நமது அனைத்து செயல்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஒருவர் என்னென்ன செயல்களில் ஈடுபடுவார்? என்பதை கர்மாம்சம் மூலம் அறியலாம். எப்பொழுது ஒரு செயலை செய்வார் என்பதை தொடர்புடைய தசா-புக்திகள் நிர்ணயிக்கும். கர்மம் என்றால் செயல் என்று பொருள். நாம் என்ன செயலை செய்து பொருள் ஈட்டுவோம் என்பதையும் கர்மாம்சம் மூலம் அறியலாம். ராசிச் சக்கரத்திற்கு அடுத்து கர்மாம்சமே மிகப் பலம் வாய்ந்தது. தசாம்சத்தின் மேற்றொரு பெயரே கர்மாம்சம் ஆகும். அதனால்தான் ஜாதகத்தில் தசாம்சம் மஹோத்பலம் என்கிறார்கள். ஒருவரின் பிறப்பின் நோக்கத்தையும் கர்மாம்சம் தெரிவிக்கும். நமது கர்மங்கள் நல்லவிதமாக அமைந்தால் நமது வாழ்வு நம் மனம் மகிழும்படி அமையும். ஆனால் பெரும்பாலும் அனைவரும் இன்று மன மகிழ்ச்சியை விடுத்து நல்ல சம்பாத்தியம் தரும் செயல்களிலேயே ஈடுபடுகிறோம். பணத்தை நோக்கிய ஓட்டம் முடிவில்லாதது. துவக்கத்தில் அது மன மகிழ்ச்சியை தருவதாக அமைந்தாலும், பணத்தால் பெற முடியாத பல விஷயங்களை நாம் உணரும்போது அங்கு மனிதனுக்கு மன நிம்மதி தேவைப்படுகிறது. நிம்மதி தரும் செயல்களில் நாம் வாழ்வின் பிற்பகுதியில்தான் கவனத்தை திருப்புகிறோம். பணத்தை நோக்கிய அதிகப்படியான ஓட்டமே நிம்மதி இழப்பிற்கு காரணமாகிறது. ஒரு வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்களும் உழைக்க நாம் விரும்புகிறோம். அதிலும் 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம் 8 மணி நேரமே உழைக்க உகந்தது. மீது 16 மணி நேரம் உழைப்பின் பயனை அனுபவிக்கவும், நமது உடல், மன ஓய்விற்கும் தேவைப்படுகிறது.
தற்போது ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறுகிறார். அதாவது ஞாயிறு தவிர்த்துப் பார்த்தால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 12 மணி நேரம் உழைக்க வேண்டும். அப்பொழுது நமது இந்தியா விரைவில் வல்லரசாகிவிடுமா? என்று பார்த்தால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் கடுமையான உழைப்பாளிகளான ஜப்பானை பாருங்கள். தங்களது நாட்டை உலகின் வளம் வாய்ந்த நாடாக மாற்றிக்கொண்டு விட்டார்கள். ஆனால் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கர்கள் அங்கு பணிபுரியும் இந்தியர்களுடன் ஒப்பிட்டால் ஒரு வாரத்திற்கு 5 நாட்கள் கூட உண்மையாக உழைப்பதில்லை. ஆனால் உண்மையாக கடினமாக உழைத்த ஜப்பானியர்களைவிட அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு. கடின உழைப்பை சாதுர்யமான உழைப்பு (Smart working) எளிதில் வீழ்த்திவிடும். ஜப்பானில் அதிக உழைப்பால் ஏற்பட்ட மன உழைச்சளால் ஜப்பானியர்கள் சிரிப்பை மறந்துவிட்டனர். திருமண வாழ்வை வெறுக்கின்றனர். அதன் விளைவு ஜப்பான் மக்கள்தொகை இன்று வீழ்ச்சிகண்டு வருகிறது. இதன் பொருள் என்ன?. “வாழ்வதற்காகவே உழைப்பு; உழைப்பிற்காக வாழ்க்கையல்ல” என்பதே. நம் மனம் விரும்பிய செயல்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவதைவிட வசதி வாய்ப்புகள் வாழ்க்கைக்கு பெரிய மகிழ்ச்சியை தந்துவிடாது. நாம் எத்தகைய செயல்களில் மன நிறைவை அடைவோம் என்பதை கர்மாம்சம் எனும் தசாம்சம் தெளிவாக சுட்டிக்காட்டும். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மீன லக்னம். லக்னத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை. லக்ன திரிகோணத்திலும் எந்த கிரகமும் இல்லை. இதனால் மீனம் யாருடைய துண்டுதாலும் இன்றி தன்னிச்சையாக இயங்கும்.. லக்னத்திற்கு கர்ம ஸ்தானம் எனும் 10 ஆமிடத்தில் மனோ காரகர் சந்திரன் அமைந்து செவ்வாய் பார்வை பெறுகிறார். இதனால் இவர் சிந்தனையில் செவ்வாயின் காரகம் கலந்திருக்கும். செவ்வாய் 4 ஆமிடத்தில் இருந்து 10 ஆமிடத்தை பார்க்கிறார் என்பதால் இவர் ஒரு கொத்தனாராக பணிபுரிகிறார். லக்னத்திற்கு 6 ஆமிடமான சிம்மத்தில் புதன், ராகு, சூரியன், சுக்கிரன், சனி ஆகிய ஐவருடன் 6 ஆவதாக குரு இணைந்து மறைகிறார். லக்னாதிபதியும்-ராசியதிபதியுமான குரு இப்படி சிம்மத்தில் 6 கிரக சேர்க்கையில் மறைவதால் இவரது வாழ்வு சிம்மம் சார்த்ததாகவே இருக்கும். லக்னத்திற்கு திரிகோணத்தில்தான் கிரகங்கள் இல்லை. ஆனால் ராசியின் 3 ஆவது திரிகோணத்தில் 6 கிரக சேர்க்கையில் ராசியாதிபதி குரு இணைந்து ராசியை பார்க்கிறார். இதனால் சிம்மமே இவரது வாழ்வை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிம்ம சூரியன் புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரையும் அஸ்தங்கம் செய்தாலும் சூரியனே ராகுவில் அஸ்தங்கமாகிறார். என்பதால் சிம்ம ராசி கிரகங்களின் சக்தியை தனதாக்கிக்கொண்டு ராகு அதீத பலம் பெற்ற கிரகமாகிறார். சூரியன் வீட்டில் மோட்ச காரகர் ராகு அமைந்து இந்நிலை பெறுவதால் ஜாதகர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகிறார். ஜாதகரின் பெயரே சிவனின் பெயர்தான். 7 ஆமதிபதியும் சுக்கிரனும் அஸ்தங்கம் பெற்று சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்படுவதால் ஜாதகரின் திருமண ஆசை பூர்த்தியாகவில்லை. சிம்மம் காலபுருஷனுக்கு 5 ஆமிடமாகி ராகு அங்கு வலுப்பெறுவதால் ஜாதகருக்கு பச்சிலை, மூலிகைகள் பற்றிய அறிவு அதிகம். யாரும் சொல்லித்தராமல் இயல்பாகவே மூலிகைகள் பற்றி ஜாதகர் உணர்கிறார். அதைக்கொண்டு பலரது ஆரோக்கிய சிக்கல்களுக்கு தீர்வு தருகிறார். இனி ஜாதகர் ஆன்மீகத்தில் இருந்தாலும், கொத்தனார் பணிபுரிந்தாலும் அவரது மனம் உண்மையில் என்ன கர்மங்களில் மகிழ்வடையும் என்பதை கர்மாம்சம் எனும் தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.
தசாம்சத்தில் லக்னம் சந்திரனின் ரோஹிணியில் அமைந்து, சந்திரன் லக்னத்திற்கு 10 ல் அமைந்து குரு பார்வை பெறுகிறார். இதனால் இவர் எந்த செயல் செய்தாலும் இவர் சந்திரனின் காரகங்களில் ஈடுபட்டால்தான் மன நிறைவை அடைவார் என்பது இவரது கர்மாவாகும். சிந்தனை பாவகமான கன்னியில் உச்சம் பெற்ற புதனும் சந்திரனின் ஹஸ்தத்திலேயே அமைந்ததால் இவர் சிந்தனையிலும் சந்திரனின் காரகமே மேலோங்கி இருக்கும். அந்த சந்திரன் செயல் ஸ்தானமான 10 ல் அமைந்துள்ளதால் சந்திரனின் காரகங்களில் ஈடுபடவும் செய்வார். குருவின் பூரட்டாதியில் சந்திரன் அமைந்து குரு பார்வையும் பெறுவதால் ஜாதகர் அதில் நிறைவையும் அடைவார். தசாம்சத்தில் இதர கிரகங்களால் பாதிக்கப்படாத குரு லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் ஜாதகர் தனது செயல்களில் மன நிறைவை, ஆத்ம திருப்தியை உணர்வார்.
இந்த ஜாதகர் ஊனமுற்ற, ஆதரவற்ற, வயோதிகர்களுக்கு உணவளிக்கும் சேவையை தனது ஊரில் செய்து வருகிறார். கொரானா காலத்தில் துவங்கிய இவரது பணி இன்றும் தொடர்கிறது. அதற்காக தனது வாழ்வை ஒப்படைத்துள்ளதாக கூறுகிறார். நண்பர்கள் மற்றும் கொடையாளர்களின் உதவியால் இவரது சேவை சாத்தியமாகிறது. சந்திரனுக்கு ராகுவின் நிழல் விழுகிறது. குருவின் திரிகோணத்தில் ராகு இருக்கிறார். 2 ஆமிடமான தன ஸ்தானத்திலும் தடைகளை குறிக்கும் கேது இருப்பதால் கொடையாளர்களை நம்பிய இவரது சேவை தடைபட்டால் சாலையோரங்களில் இவரது உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல இதயங்கள் பசியால் வாடுமே என்ற கவலை தற்போது ஜாதகரை வாட்டுகிறது. ஜாதகத்தில் மனதை குறிக்கும் சந்திரனே உணவின் காரக கிரகமாகிறார். உணவு பாவகத்தில் கேது நிற்கிறார் என்பதை கவனிக்க. ஒரு ஜாதகத்தில் அமைந்த பல தோஷங்களை அகற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு. கிரகங்களில் சந்திரனும் கேதுவுமே அன்னதானத்திற்கு கட்டுப்படும் கிரகங்களாகும். தற்போதைய தசாநாதன் செவ்வாய் ராசியில் 4 ஆமிடத்திலிருந்து 10 ஆமிட சந்திரனை பார்க்கிறார் என்றால், தசாம்ச செவ்வாய் சந்திரனின் திருவோணத்தில் நின்று தசை நடத்துகிறார். உரிய தசா-புக்திகள்தான் ஒரு செயலில் ஈடுபட ஒருவரை பணிக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது.
2 ல் ராகு/கேதுகள் அமைந்து திருமணம் மற்றும் வருமானம் தடைபடுபவர்களும், சந்திரன் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் அன்னதானம் செய்து பலனடையலாம்.
கொடையளிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
வாசகர்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி:8300124501