ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நபர், தனது வேலையில் பெறும் வெற்றியானது அவர் தனது பணியாளர்களிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பதை பொருத்தே அமைகிறது. குறிப்பாக கீழ்நிலை பணியாளர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை என்றே கூறலாம். தனது அதிகாரத்தை பணியாளர்களிடம் காண்பிக்க முற்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வேலையை விட்டு விலகிய பலரையும் நான் அறிவேன். நான் பணிபுரிந்த காலத்தில் பொருளாதரம், உற்பத்தி, வாடிக்கையாளர்கள் ஆகிய அனைத்தும் இருந்த பல நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை கையாளத் தெரியாமல் எங்களது ஊரில் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதையும் கண் முன்னே காண்கிறேன். காரணம் பணியாளர்களை மேற்பார்வை செய்பவர் கண்காணிப்பாளர் எனும் செவ்வாயின் அம்சமாகிறார். பணியாளர்கள் செவ்வாயின் பரம எதிரி கிரகமான சனியின் அம்சங்களாவர். ஒரு சிறந்த கண்காணிப்பாளருக்கு அவரது பணிக்குத் தக்கபடி அவரது ஜாதக அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக சனி, செவ்வாயின் நிலை நன்றாக அமைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் தனது பணியில் பாதிப்பை சந்திப்பார் எனலாம்.

களத்தில் (Field) நின்று செயல்படுவோருக்கு கண்காணிப்பாளரைவிட அதிக சூட்சுமங்கள் தெரிந்திருக்கும். கண்காணிப்பாளர் கள அறிவு சிறிதளவாவது அறிந்திருப்பது சிறப்பு. கள அறிவு (Field Knowledge) இல்லையெனில் பணியாளர்களிடன் இணக்கமாக பழகி தனது கள அறிவை பெருக்கிக்கொள்வது அவரது பணியை எளிமையாக்கும். கள அறிவே சிறிதும் இல்லாமல், கள நிலவரங்களை புரிந்துகொள்ளும் எண்ணமும் இல்லாமல், பணியாளர்களிடம் தனது வெற்று அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சாதனையாளராக காட்டிக்கொள்ள அவர்களை வேலை வாங்க நினைப்பவர்களை, களப்பணியாளர்கள் விரைவில் அவமானப்படுத்தி விரட்டி விடுவர். மாறாக கள அறிவை நன்கு புரிந்துகொண்டு அதில் தனது நவீனத்தை புகுத்தி தொழிலாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குபவர்கள் எளிதாக தங்கள் பணியில் முன்னேறுகிறார்கள். தொழில் திறமையும், உண்மையான உழைப்பையும் உள்ள ஒரு தொழிலாளி எந்த நிறுவனத்திலும் சிறப்பாக செயல்படுவார. ஆனால் தொழிலாளர்களை கையாள படிப்பறிவு மட்டுமே போதாது. தொழிலார்கள் வர்க்கத்தைப்பற்றிய சமூக அறிவும் தேவை. வெறும் கல்வியறிவு மட்டுமே கொண்ட மேற்பார்வையாளர்கள் வீழ்ச்சியடைகிறார்கள் இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மேற்கண்ட கடக லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் அரசு கிரகம் சூரியனுடன் ஜீவன காரகர் சனி நிற்கிறார். 5, 10 அதிபதி செவ்வாய், லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். சூரியனோடு இணைந்த சனி 10 ஆமிடத்தை பார்க்கிறார். இந்த அமைப்பால் இந்த ஜாதகர் அரசுப்பணியில் உள்ளார். சனியும் சூரியனும் கடகத்தில் நிற்பதால் இவர் பொதுப்பணித்துறையில் வேலை செய்கிறார். (மக்கள் சேவை=சந்திரன்). கடகம் சந்திரனின் பாச உணர்வு இயல்பாகவே பெற்றுள்ள ராசியாகும். அதில் அமைந்த கிரகங்களுக்கும் அந்த குணம் ஏற்பட்டுவிடும். சூரியனும் சனியும் பகை கிரகங்களானாலும் நேர்மை கிரகங்களாகும். இதனால் கடகத்தில் இருவரும் இணைந்ததால் இவரது நிர்வாகத்தில் நேர்மைத்தன்மையோடு நடந்துகொள்வார். சனியும் சந்திரனும் பரிவர்த்தனையாவதால் சனிக்கு சந்திரனின் தாய்மை குணமும் சந்திரனுக்கு சனியின் நேர்மை குணமும் ஏற்படும். மனோ காரகருடன் குற்ற காரகர் இணைவதால் குற்றம் காணும் சிந்தனையும், குற்ற மனோபாவமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சனி இங்கு தனது மூலத்திரிகோண ராசியோடு பரிவர்த்தனை ஆவது இதை தவிர்க்கும்.
இவர் அரசு மருத்துவமனையில் மின்சார கட்டமைப்புகளை பொதுப்பணித்துறை சார்பாக பராமரிக்கிறார். மின்சார , மருத்துவத்துறைகளை குறிக்கும் செவ்வாய், இங்கு 10 ஆமதிபதியாகி விருப்பங்களை குறிக்கும் 5 ஆவது பாவகமான தன் வீடு விருட்சிகத்தை பார்ப்பதாலும், அது தனது காரக வேலை என்பதாலும் இவர் தனது வேலையை மிக நேசித்து செய்கிறார். கடின உழைப்புக்குரிய சனி, பாச உணர்ச்சிக்குரிய சந்திரனோடு பரிவர்த்தனையாவதால் கீழ்நிலை பணியாளர்களை கனிவோடு கையாள்கிறார். தொழிலாளர்களை புரிந்துகொண்டு தேவைப்படுவோருக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அவர்களது பணியை நேர்த்தியும், எளிமையும் கொண்டதாக மாற்றுகிறார். இதனால் இவரது கீழ்நிலைப்பணியாளர்களால் நேசிக்கப்படுகிறார். இங்கு லக்னாதிபதி 8 ஆமதிபதியுடன் பரிவர்த்தனையாவதால் தொழிலாளர்கள் மறைவாக செய்யும் தவறுகளையும் கண்டுபிடித்து அவர்களது தவறுகளையும், பொறுப்புகளையும் எடுத்துச் சொல்லி, உரிய அவகாசமளித்து அவர்களை திருத்துகிறார்.
இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

மேஷ லக்னம் ராகு-கேதுக்கள் தொடர்பில் உள்ளது. திக்பல குரு அஸ்தங்கமாகியுள்ளார். சுக்கிரனும் கேது சாரத்தில்தான் அமைந்துள்ளார். 5 ஆமதிபதி சூரியன் உச்சமானாலும் சர்ப்ப தொடர்புகொண்டுவிட்டார். சனி பார்வையையும் லக்னம் பெறுகிறது. லக்னத்திற்கு சுப வலுவை விட பாவ வலு அதிகம். இத்தகைய ஜாதகர்கள் வாழ்வை செம்மையுற அமைத்துக்கொள்ள வேண்டுமெனில் ராகுகேது தொடர்புடைய சுபத்துவ செயல்களில் ஈடுபடவேண்டும். மருத்துவம், ஆன்மீகம், நவீன மின்னணு மென்பொருட்கள், வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அவற்றுள் சில. ஏனெனில் கூட்டு கிரக சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலுவானவை என்ற அடிப்படையில் அவற்றின் சுப காரகத்துவ வேலைகளே பரிந்துரைக்கப்பட வேண்டும். இவற்றின் பாவ காரகத்துவ வேலைகளான சட்டம்-ஒழுங்கு, நீதித்துறை, காவல், ராணுவம், கள்ளக்கடத்தல், வெடிபொருள் நுட்பங்கள் ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் இந்த ஜாதகர் பாவ காரகத்துவ வேலைகளை செய்தால் கடுமையாக பாதிக்கப்படுவார். ஏனெனில் லக்னத்திற்கு பாவ வலு மிக அதிகம் என்பதுதான் காரணம். பாச உணர்வுகளுக்குரிய கடத்தில் சனி அமைந்தாலும், அவர் இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகிறார். மேலும் அவர் சுய சாரம் பூசத்தில் அமைந்து லக்னத்தையும், லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தையும் பார்ப்பதால் இவருக்கு பணிபுரியும் இடத்தில்தான் பாதகங்கள் ஏற்படவேண்டும். சுப வேலைகள் தீமையை பெருமளவு குறைக்கும் ஆனால் வேலையின் மூலம் பாதங்கள் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்க்க இயலாது.
உணர்ச்சிகளுக்குரிய கடக ராசியில் பணியாளர் கிரகம் சனி, சுய சாரம் பெறுவதால் பணியாளர்கள் சுய கௌரவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சந்திரனின் சுப தொடர்பில்லாமல் சந்திரன் வீட்டில் அமையும் சனிக்கு கள்ளத்தனமும் இருக்கும். சந்திரன் இங்கு ராகுவின் திருவாதிரையில் இருக்க, செவ்வாய் அஸ்தங்கமான குருவின் புனர்பூசத்தில் அமைந்துள்ளார். இது ஜாதகர் எச்சரிக்கையோடு எப்போதும் செயல்பட வேண்டும் என்பதை குறிக்கிறது. உணர்ச்சிவசத்திற்குரிய சந்திரனும் செவ்வாயும் இணைந்துள்ள நிலையில், எச்சரிக்கைன்றி செயல்பட்டால் பாதகத்தை சந்திப்பார். இங்கு லக்னாதிபதி செவ்வாய், சனிக்கு விரையத்தில் நின்று முதலில் சனியை தொடுகிறார். இதனால் இவர் நினைத்தாலும் தொழிலாளர்கள் மீது ஜாதக இயல்புப்படியான தனது குரூர ஆதிக்கத்தை செலுத்துவதை தவிர்க்க இயலாது. ஜாதக அமைப்புப்படி இவர் ராகு-கேதுக்களின் சுப காரகத்துவமான மருத்துவத்துறையில், மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றினார். தனது சுபாவப்படியான குணங்களுடன் தலைமைக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும்படியாக பணிபுரிந்தார் என்றாலும், தனது தனிப்பட்ட பெயர், உயர்வுகளுக்காக தொழிலாளர்களை கடுமையாக கையாண்டார். அதனால் இவரது தொழிலாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிர் தப்பினார். தற்போது நிறுவனமும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில் வேலையை விட்டு விலகிவிட்டார். இவர் தாக்கப்பட்டபோது சனி தசை, குரு புக்தியில், தற்போதும் நீடிக்கும் அஷ்டம சனியும் நடப்பில் இருந்தது.
தனது சுபாவ குணத்தை ஒருவர் மாற்றிக்கொள்ள இயலாது, அதே சமயம் தனக்கும், தனது வேலைகளுக்கும் பாதிப்பு வந்துவிடாதபடி மற்றவர்களுடன் இணக்கமாக செயல்பட்டு, தவறுகளை திருத்தி அனைவரும் இணைந்து முன்னேறுவதை உறுதிசெய்பவராக இருப்பதுதான் ஒரு நல்ல மேலாளருக்கு சிறப்பைத்தரும். கடைக்கோடி மனிதனை சுட்டிக்காட்டும் கிரகம் சனி. சனியின் அம்சங்களின் உயர்வுக்கு உதவினால் அது இதர கிரகங்கள் தர இயலாத அழியாப்புகழை தரும். அதனால்தான் மக்களுக்கு தொண்டாற்றிய உண்மையான தலைவர்கள் இறந்தும் மக்களின் நினைவுகளில் என்றென்றும் உயிர் வாழ்கிறார்கள்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
உங்கள் ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501