
மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த வளர்ச்சி அதிகம். அதுவும் கடந்த நூற்றாண்டின் இறுதி முதல் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. விண்வெளி, தகவல் தொடர்புத்துறையில் ஏற்பட்ட அதீத வளர்ச்சியை இன்று கணிப்பதற்குள் அது அடுத்த கட்டத்திற்கு தாவிச் சென்றுகொண்டுள்ளது. இனி வரும் காலங்களும் இப்படித்தான் இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரிய இயற்கை பேரழிவுகளோ, அல்லது போர்களோ ஏற்பட்டால் வளர்ச்சியின் வேகம் சற்றே மட்டுப்படலாம், ஆனால் நிச்சயம் தடைபடாது. இன்றைய உலகம் நவீனத்தை சுவீகரிப்பவர்களுக்கானது. பழமையான வேதங்களோ, கட்டுப்பெட்டித் தனங்களோ, கொள்கைகளோ வேலைக்கு ஆகாது. இந்நிலையில் உலகின் நவீனத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுபவர்கள் அதிகம். எந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களாக இருந்தாலும், தங்களது துறையில் வரவுள்ள மாற்றங்களை அனுமானித்துச் செயல்படுபவர்களே களத்தில் நிற்க இயலும் என்ற நிலை தவிர்க்க இயலாததாகிவிட்டது. மாற்றங்ககள் மானுடத்திற்கு பயனுள்ளதாயின் அது அனைவராலும் விரும்பப்படும். இன்று செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மானுடத்தின் பணிகளை எடுத்துக்கொண்டு மனிதத்தை வேலையிழப்பிற்கு ஆளாக்கி வருகிறது என்பதை கண் முன்னால் காண முடிகிறது. இதனால் இத்தகைய மாற்றங்களை வெறுப்பவர்கள் பலர். திகைப்பில் இருப்பவர்கள் பலர். மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை எனும் பட்சத்தில் நாம் எப்படி மாற்றங்களுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி மாற்றங்களை வெறுப்பது தீர்வாகாது.
கம்பையும், களியையும் உண்ட நாம் அரிசியையும் கோதுமையையும் உண்ணப் பழகிவிட்டோம். வானொலிப் பெட்டியில் இசையை ரசித்த நாம் இன்று கைபேசியில் காணொளியுடன் இசையை ரசிக்கப் பழகிவிட்டோம். இதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நாம் நுகர்ந்துதான் ஆக வேண்டும். இன்றைய பதிவு இது பற்றி ஆராய்வதே.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மீன லக்னாதிபதி குரு சனியுடன் பரிவர்த்தனைக்குப் பிறகு ஆட்சி பெறுகிறார். வக்கிரம் திக்பலத்தை முழுமையாக வழங்காது ஆனால் பிடிவாதமான நிலையை வழங்கும் எனலாம். சந்திரனுடனான பரிவர்த்தனைக்குப் பின் சூரியன் ஆட்சி பெறுகிறார். ஜாதகத்தில் சிம்மத்தில்தான் அதிக கிரகங்கள் அமைந்தள்ளன. ஆட்சி கிரகத்துடன் இணைந்த அனைத்து கிரகங்களுக்கும் ஆட்சி கிரகத்தின் வலு கிடைக்கும். ஜாதகத்தில் சிம்மம் வேலையை குறிப்பிடும் 6 ஆவது வீடாக வருவதால் 6 ஆமிடத்தில் அமைந்த கிரகங்களில் எக்கிரகத்தின் தசை நடந்தாலும் ஜாதகனுக்கு படித்தவுடன் எளிதில் வேலை கிடைக்கும். கால புருஷனுக்கு 5 ஆமிடமான சிம்மம் வியாதியை குணப்படுத்துவது. அது லக்னத்திற்கு 6 ஆமிடமாக வருவதால் மருத்துவம் சார்ந்த துறையில் ஜாதகனுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கால புருஷனுக்கு 6 ஆமதிபதியான புதனே லக்னத்திற்கு 6 ல் அமைவதால் மருத்துவம் சார்ந்த துறை ஜாதகனுக்கு ஏற்றது. சந்திரனோடு சூரியன் பரிவர்தனையாவதால் ஜாதகணுக்கு கிடைக்கும் வேலை வெளிநாடு சார்ந்ததாக இருக்கலாம்.
3, 8 அதிபதி சுக்கிரன் 6 ல் அமைவது ஒரு வகையில் விபரீத ராஜ யோகமாகும். சுக்கிரன் இயல்புக்கு மாறுபட்ட தன்மையை குறிக்கும் கிரகமாகும். அவரே இந்த லக்னத்திற்கு மாறுபாட்டை குறிக்கும் 8 ஆமதிபதியாகி 6 ல் அமர்வதால் இவரது பணி சாதாரணமாக அன்றி இயல்புக்கு மாறுபட்டதாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ராகு 6 ல் அமைவது அதுவும் ஆட்சி கிரகத்துடன் இணைவது நன்மையே. நவீனமான அனைத்து விஷயங்களுக்கும் காரக கிரகமான ராகு மருத்துவம், ஆன்மிகம் போன்ற மேலும் பல காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளார். ராகு 6 ல் அமைவது அஷ்டலக்ஷ்மி யோகம் என்றழைக்கப்படும். நல்ல வேலை, எதிர்ப்புகளை முறியடிக்கும் திறன், வியாதியை குணப்படுத்தும் ஆற்றல், சிறந்த ஆன்மீக ஒழுக்கம் ஆகியவற்றை இது வழங்கும். இவரால் உலகில் பலர் பலனடைவர் என்பது அஷ்ட லக்ஷ்மி யோகத்தின் பலனாகும்.
ஒருவரது சிந்தனையை ராசிச் சக்கரம் குறிப்பிட்டால் உள்ளார்ந்த மன நிலையையும் செயலையும் நவாம்சம் குறிப்பிடும். நவாம்சத்தில் ராகு சந்திரனுடன் கால புருஷனுக்கு 9 ஆமிடமான தனுசில் இணைந்து அதன் அதிபதி குருவால் பார்க்கப்படுவது யோகமாகும். இதனால் இவரது எண்ணங்களும் செயல்களும் உறுதி உள்ளவையாக பின்வாங்காத நிலை உள்ளதாக இருக்கும். ஜாதகர் உயர்ந்த ஒழுக்கமும், நல்ல ஆன்மீகப் பற்றுதலையும் உடையவராகத் திகழ்கிறார். நவாம்சத்தில் மருந்து, மருத்துவம் ஆகியவற்றை குறிக்கும் புதன் உச்சமாகியுள்ளார். இது ஜாதகருக்கு புதன் குறிக்கும் சிறந்த கல்வியறிவையும், புதனின் காரகங்களில் சிறப்பையும் ஜாதகனுக்கு வழங்கும். நவாம்சத்திலும் செவ்வாய் துலாத்திலேயே அதன் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து வர்கோத்தமும், திக்பலமும் பெறுவது செவ்வாய் சுக்கிரனின் காரகங்களும் ஜாதகனுக்கு சிறப்பை சேர்க்கும் என்பதை குறிப்பிடுகிறது.

ஜாதகனின் கர்மா என்ன? என்பதை தொழிலுக்கான தசாம்சம் குறிப்பிடும். 5, 12 ஆமதிபதி சுக்கிரன் தசாம்சத்தில் உச்சம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளார். தசாம்சத்தில் 1௦ ல் நின்ற கிரகம் இந்த வர்க்கத்தை இயக்கும். அடுத்ததாக உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும். இங்கு சுக்கிரன் 1௦ ல் வலுப்பெற்றதால் ஜாதகர் சுக்கிரன் குறிக்கும் கணிப்பொறி அறிவியல் படித்து அதே துறையில் பணிபுரிகிறார். மனோ காரகர் சந்திரன் 12 ல் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்துள்ளார். உச்சம் பெற்ற கிரகத்திற்கு மறைவு ஸ்தான தோஷமில்லை. உச்ச சந்திரனுடன் செயற்கை கிரகம் ராகு இணைந்து, ராகு தசையும் நடப்பதால் ஜாதகர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றுகிறார். தசாம்சத்தில் லக்னாதிபதி புதன் 8 ல் நின்று, 2 ஆமிடமான கடகத்தில் நின்ற எட்டாமதிபதியும் ஜீவன காரகருமான சனியை பார்க்கிறார். இது இவரது தொழில் இயல்புக்கு மாறுபட்டது என்பதையும், வெளிநாடு தொடர்புடையது என்பதையும், மருத்துவம் தொடர்புடையதாக இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறது. செவ்வாய் இங்கும் துலாத்திலேயே அமைந்து வர்கோத்தமம் பெற்று, தனது உச்ச வீடான மகரத்தில் அமைந்த லக்னாதிபதி புதனை நான்காம் பார்வையாக பார்க்கிறார். (வர்க்கச் சக்கரங்களில் கிரகங்களுக்கு பார்வை வலு குறைவே என்றாலும் கிடையாது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை அறிக). இவ்வகை தொடர்பால் ஜாதகர் மருத்துவம் சார்ந்த செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றுகிறார்.
ஜோதிட பலனுரைக்கும்போது ஜாதகர் குறிபிட்டது. ஒரு கால் எழும்பு முறிவு Scan பதிவை ஆய்வு செய்து, எழும்பு முறிவிற்கு இரும்பு கம்பிகளை பொருத்தி கால்களை சரி செய்யலாமா? அல்லது பாதிப்பு குறைவாக உள்ளதால் மருந்தால் சரி செய்யலாமா? என்று தேர்ந்த ஒரு மருத்துவர் முடிவெடுக்கத் திணறுகையில் செயற்கை நுண்ணறிவு உபகரணத்திடம் Scan பதிவை காட்டினால் அது எழும்பு முறிவு 28% மட்டுமே உள்ளது என்று பாதிப்பின் அளவையும், அதை மருந்துகளால் சரி செய்துவிட இயலும் அறுவை சிகிச்சை செய்து இரும்புக் கம்பிகளை பொறுத்த வேண்டிய அவசியமில்லை என்பதையும் பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.
இத்தகைய செயற்கை நுண்ணறிவு உபகரணங்களால் நன்மையே என்றாலும் இத்துறையில் உள்ள Scan நுட்ப வல்லுனர்களின் வேலை அடுத்த சில வருடங்களில் காணாமல் போகும் என்பது நிச்சயம். இது மாதிரியான நிலையில் செயற்கை நுண்ணறிவை நமது வாழ்வின் வளமைக்கு எப்படி பயன்படுத்தலாம்? என்று யோசிக்க வேண்டியதாகிறது. செயற்கை நுண்ணறிவை மேலும் நுட்பமாக்க அதற்கு கட்டளையிட்டு வழிகாட்டும்படியான அறிவை தகவமைத்துக்கொண்டால் மட்டுமே நமது வேலைகளை இழக்காமல் காப்பாற்றிக்கொள்ள இயலும்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501