ஜாதகத்தில் ஒருவருக்கு ஒரு பாதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் பதிலீடாக ஒரு கொடுப்பினையும் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து ஜாதகங்களிலும் சாதக பாதக அம்சங்கள் உண்டு. பாதகம் இல்லாமல் சாதகமில்லை. எனவே ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தில் பாதகங்களை மட்டும் சுட்டிக்காட்டாமல் சாதகமான அம்சங்களையும் கண்டறிந்து அதில் ஜாதகரை ஈடுபடச்செய்ய வழிகாட்ட வேண்டும்.
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
இந்த ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதி பாவியாகி புத்திர ஸ்தானமான 5 ல் அமைந்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு திருமணம் புத்திரப்பேறு ஆகியவை தாமதமாகும் (இவை இரண்டும் ஜாதகருக்கு தாமதமாகவே அமைந்தது). எனினும் லக்னாதிபதி லக்ன திரிகோணத்தில் அமைவது சிறப்பு.
6 ஆமதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைவது சிறப்பல்ல. இதனால் ஜாதகருக்கு தாம்பத்யம் உள்ளிட்ட அனைத்து சுகங்களும், ஆரோக்யமும் பாதிக்கப்படும். ஆனால் புதன் 4 ஆமிடமான வித்யா ஸ்தானத்தில் அமைவதால் கல்வி சிறப்பாக இருக்கும்.
ஆய்வுக்கல்விக்குரிய பாவமான 11 ஆம் பாவத்தில் சந்திரன் நீசமடைவது ஆய்வுக்கல்விக்கு சாதகமான அமைப்பல்ல. எனினும் 11 ஆமிடம் நீச பங்கமாகி 11 ல் அமைந்த சந்திரன் மற்றும் சந்திரன் நின்ற வீட்டதிபதியின் (ராசியாதிபதி) காரக வகையில் ஆய்வுக்கல்வி பயின்றால் அது பாதிப்பை தராது.. ஜாதகர் பல் மருத்துவத்தில் ஆய்வுக்கல்வி (PhD) பயின்றவர்.
சனி அஷ்டமாதிபதி சூரியனுடன் அமைவது சிறப்பல்ல எனினும் அஸ்தங்கமாகாமல் (சூரியன்-3 பாகை, சனி-27 பாகை) சூரியனோடு அமைவது ஜாதகர் ஜீவன விஷயத்தில் உயர்ந்த நிலையை அடைய உதவும். குரு நீசம் பெறுவது சிறப்பல்ல. எனினும் நீசம் பெற்றாலும் குரு லக்னத்தில் அமைவது திக்பலமாகும்.
7 ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று பாதகத்தில் அமைவது சிறப்பல்ல. எனினும் பாதகாதிபதி செவ்வாயே ராசி அதிபதியாகி ராசியின் கேந்திரத்தில் அமைவதால் சந்திரன் நீச பங்கமடைவது சிறப்பு.
சனி – செவ்வாய் 2 ஆமிடத்தோடு தொடர்புகொள்வது சிறப்பல்ல எனினும் காதல் திருமணத்திற்கு இது மிகச்சிறப்பான அமைப்பாகும். (ஜாதகர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.) சனி–செவ்வாய் பரஸ்பர பார்வை பெறுவது சிறப்பல்ல. எனினும் இவ்விரண்டின் காரகங்கள் கலந்த (செவ்வாயின் காரகம் முதன்மையாய் இருக்க வேண்டும்) தொழிலை (சனி-செவ்வாய் – சீருடையணிந்த எந்தப்பணியும்) செய்வது சிறப்பாகும். ஜாதகர் பல் மருத்துவர்.
சனி-சந்திர தொடர்பு பூனர்பூ தோஷத்தால் திருமணம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் அனைத்தும் தாமதமாக நடைபெறும். எனினும் தாமதமானாலும் ஜீவன விஷயங்களில் ஜாதகர் சாதனை படைப்பார்.
லக்னம் பாவ கர்த்தாரியில் அமைந்திருப்பது தோஷமாகும். எனினும் ஜாதகரிடம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருக்கும்.
சனியை நோக்கி கேது வருவது தொழில் தடையாகும். எனினும் கேதுவின் காரக தொழிலை செய்தால் பாதிப்பு குறைவாகும். கேதுவின் காரகங்களில் மருத்துவமும் ஒன்றாகும்.
சுக்கிரன் சூரியனோடு இணைந்திருப்பது (சூரியன்-3 பாகை, சுக்கிரன்-13 பாகை) தோஷமாகும். எனினும் மனைவி அரசுவகை தொடர்புகளால் உயர்வடைவார். (மனைவி உயர் பதவி வகிக்கும் அரசு ஊழியர்)சுக்கிரனை நோக்கி கேது வருவது மனைவிக்கு தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எனினும் கேதுவின் காரக செயல்களில் மனைவி ஈடுபட்டால் பாதிப்பு குறைவாகும். (மனைவி மருந்துக்களோடு தொடர்புடைய துறையில் பணி செய்கிறார்).ராகு – கேதுக்களின் அச்சுக்கு வெளியே 7 ஆமதிபதி சந்திரன் பாதகத்தில் லக்னாதிபதி சனியின் அனுஷம்-2 ல் இருப்பது மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எனினும் சுக்கிரனையும் 7 ஆமிடத்தையும் குரு பார்வை செய்வதால் பிரிவு வேலை நிமித்தமாகவே இருக்கும் எனவே திருமண வாழ்வில் பிரிவு இருக்காது.
12 ஆமிடத்தில் ராகு அமைவது ஜாதகரது உழைப்பை பிறர் உறிஞ்சும் அமைப்பாகும். தாம்பத்யமும் தூக்கமும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். கடின சூழ்நிலைகளிலும் இரவிலும் பணிபுரியும் சூழல் இதனால் ஏற்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இதனால் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனினும் 6 ஆமிடத்தில் கேது அமைவது எதிர்ப்புகளை முறியடிக்கும் அமைப்பாகும். வாழ்வில் எத்தனை கடின சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றிகரமான மனிதராகவே இவர் அறியப்படுவார்.
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகளை அறியாவிட்டால் நன்மைகளின் அருமை தெரியாது. வாழ்க்கையின் முக்கியமான புதிரே இதுதான். ஜாதகத்தில் உள்ள சாதக அம்சங்களை சுட்டிக்காட்டி ஜாதகரை நெறிப்படுத்துவது ஒரு ஜோதிடரின் தலையாய பணியாகும்.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.