மதுரையும் சிதம்பரமும்!
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் தன்மையை பொறுத்து “உங்கள் வீட்டில் மதுரையா அல்லது சிதம்பரமா?” என்றொரு கேள்வி அன்றைய வழக்கத்தில் இருந்தது. மதுரை என்பது மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாக்ஷியை குறிப்பிடுவது. அங்கு சொக்கநாதருக்கு இரண்டாமிடம்தான். அதுபோல சிதம்பரம் என்றால் நம் நினைவுக்கு வருவது நடராஜர்தான். அங்கே அவருக்குத்தான் முதல் மரியாதை. பொதுவாக ஒரு குடும்பத்தை பெண் நிர்வகிப்பதே சிறப்பு. காரணம் இயல்பாகவே பெண் என்பவள் பொறுமைக்கு உதாரணமான பூமாதேவியின் அம்சமாக மதிப்பிடப்படுபவள். குடும்ப உறவுகளை தாய்மை உள்ளத்தோடு அணுக வேண்டும். அது பெண்ணுக்கே உரியது. அதனாலேயே குடும்பத்தை ஒரு பெண் நிர்வகிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால் அலுவலக உறவுகளை ஒரு ஆண் தாய்மை உணர்வுடன் அணுகக்கூடாது அங்கே சாதுரியத்திற்கே முன்னுரிமை. அலுவலக உறவுகளை புத்தி கொண்டே அணுக வேண்டும். ஆண் குடும்ப உறவுகளை புத்தி கொண்டு அணுகினால் குடும்ப உறவுகளுக்கிடையேயான உறவுகள் வரவு செலவுகளின் அடிப்படையில் அமையுமே தவிர அது நெஞ்சம் நிறையும் பாசத்தின் அடிப்படையில் அமைய வாய்ப்பு குறைவு. இதனால் ஆணின் ஆளுமை அலுவலகத்தில்தான் இருக்க வேண்டும் குடும்பத்தில் அல்ல என்றொரு கருத்து உருவானது. இவை இடம்மாறி அமைவதும் உண்டு. உதாரணமாக மனைவி ஒரு வணிக பின்னணியை கொண்டவராக இருந்து வந்திருந்தால் அவளிடம் இயல்பாகவே அவளின் சுபாவத்தில் பாசத்தைவிட லாப நோக்கே இடம்பெற்றிருக்கும். இதனால் ஏற்படும் சிக்கல்களை களைய அங்கு கணவன் தனது குடும்ப உறவுகளை பேண தாய்மை உணர்வு கொண்டவனாக தனது பங்களிப்பை அளித்ததாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். கணவன் பொருளாதார மற்றும் பணிச்சூழலை கையாளத்தெரியாவிட்டால் அவற்றில் சிறந்த மனைவியின் ஆலோசனையை நாடுவதில் தவறில்லை. இன்றைய பதிவு இதைப்பற்றியதுதான்.
மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் 7 ஆமதிபதி 7 ஆமிடத்திலேயே வக்கிரமாகியுள்ளது. எந்த ஒரு கிரகமும் தனது ஆட்சி வீட்டில் வக்கிரமானால் தனது சுபாவ குணத்தை இழந்துவிடும். ஒரு ஜாதகத்தில் பரம சுபக்கிரகமான குகு இப்படி வக்கிரமடைவது பொதுவாக நன்மையான அமைப்பு அல்ல. ஆனால் இங்கு 7 ஆமிடம் என்பது உபய லக்னமான கன்னிக்கு பாதக ஸ்தானம் என்பதால் குரு வக்கிரமடைவது ஒருவகையில் நன்மையே. இந்த ஜாதகத்தில் மனைவியை குறிப்பிடும் சுக்கிரன் நீசமாகி தனது பகை கிரகமான லக்ன விரையாதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார். சூரியன் 11 பாகையிலும் சுக்கிரன் 2௦ பாகையிலும் நிற்கின்றனர். இதனால் சுக்கிரனுக்கு பெரிதாக அஸ்தங்க தோஷமில்லை. எனினும் நீச வீட்டில் இருப்பதால் ஜாதகரின் மனைவி சாதுரியம் குறைந்தவராக இருக்கவே வாய்ப்பு அதிகம். இந்த ஜாதகத்தில் புதனுடனான பரிவர்தனைக்குப்பின் சூரியன் 12 ஆமிடத்திம் சென்று மறைகிறது. 3 & 8 ஆமதிபதியான செவ்வாய் 2 ல் அமைந்து 1௦ ஆமிட ராகுவின் சுவாதி சாரம் பெறுகிறார். மற்றொரு ஆண் கிரகமான குரு தனது வீட்டில் வக்கிரமாகி வலு குறைக்கிறார். இதனால் 3 ஆண் கிரகங்களும் தங்களது தனித்துவமான ஆளுமை குணத்தை இழக்கின்றனர்.
இப்போது மனைவியை மதிப்பிடுவோம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் நீசமானாலும் சூரியனுடன் பரிவர்த்தனையான புதனின் வரவால் வலுவடைகிறார். லக்னாதிபதி புதன் வக்கிரமடைவது ஜாதகரை மட்டுமே பாதிக்கும். சுக்கிரனை பாதிக்காது. லக்ன திரிகோனத்திலும் ஒரு பெண் கிரகம் சந்திரனே அமைந்துள்ளது. மற்றொரு பெண்கிரகமான ராகு தசம கேந்திரமான 1௦ ஆமிடத்தில் வலுவாக அமைந்து தனது உச்ச வீட்டை நோக்கியுள்ளார். இந்த அமைப்புகளின்படி ஆண் கிரகங்களைவிட பெண் கிரகங்களின் வலுவே இந்த ஜாதகத்தில் கூடியுள்ளது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் பரிவர்த்தனை கிரகங்களான புத்திகாரகன் புதன் மற்றும் நிர்வாக காரகன் சூரியனின் தொடர்பையும் ஒருங்கே பெறுவதால் வலுவடைகிறது. மற்றொரு அம்சமாக பாதக ஸ்தான குரு அங்கே வக்கிரமடைவதால் தனது பாதக ஆதிபத்தியத்தை கைவிட்டு சுபதுவமான தனது காரகத்தை மட்டும் தக்கவைத்துக்கொள்கிறார். இப்படி 7 ல் நிற்கும் குரு லக்ன கிரகங்களை பார்க்கும் நிலையில் சுக்கிரன் வலுவடைகிறார். இதனால் இந்த ஜாதகத்தில் கணவனைவிட மனைவியே முக்கியதுவம் பெறுகிறார்.
கீழே இரண்டாவது ஜாதகம்.
இந்த ஜாதகத்தில் குரு லக்னதிலேயே உச்சமாகி திக்பலத்தில் உள்ளது. லக்னாதிபதி சந்திரன் மனைவியை குறிக்கும் 7 ஆமிடத்தில் அமர்ந்துள்ளது. இந்த ஜாதகத்தில் 7 ல் நிற்கும் லக்னாதிபதி சந்திரனைவிட லக்னத்தில் அமர்ந்த குருவின் திக்பலம் வலுவானது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் ரிஷபத்தில் தனது பாதக வீட்டில் 3 பாகை பெற்று தார காரகனாகியுள்ளார். சூரியன் அதே இடத்தில் 25 பாகை பெற்று ஆத்ம காரகனாகியுள்ளார். இதனால் அங்கு சுக்கிரனைவிட சூரியன் வலுவடைகிறார். இந்த ஜாதகரின் மனைவியும் குடும்ப நிர்வாகத்தை தானே நடத்த முயன்றார். ஆனால் குருவின் திக்பலமும் சுக்கிரன் பாதக ஸ்தானம் பெற்றதனாலும் ஜாதகரே குடும்பத்தை நிர்வகிக்கிறார்.
மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் கீழே.
இந்த ஜாதகத்தில் கடக லக்னத்திற்கு 7 ஆமிடத்தில் குரு நீசமாகியுள்ளார். இது வாழ்க்கைத்துனைவருக்கு சிறப்பை தராது. லக்னாதிபதி சந்திரனும் லக்னத்திற்கு 8 ல் லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் மறைந்துள்ளார். இதனால் ஜாதகிக்கும் இது சிறபான அமைப்பல்ல.ஆனால் லக்னாதிபதி சந்திரன் குருவின் பூரட்டாதி-1 லும் குரு திருவோணம்-3 லும் அமைந்து சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். இதனால் பரிவர்த்தனைக்குப் பின் ஆண் கிரகங்களான குருவும் செவ்வாயும் லக்னத்திற்கு 8 ல் மறைகிறார்கள். பரிவர்த்தனை சந்திரன் லக்னத்திற்கு 7 ல் தனது சுய சாரத்தில் வந்து அமைவதால் லக்னம் வலுவாகிறது. கணவனை குறிக்கும் களத்திர & வாகன காரகன் செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் மறைந்து சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதாலும் 7 ல் நிற்கும் பரிவர்த்தனை சந்திரனின் அமைப்பாலும் ஜாதகியின் கணவர் வாகன ஓட்டியாக பணிப்புரிகிறார். 8 க்கு சனி-செவ்வாய் தொடர்பு ஏற்படுவதால் உண்டாகும் மாங்கல்ய தோஷத்தை பரிவர்த்தனைக்குப்பின் 8 க்கு சென்று அமரும் குரு போக்கிவிடுகிறார். அதே சமயம் ரிஷபத்தில் சூரியன் 11 பாகையிலும் சுக்கிரன் 23 பாகையிலும் அமைந்துள்ளனர். இதனால் சுக்கிரன் சொந்த வீட்டில் வலுவாக உள்ளார். சனியோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகி பணிபுரிகிறார். சூரியனோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகி நிர்வாகத்திறமைகொண்டவர். அரசுத்துறையில் பணிபுரிகிறார். புதனோடு சுக்கிரன் இணைவதால் கல்வித்துறையில் இருக்கிறார். இந்த ஜாதக அமைப்புகளால் நிர்வாகத்திறமை கண்ட ஜாதகியே தனது குடும்பத்தை நிர்வகிக்கிறார்.
நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
துலாம் லக்ன ஜாதகம். ராஜ்ய ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் பாதகாதிபதி சூரியனும் 7 ஆமதிபதி செவ்வாயும் திக்பலம் பெற்று அமைந்துள்ளனர். லக்னாதிபதியும் களத்திர காரகர் சுக்கிரனும் 1௦ ஆமிடத்தில் அமைந்துள்ளதால் கணவன் மனைவி இருவருமே நிர்வாகச் சிறப்புமிக்கவர்கள்தான். சுக்கிரன் 6 பாகையிலும் சூரியன் 13 பாகையிலும் செவ்வாய் 21 பாகையிலும் அமைந்துள்ளனர். செவ்வாய் ஆட்சி புதனின் ஆயில்யம்-2 சாரம் பெற்றதனால் நீச பங்கமும் அடைகிறார். இரு கிரகங்களும் சூரியனைவிட்டு 5 பாகைக்கு மேல் தள்ளியுள்ளன என்பதால் அஸ்தங்க பாதிப்பு அதிகமில்லை. கணவன் – மனைவியை குறிக்கும் செவ்வாயும் சுக்கிரனும் ராஜ்ஜிய ஸ்தானத்தில் ஒன்றினைந்துள்ளதால் இருவரும் நிர்வாகம் செய்வார்கள். ஒருவரை ஒருவர் அனுசரித்தும் செல்வார்கள். ஆனால் இங்கு சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையே பாதகாதிபதி சூரியன் வந்து அமைந்ததால் இருவரையும் ஒன்றிணைய விடாமல் செய்வார். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல விரும்புகிறார்கள். ஆனால் இங்கு விதி பாதகாதிபதி ரூபத்தில் வந்து இருவரையும் பிரித்துவிட்டது. இங்கு மதுரையும் சிதம்பரமும் அவரவர்கள் இருப்பிடத்தில் ஆட்சி செய்கிறார்கள். இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்த வழியில்லாமல்போய்விட்டது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501