8 ஆமிட ரகசியங்கள்
ஜாதகத்தில் லக்ன பாவத்தின் ஆயுளை தீர்மானிப்பது எட்டாவது பாவம்தான். ஒரு பாவத்திற்கு அதன் எட்டாவது பாவம் சிறப்பாக இருந்தால்தான் அந்த பாவத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதை கிரகம் நின்ற இடத்திற்கு எட்டாம் பாவத்தை அளவிட்டும் கிரகத்தின் பலம், பலனத்தை அறியலாம். எட்டாவது பாவம் பல்வேறு ரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. எட்டாவது பாவம் பொதுவாக நல்ல பலனை தர வாய்ப்பே இல்லை எனலாம். காரணம் எட்டாவது பாவத்தின் சக்தி ஜாதகரின் உயிரை தாங்கிப்பிடிக்க மட்டுமே செலவிடப்பட வேண்டும். எட்டாவது பாவம் ஒரு மனிதன் பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாத ரகசியங்களை குறிக்கும். அவை ஆயுள், அவமானங்கள், தண்டனைகள், உடலுறவு, மணமுறிவு, மறைப்பொருள், ஆன்மிகம், புதையல், பங்கு வணிகம், திடீர் பொருளாதாரங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை அடுத்தவரிடம் வெளிப்படுத்தினால் ஜாதகர் தனது வாழ்வில் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது நமது தர்ம சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
விருட்சிக லக்ன ஜாதகம். ஆன்மிகம் என்பது மறைந்திருக்கும் இறை சக்தியை உணர்வதுதான்.அதனால்தான் ஞான காரகன் கேது கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் உச்சமடைகிறார். மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமடைந்துள்ளார். ராசியதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ராசிக்கு எட்டில் சிம்ம ராகுவிடம் தஞ்சமடைந்துள்ளார். லக்னத்தில் எட்டாமதிபதி புதன் அமர்ந்துள்ளார். இவை யாவும் மறைப்பொருளான பரம்பொருளை நாடும் நோக்கில் ஜாதகரின் கர்மா இயங்கும் என்பதை குறிப்பிடுகின்றன. சந்திரனை நோக்கி வரும் கேதுவும் இதை உறுதி செய்கிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்துள்ளதாலும் ராசியதிபதி சனி சூரியனின் வீட்டில் மோட்சகாரகன் ராகுவுடன் இணைந்துள்ளதாலும் ஜாதகர் சிவாச்சாரியராக (சிவன் கோவிலில் பூஜை செய்பவர்) உள்ளார். கால புருஷனுக்கு போக ஸ்தானாதிபதி (3 ஆமதிபதி) புதன் லக்னத்தில் அமர்ந்ததால் உடல் ரீதியான போகத்தை ஜாதகர் விரும்புகிறார். புதன் எட்டாமதிபதியாகி எட்டாமிடம் உடலுறவையும் மறைபொருளையும் ஒருங்கே குறிப்பதால் இவ்விரண்டையும் ஜாதகரின் மனம் நாடுகிறது. புதனுடன் இணைந்துள்ள 12 ஆமதிபதி சுக்கிரன் படுக்கை சுகத்தோடு மோட்ச நிலைக்கும் அதிபதியாகிறார். புதன் சுக்கிரன் இணைவது மதன கோபால யோகம் என்று சொல்லப்படும் சூழலில் ஜாதகருக்கு சிற்றின்ப ஆசையும் ஆன்மீகமும் ஒருங்கே எழுகிறது. ஆனால் இங்கு இருவரும் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகிவிட்டதால் லக்னாதிபதியை மீறி புதனும் சுக்கிரனும் எதுவும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையை வழங்கவேண்டிய குரு 2 க்கு 8 ல் உச்ச வக்கிரமடைந்து குடும்ப வாழ்வை தர இயலாத சூழலில் அமைந்துவிட்டார். 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.
இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.
இந்த ரிஷப லக்ன ஆணின் ஜாதகத்தில் தற்போது அஷ்டமாதிபதியான குருவின் திசை நடக்கிறது. குரு லக்னத்திற்கு 8, 11 க்கு உரியவராகி லக்னத்திற்கு 2 ல் நிற்கிறது. 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனம். இவர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பங்கு வணிகம் நேரடி வருமானமல்ல. பாரம்பரிய தொழில் அல்ல. வணிக சந்தையில் மறைந்திருக்கும் தனத்தை தேடி முதலீடு செய்து பொருளீட்டுவதுதான். எனவேதான் லக்னத்திற்கு 8 ம் பாவம் பங்கு வணிகத்திற்கு உரிய பாவமாக பார்க்கப்படுகிறது. லக்னதிபதி சுக்கிரனும் பங்கு வணிகத்திற்கு உரிய கிரகங்களில் ஒன்றாகி அது பங்கு வணிகத்திற்கு மற்றொரு காரக கிரகமான புதனின் வீட்டில் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஜாதகர் பங்கு வணிகத்தில் பொருளீட்டுகிறார். இங்கு சுக்கிரனும் குருவும் இணைந்து ஜாதகருக்கு தனம் வரும் வழியை நிர்ணயம் செய்கின்றன.
மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகரை சனி எப்படியும் காப்பாற்றுவார் எனலாம். சனி ஆயுள் மற்றும் ஜீவன காரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுள் என்பது சனியோடு 8 ஆமிடத்தையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகருக்கு லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் திசை கடந்த பதினேழரை வருடங்களாக நடக்கிறது. 8 ஆமிடம் என்பது ஆயுளோடு ஒரு ஜாதகர் படும் அவமானங்களையும் குறிப்பிடும். ராகு சனியை நோக்கி நகர்ந்து வருகிறது. சனி வக்கிரமில்லாத நேர்கதியில் உள்ளது. இதனால் ஜாதகரின் ஜீவனம் ராகுவால் பாதிக்கப்படும். ராகுவின் காரக தொழிலை செய்தால் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் எனலாம். ராகு சூரியனின் உத்திரம்-4 சாரம் வாங்கியுள்ளார். சூரியன் ரிஷபத்தில் நின்று ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தை பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு கெளரவதிற்கு உரிய சூரியனின் சாரம் வாங்கியுள்ளத்தால் இவர் வேலை செய்யுமிடங்களில் கௌரவம் பார்த்து வேலையோடு ஒன்ற இயலாமல் சண்டையிட்டு வந்துவிடுகிறார். சுய தொழிலை குறிக்கும் 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய், வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளதால் சுயதொழிலிலும் சோபிக்க இயலாமல் போராடுகிறார். இதனால் ஜாதகர் பெருத்த அவமானங்களை சந்திக்கிறார். வேலை மற்றும் சுய சம்பாத்தியம் எதற்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுகிறார். அவமானங்களை எதிர்கொள்ள இயலாமல் திசா நாதன் ராகு 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் மதுப்பழக்கதிற்கும் அடிமையாகிவிட்டார். இங்கே ஆயுள்காரகன் சனி திக்பலம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஆயுள் ரீதியாக ஜாதகரை காப்பாற்றுகிறார். எனவே ராகு ஜாதகருக்கு ஆயுள் கண்டத்தை தர இயலவில்லை. இதனால் திசா நாதன் ராகு 8 ஆமிடம் குறிப்பிடும் அவமானங்களை தருகிறார். குரு திசை துவங்கியதும் ஜாதகர் தெளிவான வாழ்க்கைப்பாதைக்கு மாறி தனது அவமானங்களிளிருந்து விடுபடுவார் எனலாம்.
நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
இந்த ஜாதகமும் முந்தைய ஜாதகத்திற்கு ஒப்பானதுதான். ஜாதகருக்கு நடந்தது சனி திசை. கும்ப லக்னாதிபதி சனி வக்கிர நிலை பெற்று லக்னத்திற்கு 11 லிருந்து திசை நடத்துகிறார். சனியும் 5 ஆமிட செவ்வாயும் நேர்பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சனி-செவ்வாய் தொடர்புகொள்பவர்கள் தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் விபத்து, மணமுறிவு, கண்டம் போன்ற கடுமையான பாதிப்புகளை அடைகிறார்கள். லாபஸ்தான திசா நாதன் சனி தனது பகை கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சை வாங்கி 1௦ ஆவது பார்வையாக லக்னத்திற்கு 8 ஆவது பாவத்தை பார்க்கிறது. சாதாரணமாகவே சனியின் பார்வைக்கு கடுமை அதிகம் என்பது அனைவரும் அறிந்த நிலையில் செவ்வாயின் பார்வை பெற்ற சனிக்கு கடுமை மிக அதிகமாகும். சனி பார்க்கும் இடங்களுக்கு தனது பாதிப்பை தராமல் இருக்க மாட்டார். இந்நிலையில் சனியின் பார்வையை வாங்கும் செவ்வாயின் 4 ஆவது பார்வையும் 8 மிடத்தின் மீது விழுகிறது. ஜாதகர் தனது சனி திசையில் ராகு புக்தியில் கொடுமையானதொரு வாகன விபத்தில் சிக்கி நீண்டதொடு மரணப்போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தார். 8 ஆமிட ராகு வேகத்திற்கு உரிய சந்திரனோடும் ஆவேசத்திற்குரிய செவ்வாயோடும் கடுமைக்குரிய சனியோடும் தொடர்புகொண்ட நிலையில் புக்தியை நடத்துகிறது. சனி தான் பார்க்கும் இடத்திற்கு தனது சக்தியை தனது திசா புக்தியில் செலவிட்டே ஆக வேண்டும். இதனால் சனியால் விபத்தை தடுக்க இயலவில்லை. சனி லக்னத்தை 3 ஆம் பார்வை பார்த்ததால் கண்டத்தை கொடுத்து மரணத்தை தவிர்த்தாரா என்றால் அது குறைவே. ஏனெனில் சனி வக்கிரமாகி பின்னோக்கி வருகிறது. இதனால் சனியின் 3 ஆமிட பார்வை லக்னத்தை விட்டு விலகுகிறது. எனவே சனியால் ஜாதகரை காப்பாற்ற இயலாது. இங்கு ஜாதகரை காப்பாற்றியது சனி சாரம் அனுஷம்-1 பெற்ற விருட்சிக குருதான். குருவும் வக்கிரமாகி 9 ஆமிடத்தை நோக்கி போகிறார். இதனால் குருவின் அறை பங்கு பார்வை துலாத்திலிருந்து லக்னத்திற்கு கிடைக்கிறது. இதனால் ஆயுளை எடுக்க ஆயுள்காரகன் சனியின் சாரம் பெற்ற குருவின் அனுமதியும் திசா புக்தி நாதர்களுக்கு தேவை. குரு ஆயுளை எடுக்க அனுமதிக்கவில்லை. இங்கு குரு ஜாதகரின் உயிரை காப்பாற்றினார் என்றால் அது மிகையல்ல. இங்கு குருவின் அமைப்பால் திசா புக்தி நாதர்கள் ஜாதகருக்கு 8 மிடம் குறிப்பிடும் கண்டத்தை மட்டுமே வழங்க முடிந்தது.
ஐந்தாவது ஆணின் ஜாதகம் கீழே.
.விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். பொதுவாக ஒரு மறைவு ஸ்தான பரிவர்த்தனைகள் சிறப்பல்ல. ஏனெனில் பரிவர்த்தனைகளே பாதிப்பை ஒரு வகையில் வழங்கிவிட்டுத்தான் பலனளிக்கும் என்ற நிலையில் மறைவு ஸ்தானங்களுடனான பரிவர்த்தனை ஒரு பாதிப்பையும் இழப்பையும் வழங்காமல் பலனளிக்க வாய்ப்பே இல்லை. எப்போது அவை இரண்டும் ஏற்படும் என்றால் தொடர்புடைய திசா புக்திகளில்தான் ஏற்படும். 8 ஆமதிபதி புதன் புத்திகாரகனாகும். புதன் லக்னத்திற்கு திக்பலத்தை வழங்கும் 1௦ ஆமதிபதி சூரியனோடு இணைந்து லக்னத்தில் நிற்பது சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இவ்விரு கிரகங்களும் லக்னம், நான்கு மற்றும் 8 ஆகிய இடங்களில் இணைவதுதான் சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்தனையாவதால் ஜாதகருக்கு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஜாதகர் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இது நுட்ப அறிவால் ஏற்பட்டது. ஜாதகருக்கு 8 ஆமிடதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் சில வருட போராட்டமான வாழ்க்கைத்துனையுடனான மண வாழ்க்கை முறிவுக்கு வந்தது.
போராட்டமான மண வாழ்க்கைக்கு காரணம் சுக்கிரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் ஏற்பட்டது. இதனால் மனைவியின் குணம் ராகுவால் பாதிக்கப்படும். குடும்ப பிரிவினைக்கு அடித்தளமிட்டது கடந்து போன சந்திர திசையாகும். சந்திரன் விருட்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி குடும்ப பாவத்தில் வந்து அமர்ந்து திசை நடத்திய சூழலில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி அது முற்றிய நிலைக்கு தள்ளிவிட்டுத்தான் தனது திசையை முடித்திருக்கிறார். இந்நிலையில் மணமுறிவை குறிப்பிடும் 8 ஆம் பாவதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் மண வாழ்வு முறிவு பெற்றது. பரிவர்த்தனைச் செவ்வாய் குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் பரிவர்த்தனையாகி அமர்ந்ததும் லக்னம் வலுவடைகிறது. அதனால் லக்ன பாவ செவ்வாய் திசை துவங்கியதும் 2 ஆமிடம் வீழ்ச்சியடைகிறது. இங்கு பிரிவினையை லக்ன பாவம் மற்றும் 8 ஆம் பாவம் ஆகிய இரண்டுமே குறிப்பிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம் இப்படி லக்னத்தில் பரிவர்த்தனையால் வந்து அமரும் செவ்வாய் தனது பார்வைகளால் சுகஸ்தானமான 4 ஐயும் களத்திர பாவமான 7 ஐயும் 8 ஆம் பாவத்தையும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு மறுதிருமணமும் அமைந்தது.
மீண்டும் உங்களை மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.கைபேசி: 8300124501