தாலும், புக்திநாதர் குரு ராகுவிற்கு 8 மறைந்தது, ஜாதகிக்கும் அவர் Dating செய்யும் நபருக்கும் கருத்தொற்றுமை இல்லை என்பதையே காட்டுகிறது. ஆசையை குறிப்பிடும் 5 ஆமிடத்தில் புக்திநாதர் குரு அமைந்ததால் ஈர்க்கப்பட்டு, குறிப்பிட்ட நபர் ஜாதகியை கவர்கிறார். ஆனால் கருத்தொற்றுமை இல்லை. இதனால் ஜாதகி மனக்காயப்பட்டாலும் இது அவருக்கு இயல்பாக நடக்கும். காரணம் லக்னத்தில் நிற்கும் லக்னாதிபதி செவ்வாய் வக்கிரம் பெற்றதுதான். ஜாதகி மனக்காயங்களை அடைந்தாலும் அதிலிருந்து வெளிவந்துவிட்டார். லக்ன செவ்வாய் கட்டளைடும். செவ்வாய் வக்கிரமாகிவிட்டால் கட்டளை தகுதியற்றதாக இருக்கும். இவரது கட்டளைகளை எதிராளி ஏற்க மறுப்பார்.
இதுவரை 3 நபர்களுடன் Dating செய்தும், தனக்கான நபரை ஜாதகி அடையாளம் காண இயலவில்லை.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி:8300124501